நமது அப்பத்தாக்களும், அய்யாக்களும் வாழ்வாங்கு வாழ்ந்து, 16 செல்வமும் பெற்று, நோய் நொடி அற்று 1000 பிறை கண்டு சீர்மிகு தம்பதிகளாக நமக்கு வழிகாட்டி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையில் மாறிவரும் உணவு, உடை, மற்றும் வாழ்க்கை நெறி, நமது கலாச்சாரத்தை மட்டுமின்றி நம் வாழ்வியலின் இன்றிமையாத பகுதிகளில் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை, இன்று நாம் உட்கொள்ளூம் உணவு மற்றும் உடல் ஆரோக்கியமே ஆகும்.
– ஆற்றுநீர் வாதம் போக்கும்,
-அருவிநீர் பித்தம் போக்கும்,
-சோற்றுநீர் இவை இரண்டையும் நீக்கும்.
– கொழுத்தவனுக்குக் கொள்ளு, இளைத்தவனுக்கு
எள்ளு.
– சீரகம் இல்லா உணவு சிறக்காது.
இப்படி எண்ணற்ற நல் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளையும் நம் செட்டி நாட்டு முன்னோர்கள் அறிவு சார்ந்த பழமொழிகள் மூலம் நமக்கு உணர்த்திச் சென்றனர். ஆனால் தற்கால வாழ்க்கை அமைப்பு, இயற்கை அடிப்படையில் உண்டு வாழ்ந்த நம்மை, செயற்கை வழி உணவுகளில் மூழ்கடித்து எண்ணிலடங்கா உடல் பாதிப்புகளால் வேதனை தருகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், நம் வாழ்வில் நாம் தொலைத்து விட்ட செயல்திறன் மிக்க உணவு வகைகளின் செய்முறை பக்குவமும்(Functional Food Recipes) அதனால் கிடைக்கப்பெற்ற நன்மைகளும் தான்.
ஒரு பொருளை எந்த இடத்தில் தொலைத்தோமோ அதை அந்த இடத்தில் தேடினால் மட்டும் தான் கணடுபிடிக்க முடியும். இயற்கை வாழ்வியல் நமது உடல், உயிர் மற்றும் மனம் ஆகிய மூன்றுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது, யார் எத்தகைய உணவை எங்கே எந்தச் சூழலில் உண்ண வேண்டும் என்று கற்றுத் தருகிறது. இவ்வுலகில் வாழ்வியல் மூலம் நோய் என்ற ஒன்றும் இல்லை, ஆனால் நோய்கள் என்று தற்போது குறிப்பிடப்படும் உடல் பருமன், மலச்சிக்கல், அஜீரணம், தைராய்டு, சர்க்கரை வியாதி, இரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, புற்று நோய், குழந்தையின்மை, பெண்களுக்கு உண்டாகும் உடல்நலக் கோளாறுகள் எனப் பலவகைகளில்அவதியுறுகிறார்கள். இத்தகைய பிரச்சினைகள் நமக்கு ஏற்படாமல்நல்வாழ்வு வாழவும், தற்போது இத்தகைய வியாதிகளால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து குணமடைய சரியான உணவு பழக்க வழக்கத்தையும், சூரிய ஒளி மற்றும் நீர் கொண்டு எளிய முறையில் நமக்கு நாமே பயன் அடைய வாழ்வியல் முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உணவே மருந்து’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘மருந்தே உணவு’ என்ற இன்றைய நிலையையும் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். மனிதன் தனக்குத் தேவையான சரியான உணவுகளைச் சாப்பிடாமல் ஆரோக்கியத்தை அழிக்கும் விஷங்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதினால் தான் நோயாளியாகின்றான். எனவே உணவு முறைகளை மாற்றியவுடன் நோய்கள் எல்லாமே நீங்கிவிடும்.
இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இயைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல் நலத்தையும் உள நலத்தையும் நாம் பாதுகாக்க முடியும். இன்று சமையல் முறைகள் நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகின்றன. உணவகங்கள் நம்மிடையே அதிகமாய் பெருகி உள்ளன. சத்துக்காக இல்லாமல் சுவைக்காக உண்ணும் பழக்கம் நம்மிடையே அதிகமாய் இருக்கிறது. அட்டை பெட்டிகளிலும், தாள் பைகளிலும் பதப்படுத்தி அடைத்த ஆய்ந்த உணவு வகைகள், விரைவு உணவுகள் இன்று நம்மிடையே பழக்கத்திற்கு வந்துள்ளன. அதனால் நோய்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.

திருவள்ளுவர் உணவே மருந்து பற்றிய சிறப்பினை “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்ற குறள் மூலம் சிறப்பாக விளக்கியுள்ளார்.
இந்த குறளுக்கான அர்த்தம் உடலுக்கு எது பொருத்தமான உணவோ அதை தேர்ந்தெடுத்து உண்டால் நாம் நெடுநாள் எந்த நோயும் இல்லாமல் வாழலாம் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களுடைய வாழ்வில் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே மனிதர்களாகிய நாம் உணவிற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியது அவசியம். நம் முன்னோர்கள் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்று கூறியது போல உடலில் நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் நல்வாழ்வினை வாழ முடியும்.
இந்த இயற்கையானது நமக்கு பல வளங்களை கொடுத்துள்ளது. அதில் விளைகின்ற பழ வகைகள், தானியங்கள், காய்கறிகள் போன்ற அனைத்தும் ஊட்டச்சத்து நிறைந்தவை. நல்ல வளமான நிலத்தில் வளரும் பயிர் போல ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மனிதனும் வளமாக வாழ முடியும். இயற்கையான முறையில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படாத தானிய வகைகள், கிழங்குகள், கீரைகள், பசும்பால் உணவுகள், பழங்கள் போன்ற இயற்கையான உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தன. இன்றைய விவசாயத்தில் பெரும்பாலும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கை உரங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கூட மனிதர்களுக்கு நோயின் தாக்கம் அதிகமாகிவிட்டது.
“இயற்கை விவசாயம்ங்குறது ரசாயனம் கலக்காம பண்றது மட்டும் இல்லை. நிலம் முழுக்க ஒற்றை பணப்பயிர் நடுறது இயற்கை விவசாயம் இல்லை. நிலத்தில் ஒரு பயிர் மட்டும் நடாமல், பல்வேறு காலக்கட்டங்களைல் அறுவடைக்கு வரும் மரங்களை நடணும். அஞ்சு அடுக்கு முறை, ஏழு அடுக்கு முறையில் விவசாயம் செய்யுங்க. தேக்கு, தென்னை, வாழை, பாக்குனு கலவையா மரங்களை நடணும. ஊடுபயிரா காய்கறிகளையோ, கடலை மாதிரியான பயிர்களையோ விவசாயம் செய்யணும். இப்படி செய்தால் காற்றடிக்கும் போது ஒரு மரம் மற்றதற்கு அரணா இருக்கும். சுழற்சியில அறுவடைக்கு வரும்போதே, பொருளாதார ரீதியாவும் பலன் கொடுக்கும்” என்கிறார் நம்மாழ்வார்

இன்றைய சூழலில் அனைவரும் உடலுக்கு தீங்கு தரக்கூடிய ஜங்க் புட்ஸ், பாஸ்ட் புட்ஸ் போன்ற துரித உணவுகளையே பெரிதும் விரும்பி சாப்பிடுகிறார்கள். நமது பிரதேசங்களில் அதிகம் விற்பனையாகும் “பெப்சி, கொக்கா கோலா ” போன்ற குளிர்பானங்களை அதிகம் அருந்துவதை தவிர்க்க வேண்டும். நாகரீக வளர்ச்சியின் காரணமாக நம்முடைய இயற்கையான உணவு முறைகளும் அடியோடு மாறிவிட்டது. கொழுப்பு நிறைந்த உணவுகளை வெளியில் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து பல நோய்களுக்கு நம்மை நாமளே ஆளாக்கிக்கொள்கிறோம். இயற்கையான உணவுகளை எடுத்துக்கொண்டு உடலை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ளுவோம். நாம் எடுத்துக்கொள்கின்ற உணவு முறைதான் நம்முடைய நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். சிறிய வயதிலிருந்து உணவிற்கு மதிப்பு கொடுக்காமல் நாம் எடுத்து கொள்கின்ற ஆரோக்கியமற்ற உணவுகள் தான் இன்று அதிகளவான நோய்களுக்கு காரணமாக உள்ளது.
பழங்கால மனிதன் சுமார் 300 ஆண்டுகள் வாழ்ந்ததாக பைபிள் உள்ளிட்ட பல புத்தகங்கள் மூலம் தெரிய வருகின்றது. மனிதனின் ஆயுள் 300 ஆண்டு. அந்த மனிதன் ஒரு நாள் மட்டும் சமைத்த உணவு சாப்பிட்டால் அந்த மனிதனின் ஆயுளில் ஒரு நாள் குறையும். எனவே வாழ்நாள் முழுவதும் சமைத்த உணவைச் சாப்பிடும் மனிதன் 150 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ முடிவதில்லை. சுவாசிக்க சுத்தமான காற்று, குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்காமையால் மேலும் அவனுடைய ஆயுள் குறைகின்றது. ஆகவேதான், அனுபவத்தின்படியும் அறிவியல் கருத்துகளின்படியும் உணவை மருந்தாக மாற்றிக் கொள்கிறோம். மருந்து என்பது ஒரு நோயை குணப்படுத்துவதுடன், மீண்டும் வராமல் காக்கும் தன்மையுடனும் அதை உட்கொள்ளும் போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாததாகவும், அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும். இதுவே மருந்தின் இலக்கணம். ஆனால், நாம் உட்கொள்ளும் பெரும்பாலான மருந்துகள் இவ்வாறு இருப்பதில்லை. கிடைப்பதற்கு அரிதான அல்லது விலை மதிப்புள்ள உணவுகளில் பல்வேறுவகையான ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றை அன்றாடம் சாப்பிட முடியா விட்டாலும், அவ்வப்போதாவது சாப்பிட்டுவந்தால் பல்வேறு வகையான மருத்துவ பலன்களை பெறலாம்.
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
1)கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2)மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால்,
3)உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில்
4) நடுவில் முக்கிய உணவான அன்னம் ,
5)அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
6)குறைவாக உட்கொள்ள வேண்டிய சிற்றன்னம்
7)அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய் (செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள்), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும்), பிறகு ரசம் (இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும்), பிறகு மோர் (வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும்)…
இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள்
வாழ்வியல் உடல் கோளாறுக்கும், உண்ணும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்களுக்குச் சக்தி தருவதாக இருக்கிறதா என்பதைக் கண்காணித்துக் கொள்ளுங்கள். இதுவும் விழிப்புணர்வை அடைவதற்கான ஒரு வழி தான். விஞ்ஞானம் அறிவியல் எத்தனையோ வளர்ச்சிகளை நமக்கு அள்ளி தந்திருந்தாலும், இயற்கையும் நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த வாழ்வியலும் நமக்கு எண்ணற்ற பயன்களை விட்டுச்சென்றுள்ளன..
`அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஒடாது’ என்ற பழமொழி உணர்ந்து நமது வாழ்வியலும் உணவு முறையையும் அமைத்து வளம் காண்போம்..
மனிதன் இன்று பொருளாதார நிலை, தொழில்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞானம் என்று நாட்டின் வளர்ச்சியை மட்டுமே யோசிக்கிறார்களே தவிற மனிதருடைய உடல் ஆரோக்கியம் பற்றி யாரும் நினைத்து பார்ப்பதில்லை. அதனால் நோய்கள் வந்து தாக்கிய பிறகு அதனை பற்றி கவலை கொள்வதில் எந்த பயனும் இல்லை. எனவே உணவு முறையில் நாம் எப்போதும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதனையெல்லாம் சரி செய்வதற்கு ஒரே வழி உண்டு என்றால் இயற்கை விவசாயத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்.
