கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி

 கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி

கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….!!!

#சிவாஜி_கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமான

சம்பவங்களைச் சொல்கிறார் அவரது உறவினரும், அவரது

உதவியாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவரும் –

பிற்காலத்தில் சிறந்த திரைக்கதை அமைப்பாளராகவும்,

புகழ்பெற்ற தயாரிப்பாளராகவும் விளங்கிய பஞ்சு அருணாசலம்

அவர்கள்….

எல்லாமே மறக்க முடியாத சம்பவங்கள்; புகழ்பெற்ற

கலைஞர்கள் சம்பந்தப்பட்ட உண்மையான நிகழ்வுகள்….

இவற்றில் சில, சிறு வயதில், நான் நேரடியாக கேட்டு, படித்து, உணர்ந்த சம்பவங்கள்….

அந்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கீழே –

(நன்றி சினிமா விகடன்)

இயக்குநர் பீம்சிங்கும் தயாரிப்பாளர் வேலுமணியும் சேர்ந்து ‘பாகப்பிரிவினை’ தொடங்கியிருந்த நேரம். கவிஞரைச் சந்திக்க வேலுமணி வந்திருந்தார். ‘அண்ணே, நீங்க நம்ம படத்துக்குப் பாட்டு எழுதணும்ணே’ என்றார் தயங்கியபடி. ‘என்னப்பா சிவாஜி படத்துக்கு என்னைக் கூப்பிடுற… வழக்கமா பட்டுக்கோட்டைதானே எழுதுவார்?’ கவிஞருக்கு ஆச்சர்யம்.

அந்தப் படத்தில் ‘பிள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளை யாரு… இந்தப் பிள்ளை யாரு?’ பாடலை பட்டுக்கோட்டை எழுதியிருந்தார். ஆனால், தாலாட்டுப் பாடலை மட்டும் அவரால் உடனடியாக எழுதித்தர முடியவில்லை. காரணம், பட்டுக்கோட்டைக்கு வரிகள் பொட்டில் அடித்தாற்போல் இருக்கவேண்டும். அதற்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வார்.

வேலுமணிக்கோ, எல்லா வேலைகளும் கிடுகிடு வென நடக்க வேண்டும். ஆனால் பட்டுக்கோட்டையோ, ‘இவ்வளவு அவசரப்படுத் தினீர்கள் என்றால் என்னால் பாட்டு எழுத முடியாது. தவிர,

தாலாட்டுப் பாடல்களை கண்ணதாசன் பிரமாதமா எழுதுவார்.

அவரை வைத்து எழுதிக்கங்க’ என்றிருக்கிறார்.

வேலுமணி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சிவாஜி படத்துக்குப் பாட்டு எழுத கவிஞருக்கு விருப்பம் இல்லை. கவிஞர் பிடிகொடுக்கவில்லை என்பதால், ‘எப்படியாவது இந்தப் படத்துல கவிஞரை எழுதவைக்கவேண்டியது உன் பொறுப்பு’ என வேலுமணி என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.

கவிஞரின் முடிவில் நான் எப்படித் தலையிடுவது என எனக்குத் தயக்கம். ஆனாலும் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தஅந்த ரிலாக்ஸ் சமயத்தில், அவரிடம் பேசினேன். ‘சிவாஜிக்கும் உங்களுக்கும் எப்பவோ நடந்த பிரச்னை. அதுவும் நாமளாப் போய்கேட்கலை. அவங்கதானே வந்து கேக்குறாங்க. எழுதலாம்ணே’ -கவிஞரிடம் சொன்னேன்.

‘எழுதலாம்டா… ஆனா, ‘என்னைக் கேக்காம அவர்கிட்ட ஏன் பாட்டுவாங்குனீங்க?’னு சிவாஜி ஏதாவது சொல்லி, எழுதின பாட்டு படத்துல வரலைனா நமக்கு அசிங்கம்டா. வேணாம் விட்டுடு’ என்றார் கவிஞர்.

‘இல்லண்ணே. அப்படி சிவாஜி `வேண்டாம்’னு சொன்னார்னா நமக்கு மட்டுமா அசிங்கம், பாட்டு எழுதச் சொன்ன டைரக்டர், தயாரிப்பாளர்களுக்கும் தானே அசிங்கம்? தவிர, சிவாஜியைக் கேட்காமலா உங்ககிட்ட வந்து பாட்டு எழுதச் சொல்லப் போறாங்க. கண்டிப்பா அவரோட ஒப்புதலோடதான் வந்திருப்பாங்க’ – நான் விடுவதாக இல்லை. யோசித்த கவிஞர் சிவாஜியிடம் கேட்டுவிட்டுதான் தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்து கொண்டு ‘பாகப் பிரிவினை’க்கு பாடல்கள் எழுத சம்மதித்தார்.

அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஒரு கை விளங்காது. அவர் தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுவதாக ஒரு பாட்டு. அதுதான், ‘ஏன் பிறந்தாய் மகனே… ஏன் பிறந்தாயோ…’. அடுத்து சிவாஜியின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கும்விதமாக, கதாநாயகி பாடுவதாக ஒரு பாட்டு. அது, ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ…’. அடுத்து, ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து…’ கவிஞர் எழுதிய அந்த மூன்று பாடல்களும்அருமையாக வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

‘பாகப்பிரிவினை’க்கு கவிஞர் எழுதிய பாடல்கள் சிவாஜிக்கும்

ரொம்பப் பிடித்துவிட்டது. ‘இனி என் எல்லா படங்களுக்கும் கண்ணதாசனே எழுதட்டும்’ எனச் சொல்லிவிட்டார்.

அப்படி ‘பாசமலர்’ படத்துக்கு கவிஞர் பாடல் எழுதினார். அந்தப் படப்பாடல்களை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதும்போதே பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகும் என்பதை உணர்ந்தேன்.

அதை நிரூபிக்கும் வகையில் நடந்தது அந்தச் சந்திப்பு.

ரிக்கார்டிங்குக்குப் பிறகு பாடல்களைக் கேட்ட சிவாஜி, கவிஞரை உடனடியாகச் சந்திக்க வேண்டும் எனச் சொல்லி கார் அனுப்பிவிட்டார். அப்போது இரவு 10 மணி இருக்கும்.

எம்.எஸ்.வி-யும் சிவாஜியின் வீட்டில்தான் இருந்தார். கவிஞரும் நானும் சிவாஜியின் வீட்டுக்குச் சென்றோம். கவிஞரைப் பார்த்ததும் சிவாஜி ஓடிவந்து கட்டி அணைத்துக்கொண்டார். அழுகையும் ஆத்திரமுமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்.

‘கவிஞன்டா நீ.

சரஸ்வதி, உன் நாக்குல விளையாடுறாடா’. சிவாஜி அழ,

கவிஞரும் அழுதார்.

‘நீயும் தப்பா நினைச்சுக்காதே. அந்த வயசுல ஏதோ எழுதினோம்…போனோம்’ என்ற கவிஞரைத் தொடர்ந்த

சிவாஜி ‘என்னைக்கோ ஏதோ வருத்தம். அதெல்லாம் முடிஞ்சுடுச்சு. இனி நீதான் என் படங்களுக்குப் பாட்டு எழுதுற. இந்த மாதிரி யாராலடா எழுத முடியும்?’ ஒருவருக்கொருவர் மாறிமாறி

சமாதானம் சொல்லிக்கொண்டனர்.

இப்படி, கவிஞருடன் பலர் முரண்படுவதும் பிறகு சேர்வதும் சகஜம்.

அதற்கு, நான் அருகில் இருந்து சந்தித்த நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். கவிஞர் சிலருடன் மட்டும்தான் நெருங்கிப் பழகுவார்.

அதில் இயக்குநர் ஸ்ரீதர் முக்கியமானவர். அடுத்தடுத்த வெற்றிகளுடன் ‘வித்தியாசமான இயக்குநர்’ எனப் பெயர் எடுத்திருந்தார். ‘தேன்நிலவு’ தொடங்கி அவரின் எல்லா படங்களுக்கும் கவிஞர்தான் பாடல்கள் எழுதுவார்.ஸ்ரீதர் கவிஞரைவிட இளையவர். அவரை கவிஞர் ‘ஸ்ரீ’ என்றுதான் அழைப்பார்.

புதுப்பட விவாதம், வெற்றி விழா… எனக் கவிஞரும் ஸ்ரீதரும் அவ்வப்போது சந்தித்துக்கொள்வார்கள். ஒருநாள் அப்படி புதுமுகங்களை வைத்து தான் இயக்கவுள்ள ஒரு புதுப்படம் தொடர்பாகப் பேச சந்தித்தனர். உடன் ஸ்ரீதரின் உதவி இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் (ஸ்ரீதரின் சகோதரர்), புரொடக்‌ஷன் மேனேஜர் என அவரின் உதவியாளர்களும் நானும் இருந்தோம். கவிஞர், எம்.எஸ்.வி., ஸ்ரீதர் மூவரும் உள்ளே அறையில் அமர்ந்து பீர் அருந்தியபடிபேசிக்கொண்டிருந்தனர். வெளி அறையில் நானும் ஸ்ரீதரின் உதவியாளர்களும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம்.

‘ஒரு பையனைப் பிடிச்சிருக்கேன் கவிஞரே, ரவிச்சந்திரன்னு பேர். மலேசியாவுல இருந்து வந்திருக்கான். பார்க்க ஸ்டைலா, நல்லா இருக்கான். அப்புறம் ஃப்ளைட்ல போயிட்டு இருந்தப்ப காஞ்சனானு ஒரு பணிப்பெண்… பார்த்தேன், நல்லா இருந்தாங்க.

நடிக்கிறீங்களா?’னு கேட்டேன்.நடிக்கிறேன்’னு சொன்னாங்க. கமிட் பண்ணிட்டேன். லவ்+காமெடி. கலர்ல பண்ணப்போறேன். ‘காதலிக்க நேரமில்லை’ அதான் டைட்டில்’ என்று அவுட்லைன் சொல்லி போட்டோ காட்டியிருக்கிறார்.

மிக இளம் வயதிலேயே புகழ் அடைந்ததால் ஸ்ரீதருக்கு தன்னம்பிக்கை அதிகம். அது அவரின் பேச்சிலேயே எதிரொலிக்கும். அது அகந்தையோ, திமிரோ கிடையாது. ஆனால், சமயங்களில் அது எதிரில் உள்ளவர்களைக் காயப்படுத்திவிடும். அன்றும் அப்படி ஆரம்பித்திருக்கிறார். ‘என்னைத் தவிர இந்த ஷாட்டை வைக்கிறதுக்கு எவன் இருக்கான், ஒரு பயலைச் சொல்லுங்க கவிஞரே’ எனச் சொல்லி இருக்கிறார். ‘ஆமாம் ஸ்ரீ, நீ திறமையானவன்…’ என, கவிஞர் பாராட்டியிருக்கிறார். பிறகு, போகப்போக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் கோபமாக அறையில் இருந்து வெளியேறினார் ஸ்ரீதர். நாங்கள் உடனே உள்ளே ஓடினோம்.

கவிஞர், சி.வி.ராஜேந்திரனிடம் சொன்னார். ‘சொந்தப் படம். ஏன் புதுமுகங்களைப் போட்டு ரிஸ்க் எடுக்குற?’னு கேட்டேன். கோபம் வந்துடுச்சு. ‘நான் நினைச்சா எது வேணும் னாலும் பண்ணுவேன். எனக்கு எவனும் தேவை இல்லை’னான். ‘ஏன் நான்கூட வேணாமா, விஸ்வநாதன்கூட வேணாமா?’னு கேட்டேன். ‘நீங்க ரெண்டு பேரும் பெரிய பக்கபலம்தான். ஆனா, நீங்க இல்லைனாக்கூட என்னால படம் எடுக்க முடியும்’னான். ‘அப்படின்னா நாங்க இல்லாம இந்தப் படத்தை நீ எடுத்துப்பாரேன்’னு நானும் விளையாட்டா சொன்னேன். உடனே அவன், ‘எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதமா பேசுறீங்க… சாரி’னு சொல்லிட்டு விறுவிறுனு எந்திரிச்சுப் போயிட்டான்.’

கவிஞர் அதை சீரியஸாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது

அவர் காமெடியாகச் சொன்ன விதத்தில் இருந்து புரிந்தது.

ஆனால், ஒரு வாரத்துக்குள் ஷூட்டிங்குக்காக ஸ்ரீதர் பொள்ளாச்சி போனார். ‘நான் வசனப் பகுதிகளை ஷூட் பண்ணிட்டு இருக்கேன்.

நீ போய் கவிஞர்கிட்ட கதையைச் சொல்லி பாடல்களை ரிக்கார்ட் பண்ணிட்டு வந்துடு’ என, சித்ராலயா கோபுவை அனுப்பியிருந்தார்.

‘ஸ்ரீ இல்லை யேப்பா. நான் எழுதி, அதை அவனும் கேட்டாதானப்பா நல்லா இருக்கும். அவனுக்கு இன்னும் கோவம் போகலையா?’ என்றார் கவிஞர்.

‘ஒரே ஒரு பாட்டு மட்டும் கண்டிப்பா இந்த சிச்சுவேஷனுக்கு வரணும். மத்ததை உங்க இஷ்டத் துக்கு எழுதச் சொல்லிட்டார்’. அந்தப் படத்தில் கதை, திரைக்கதை டிபார்ட்மென்ட்டில் அதிகமாக வேலைசெய்தது கோபு. காமெடி ஏரியாவில் கில்லாடி.

வெறும் நான்கு நாட்களில் ஏழு பாடல்களை எழுதிக் கொடுத்தார் கவிஞர். அதில் வந்த ‘விஸ்வநாதன் வேலை வேணும்…’ மட்டும்தான் சிச்சுவேஷனுக்கு எழுதியது. மற்ற பாடல்கள் எல்லாம் ‘இந்தப் பாட்டை இங்கே வெச்சுக்கலாம், அதை அங்கே வெச்சுக்கலாம்’

எனக் கவிஞரும் கோபுவும் முடிவு செய்தவை. ரிக்கார்டிங் முடிந்து பொள்ளாச்சிக்கு நானும் கோபுவும் பாடல்களை எடுத்துச் சென்றோம்.

பாடல்களைக் கேட்டுவிட்டு ஸ்ரீதர் துள்ளிக் குதித்துவிட்டார். ‘படம் சூப்பர் ஹிட். பிச்சிக்கிட்டுப் போயிடும். அந்தாளு ஞானிய்யா. ‘நான் இல்லாம நீ நிக்க முடியுமா?’னு சொன்னான்யா. இப்பதான்யா எனக்குப் புரியுது. இப்ப சொல்றேன். நீ வேணும்னா பாரு, இந்த செஞ்சுரியிலேயே இதுதான்யா பெஸ்ட் பிக்சர்’ ஸ்ரீ தரின் பேச்சில் அவ்வளவு உற்சாகம்.

கவிஞருக்கு ட்ரங்க் கால் புக்பண்ணி பேசினார் ஸ்ரீதர். ‘நீங்க பொள்ளாச்சிக்குப் புறப்பட்டு வரணும். நாலு நாளாவது என்கூடத் தங்கணும்’ என்றவர், என்னிடம், ‘நீ அவரை அழைச்சிட்டு வரலைனா, இனி என் முகத்துல முழிக்காத’ என காமெடியாகச் சொல்லி அனுப்பினார். நானும் சென்னைக்கு வந்து கவிஞரைஅழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்குப் போய் ஸ்ரீதருடன் தங்கிவந்தோம். இப்படிப் பலரும் கவிஞருடன் முரண்படுவதும்,

பிறகு அன்பு பாராட்டுவதும் சகஜம்.

இசையமைப்பாளர்களில் கே.வி.மகாதேவன் ஒரு டைப், எம்.எஸ்.வி வேறொரு டைப். இந்த இரண்டு மாமன்னர்களின் இசையில்தான் கவிஞர் தன் 90 சதவிகிதப் பாடல்களை எழுதினார்.

அதே கே.வி.மகாதேவனால்தான் (சினிமா உலகத்தில் கே.வி.மகாதேவனை`மாமா’ என்றுதான் அழைப்பார்கள்) எனக்கும் பாடல் எழுதுகிற வாய்ப்பு அமைந்தது.

60-களில் வந்த படம், ‘சாரதா’. அந்தப் படத்தின் எல்லா பாடல்களையும் கவிஞர்தான் எழுதினார். படப்பிடிப்பும் முடிந்தது. படத்தைப் போட்டுப்பார்த்த பிறகு ஒரு பாட்டு சேர்த்தால் நன்றாக இருக்குமே என நினைத்து இருக்கிறார்கள். ஆனால், அந்தச் சமயத்தில் கவிஞர் ஊரில் இல்லை. ரிலீஸ் நெருக்கடி என்பதால் பாடல் அவசரமாகத் தேவைப்பட்டது.

‘கவிஞர் ஊர்ல இல்லையே மாமா’ என்றேன். ‘அவசரம்னு சொல்றாங்க பஞ்சு. ஏன் இந்தப் பாட்டை நீயே எழுதிடேன்’ என்றார். `கவிஞர்கிட்ட கேட்காம நான் எப்படி மாமா எழுதறது?’ – தயங்கினேன். ‘கவிஞர் வந்தா நான் சொல்லிக்கிறேன். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்கிட்ட கேட்டேன். அவனும் ஓ.கேனு சொல்லிட்டான்’ என்றார்.

அப்படி எதிர்பாராதவிதமாக அன்று நான் எழுதிய அந்தப் பாடல்,

பின்னாட்களில் திருமண வீடுகளின் தேசியகீதம்போல காலத்துக்கும்ஒலிக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்த்தது கிடையாது. அந்தப் பாடல்…

‘மணமகளே மருமகளே வா வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா வா…’. #கண்ணதாசன் தத்துவ வரிகள் # பழைய பாடல்கள் ஓல்ட் இஸ் கோல்ட்

Kaviri Maindhan

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...