காவியக் கவிஞர் வாலியும் நாகேஷும் || காலச்சக்கரம் சுழல்கிறது-17

 காவியக் கவிஞர் வாலியும் நாகேஷும் || காலச்சக்கரம் சுழல்கிறது-17

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

வாலியை நம் காலத்தின் வால்மீகி என்றும் சொல்லலாம், கம்பர் என்றும் சொல்லலாம்! தலையில் முடி குறைவாகவும் மூளை அதிகமாகவும் உள்ள ஒருவர், வெற்றிலைச் சீவலை போட்டுக்கொண்டு உதடுகள் சிவக்க, எதையோ தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் நிச்சயமாக கவிஞர் வாலியாகத்தான் இருப்பார்!

இவர் கையில் பேனாவை எடுத்தால் இலக்கியம் மகிழும்! சரித்திரம் தோன்றும்! சமூகம் புத்துணர்வு பெறும்!

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இவரின் உண்மையான பெயர் ரங்கராஜன். போர் புரியும்போது எதிராளியின் பாதி பலம் வாலிக்கு வந்து விடுமாம்! இந்தத் தகவலைப் படித்ததும் ரங்கராஜன் எனும் தன் உண்மைப் பெயரை இவர் வாலி என்று மாற்றிக் கொண்டார். அதன் பிறகு பாதி பலம் அல்ல, முழு பலமும் பெற்று ஒரு பெரிய பாடலாசிரியராகத் திகழ்ந்தார்.

ஒரு சின்ன மலரும் நினைவுகள்

பல ஆண்டுகளாக ஸ்ரீரங்கத்தில் வலம்வந்த இவருக்கு, நடிகர் திருச்சி சௌந்தர்ராஜன் நண்பர் ஆனார். அவர் ஆஜானுபாகுவாக ஆறடி உயரத்தில் நல்ல பர்சனாலிட்டியோடு இருப்பதைப் பார்த்து, சௌந்தர்ராஜன் நடிப்பதற்காகவே ‘கவிஞனின் காதலி’ என்னும் ஒரு சரித்திர நாடகத்தை எழுதி சௌந்தர்ராஜன் அம்பிகாபதியாகவும், சண்முகசுந்தரம் கம்பராகவும், சபிதா அமராவதி ஆகவும் நடித்தனர். நான் அப்போது சௌந்தர்ராஜன் வீட்டிலேயே இருந்ததால் நானும் கல்லாப்பெட்டி சிங்காரத்துடன் சேர்ந்து நகைச்சுவைப் பகுதியில் நடித்தேன். 1961-ல் அந்த நாடகம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் அப்போதைய கிருஷ்ண கான சபாவில் அரங்கேறியது. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது நடிகர் சௌந்தரராஜன் சத்துணவு அமைச்சராக இருந்தார்.

வாலியும் நாகேஷும் ஆத்ம நண்பர்கள். அப்போது நாகேஷ், நடிகர் ஸ்ரீகாந்த், தாராபுரம் சுந்தர்ராஜன் போன்ற கலைஞர்கள் எல்லோருமே மாம்பலம் சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே இருந்த ஒரு பழைய பில்டிங்கில்தான் தங்கி இருந்தார்கள். அந்த இடத்திற்குப் பெயர் கிளப் ஹவுஸ். ஆம்! அதுதான் ஏழ்மை நிலையில் உள்ள கலைஞர்களுக்குப் புகலிடமாக இருந்தது.

அங்கு தங்கியிருந்தபோதுதான் வாலி, நாகேஷ் இருவரின் நட்பும் மிக இறுக்கமாகியது. நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான ஏ.வீரப்பன் சிபாரிசில் நாகேஷ் ‘பணத்தோட்டம்’ படத்தில் நடிக்க, ஜி.என்.வேலுமணி அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, புரட்சி நடிகர் பச்சைக்கொடி காட்ட ஏ.வீரப்பன் எழுதிய நகைச்சுவைப் பகுதியில் வீரப்பனும் நாகேஷும் சேர்ந்து நடித்து புரட்சி நடிகர் பாராட்டைப் பெற்றார்கள். எம்.ஜி.ஆர்.தான் முதன்முதலில் ‘பணத்தோட்டம்’ படத்திற்கு வீரப்பனைக் கூப்பிட்டு நகைச்சுவைப் பகுதியை எழுதும் வாய்ப்பை வழங்கினார். அதுதான் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்பது.

அந்த நாடகத்தில் அம்பிகாபதி பேசும் ஒரு உரையாடலை இதில் பதிவு செய்துள்ளேன். படித்து வாலியின் தமிழை நீங்களும் ரசியுங்கள்!

அம்பிகாபதி: குலோத்துங்க மன்னவா! புலிக்கொடி ஏந்தி நீ புகழ்மாலை சூடி வெண்சமர் கூடத்தில் வாள் விளையாடி வடுகனையும் வடவரையும் வென்ற உன் புகழ் எங்கே? தமிழன்னையின் பெருமையைத் தரணியெங்கும் தழைக்கச் செய்த உன் திறமை எங்கே? ஒழிந்ததா உன் வீரம்? வளைந்ததா உன் செங்கோல்? தேய்ந்ததா உன் பெருமை? சாய்ந்ததா உன் குடை? இத்தனையும் எங்கே, எங்கே..? கம்பருக்கு நீ இட்ட கட்டளையின் மூலம், மன்னவா! தமிழ் அன்னையைத் தலைகுனிய வைத்து விட்டாய்!

பேய்க்கணங்கள் பதம் பாட, பொன் உடலில் விடநாகம் படமாட, பார்வதியாள் பக்கமாட, பரந்தானம் தாளம்போட, நந்தியார் மத்தளம் கொட்ட, நெற்றிக்கண் தீ மழை பொழிய, பிறை நிலா விளிம்போரும், கொங்கு புனல் கங்கை வழிய, இடுகாட்டில் நடுநிசியில் முத்துக்கூத்தன் நடமாடும் ஓசையிலே உயிர்த்து உருவெடுத்து, உலகெலாம் ஓங்கார ஒலி செய்த கன்னித்தமிழ், அகத்தியனார் அரவணைத்து ஆராதித்த அன்புத் தமிழ், வள்ளுவனார் வாழி பாடி வளம் செய்த வண்ணத்தமிழ், தென் மதுரை பாண்டியனார் ஒன்று கூடி தங்கத்தாமரை குளத்தருகே சங்கம் தேடி, தரணியெங்கும் பரணிபாடி தோற்றுவித்த தனித்தமிழ்,

கோப்பெரும் சோழன், கணக்கால் இரும்பொறை, சீத்தலை சாத்தனார், பரஞ்சோதி… இன்னும் ஔவை, இளங்கோ, இதுபோல் மண்ணு புகழ் புலவர்கள், தன் உயிரைத் தந்து காத்த தண்டமிழ், இன்று சீரழிந்து, சிறப்பிழந்து, சிங்காதனம் ஏற தகுதியற்று, வடமொழிக்கு வெண்கவரி எடுத்து வீசும் கொடுமைக்குக் காரணமாகிவிட்ட புரவலனே, கன்னித் தமிழன்னைக்கு கைவிலங்கிட்ட காவலனே, நீ பதில் கூறும் காலம் வரத்தான் போகிறது, சுயமாகக் கவிபாட சக்தியற்ற சோற்றுப் பிண்டங்கள் சிதறிக் கிடக்கும் இந்தச் சபைக் கூடத்தில், இனி எனக்கு இடமில்லை, மூன்றாவது குலோத்துங்கன் ஆட்சியிலே முத்தமிழ் செத்துவிட்டபின், இந்த அத்தாணி மண்டபத்தில் இனி அம்பிகாபதி கால் எடுத்து வைத்து மாட்டான்! வருகிறேன்.”

வாலியின் அம்பிகாபதி வசனத்தை 60 ஆண்டுகளாக மேடையில் பேசி வரும் எனக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது. வாலி எனும் மிகப்பெரிய ஆளுமை வாழ்ந்த சமகாலத்தில் நானும் ஒரு நடிகனாக, எழுத்தாளனாக இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை!

கவியரங்கத்தில் கூட வாலி தலைமை என்றால் அங்கு கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது! இது மட்டுமா? இவர் எழுதி தொடராக ஆனந்த விகடனில் வந்த அவதார புருஷன், பாண்டவர் பூமி போன்ற அனைத்துமே, கவிஞர் வாலி கலைமகளுக்கு அளித்த காணிக்கைதானே! வாலி அவர்கள் ஒரு நல்ல நகைச்சுவை ரசிகர் என்பதை இதில் பதிவு செய்வது எனக்குப் பெருமை!

அவர் எழுதிய ஒரு நல்ல நகைச்சுவை இதோ:

ஆண்: இவங்க தாத்தா எல்லாத்தையும் கரைச்சு குடிச்சவர்!

பெண்: ஆமா இவங்க தாத்தா எல்லாத்தையும் கரைச்சு குடிச்சவர்! இவங்க அப்பன் குடிச்சே கரைச்சாரு!

வாலி எந்த ஒரு பாடலை எழுதினாலும், உடனே தாராபுரம் சுந்தரராஜனை கூப்பிட்டு இதுக்கு ஒரு ட்யூன் போடுப்பா என்பார். அரை மணி நேரத்திற்குள் இசையமைத்து வாலி, சுந்தரராஜன், நாகேஷ் மூவரும் உட்கார்ந்து கேட்டு ரசிப்பார்கள். கிராமிய சூழ்நிலையில் அமைந்த அந்தப் பாடலை நீங்களும் படித்து ரசிக்கவே இதில் பதிவு செய்துள்ளேன்.

நேத்து வர சின்னப் பொண்ணு!

இன்னைக்கு இவ கன்னிப் பொண்ணு!

மாத்து மாலை மாத்திக்கிட்டா

மாட்டுப் பொண்ணு ஆயிடுவா,

மச்சான் பின்னே போயிடுவா!’

கதையோ, கவிதையோ, வசனமோ, வரலாறோ, இலக்கியமோ, இதிகாசமோ எதுவானாலும் அவற்றைச் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் அதிகம் உள்ளவர் வாலி. இவருக்கு ஸ்ரீரங்கநாதரின் அருள் இருந்தாலும், அவர் உயர்வு நிலைக்கு வர விசுவநாதனே காரணமாக இருந்தார்.

ப.நீலகண்டன் இயக்கத்தில், எம்.ஜி.ஆர் நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ எனும் படத்தில் ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்’ எனும் பாடலை எம்.ஜி.ஆர் பட வரிசையில் முதல் பாடலாகப் பதிவு செய்தவர், அதன்பின் அவர் எம்.ஜி.ஆருக்கு வடித்த பாடல்கள் எல்லாமே அமரகாவியம் போன்ற பாடல்கள்தான் என்றால் மிகையல்ல!

ஒரு இலக்கிய கூடத்தில் வாலி அவர்கள் பேசும்போது “என்னுடைய இந்தப் புகழ், பணம், சொத்து, சுகம் எல்லாமே எம்.எஸ்.வி. அவர்கள் எனக்குப் போட்ட பிச்சை” என்றார். இதுதான் ஒரு மனிதனின் தன்னடக்கம். என் பார்வையில் வாலி அவர்கள் அனைத்து திறமையும் உள்ள அற்புதக் கலைஞர். எழுத்தாளன் என்ற முறையில் என்றென்றும் நான் நேசிப்பது வாலி அவர்களைத்தான்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரியவேண்டுமானால் Online-ல் உள்ள ‘எனது அங்கீகாரம்’ எனும் நூலைப் படிக்கவும்.

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...