நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.
திரைப்பட உலகில் ஒரு மிகப்பெரிய கதாநாயகியாகப் பல ஆண்டுகள் கோலோச்சிய பெருமைக்குரியவர், சாய்பாபா தொடர் தயாரிப்பாளராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட மிகப்பெரிய ஆளுமைப் படைத்தவர், ஆங்கிலத்தை அழகாக பேசக் கூடியவர், அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பெருந்தகை, திருமதி. சௌகார் ஜானகி அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் தயாரித்த திரைப்படம் தான் ரங்கராட்டினம்.
அந்தப் படத்திற்கும், ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற நாடகத்திற்கும் கதை, வசனம் எழுதிய பா.அழகேசன், அவர்கள் ஒரு மிகச் சிறந்த கதை, வசனகர்த்தா. ஒரு காலகட்டத்தில் இவர் தன் ஊர் பெயரையும் சேர்த்து புதுப்பாளையம் அழகேசன் என்று மாற்றிக் கொண்டார்.
வறுமையில் இருந்தாலும் இவர் எப்போதும் வெண்மை உடையிலேயே வலம் வருவார். வெங்காயமும் பழைய சாதமும் மட்டுமே இவர் வீட்டில் நிரந்தர உணவாக இருக்கும்.
திரைப்பட வாய்ப்புகள் வரும்போது வகை வகையான அசைவ உணவுகள் அவர் இருக்கும் அறைக்கே வந்துவிடும். அதைச் சாப்பிடும்போது அவர் கண்கள் கலங்கும். தன் மனைவிக்கு இது போன்ற உணவுகளை வாங்கிக் கொடுக்கத் தன்னால் முடியவில்லையே என்கிற காரணத்தினால்தான் அவர் கண்கள் கலங்குமே தவிர, உணவில் உள்ள காரத்தினால் அல்ல.
இவர் ஏழ்மையில் இருந்தாலும் எழுதும் வசனங்கள் எல்லாம் செழுமையாகவே இருக்கும், அதோடு தலைசிறந்த தத்துவங்களும் அடங்கியிருக்கும்.
உதாரணத்திற்கு இதோ அவர் எழுதிய ஒரு வசனம்.
வரப்பில்லாத பயிர், வகுப்பில்லாத பள்ளிக்கூடம், ஜாதி இல்லாத சமுதாயம், நீதி இல்லாத அரசு நெலைச்சு இருக்கவே முடியாது.
பணக்காரர் : ஏம்மா நீங்க பொண்ணு கேட்கத் தானே வந்திருக்கீங்க?
அம்மா : ஆமாம்.
பணக்காரர் : என்ன தனியா வந்திருக்கீங்க? சொந்தம், பந்தம் யாரும் இல்லையா?
அம்மா : இல்ல…
பணக்காரன் : ஐயோ பாவம்… ஏன்?
அம்மா : குளத்துல தண்ணி இல்ல, கொக்குமில்லே, மீனும் இல்லே.
பணக்காரன் : போகட்டும்.. நீங்க என்ன ஜாதி?
அம்மா : முதல்ல நான் ஒரு பெண் ஜாதி. அடுத்து இன்னொருவருடைய பெண் ஜாதி.
பணக்காரர் : சாமர்த்தியமா பேசிட்டா போதாதும்மா. கீழ் ஜாதின்னு தாராளமா சொல்லிக்கலாம். இப்ப நாங்க எல்லாம் எங்கள மேல் ஜாதின்னு சொல்லிக்கிறோம் இல்லே இதுல என்ன தப்பு? எதுக்கும் ஒரு தகுதி இருக்கணும்மா?
அம்மா : எனக்கு ஒரு சந்தேகம்…கேட்கட்டுமா?
பணக்காரர் : தாராளமா!
அம்மா : என் பையனுக்கு உங்க பொண்ணைக் குடுங்கன்னு கேக்கத்தான் வந்தேனே தவிர, எங்க ஜாதிக்கு உங்க ஜாதியை குடுங்கன்னு கேக்கலியே, ஒத்த பிள்ளைய பெத்தாலும் சிங்க்க குட்டிய பெத்தவ நான். அந்த ஒரு தகுதி போதும் எனக்கு…
பணக்காரர் : அம்மா, உன் சிங்கக்குட்டிக்கு பலி கொடுக்க என் மக ஒன்னும் ஆடு இல்லே, நீங்க போலாம்..
இதுபோன்ற தரமான உரையாடல்களை எல்லாம் எழுதி உள்ள அழகேசன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் கலை உலகில் இவரது சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறக்கும் வரை தன் திறமைக்கான அங்கீகாரத்தையும், உரிய வருமானத்தையும் மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருந்த இவர், அது கிடைக்காமலேயே மறைந்தும் போனார். நான் என்றென்றும் போற்றி புகழ்வது ஏழ்மையிலும் நேர்மையுடன் இருந்து, நல்லதொரு உரையாடல்களை எழுதி கலை உலகில் வலம் வந்த பண்பாளர் பா. அழகேசனைத்தான்.
(தொடரும்)