சின்ன அண்ணாமலை நடத்திய ‘தமிழ் ஹரிஜன்’ நூல் தொகுப்பு
பதிப்புத்துறையில் நூற்றாண்டு கண்டு, தொடர்ந்து அதே பதிப்புலகில் பல சாதனைகளையும் முத்திரைகளையும் பதித்துவரும் நிறுவனம் முல்லைப் பதிப்பகமாகும்.
அமரர் திரு.முல்லை முத்தையா அவர்கள் தமிழ் உலகத்திற்குத் தந்த தரமான நூல்களோ எண்ணில் அடங்காது. முதறிஞர் ராஜாஜியின் எழுத்தை நூலாக்கிப் புத்தகமாக வெளியிட்டவர்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களோடு நெருங்கிப்பழகி, அவரது எழுத்துக்கள் அனைத்தையும் புத்தகமாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவரது மறைவிற்குப் பிறகு முல்லைப் பதிப்பகத்தின் பணியில் எந்தவிதமான தொய்வுமின்றி, மிகச் சிறப்பாக பல நூல்களைப் பதிப்பித்து, தந்தைக்குப் புகழ் சேர்த்து வருபவர் திரு. முல்லை மு.பழனியப்பன் அவர்கள்.
அண்மையில் பதிப்புலகில் நூற்றாண்டு கண்டவர் காந்தியவாதி திரு. சின்ன அண்ணாமலை அவர்கள் காந்தியின் ஆங்கில வார இதழான ‘ஹரிஜன்’ இதழை 1946ஆம் ஆண்டு காந்தியடிகள் தமிழகம் வந்த பொழுது ‘தமிழ் ஹரிஜன்’ எனப் பெயரிட்டு திரு.சின்ன அண்ணாமலை வெளியிட்டார்.
அந்த இதழின் ஆசிரியராக திரு. நாமக்கல் கவிஞர் பொ.திருகூடசுந்தரம் திகழ்ந்தார். அந்த இதழின் நிர்வாக ஆசிரியராக திரு.சின்ன அண்ணாமலை
இருந்தார். முதல் ஆண்டில் வெளிவந்த 52 வார தமிழ் ஹரிஜன் இதழ்கள் அனைத்தையும் தேடி எடுத்து, மீண்டும் இன்றைய
தலைமுறைத் தமிழர்கள் அந்தக் காலச் சூழலையும், அரசியல் நேர்மையையும் அறிந்து கொள்ளத்தக்க வகையில், திரு.கிருங்கை சேதுபதி, திரு.அருணன் கபிலன் ஆகியோர் அரிய முயற்சியால் தொகுத்து அளித்த அற்புதமான தேனினும் இனிக்கும் ‘தமிழ் ஹரிஜன்’ வார இதழ்களை, நேர்த்தியாக, தனது பதிப்புலக அனுபவத்தால் வெளியிட்டு வழங்கியுள்ளார் திரு.முல்லை மு.பழனியப்பன் அவர்கள்.
இந்த நூலினைத் தமிழ் உலகிற்கு வழங்கிய முல்லை பழனியப்பன் அவர்களைப் பாராட்டி மகிழுவோம். அதே வேளையில் இது போன்ற அரிய நூல்களை வணிக நோக்கத்தோடு வெளியிடாமல், உள்ளார்ந்த தேசபக்தியோடும், அண்ணல் காந்தியடிகளின் மனப்பாங்கை அனைவரும் அறிந்து கொள்ளவும், இதனை சேவையாகக் கருதி வெளியிட்டுள்ள திரு.முல்லை மு.பழனியப்பன் அவர்களைப் பின்பற்றி மற்ற பதிப்பாளர்களும், கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் மாணிக்கங்களைத் தேடி எடுத்து பதிப்பிக்க வேண்டும் என்பதுதான் வாசகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
புத்தகச் சந்தைக்கு வருவதற்கு முன்பே இந்த நூல் பல்வேறு அறிஞர் பெருமக்களால் பாராட்டப்பட்டுள்ளதே இந்த நூலின் சிறப்பை வெளிக்காட்டுகிறது.
புகழ்பெற்ற நாளிதழ்களான தினமணி, தமிழ் இந்து ஆகியவற்றில் வெளியான மதிப்புரையே இந்த நூலின் தரத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.
காந்தியடிகளின் கொள்கைகளை, கோட்பாடுகளை, சாதிமத வெறுப்பின்மையை, சகோதரத்துவத்தை, எளிமையை, நேர்மையை, கடமை தவறாமையை, தீண்டாமை ஒழிப்பை, சொற்பொழிவுகளை அறிந்துகொள்ள விரும்பும் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல், முல்லை பதிப்பகத்தின் வெளியீடான ‘தமிழ் ஹரிஜன்’ நூலாகும்.
இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னால் 75 ஆண்டுகால காந்தியடிகளின் வரலாற்றை, விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது ‘தமிழ் ஹரிஜன்’ என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த நூலினைத் தொகுத்தோர், வெளியிட்டோர், உதவி புரிந்தோர் அனைவரும் தமிழர்களின் நன்றிக்குரியவர்கள்.
நூல் அறிமுகம் : கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா