தலம்தோறும் தலைவன் | 25 | ஜி.ஏ.பிரபா
குத்தாலம் ஸ்ரீ உத்தவேதீஸ்வரர்
சாதியும் வேதியன் தாதை தனைத் தாள் இரண்டும்
தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவர் தோள் நோக்கம்.
திருவாசகம்.
மனித வாழ்க்கைக்குக் கவசம் மிக முக்கியமானது.
வாழ்வின் இடர்பாடுகளிலிருந்து நம்மைக் காக்க இறைவனின் கவசப் பாடல்கள் இருப்பதுபோல் நம் உடலின் கவசம் தோல். தோலின் பணி அசாத்தியமானது. வெளிப்புற சுற்றுச் சூழலில் இருந்து நம்மைக் காப்பது தோலே.
நம் உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை உடனே வெளிப்படுத்துவது தோல்தான். அரிப்பு, தடிப்பு, தேமல் என்று வெவ்வேறு விதமான பாதிப்புகள் தோலில் ஏற்படும்போது வைத்தியரிடம் ஓடுகிறோம். உடலில் ஒவ்வாமை, காற்றின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் என்று தோல் நோய்க்குக் காரணம் ஆகிறது. வைத்தியர் என்பது மனிதர்தான். அவர் படித்த செய்திகள், அனுபவங்களிலிருந்து, மருந்து தருகிறார். அது பலன் அளிக்க இறைவன் கருணை வேண்டும்.
அந்தக் கருணையே ஈசனாகத் தோல் வியாதியைத் தீர்க்க ஸ்ரீ உத்தவேதீஸ்வரராக குத்தாலம் என்ற திருத்துருத்தி. சுந்தரருக்கு உண்டான தோல் நோய் இங்கு வந்து இத்தலத்து தீர்த்தத்தில் நீராட நீங்கியது என்பது தல வரலாறு.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன் திருத்துருத்தி என்றழைக்கப்பட்ட இத்தலம் இன்று குத்தாலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தல விருட்சம் உத்தால மரம். எனவே உத்தால வான் என்பது மருவி, குத்தாலம் என்று அழைக்கப் படுகிறது. பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையான இத்தலம் எண்ணூறு வருடங்களுக்கு முன் சோழர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.
‘உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்று திருவொற்றியூர் தலத்தில் சத்தியம் செய்து, சங்கிலி நாச்சியாரை சுந்தரர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சிறிது நாளில் திருவாரூர் ஈசனை தரிசிக்கும் ஆவல் ஏற்பட, யாரிடமும் சொல்லாமல் சத்தியத்தை மீறி அங்கிருந்து கிளம்பினார். சத்தியத்தை மீறியதால் தன் கண் பார்வையை இழந்த சுந்தரர், இறைவனைப் பாடிப், பணிந்து, திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் பெற்றார். பின் கச்சி எகாம்பரேஸ்வரரை வணங்கி இடது கண் பார்வையைப் பெற்றார்.
தன் தல யாத்திரையில் பல தலங்களை தரிசித்து வந்த சுந்தரர், உடல் நலம் குன்றி, சரும நோய் பாதித்து, இத்தலம் வந்து சேர்ந்தார். இறைவனை வணங்கி நின்றபோது அசரீரியாக இங்குள்ள தாமரைக் குளத்தில் மூழ்கி எழுக என்று உரைத்தார். அதேபோல் மொழ்கி எழும்போது அவரின் சருமப் பிரச்சினை நீங்கி இருந்தது. உடல், சிலிர்க்க,
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக்
கரையொடுந் திரை கொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி
அகன்கரை உறைவார் அடியினைத் தொழுதெழும்
அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார்
வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்குமா றேம்பெருமானை என்னுடம்
படும்பிணி இடர் கெடுத்தானை
என்ற பதிகம் பாடுகிறார். சுந்தரர் பிணி தீர்த்ததால் தாமரைக் குளத்திற்கு சுந்தர தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.
ஈசனிடம் பெற்ற சாபத்தினால், பசுவாக மாறிய அம்பிகை, திருவாடுதுறை தலத்தில் சுய உருவம் அடைந்தாள். ஈசன் காட்சி அளித்தும், திருமணம் நடைபெறவில்லை. குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரத முனிவருக்கு அவர் விருப்பப்படி வேள்விக் குண்டத்தில் அம்பாள் தோன்றினாள். ஈசனை மணம் செய்ய விரும்பி, தினமும் காவிரிக்குச் சென்று மணலில் லிங்கம் பிடித்து வைத்து பூஜை செய்து வந்தாள்.
ஒருநாள் அந்த லிங்கத்திலிருந்து ஈசன் தோன்றி அம்பிகையின் கை பற்றினார். அப்போது அம்பிகை, தாய் தந்தையர், உற்றார், உறவினர் சூழ சாஸ்திரங்களில் கூறியபடி என்னை மணம் முடிப்பதே சிறப்பு என்று கூற, ஈசன் அப்படியே செய்வோம் என்று கூறி அம்பிகையை முறைப்படி மனம் முடித்ததால் இறைவன் பெயர் நாமம் சொன்னவாரறிவார் என்றும் வழங்கப் படுகிறது.
இத்தல விருட்சம் உத்தாலம் எனப்படும் ஒருவகை அத்திமரம். இம்மரம் குடையாக அமைய, ஈசன் அம்பிகையின் கரம் பற்றினார். இன்றும் இம்மரத்தினடியில், இரு பாதுகைகள் இருப்பதைக் காணலாம்.
தேவாரப் பாடல் காலத்தில் இது துருத்தி என்றே அழைக்கப்பட்டது. திருநாவுக்கரசர் தனது பாடலில்,
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை எத்துமின்னோ
கன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்து
பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.
என்று பாடுகிறார். அம்பிகையை மனம் புரிய வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் துணை வந்த விநாயகர் என்ற பெயருடன் அம்பிகை சன்னதிக்குப் செல்லும் வழியில்,வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் காட்சி அளிக்கிறார்.
தான் தீண்டும் பொருள்கள் எல்லாம் அழிந்து, பஸ்மமாவதால் வருந்திய அக்னி பகவான் இங்கு வந்து இறைவனை வேண்டி தன் பாபங்கள் போக்கிக் கொண்டுள்ளார். கௌதமன், ஆங்கீரசு, மார்க்கண்டேயர்,வசிஷ்டர் போன்றவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றிருக்கிறார்கள்.
இங்குள்ள அம்பிகை ஸ்ரீ சௌந்தரநாயகி என்ற பெயருடன், ஸ்ரீ சக்ர பீட நிலையாயை நம என்ற லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீ பரிமளசுகந்த நாயகி, பிந்து தர்பண சந்துஷ்டையை நமஹ என்ற வடிவிலும் அமைந்துள்ளார்.
உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற விரும்பி காசியை நோக்கிச் சென்றான். இதுவும் காசிக்குச் சமம் என்பதை உணர்த்த சிவன் குண்டோதரனை அழைத்து, நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசி செல்லாமல் தடுத்து விடு என்றார். அப்படியே குண்டோதரன் வடிவம் எடுக்க, பாம்பை விரட்ட, உருத்திரசன்மன், கருட மந்திரத்தைக் கூற பாம்பு மயங்கி விழுந்தது.
சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்து, அங்கு வர, வந்திருப்பது சிவன் என்று புரிந்து வணங்குகிறான். ஈசன் இத்தலத்தைத் தரிசித்தாலே காசியை தரிசித்த பலன் என்கிறார்.
இது திருமணத் தலம் என்பதால் திருமணத் தடைகள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்து கொள்ளலாம். இறைவன், அம்பிகைக்கு உகந்த நாட்கள் எல்லாம் இங்கு திருவிழாதான். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் அம்மை அப்பனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கிறார்கள்.
அர்ச்சனை செய்து வழிபாட்டு, சுவாமி, அம்பாளுக்கு சூட்டிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும். காதல் புரிந்து, பெற்றோர்களை எதிர்த்து, அவர்களுக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்யும் இளைஞர்கள்தான் இன்று நிறைந்து இருக்கிறார்கள். ஆனால் உலகுக்கே சக்தியாக விளங்கும் பராசக்தி, தான் விரும்பிய ஈசனே வந்து அழைத்தும், பெற்றோர் சம்மதமே முக்கியம் என்று மறுத்தது, அனைவருக்குமான உதாரணம்.
நல்ல நடத்தை, குணம், பண்புகளுக்கு தெய்வங்களே உதாரணமாக இருக்கிறார்கள். நாம் பின்பற்ற வேண்டியது அவர்களைத்தான் என்பதற்கேற்ப கோவில்களும், அதற்கான தல வரலாறுகளும் ஏற்பட்டன. கோவில்கள் நமக்குத் தெரிவிப்பது, நன்னெறியை. மன்னர்களின் பரந்த மனப்பான்மையை. கட்டிய கோவிலின் பின்னணியில் ஆன்மீகத்துடன், அறிவியலும் கலந்தே உள்ளன. ராஜேந்திர சோழன் ஐந்தாம் நூற்றாண்டில் கோவில் திருப்பணி செய்து, சிவனடியார்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்திருந்தான். ஒரு மடம் கட்ட நிலம் அளித்த விவரங்களும் கல்வெட்டுகளில் உள்ளது.
இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். தோல் நோய் தீர, திருமணத்தடை அகல முக்கியமான பரிகாரங்கள் செய்யப் படுகின்றன. இங்கு இறைவனின் பாதுகைகளையும், கைலாயத்தில் நிழல் தந்து வந்த உத்தால மரமும் இங்கு காண வேண்டிய முக்கியமான விஷயமாகும்.
இறைவனே அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறான். நமக்குள் ஜீவனாக உறைந்து நிற்பவன் அவனே. அவனை வணங்கும்போது நம் உள்ளம் தூய்மை அடைகிறது. அங்கு படிந்து இருக்கும் கசடுகள் விலகி, உடல் அமைதியடைகிறது. அமைதியான மனம் மகிழ்வில் அமிழும்போது, நோய்களும் விலகுகிறது.
ஈசனின் ரூபம் பார்த்தாலே பரவசம் அளிக்கக் கூடிய ஒன்று. அவனின் ரூபத்தில் ஆழ்ந்து, மனம் குளிர நினைக்கும்போது கிடைக்காத பேறுதான் என்ன? நன்மைகளை எல்லாம் எல்லாம் அள்ளி வழங்குகிறார்.
அரும்பன்ன வனமுலை நாயகி அன்னை ஈசனை தவமிருந்து மணந்த தலமாதலால், அன்னை தன்னை நாடி வருபவர்களுக்குத் தன் அருளை அள்ளி வழங்குகிறாள். தன் மனைவியின் மனம் குளிர அய்யன், அன்னை தன் பக்தர்களுக்காகக் கேட்கும் அனைத்து வரங்களையும் அருள்கிறார்.
நோய் தீர என்றில்லாமல், புராணச் சிறப்பு மிக்க தளம் என்பதால் அங்கு சென்று அம்மையப்பனைத் தரிசனம் செய்வது மிக அவசியம்.
–தலைவன் தரிசனம் தொடரும்…