நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10

 நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றால் அது யாரைப் பற்றி என்பதை நன்கு சிந்தித்த பிறகே நான் எழுத தொடங்குவேன். கட்டுரையைப் படித்துப் பாராட்டவில்லை என்றாலும் ஒரு சின்ன குறை கூட சொல்லக்கூடாது என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்படும்.

யாரைப் பற்றி நான் எழுதுகிறேனோ அவர்களைப் பற்றித் துல்லியமாகப் பதிவு செய்வதில் எனக்கு ஒரு ஈடுபாடு உண்டு. இந்தக் கட்டுரை நாடக, திரைப்படத் துறையில் கதாசிரியராக இருந்து கோலோச்சிய பிரபலங்களை பற்றியது.

இதில் தற்போது இடம் பெறுபவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள்.  இவர் நாடகத் துறையிலும், திரைப்படத்துறையிலும் பல நடிகர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய பெருமைக்குரியவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பாரதி கலைஞர் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவின் நாடக விழா ஒன்றை விழா வேந்தன் எனப் போற்றப்பட்ட என்.கே.டி.முத்து அவர்கள் என்.கே.டி.கலா மண்டபத்தில் நடத்தியபோது தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய வடிவேல் வாத்தியார் எனும் நாடகம் நடைபெற்றபோது அந்த நாடகத்தைக் காண கே.பாலச்சந்தர் அவர்களும் வந்திருந்தார்.

நாடகத்தைப் பார்த்த பிறகு எஸ்.வி.எஸ். அவர்களைச் சந்திக்க உள்ளே வந்தவர் “முத்துராமன், ஏ.வீரப்பன், கே.விஜயன், எஸ்.பிரபாகர், S.N.லட்சுமி, என்.ஆர்.சாந்தினி போன்றவர்களின் நடிப்பைப் பார்த்து நான் மிகவும் மலைத்து போய் விட்டேன், ஆமாம் இதில் வன்னியராக நடித்தவர் யார் என்பது எனக்குத் தெரியாது. எஸ்.வி.எஸ். அவர்களோடு அவர் சேர்ந்து நடித்தபோது அவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருந்தது” என்று அவர் சொன்னதும், எஸ்.வி.எஸ். அவர்கள் துரை என்று என்னைக் கூப்பிட்டு கே.பி. அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதுதான் கே.பி. அவர்களுடனான எனது முதல் சந்திப்பு.

கே.பி. அவர்கள் என்னிடம் “உங்கள் நடிப்பு பிரமாதம்” என்று சொன்னவுடன் எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியும், பெருமிதமும் என் நெஞ்சில் இன்று வரை நிலைத்திருக்கிறது.

அடுத்து அவர் இயக்கிய ‘எங்க ஊர் கண்ணகி’ என்ற படத்திற்கு ரேடியோ விளம்பரம் எழுதவும், பேசவும் Prabhakara Advertisers  எனும் ஸ்தாபனம் என்னைத்தான் அழைத்திருந்தார்கள்.

ஆனால் படம் சென்சார் ஆகாததால் படத்தில் இருக்கும் உரையாடல்களைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை.  அதனால் பாடல்களை மட்டும் பயன்படுத்தி நான் எழுதிய Neration உடன் பதிவு செய்து வர்த்தக ஒலிபரப்பில்  பத்து நிமிட நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டது.

முதல் பகுதியைக் கேட்ட கே.பி.அவர்கள் “உரையாடலே இல்லாமல் வெறும் பாட்டை மட்டுமே பயன்படுத்தி அதற்கு ஒரு Neration னும் எழுதி, ரேடியோ விளம்பரம் செய்துள்ள உங்களை  நான் பாராட்டுகிறேன்” என்று சொல்லி புன்முறுவலோடு என்னைத் தட்டிக் கொடுத்தார்.

அவர் என்னுடைய Nerationஐ மிகவும் ரசித்ததாகக் குறிப்பிட்டதைப் பல வருடங்கள் கழித்து தற்போது ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ பகுதியின் மூலமாகப் பதிவு செய்துள்ளேன். கே.பி. அவர்கள் ரசித்துப் பாராட்டிய எனது Nerationஐ நீங்களும் தெரிந்துகொள்ள இதில் குறிப்பிட்டுள்ளேன்.

“மலர்கள் பல நிறத்தில் மலர்கிறது, அவற்றில் மணம் வீசும் சில மலர்கள்தான் தெய்வ சன்னிதானம் செல்கிறது. சில மலர்கள் வளர்ந்த இடத்திலேயே வாடி விழுகிறது.  மனித வாழ்க்கையும் இப்படித்தான்.

ராகங்கள் சரியாக ஒலித்தால்தானே ரசிக்க முடியும்.

வீணையில் எழும் நாதம் கேட்பவர்களுக்கு இனிமையைத் தருகிறது

அதை மீட்பவருக்கோ பெருமையைத் தருகிறது

சமுதாயத்தில் சிதறிக் கிடக்கும் பலதரப்பட்ட மனிதர்களைத் தன் கற்பனைப் பாத்திரங்கள் ஆக்கி இயக்குநர் பாலச்சந்தரால் படைக்கப்பட்ட இணையற்ற வண்ணச் சித்திரம்தான் எங்க ஊர் கண்ணகி” என்று எழுதி நிறைவு செய்து இருந்தேன். அதை விவித் பாரதி நிகழ்ச்சியில் கேட்டு பலரும் அந்தப் படத்தைப் பார்க்கச் சென்றார்கள் என்பதுதான் எனது ரேடியோ விளம்பரத்திற்குக் கிடைத்த வெற்றி.

கே.பி.அவர்கள் இயக்கிய பல படங்களில் எங்கள் சேவா ஸ்டேஜ் குழுவைச் சேர்ந்த ஏ.கே.வீராசாமி, டி.எம்.சாமிக்கண்ணு, ஏ.வீரப்பன், கே.விஜயன், S.பிரபாகர், S.N. லக்ஷ்மி போன்ற நடிகர்கள்  நடித்திருக்கிறார்கள் என்பது வரலாற்றுச் செய்தி .

நான் போற்றிப் புகழ்வது மேஜர் சந்திரகாந்த், நாணல், எதிர்நீச்சல், நவக்கிரகம், பாமா விஜயம், தண்ணீர் தண்ணீர் போன்ற தரமான படங்களைத் தந்து கலைவாணியை மகிழ்வித்த மாபெரும் இயக்குநர் K.பாலச்சந்தர்  அவர்களைத்தான்.

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...