அண்ணலின் வழியின் அழியாத கோலங்கள்
காந்தியடிகள் நிலை ஒரே காலத்தில் இருமுனைப்போர் புரிய வேண்டியதாயிற்று. ஒன்று வெள்ளையரை எதிர்க்கும் அரசியல் புரட்சி. மற்றொன்று இந்திய நாட்டு மக்களுக்கான சமுதாயப் புரட்சி. இவ்விருவகைப் புரட்சிகளையும் அறவழியிலே செய்தார்.
அரசியல் புரட்சி
“ஆங்கிலேயர் கையிலே இருக்கும் துப்பாக்கியைக் கண்டு அஞ்சாதே!
அறத்தின் வழி நின்று, எதிர்த்து நில்!
ஆங்கிலப்படை வீரர் தாக்கினால், தாங்கிக் கொள்! எதிர்த்துத் தாக்காதே!
கைது செய்தால் அகமகிழ்வோடு செல்!
மரண தண்டனை விதித்தால் முகமலர்ச்சியோடு தூக்குக் கயிற்றின் முன் நில்!” என்றார்.
சமுதாயப் புரட்சி
தீண்டாமையே வேண்டாம்! பெண்ணடிமையோ பெருங்குற்றம்!
சாதி மத வேறுபாடுகள் வேதனை தருவன!
மறவழி மரண வழி! கள்ளுண்டல் நஞ்சுண்டல்! கோழைத்தனம் கூடாது!
சோம்பல் அடிமைத்தனம் என்பவை காந்தியடிகளின் சிந்தனைகள்.
காந்தியடிகளின் பண்பு
அகிம்சை, எளிமை, எளியவர்பால் அன்பு, தன்னல மறுப்பு, பகைவரையும் மன்னிக்கும் பரந்த உள்ளம், சுதேசிப் பொருள் மீது பற்று ஆகிய அரிய பண்புகள் காணப்பட்டன.
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்றைக் கண்டுபிடித்து அந்நியரை விரட்டிய உலகத்தலைவர் காந்தியடிகள் ஒருவரே. காலந்தவறாமை, புலால் உண்ணாமை, பொய்பேசாமை என்பனவும் அண்ணலின் வாழ்வில் பூத்துக் குலுங்கிய பண்பு. அண்ணலின் வழியின் அழியாத கோலங் கள்.
அண்ணலின் போர் முறை
வெள்ளையர் ஆட்சியை அகற்றும் போராட்டத்தை அண்ணல் அறவழியில் நடத்தினார். உப்புக் காய்ச்சும் அறப்போர், வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அயல்நாட்டுப் பொருள் புறக்கணிப்பு, தனிநபர் அறப்போர், உண்ணாநோன்பு என்னும் வகையில் அண்ணலின் அறப்போர் அமைந்தது. இறுதியாக ‘வெள்ளையனே வெளியேறு’ என்னும் அறப்புரட்சியில் ஈடுபட்டார்; வெற்றி பெற்றார்.
கருணையே வடிவினர்
இந்நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்த தந்தையான அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் சுட்டவனுக்குத் தீங்கிழைக்கக் கூடாது என்றார். காந்தியடிகள் மறையவில்லை, நம்மோடே இருக்கிறார் என்று எண்ணுதல் வேண்டும்.