சென்னை: அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.27-ம் தேதி பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், மார்ச் முதல் வாரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறுவரையறை செய்வது, ஆரம்ப சுகாதார நிலையமருத்துவர்களுக்கு ரூ.3 ஆயிரம் படி வழங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவப் பணியிடங்கள் உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அனைத்து அரசு மருத்துவர் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சாமிநாதன், அகிலன், சுந்தரேசன் ஆகியோர் கூறியதாவது: அரசு மருத்துவர்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் பேசி தீர்வு காணப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தது வரவேற்கத்தக்கது. எனினும், தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
பிப்.27-ம் தேதி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படாமல், வழக்கமான பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதிலும் தீர்வு ஏற்படாவிட்டால், மார்ச் முதல் வாரத்தில் சென்னையில் அனைத்து அரசு மருத்துவர்களும் சாகும் வரை பட்டினி இருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறுகையில், “மருத்துவர், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும்.
கரோனா பேரிடர் காலத்தில் பணியின்போது உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்க வேண்டும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
