சென்னை: தமிழக அரசின் 2026 -27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் ‘தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு ஆற்றிவரும் உரை: பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக ரூ.456 கோடி ஒதுக்கப்பட்டது.
ரூ.285 கோடியில் தமிழகத்தில் சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியங்கள் அமைக்கப்படுகின்றன. மகளிருக்காக இளஞ்சிவப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நாட்டிலேயே தொழிற்சாலைகளில் அதிகம் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியின் கனவை நிறைவேற்றும் அரசாக திமுக உள்ளது.
19.34 லட்சம் மாணவர்கள் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அரசின் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசி வருகிறார்.
