கலை உலகின் சாதனைச் சொல் A.P.N. || காலச்சக்கரம் சுழல்கிறது-13

 கலை உலகின் சாதனைச் சொல் A.P.N. || காலச்சக்கரம் சுழல்கிறது-13
சிவாஜியுடன் ஏ.பி.நாகராஜன்

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

சேலம் மாநகரத்திற்கு அருகே உள்ள ஒரு சிற்றூர்தான் அக்கம்மாபேட்டை. அங்குதான் 1927ஆம் ஆண்டு அருட்செல்வர் என்று நாமெல்லாம் பெருமையுடன் கூறும் ஏ.பி.நாகராஜன் அவர்கள் பிறந்தார்.

அக்கம்மாபேட்டை அந்தக் காலகட்டத்தில் ஒரு ஜமீனாகவும் இருந்த காரணத்தினால் அருட்செல்வர் ஜமீன் பரம்பரையில் பிறந்தவர் என்றும் சொல்வார்கள். இவர் சிறு வயதிலேயே தம் பெருமைக்குரிய பெற்றோரை இழந்து யாரும் இல்லாத அனாதையாகச் சிறகொடிந்த பறவை போல் ஆனார். வயதான அந்தக் குழந்தையை அப்போது ஆதரிக்க ஒருவரும் முன்வரவில்லை. ஆனாலும் இவர் பிற்காலத்தில் கலை உலகில் சாதனை புரியப் பிறந்தவர் என்பது கலைமகளுக்குத் தெரியாதா என்ன?

அந்த சரஸ்வதி தேவியின் கருணை மிகுந்த ஒரு கடைக்கண் பார்வை இவர் மீது படவே, தமிழ் நாடக உலகில் தஞ்சம் அடைந்தார்.

சிறு வயதிலேயே இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் கலைகளில் இவருக்கு ஈடுபாடு இருந்த காரணத்தினால் இந்த ஐந்து வயது குழந்தை சிதம்பரத்திலிருந்த ஸ்ரீராம சங்கீத பாய்ஸ் கம்பெனியில் இடம் கிடைத்து கலை உலகில் பவனிவரத் தொடங்கியது.

காலச்சக்கரம் வெகு வேகமாக சுழலவே இவர் அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து நடிகராக வலம் வந்தார்.

அப்போது அவருக்கு வயது 15.  இவர் தாய் தந்தை இவருக்கு வைத்த பெயர் குப்புசாமி. டி.கே.எஸ். நாடக மன்றத்தில் ஏற்கெனவே குப்புசாமி என்ற பெயரில் பலரும் இருந்ததால் ஒரு தீர்க்கதரிசி இவருக்கு நாகராஜன் எனப் பெயர் சூட்டினார்.அந்தப் பெயரே நிரந்தரமாகி நிகரில்லாத புகழையும் பெற்றுத் தந்தது.

டி.கே சண்முகம் அவர்களின் சகோதரர் முத்துசாமி அப்போதைய நாடகங்களில் ஸ்த்ரி பார்ட் (பெண்) வேடம் அணிந்து நடிப்பதில் நம்பர் ஒன்னாக இருந்தவர். அங்கு புதிதாகச் சேர்ந்த நாகராஜனும் பெண் வேடம் ஏற்று நடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாகராஜன் பெண் வேட நடிப்பில் ஒரு தனி முத்திரையைப் பதித்தார். நாடகம் பார்த்த எவருமே ஏ.பி.என். ஒரு ஆண் என்று சொன்னால் அதை நம்ப மறுத்தனர்.

பவளக்கொடி, வள்ளி திருமணம், குமாஸ்தாவின் பெண் எனப் பல  நாடகங்களின் வெற்றிக்கு இவரது பெண் வேட நடிப்பு ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

வேறு சிலரும் அங்கு பெண் வேடம் ஏற்று நடிப்பதில் வல்லவர்களாக இருந்தார்கள். தமிழ் நாடகச் சரித்திரத்தில் அவரது பெயர்கள் எல்லாம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

எஸ்.எஸ்.வாசன்

ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்களே ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தைப் பார்த்த பிறகு தமது பண உதவியுடன் தயாரிக்கப்படும் அந்தத் திரைப்படத்தில் நாடகத்தில் நடித்த அந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போடலாம், அவரது நடிப்பு அவ்வளவு பிரமாதம் என்று மனதாரப் பாராட்டினாராம்.

“அந்தக் கதாநாயகி வேடம் ஏற்றவர் பெண்ணல்ல, அவர் ஒரு ஆண். பெயர் ஏ.பி.நாகராஜன்” என அங்கிருந்தவர்கள் சொன்னபோது மேலும் ஆச்சரியமடைந்தாராம் திரு. எஸ்.எஸ்.வாசன்.

கதாநாயகியாக நடித்தது ஆண் என்பதை வாசன் அவர்களே கண்டுபிடிக்க முடியாதபடி நடித்த நாகராஜன் அவர்களின் பெண் வேடம் நாடகச் சரித்திரத்தில் என்றுமே அழியாத ஒரு இடத்தைப் பெற்றது. பலவிதமான பாத்திரங்களில் நடித்தாலும் நாகராஜனின் பெண் வேட நடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஒரே ஒரு சிரமம் மட்டும் தொடர்ந்து இருந்து வந்தது. அவர் சுமார் 6 அடி உயரம். அவரது உயரத்திற்கு ஏற்றாற்போல் கதாநாயகன் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருந்தது. அவரது உயரத்திற்கு ஏற்றாற்போல் யாருமே இல்லாததால் ஏ.பி.என். கதாநாயகியாக நடிக்க காதல் காட்சிகள் அப்போது மைனஸ் ஆகவே இருந்திருக்கிறது. அதனால் ஏ.பி.என். கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு பெண்களே கதாநாயகி வேடம் ஏற்று நடிக்கத் தொடங்கினார்கள்.

அக்கம்மா பேட்டை பரமசிவம் நாகராஜன் இதுதான் A.P.N என்ற இனிஷியலின் அர்த்தம். மூன்றெழுத்தில் இருக்கும் எத்தனையோ பேர், கலை உலகில் பூரணச் சந்திரனை போல் ஜொலித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

உதாரணமாக எம்.ஜி.ஆர் , C.N.A , S.V.S.,  A.V.M,  வாசன்,  சிவாஜி, M.K.T, S.S.R. N.S.K போன்ற கலைஞர்களைக் கூறலாம்.

நாடகப் பிரதிகள் எல்லாம் வைக்கும் பெட்டிக்குப் பெயர் புத்தகப் பெட்டி. அந்தப் பெட்டிக்கு நாகராஜன் அவர்களே பொறுப்பு வகித்ததால் புராண இதிகாசங்களுக்கு ஏ.பி.என். அவர்களே பொக்கிஷம் ஆனார். அதனால் அனைத்துப் புராணங்களும் இவருக்கு அத்துபடியானது. அருட்செல்வர்  பட்டத்திற்கும் அது காரணமாக அமைந்தது.

மாங்கல்யம், பெண்ணரசி எனும் திரைப்படத்தில் எல்லாம் இவர் கதாநாயகனாக நடித்தபோது எனக்கு விவரம் தெரியாத வயது. அதன் பிறகு இவரே கதை, வசனம் எழுதி ஸ்ரீதேவி நாடக சபாவில் ‘நால்வர்’ என்ற நாடகம் நடத்தினார். அது மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது.

அதனால் இவரை ‘நால்வர் நாகராஜன்’ என்று அழைத்தனர். உடனே அது திரைப்படமாகி நல்லதொரு பாராட்டையும் பெற்றுத் தந்தது.

M.A.V. பிக்சர்ஸ் வேணு அவர்கள் தயாரித்த ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்திற்குக் கூட திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ.பி.என். அவர்கள்தான்.

என்.டி.ராமராவ் நடித்த ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படம்கூட நன்றாகத்தான் ஓடியது. ஆனால் எதனாலோ ஏ.பி.என். அவர்கள் நினைத்த லட்சியத்தை அடைய முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது. அதற்குத்தான் நேரம் வரவேண்டும் என்று ஜோதிடம் தெரிந்தவர்கள் சொல்கிறார்களோ என்று கூட தோன்றுகிறது. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் ஏ.பி.என். அவர்கள் நாடகத்தை மட்டும் விடாமல் நேசித்தார்.

நாடகக் கம்பெனியில் ஏ.பி.என். அவர்களின் பொழுதுபோக்கு படிப்பதுதான். நூல்களையும், நாடகங்களையும் மீண்டும் மீண்டும் படித்ததன் விளைவு ‘சிவலீலா’ இவரை ஈர்த்தது. ஒவ்வொரு வினாடியும் அதைப் படித்துப் படித்து உருப்போட்டுக்கொண்டே இருந்தார்.

1964ஆம் ஆண்டு அவர் கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நவராத்திரி’ திரைப்படம் நடிகர் திலகம், நடிகையர் திலகம் இணைந்து நடித்து வெளியிடப்பட்டது. அந்தப் படத்தில் ஏ.பி.என். அவர்களின் திறமையைக் கண்டு திரை உலகமே வியப்பில் ஆழ்ந்தது.

நடிகர் திலகத்தின் திறமை முழுவதையும் பயன்படுத்திக்கொண்ட ஒரு இயக்குநர் உண்டு என்று சொன்னால் அது ஏ.பி.என் அவர்களாகத்தான் இருக்கும்.

வீதியில் நடக்கும் தெருக்கூத்து கலையைக் கூட இரு திலகங்களும் நடிக்க ஏ.பி.என். இயக்கிய ‘நவராத்திரி’ திரைப்படம் மூலமாக ரசிகர்களுக்கு விருந்தாக்கித் தந்த பெருமை ஏ.பி.என். அவர்களையே சாரும்.

பள்ளிக்கூடமே சென்று படிக்காத ஏ.பி.என். எப்படிப் பலரும் போற்றும் ஒரு பல்கலைக்கழகமானார்? அதற்குப் பெயர்தான் முயற்சி.

தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காததால்தான் இவரால் ‘மக்களைப் பெற்ற மகராசி’யை உருவாக்க முடிந்தது. கலைமகளின் அருள் இருந்ததால்தான் ‘குலமகள் ராதை’யைப் படைக்க முடிந்தது.

‘சிவலீலா’வைத் தினமும் தொடர்ந்து படித்ததனால்தானே திரை உலகில் இவர் படைத்த ‘திருவிளையாடல்’ ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. 

திரைப்படத் துறைக்குத் ‘திருமாலின் பெருமை’யைக் கூறிய இவர் ‘கந்தன் கருணை’க்குப் பாத்திரமானார்.

ஏ.பி.நாகராஜன் தான் ஒரு சகலகலாவல்லவன் என்பதை நிரூபிக்கத்தானே பிரபலங்கள் பலரும் நடிக்க அவரது ‘சரஸ்வதி சபதத்’தை நாம் பார்த்து ரசிக்க முடிந்தது. கல் வடிவத்தில் இருக்கும் ராஜராஜ சோழன் கதையைக் காவியம் ஆக்கிய பெருமை ஏ.பி.என். அவர்களைத்தானே சேரும். கே.பி.சுந்தராம்பாளை ‘காரைக்கால் அம்மையார்’ ஆகியது இவரது சாதனை தானே.

வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜனைக் குறுமுனியாக்கி இலக்கிய உலகிற்குப் பெருமை தேடித் தந்தது இவரது ‘அகஸ்தியர்’தானே.

கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’ கதையை ஒரு தெளிந்த நீரோடையாகத் திரைக்கதை அமைத்து, என்றென்றும் அதை ரசிக்கும்படி எல்லா பிரபலங்களையும் அதில் நடிக்க வைத்து, காவியமாகப் படைத்தது நமது நவீன பிரம்மன் நாகராஜன்தானே.

‘வா ராஜா வா’ என்று அழைத்து, வகைவகையாய் வரலாற்றைப் படைத்து தமது ஆவணங்களை எல்லாம் கண்காட்சி ஆக்கிய பெருமை இவரையே சாரும். ‘நவராத்திரி’ தொடங்கி நிறைவாக ஒரு ‘நவரத்தினத்’தையும் தந்தாரே நம் பொன்மனச் செம்மலோடு இணைந்து.

எம்.ஜி.ஆர்., ஏ.பி.என். அவர்களிடம் செலுத்திய அன்பை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. ஏ.பி.என். மட்டும் கதாசிரியராகவும், இயக்குநராகவும் மாறாமல் இருந்திருந்தால் பல நூல்களும், காப்பியங்களும் இன்றும் புத்தக வடிவில்தான் இருந்திருக்கும்.

கொள்ளைக்காரன் என்ற நாடகத்தில் ஏ.பி.என். எழுதிய ஓர் அற்புதமான உரையாடலை இங்கு பதிவு செய்திருக்கிறேன், படியுங்கள்.

உரையாடல் 1

டவாலி :- குமார்… குமார்… குமார்…

வக்கீல் :- உன் பெயர் என்ன?

குமார் :- கோர்ட்டாரே மூன்று முறை என் பெயரைச் சொல்லி அழைத்த பிறகும் உன் பெயர் என்ன என்று கேட்பது திருமலை நாயக்கர் என்ன ஜாதி என்று கேட்பது போல் இருக்கிறது.

உரையாடல் 2

குமார் :- குமார் கொள்ளைக்காரன், கொடியவன், கூத்திக் கள்ளன், குல நாசக்காரன் என்றெல்லாம் மக்களாட்சியில் கூச்சல்.

ஒருவர் :- மக்கள் ..

குமார் :- மக்கள் மடமையை உடைமையாகக் கொண்ட மனிதப்பூண்டு, பணத்தால் பெருமை கொள்ள நினைக்கும் பாழும் பதர்.

ஒருவர் :- பணம்

குமார் :- பணம் மனிதனைப் பிணமாக்கும் பேய், அறிவை விலைக்கு வாங்கும் ஆடம்பரச் செட்டி, அந்தஸ்து என்ற பெயரால் சந்தை விலை கூறும் சம்மட்டி. முதலாளிகளின் முன்னேற்றத்திற்கு ஒரு வெல்லக்கட்டி.

ஒருவர் :- முதலாளி

குமார்:- முதலாளி, தொழிலாளியின் குருதியைத் தோண்டி உண்ணும் துரோகக் கூட்டம்.

உரையாடல் 3

மலைவாசல் நாடகம் (சாண்டில்யன் அவர்களின் கதை)

ஸ்கந்தகுப்தன் படுக்கையில் படுத்திருக்கிறார். காவலாளி அவருக்குச் சாப்பிட திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்து வைக்கிறார். அதிலிருந்து ஒரு பழத்தைப் பணிப்பெண் தாதி எடுத்துச் சாப்பிடுகிறாள். அதைத் தற்செயலாகப் படுக்கையில் இருந்து திரும்பிப் படுத்த ஸ்கந்தகுப்தன் பார்த்து விடுகிறான் பிறகு..

ஸ்கந்தகுப்தன்:- (தாதியைப் பார்த்து) தாதி! சக்கரவர்த்திகளுக்கு வரும் பழங்களை அவருக்குப் பணிவிடை செய்யும் தாதி கூட ருசி பார்க்கும் அளவிற்கு ஸ்கந்தகுப்தன் சலுகை காட்டிவிட்டானே என்று உலகம் என்னைத் தானே கேலி செய்யும்?

தாதி :- (பயந்து) மன்னிக்க வேண்டும் சக்கரவர்த்திகளே! சதிகாரர்கள் தங்களுக்கு அதிகமாகிவிட்ட காரணத்தினால் சாப்பிடும் உணவில் கூட விஷத்தைக் கலந்து விடுவார்களோ என்ற சந்தேகம் வந்துவிட்ட பிறகு சாவு வந்தாலும் அதற்கு முதலில் இந்தத் தாதியே பலியாகட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு எதையும் முதலில் நான் அருந்துகிறேன் என்று இந்தப் புரியாத உலகத்திற்கு எப்படி புரியும் பிரபு?

உரையாடல் 4

அஜீத் சந்திரன் : (ஸ்கந்தகுப்தரைப் பார்த்து) சக்கரவர்த்திகளே, நமது நாணயத்தின் அளவு முன்பைவிட இப்பொழுது குறைந்திருக்கிறதே?

ஸ்கந்தகுப்தன்:- ஆமாம் அஜித் சந்திரா, நாட்டில் நம்பிக்கையுள்ள நல்ல மனிதர்களின் நாணயம் எல்லாம் கெட்டுவிட்டது. அதனால் நாணயத்தின் அளவை மட்டுமல்ல, தற்போது அதன் மதிப்பையும் குறைத்திருக்கிறேன்.

-இது போன்ற உயர்ந்த உரையாடல்களை எல்லாம் எழுத இனி ஒரு ஏ.பி.என். கிடைப்பாரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

(தொடரும்)

கலைமாமணி பி.ஆர்.துரை

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...