எழுத்துலகில் வற்றாத ஜீவநதி பன்முக வித்தகர் சூலூர் கலைப்பித்தன்

 எழுத்துலகில் வற்றாத ஜீவநதி பன்முக வித்தகர் சூலூர் கலைப்பித்தன்

நாடகம் சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் காலச்சக்கரம் சுழல்கிறது என்கிற தொடர் மூலம் இங்கே பதிவு செய்கிறார்.

காலச்சக்கரம் சுழல்கிறது-15

கே.பி.கருப்பண்ணத்தேவர், கருப்பாத்தாள் ஆகியோரின் மகனாக கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியான சூலூரில் பிறந்தவர் தான் நம் கலைப்பித்தன்.

இவர் ஒரு மாபெரும் இலக்கியப் படைப்பாளி. இதிகாசக் கதைகளையும் ரசனையோடு எழுதும் ஆற்றல் பெற்றவர். பொதுவாக கலைஞர்கள் அதிகமாக உருவாகும் இடமே கொங்கு நாட்டிலும், தஞ்சை மாவட்டத்திலும்தான். மதுரை தமிழ்ச் சங்கத்திலே படித்துப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், ஆயிரத்திற்கும் மேலான கவிதைகளை எழுதி இருப்பவர். வெண்பா போட்டியில் பரிசும் பெற்றிருப்பவர்.

ராமலிங்க சுவாமிகள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காரல் மார்க்ஸ் ஆகியோரின் சரிதமும், அறுபத்தி மூன்று நாயன்மார்களின் சரிதத்தை ‘நல்வழி காட்டிய நாயன்மார்கள்’ எனும் பெயரில் வாரத் தொடராகவும், தீரன் சின்னமலை நாடகத்தை 13 வாரத் தொடராகவும் காலை 9 மணிக்கு கோவை வானொலியில் ஒளிபரப்பானதும் இவரது சாதனைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமே.

தென்னிந்தியத் திரைப்பட சங்கத்திலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டு கலையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், எழுத்துலகில் ஒரு வற்றாத ஜீவநதி.

கண்ணைத்  தொறக்கணும் சாமி, சாட்டை இல்லாத பம்பரம் என்ற பெயரில் இவர் எழுதி தயாரித்த இரண்டு திரைப்படங்களுக்கு  திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் பெருமதிப்பிற்குரிய பாக்யராஜ் அவர்கள்.

அறிவுதானம், படையல் ஆகிய இரண்டு குறும்படங்களையும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இரண்டு படங்களுமே விருதைப் பெற்றுத் தந்துள்ளது. தமிழ் நெஞ்சம், நெருப்பில் விழுந்த பூ, தாகம், ஊஞ்சல் போன்ற சுமார் 50 நாடகங்களை எழுதி கலைமகளுக்குக் காணிக்கை ஆக்கியுள்ள இவர், படைப்பில் ஒரு நவீன பிரம்மன் தான்.

இவர் எழுதிய எல்லா நாடகங்களுமே வானொலியில் தயாரிக்கப்பட்டு வானொலி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரை ஒரு மாபெரும் எழுத்தாளர் எனக் குறிப்பிடுவது நான் சார்ந்த நாடக உலகிற்கு ஒரு பெருமை.

1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்ற கோஷம் எழுப்பப்பட்ட சமயம் அருக்காணி எனும் தலைப்பில் இவரால் எழுதப்பட்ட படைப்பு மிகவும் பாராட்டைப் பெற்றது.இவர் எழுதியுள்ள OLDAGE HOME ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

“மரபுக் கவிதையில் சூலூர் கலைப்பித்தனுக்குள்ள ஆற்றல் கண்டு வியந்து போனேன்” என்றும், “எனது பயணத்தில் சூலூரைக் கடக்கும்போதெல்லாம் உங்கள் நினைவு வரும்” என்று கவிதையில் உச்சம் தொட்ட வைரமுத்து சொல்லியிருப்பது சூலூர் கலைப்பித்தனின் திறமைக்கு ஒரு சான்று.

சூலூர் கலைப்பித்தன் இதழ் பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு  ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கலைப்பித்தனோடு கலந்துரையாடியது கலைப்பித்தனின் வரலாற்றில் ஒரு சுவையான சம்பவம்.

எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் இவரது சரித்திரத்தில், தமிழ் வளர்ச்சித் துறை கி.ஆ.பெ.விசுவநாதம் பெயரில் வழங்கி இருக்கும் 2019ஆம் ஆண்டிற்கான விருதும், மத்திய அரசு வழங்கி இருக்கும் LIVE ACTION DIRECTOR எனும் விருதும் இவரது எழுத்துப் பணிக்குக் கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய பொக்கிஷம்.

ஆழ்வார்களின் வரலாற்றையும் தன் எழுத்தில் பதிவு செய்துள்ள இவர் இலக்கிய உலகிற்குக் கிடைத்த சொக்கத்தங்கம்.

எதையும் உறுதியோடு செய்து முடிக்கும் எண்ணம் கொண்ட இவர், வைர நெஞ்சம் படைத்தவர். வயது எண்பதைக் கடந்தும் சாதிக்கத் துடிப்பவர். நாட்டுப்பற்றை மையமாக வைத்து இவர் எழுதிய சுதந்திர பாரதி எனும் படைப்பு இலக்கிய உலகிற்கே ஒரு பெருமை. எழுத்து உலகில் இவர் ஒரு அக்ஷ்ய பாத்திரம்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்குத் தகவல் ஏதேனும் தெரிய வேண்டுமானால் நான் எழுதியுள்ள ‘அங்கீகாரம்’ எனும் நூலை Onlineல் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

எழுத்து : கலைமாமணி P.R.துரை

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...