கிருஷ்ணை வந்தாள் | 8 | மாலா மாதவன்

 கிருஷ்ணை வந்தாள் | 8 | மாலா மாதவன்

அல்லும் பகலும் நீயே தாயே

அருக மர்ந்து காப்பாய்

சொல்லில் பொருளில் நீயே தாயே

சொந்தம் கொண்டு நிற்பாய்

பொல்லார் யாரும் வந்தால் தாயே

பொறுமை தன்னைக் கொடுப்பாய்

எல்லை கடந்து நின்று தாயே

என்னை நீயும் இயக்கு

கல்யா அப்பாவைக் கட்டிக் கொண்டு அழுது விட்டாள். அந்தளவு நெகிழ்ந்திருந்தது அவள் மனம். பாடலைப் பாடி முடித்தவளின் கண்களிலும் நீர் ஆறாக ஓடியது.

“அப்பா உன்னை புரிந்து கொண்டேன் அகல்யா! இதோ இங்கு உட்கார்ந்து பார்த்துண்டு இருக்காளே இவள் மேல் நீ கொண்ட பக்தி அளவில்லாதது. அதன் போக்கில் நீ நடந்து கொள்வதை சித்தப் பிறழ்வோ என தப்பா நினைச்சிட்டேம்மா. நீ அவளருளைப் பெற்றிருக்கிறாய். அது இந்த மூடனுக்குத் தெரியவில்லை. ” சுந்தரவதனன் நெகிழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே .. வானம் இருண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.

குடையுடன் வந்திருந்த அனைவரும் அவரவர் வீட்டுக்குக் கிளம்பலாயினர்.

“நல்ல வேளை ஐயா! நீங்க வெதப்புக்கு நாள் நல்லாயில்லன்னு சொன்னதால வயலுக்குப் போகல. இல்லேன்னா இப்படி திடீர்னு பெய்யற இந்த மழைக்கு எல்லாம் வீணால்ல போயிருக்கும். நாங்க வரோம் ஐயா.” வீடு வரைக்கும் அவர்களோடு வந்தவர்கள் மரியாதையோடு சொல்லிச் சென்றனர்.

லம்பாடி கிராமம் அழகானது. நடுவில் வீடுகளும் சுற்றியும் வயல்களுமாய் ஊர்க் கோவில் காளி கோவிலாய் மனதுக்கு ரம்யம் தருவது. சுந்தரவதனுக்கும் ஏன் ஜோதிக்குமே கூட நிலபுலன்கள் அங்கு தான் இருந்தது. சுந்தரவதனன் முன்னரே ராமனாதன், ஜோதியிடம் சொல்லிப் பார்த்து விட்டார் ஆலம்பாடிக்கே வந்து விடுமாறு. தனியே தேவகோட்டையில் இருப்பதற்கு இங்கேயே வந்து விடலாமே . கிராமத்துக் காத்து உடம்புக்கும் மனதுக்கும் நல்லது என்று. அதென்னமோ அவர்கள் இன்னும் யோசனையிலேயே இருக்கிறார்கள்.

எடுத்து வந்த பிரசாதமே நிறைய இருக்க அதையே உண்டு மதிய சாப்பாட்டை முடித்தனர். வெளியே மழை ஜோவென்று பெய்து கொண்டிருந்தது. இடியும், மின்னலும் கைகோக்காத அமைதியான மழை. ஊரின் குளம் நிறைய ஆரம்பித்தது. வீட்டை விட்டு இறங்கிக் கால் வைத்தால் தத்தக்கா பித்தக்கா எனச் சேறும் சகதியும் தான். வெள்ளை மணலில் மழை நீர் கலந்து வெண்ணாறாய் வாசலில் ஓடியது.

“நாம் பொங்கல் வைத்த நேரம் நம்ம அம்மன் மனசு குளிர்ந்து மழையாக் கொட்டறா!” ராமனாதன் மகிழ்வுடன் சொன்னார்.

“இல்ல.. நம்ம அகல்யா பாட்டு பாடிய நேரம். கேட்டு அவ குளிர்ந்து மழையாக் கொட்டறா!” இது ஜோதி.

“இல்லல்ல. நம்ம அகல்யா மழை வரும்ன்னு நல்வாக்கு சொன்னா. மழை கொட்டோகொட்டுன்னு கொட்டுது.” என்றார் சுந்தரவதனன்.

அகல்யா இவர்கள் அனைவர் பேச்சையும் கேட்டவாறு பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். நேரம் ஆக ஆக இன்னும் வலுத்த மழை கருத்த இருட்டைக் கொடுத்தது. எங்கும் கருத்த நிறம் திடீரென்று சூழ்ந்த மழை இருட்டால். அட! எங்கும் கருப்பு! எங்கெங்கும் கிருஷ்ணை நிறைந்து விட்டாளோ?

ஹான்.. இந்த அடர்மழை இருட்டில் கிருஷ்ணை தனியா இருப்பாளே! நினைவு வந்ததும் போட்டது போட்டபடி சட்டென குடை மற்றும் டார்ச்சுடன் வீதியில் இறங்கி விட்டாள் அகல்யா.

“என்னம்மா? என்னாச்சு? எங்க இப்படி மழையில கிளம்பற? ட்யூசன் செண்டர்லாம் பூட்டி தானே இருக்கு. இல்லேனாலும் இந்த மழையில் போக வேண்டாம். வீராத் தாத்தாட்ட தானே சாவி இருக்கு. அவர் பார்த்துப்பார்” ஜோதி பின்னாலேயே வந்து சொன்னாள். சுந்தரவதனனும் தடுத்தார்.

“என்ன அகல்யா? பேய்மழை பெய்யுது. ஊரே வெள்ளக் காடா இருக்கு. இப்ப எங்கே போற? அப்படி என்ன அவசர வேலை உனக்கு? “

“நாம எல்லாம் ஒண்ணா கும்பலா பத்திரமா இருக்கோமே. அங்க கிருஷ்ணை பாவம் தனியா கொட்டற மழைல இருப்பாளே அப்பா. துணைக்கு நானிருந்துட்டு வரேன்!” அகல்யா சொல்ற பேச்சைக் கேட்காமல் சேற்றுமண்ணில் கால் வைத்து வேக வேகமாக நடந்தாள் கோவிலை நோக்கி. எடுத்த டார்ச்சையும், குடையையும் மறந்தவாக்கில் வீட்டில் விட்டுவிட்டாள்.

“அடடா! காலைல தான் சந்தோஷப் பட்டேன். இந்தப் பொண்ணு.. எந்த வேளையில் என்ன செய்யும்ன்னே தெரியலையே. ஜோதிம்மா! அந்த பெரிய குடையை எடு. நானும் பின்னாடியே போறேன். வயசுப்பொண்ணைக் கட்டிக் காக்கறதும், வயித்துல நெருப்பக் கட்டிக்கறதும் ஒண்ணு தான். சீக்கிரமே அலமேலு அக்காட்ட பேசி முகூர்த்தம் குறிக்கணும். என்னால இவளை வைச்சு மேய்க்க முடியலை” புலம்பிய சுந்தரவதனன் அவள் பின்னோடு ஓடினார்.

அதற்குள் அகல்யா கோவிலுக்கு பாதி தூரம் சமீபித்து விட்டிருந்தாள். ஆ! அதென்னது? அகல்யா தலைக்கு மேல் ஏதோ புடவைத் தலைப்பு போல். கண்களைக் கசக்கி ஊன்றிப் பார்த்தார் சுந்தரவதனன்.

புடவைத் தலைப்பே தான். ஆனால் அகல்யா தன் கையால் பிடிக்க வில்லை. மந்திரத்துக்குக் கட்டுப் பட்டாற்போல் அந்த புடவைத் தலைப்பு அவள் நகர நகர தலைக்கு மேல் நகர்ந்து கொண்டிந்தது. ஒரு சொட்டு மழை கூட அப்புடவைத் தலைப்பிலோ, அகல்யா மீதோ விழவில்லை.

“இதென்ன அதிசயம்?” சுந்தரவதனன் மெய்சிலிர்த்தவருக்கு அடுத்த அதிசயமும் கண்ணில் பட்டது. யாரும் பிடிக்காத ஒரு லாந்தர் விளக்கு அகல்யாவின் முன்னால் நடந்து சென்றது அவள் வழிப்பாதைக்கு ஒளியூட்ட. வியப்பையும், திகைப்பையும் விடப் பயத்தை அது கூட்டியது சுந்தரவதனனுக்கு. கண்ணைக் கட்டியது போல் இருந்தது. அதன் பின்னான பொழுது அவர் இருந்தார். ஆனால் பார்த்தது மனதில் பதியவில்லை.

மெல்லச்சூழும் மருக்கொழுந்து வாசத்தில் ஆழ்ந்த அவர் மீண்டும் விழித்த பொழுது வீட்டில் இருந்தார்.

“என்ன ஜோதிம்மா! நான் கோவிலுக்குத் தானே போனேன். எப்படி திரும்ப வந்தேன்? அகல்யா எங்கே?”

“அகல்யாவும் நீயுமாத் தான் திரும்பி வந்தீங்க. தோ! அகல்யா உள்ள தான் ஏதோ புத்தகம் படிக்கறா!” என்றாள் ஜோதி.

நம்பாமல் வெளியே பார்த்தார். இன்னும் மழை சீராகக் கொட்டிக் கொண்டிருந்தது. திரும்பி ஹாலில் மணியைப் பார்த்தார். மணி சாயங்காலம் நான்கு மணி என்றது கடிகாரம். அகல்யா பின்னாடியே கிளம்பிப் போனது பிற்பகல் இரண்டு மணிக்கு. இப்போ மணி நான்கு ஆச்சு. என்ன நடந்திருக்கும்? பறந்த புடவைத் தலைப்பில் நனையாமல் போனாளே அகல்யா. அதன் பின் என்னாச்சு? எப்படி நான் திரும்பி வந்தேன்? இதையெல்லாம் சொன்னால் என்னையும் பைத்தியம் என்பார்கள். அப்புறம் பைத்தியக்காரக் குடும்பம் என ஒருவரும் பெண் கேட்டு வர மாட்டார்கள். தனக்குள் எழுந்த கேள்வியைத் தானே அமுக்கிக் கொண்டார்.

மெல்ல நடந்து போய் வாசல் வராண்டாவில் வைத்திருந்த குடையைத் தொட்டுப் பார்த்தார் ஈரம் இருக்கிறதாவென.

ராமனாதன் எட்டிப் பார்த்து…

“எங்க சுந்தர் போகப் போற? நான் இப்ப தான் குடையைப் பிடிச்சுண்டு போய் எவ்வளவு தூரம் தண்ணி ஓடுதுன்னு பார்த்துட்டு வந்தேன். அதான் குடை ஒரே ஈரம்ன்னு அங்க வைச்சிருக்கேன்.”

சப்பென்றாகி விட்டது சுந்தரவதனனுக்கு. அகல்யா கோவிலுக்குப் போனாள் சரி. புடவை குடையாய் அவளுக்குப் பிடித்தது . சரி. ஆனால் தானும் அவள் பின்னால் போனோமா என்பதே சந்தேகமா இருக்கே. எல்லாம் கனவோ. பகல் தூக்கம் போட்டு கனாக் கண்டிருக்கோம் போல இருக்கு. வெளில சொன்னாச் சிரிப்பா. எழுந்த எண்ண ஓட்டத்தில் வாயை இறுக்க மூடிக் கொண்டவர் உள்ளே வந்து அறைக்குள் எட்டிப் பார்த்தார்.

அகல்யா ஏதோ பாட்டு எழுதிக் கொண்டிருந்தாள். நோட்டை மூடி வைத்து விட்டு..

“வாங்கோப்பா! நல்ல தூக்கமா?” என்றாள்.

“ஆமாம்மா. நீ கோவிலுக்குப் போயிட்டு வந்துட்டியா?”

“நானா? போயிட்டு உடனே வந்துட்டேனே. பின்னாடியே எனக்குத் துணைக்கு வந்த உங்களோடு தான் திரும்பினேன். ஏம்ம்ப்பா?” அகல்யா கண்ணை விரித்தாள்.

உண்மையில் என்ன நடந்தது? கிருஷ்ணை ஏதோ குறும்பு செய்திருக்கிறாள். அகல்யா சிரித்துக் கொண்டாள். பின் மென்மையாக,

“சித்த ரெஸ்ட் எடுங்கோப்பா. ரொம்ப டயர்டா தெரியறீங்க!” என்றாள்.

சுந்தரவதனன் சென்றபின் மானசீகமாகக் கிருஷ்ணையைக் கூப்பிட பக்கம் வந்தமர்ந்தாள் கிருஷ்ணை.

“என்ன கிருஷ்ணை! உன்னைப் பார்க்க அப்பா வந்தால் அவரை அதெல்லாம் மறக்க வைச்சு வேடிக்கை பார்க்கற! போதும் உன் விளையாட்டு!”

“தேவ சம்பாஷணை உனக்குக் கிடைத்தது உன் கொடுப்பினையால். உன் தந்தைக்கு அந்தக் கொடுப்பினை இப்போது இல்லையே. அதனால் மறைத்து விட்டேன். “

“அப்பா என் பின்னோடு வந்தார் தானே!”

“வந்தார்.. .உன் தலை மேல் பறந்த புடவைத் தலைப்பையும், உன் முன்னால் நடந்து செல்லும் லாந்தரையும் பார்த்தார்.”

“ஆ! அப்படியா? நீ தனியே இருப்பாயே என்ற நினைவின் வேகத்தில் இவை எதையும் நானறிய வில்லை கிருஷ்ணை! என்னை நனையாமல் பார்த்துண்டியா நீ? என் பாதையில் ஒளி காட்டினாயா? ஆனால் நான் தான் குடையும், டார்ச்சும் எடுத்துண்டு வந்தேனே!” யோசித்தாள் அகல்யா.

“இல்லை அகல்யா! என்னைக் காணும் வேகத்தில் இரண்டையுமே மறந்து விட்டாய் நீ! என் பெண்ணான உன்னை மழையில் நனைய விடுவேனா இல்லை இருட்டில் தான் நடக்க விடுவேனா? மாட்டவே மாட்டேன்!”

“அதானே! அப்புறம் அப்பா என் பின்னோடு கோவிலுக்கும் வந்தார் தானே! நான் அறியா விட்டாலும் நீ சகலமும் அறிந்தவள் ஆயிற்றே!”

“பின்னோடு வந்தார். அவர் கோவிலில் நுழையும் போது அன்னையாய் நான் அமர்ந்திருக்க பிள்ளையாய் நீ என் மடி சாய்ந்திருந்தாய். நம் இருவரையும் பிரகாரத் திண்ணை தாங்கி இருந்தது. அம்மா என்றாய். என் மகளே என்றேன். இருட்டில் இருக்கிறாயே என்றாய். கிருஷ்ணை தானே நான் என்றேன். உன் துணை நானென்றாய். உடன் இருந்தாய். அன்னை அன்னை என அனைவரும் போற்றுவர். ஆனால் பிள்ளையாய் உடன் பாசம் பொழிய சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. அகல்யா! நீ அதையும் வழங்கி விட்டாய். பின் ஆடினோம், பாடினோம், சிரித்து விளையாடினோம். அத்தனையும் உன் அப்பா பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணில் வழிந்த நீரோடு.. ஆனால் பிறவிக்கடன் அவரை அவற்றையெல்லாம் மறக்கச் செய்து விட்டது. உன்னைப் பெற்றவர் ஆதலால் உன்னால் என் தரிசனம் கண்டார். இனி எல்லாம் நலமே! பின் உன் அப்பாவோடு தான் நீயும் கிளம்பிச் சென்றாய்!”

“எனக்கு உன்னுடன் இருந்தது.. இருப்பது எவ்வளவு சந்தோஷமா இருக்கு. என் அப்பாவுக்கும் அந்த சந்தோஷத்தைத் தாயேன். அவருக்கும் உன் தரிசனத்தைத் தந்தால் தான் என்ன? கிருஷ்ணை! ப்ளீஸ்! எனக்காக ஒருமுறை! கண்ணால் காண்பதே மெய்யென நினைக்கும் காலம் இது!” அகல்யா தோழியிடம் உரிமையாய்க் கெஞ்சுவது போல் சொன்னாள்.

“காலம் வரும். உன்னைச் சார்ந்தோர் அனைவரும் என் தரிசனம் காண்பர்.”

கிருஷ்ணை சிரித்தபடி ஓடிப் போனாள்.

கிருஷ்ணை! கிருஷ்ணை! எனக்காகவே வந்தாய்! என் மனம் குளிரச் செய்தாய்! உன்னை விட்டு நகர்வேனோ நான்?

அகல்யா தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் முகம் தேஜஸுடன் ஒளிர்ந்தது.

கடவுள் சம்பந்தம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். எந்த ஜென்மமோ அவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதிலும் அகல்யா தாயைப் போல் பழகும் காளியம்மனைத் துணையாகப் பெற்றிருந்தாள். தொடருமா இந்த உறவு? நாளையைப் பற்றிய நினைவு இல்லாமல் இன்றைய பொழுதில் ஆழ்ந்து திளைத்தாள் அவள்.

நாளைக்கான அவள் விடியலை எழுதப் போவது அந்த வனஸ்பதி என்று மட்டும் அவளுக்குத் தெரிந்திருந்தால்.. இவ்வளவு ஆழ்ந்த உறக்கம் அவளை ஆட்கொண்டு இராதோ?

கிருஷ்ணை அவள் மீது இறங்கிய பிறகு மற்றவர்களுக்கான விஷயங்களில் குறி சொன்னவள் தனக்கான வாழ்வில் என்ன இருக்கிறது என அறிய வில்லை.

அவள் வாழ்வை மாற்ற வேண்டியவனோ மதுரையில் இருந்து ஊருக்குச் சென்றும் இன்னும் சுந்தர் மாமாவிடம் இருந்து போன் வரவில்லையே. எப்போது அவர் அம்மாவிடம் வந்து பேசுவது? எப்போது அகல்யாவைப் பார்ப்பது என தவித்திருந்தான்.. ஆம்.. கண்ணால் பார்க்காத அகல்யாவின் மீது மாறாத பிரேமை கொண்டிருந்தான். அது காதலா? கடமையா? அவனுக்கே புரியவில்லை.

குழப்பத்துடன்..

சுந்தருக்குப் போன் செய்ய போனைத் தொட்டான் வாசஸ்பதி.

-க்ருஷ்ணை வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...