தலம்தோறும் தலைவன் | 22 | ஜி.ஏ.பிரபா
22. திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர்
தேவ தேவன் மெய்ச் சேவகன் தென்பெருந்துறை நாயகன்
மூவராலும் அறி ஓணா முதலாய ஆனந்தம் மூர்த்தியான்
யாவர் ஆயினும் அறி ஓணா மலர்ச் சோதியான்தூய மாமலர்ச்
சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடருமே.
திருவாசகம்.
“மருந்தென்பது மாமலர்ச் சோதியான் அடிமலரே”
– என்கிறது திருமுறை.
மருத்துவர்கள் வைத்தியம் பார்த்தாலும் மருந்து செயல்படுவது இறைவன் கருணையால் மட்டுமே. அவன் கருணை இருந்தால் மட்டுமே மருந்துகள் ஓர் உடலில் செயல்பட ஆரம்பிக்கும். ஆனால் இறைவன் கருணை இருந்தால் எந்த நோயும் நம்மை அணுகாமல் காக்க முடியும்.
மருத்துவர்களிடம் செல்வதால் மேலும், மேலும் அந்நோயின் தீவிரம் அதிகரிக்கிறதே தவிர அது குறைவதில்லை. ஆனால் நோயைக் கட்டுபடுத்தும் தன்மை மனதுக்கு உண்டு. மனம் கெட்டால் உடல் கெடும் என்பார்கள் பெரியவர்கள்.
மனதுக்கும் அதே சமயம் உடலுக்கும் போதுமான பயிற்சி அவசியம் என்றுதான் நம் முன்னோர்கள் கோயிலை அமைத்தார்கள். இப்பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளையும் கோயிலின் கோபுர கலசத்தின் மூலம் ஈர்த்து, அதிலிருந்து வரும் கதிர்வீச்சு நம் உடலில் பாயும்படிச் செய்தார்கள்.
உயர் மதில்களுடன், நீளமான சுற்றுப் பிரகாரங்களைச் சுற்றி வருவதன் மூலம் அற்புதமான உடற்பயிற்சி கிடைக்கிறது. இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் நம் முன்னோர்கள் கோயில்களை அமைத்தார்கள்.
அங்கு இறைவன் விரும்பிவந்து வரம் கொடுக்கும் காமதேனுவாக அமர்ந்து விடுகிறான். அங்குள்ள இறைவன் தன்னை நாடி வருபவர்கள் கேட்டதைக் கேட்டபடி அளிக்கிறான். அப்படி நோய் தீர்க்கும் ஒரு தளமாக இருக்கிறது திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயம்.
தன் பெயரிலேயே மருந்தைக் கொண்டுள்ள ஈஸ்வரன் இங்கு வரும் அடியவர்களின் நோயைத் தீர்க்கிறார். இங்குள்ள ஈசனுக்குப் பாலாபிஷேகம் செய்து விபூதிப் பிரசாதம் உண்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. அகத்தியருக்கு ஈசன் காட்சி தந்த வன்னி மரத்தைச் சுற்றி வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கயிலை மலையில் ஈசனுக்கும் அம்பிகைக்கும் திருமணம் நடைபெற்ற சமயம் திருமணத்தைக் காண அனைவரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமன் செய்ய அகத்திய முனிவரை அங்கு போகச் சொன்னார் சிவபெருமான்.
அங்கு சென்றால் தெய்வத் திருமணத்தைத் தன்னால் காண இயலாமல் போய் விடுமே என்று அகத்தியர் தயங்கிய போது, அகத்தியர் விரும்பும் போது அகத்தியருக்குத் தன் திருமணக் கோலம் காட்டி அருளுவதாகக் கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் வன்னி மரத்தடியில் அகத்தியருக்குத் தன் திருமணக் கோலத்தைக் காட்டியருளினார்.
அங்கு தங்கியிருந்தபோது அகத்தியர் வயிற்று வலியினால் அவதிப்பட்டார். அப்போது இறைவன் அகத்தியருக்குக் காட்சி கொடுத்து, மருந்துகள் பற்றியும், அதன் உபயோகம் பற்றியும், அதைத் தயாரிக்கும் முறைகளைப் பற்றியும் உபதேசித்து அவரின் வயிற்று வலியையும் தீர்த்ததால் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னிமரமே இங்கு தல விருட்சம். வான்மீகி முனிவர் நாரதர் ஆலோசனைப்படி இங்கு வந்து முக்தி வேண்டித் தவமிருந்தார். இந்த வன்னி மரத்தடியில்தான் அவர் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாகப் புராணம் தெரிவிக்கிறது. அவர் பெயரிலேயே இத்தலம் திருவான்மியூர் என்று அழைக்கப்படுகிறது.
பங்குனி மாதப் பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சி கொடுத்த விழா நடைபெறுகிறது.
அபாய தீட்சிதர் என்னும் எனும் பக்தர் ஒருவர் ஈசனை வழிபட வந்தபோது கடும் மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்படவே அவரால் நீரைக் கடந்து கோவிலுக்கு வரமுடியவில்லை. அவர் ஈசனின் முதுகுப் பக்கம் இருந்ததால் முகத்தைக் காண முடியவில்லை. மனமுருகி ஈசனை வேண்டுகிறார். உன் முகத்தைக் காண அருள் செய்ய மாட்டாயா என்று. அவரின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் மேற்கே திரும்பி அவருக்குக் காட்சியளித்தார்.
எனவே இங்கு சிவன் மேற்கு நோக்கியும் அவரின் பின்பக்கம் தெற்கு நோக்கி அம்பிகையும், முருகனும், விநாயகரும் கிழக்கு நோக்கியும் காட்சியளிக்கிறார்கள்.
காமதேனு பூஜித்த தலம் இது. வசிஷ்ட முனிவரின் சிவபூஜைக்காகத் தன்னிடமிருந்த காமதேனுவை இந்திரன் அனுப்பி வைத்தான். ஆனால் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே, வசிஷ்ட முனிவர், அதைப் புனிதத் தன்மை இழந்து காட்டுப் பசுவாக மாறும்படிச் சபித்தார்.
மனம் வருந்திய காமதேனு சாபவிமோசனம் கேட்க, இத்தலத்தில் உள்ள வன்னி மரத்தடியில் சுயம்புவாக உள்ள லிங்கத்தை வணங்கினால் விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி இங்கு வந்த காமதேனு ஈசனை வணங்கி தினசரி அவர் மேல் பால் சுரந்து வந்தது. அதில் மனம் இரங்கிய ஈசன் அதற்குச் சாப விமோசனம் அளித்தார். எனவே இறைவன் பால்வண்ணநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி முனிவர், தான் திருந்த வேண்டும் என்று ஈசனிடம் பிரார்த்தனை செய்ய வந்தார். அவரைக் கண்டு பயந்து ஓடியது காமதேனு. அப்போது இங்கிருந்த லிங்கத்தைத் தெரியாமல் மிதித்து விட்டது. அதன் தடம் லிங்கத்தின் மேனியில் பதிந்து விட்டது. இன்றும் இறைவனின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். மூலவரின் விமானம் சதுர்வஸ்த்ரம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கில் ஏழுநிலை ராஜகோபுரமும் மேற்கில் ஐந்து நிலை ராஜகோபுரமும் அமைந்துள்ளன. இந்த வாயிலே பிரதான வாயிலாக அமைந்துள்ளது.
இங்கு அன்னை திரிபுரசுந்தரி என்ற பெயருடன் தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறாள். மேற்குக் கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. இவற்றைத் தாண்டி உள்ளே சென்றால் மருந்தீஸ்வரர் கருவறை காட்சியளிக்கிறது. வடக்குச் சுற்றில் உற்சவ மூர்த்திகள் மண்டபம், அடுத்து நடராஜர் சன்னதி, அதை அடுத்து, நூறு சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
தெற்குச் சுற்றில் வரிசையாக அறுபத்தி மூன்று நாயன்மார்களின் உருவச் சிலைகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக பிரம்மா, விஷ்ணு, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விநாயகர் அழகுடன் செதுக்கப்பட்டுக் காட்சி அளிக்கின்றனர்.
இது செவ்வாய்தோஷப் பரிகாரத் தளமாக விளங்குகிறது. திருமணத் தடை, மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, கடன் தொல்லை நீங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
“விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய் உமை நங்கையோர் பங்குடையாய்
திரையார் தென்கடல் சூழ் திருவான்மியூர் உறையும்
அறியா உன்னையல்லால் அடையாதென தாதரவே”
என்று பாடுகிறார் சம்பந்தர். பால்வண்ண நாதரைப் போற்றி வணங்குவதன் மூலம் வினைகள் யாவும் தீரும் என்று ஆணையிடுகிறார்.
திருவான்மியூர் அதன்மேற் குன்றா தேத்த வல்லார்
கொடுவல்வினை போயறுமே”
என்று உறுதியாகக் கூறுகிறார்.
அப்பர் பிரான் பாடிய பதிகம் கிடைக்கவில்லை என்றாலும் அவர் கைலாயம் செல்ல விரும்பி ஒவ்வொரு தலமாக தரிசித்து வருகையில் திருவான்மியூர் வந்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.
“நீடு திருக்கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப்
பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்குபல பதிகளிலும்
சூடும் இளம்பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய்
மாடு பெருங்கடல் உடுத்த வான்மியூர் வந்தணைந்தார்”
என்று கூறுகிறது. இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று தன் பாடல் ஒன்றில் குறிப்பிடுகிறார் அப்பர் பெருமான்.
பொருளும் சுற்றமும் பொய்மையும் விட்டு நீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்து
அருளுமா வல்ல ஆதியா என்றலும்
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே.
இந்த உலகில் நம் பொருளும் சுற்றமும் நிலையில்லை.ஆனால் இதை வேண்டியே நாம் மாயையில் ஆழ்ந்து போகிறோம். உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவரே. அறியாமை என்னும் மயக்கத்தில் இருந்து நம்மை திருவான்மியூர் ஈசன் நீக்குகிறார். அவரின் கழல்களைப் பற்றிக் கொள்வதன் மூலமே நாம் நிலையான இன்பத்தை அடைய முடியும் என்கிறார் அப்பர்.
திருவான்மியூர் ஈசன் பக்தர்களின் அனைத்து விதமான கோரிக்கைகளையும், அவை நியாயமாக இருக்கும் பட்சத்தில் நிறைவேற்றி, முடிவில் தன்னிடம் ஈர்த்துக் கொள்கிறார். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மை, அப்பனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி மகிழ்கிறார்கள்.
தன்னை நினைத்தாலே அவர்களின் மன, மற்றும் உடல் நோய்களைத் தீர்த்து அருள் புரிகிறார் திருவான்மியூர் மருந்தீஸ்வரர்.