தலம்தோறும் தலைவன் | 19 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 19 | ஜி.ஏ.பிரபா

19. தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி

த்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி

மத்தம் மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில்

ஒத்தன் ஒத்தன சொல்லிட ஊரஊர் திரிந்து எவரும்

தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுமே

திருவாசகம்

றுபிறவி என்று ஒன்று உண்டா?

காலம் காலமாக, யுகம் யுகமாக எழும்பிக் கொண்டிருக்கும் கேள்வி இது.. பிறப்பும், இறப்பும் என்ற சுழலில் சிக்கி, துன்பத்தில் அல்லலுறும் ஜீவன்கள் அதிலிருந்து மீள, பிறவியே வேண்டாம் என்றுதான் வேண்டுகிறார்கள். ஆனால் ஜீவன்கள் செய்த நன்மை, தீமைகளுக்கு ஏற்ப, அவர்கள் மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து, அதற்குரிய பலன்களை அனுபவிக்க வேண்டும் என்பது நமது வேதங்கள் சொல்லும் விஷயம். ஏழேழு ஜென்மங்கள் என்பது உண்மையா என்ற ஆராய்ச்சி எல்லாப் பகுதிகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் இந்து மதத்தைப் பொறுத்தவரை இவை அனைத்தும் உண்மை என்றே நம்பப்படுகிறது. உன்னத நிலையில் வாழும் ஒரு மனிதன் முக்தி அடைந்து, பிறவி இல்லாத நிலையை அடைந்து இறைவன் திருவடிகளை அடைகிறான்.

“ஏழேழு பிறவிகளிலும் எந்தையே என்னை நீ காத்தருள்”

என்கிறது ஒரு பாடல். மறுபிறவி வேண்டாம் என்றே வேண்டுகிறார் பட்டினத்தார்.

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்

வேதாவோ கை சலித்து விட்டானே –தாதா இருப்பையூர்

வாழ் சிவனே இன்னுமோர் அன்னை

கருப்பையூர் வாராமற் கா

என்கிறார். மனிதர்கள் தங்கள் கர்மவினைகளின் படியே பிறவி எடுக்கிறார்கள். இதையே “இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமானே”- என்று கூறுகிறார் மாணிக்கவாசகர். நம் கர்மவினைகளுக்கு ஏற்பவே மறுபிறவி ஏற்படுகிறது. மரணத்துடன் மனித வாழ்வு முடிந்து விடுவதில்லை. அதன் பிறகும் தொடர்கிறது.

தொடரும் நம் கர்மவினைகளை நீக்கி, மறுபிறவி இல்லாமல் காக்கவே சிவபெருமான் கோவில் கொண்டிருக்கும் இடம் தேப்பெருமாநல்லூர். மறுபிறவி இல்லாதவர்களே அங்கு செல்ல முடியும் என்பது தல வரலாறு கூறும் செய்தி.

தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் என்ற இடமே அத்தகைய சிறப்பு வாய்ந்த இடம். இங்குள்ள ஸ்ரீ வேதாந்த நாயகி சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி நமக்கு மறுபிறவி இல்லாத நிலையை அருள்கிறார். மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பார்கள். அத்தகைய பேரின்ப நிலையை அருள்கிறது இத்தலம். இங்கு யார் வேண்டுமானாலும் செல்ல முடியாது. அப்படிச் சென்றாலும் இறைவனை மனமுருகி வேண்டினால் மட்டுமே அவரின் அருளைப் பெற முடியும்.

இன்னும் இந்தக் கலியுகத்தில் நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இறைவன் தன் அற்புதச் செயல்கள் மூலம் தன் இருப்பை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். சிலிர்ப்பும், ஆச்சரியமும் ஏற்படுத்தும் பல விஷயங்கள் ஈசனின் திருவருளால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஈசனின் தலங்கள் ஒவ்வொன்றும் பல அதிசயங்கள் நிறைந்ததாக இருக்கின்றது. அதில் தேப்பெருமாநல்லூரும் ஒன்று.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் சூரிய கிரகணத்தன்று ஒரு நாகம் ஈசனை தரிசிக்க வந்து, அங்குள்ள வில்வ மரத்தின் இலைகளைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்சித்து, தன் தோலினை ஈசனுக்கு மாலையாக அணிவித்துப் பூஜை செய்கிறது. அதேபோல் இங்குள்ள தீபம் காலை நான்கு மணி முதல் ஒன்பது மணிவரை தானாக அணைந்து, மற்ற நேரங்களில் தானாக எரிகிறது. இது தவிர அவ்வப்போது பல அற்புதங்கள் நிகழும் இக்கோவில் தனிச் சிறப்பு பெறும் விளங்குகிறது மற்ற விஷயங்களில்.

இங்குள்ள வேதாந்த நாயகி வலது காலை முன் வைத்து, உதட்டைக் குவித்து நம்மிடம் பேசுவது போல் உள்ளது. வேதங்களின் பொருளைத் தன் பக்தர்களுக்கு எடுத்துக் கூறுகிறாள் என்கிறார்கள். அன்னைக்கு வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

சாந்த பைரவர் என்று சிறிய வடிவிலும், மகா பைரவர் என்று பெரிய உருவத்திலும் இரண்டு பைரவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே ஆலயத்தில் இருப்பது இங்குள்ள சிறப்பு.

ஈசனைப் பிடிப்பதற்கு முன் சனி பகவான் அம்பாளை வேண்டி அவரின் அருளைப் பெற்ற தலம் என்பதால் சனி காக்கை வாகனத்தில், ஆனந்தமாக, ஒய்யாரமாக மேற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார். இவரின் தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற ஈசன் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒன்றாக இக்கோவிலுக்குள் வரவழைத்தார். அவர்களில் ஒருவரான ஸ்ரீ விஸ்வநாத சுவாமி இங்கேயே நிரந்தரமாக வாசம் செய்கிறார். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்கள் உள்ள இடம் என்பதால் ஏழேழு ஜென்ம பாவங்களும் இங்கு வந்தால் நீங்கி, மறுபிறவி அமையாது என்பது தல வரலாறு.

மிகவும் பழமையான இக்கோயில் ஆகம விதிகளுக்கு முற்றிலும் மாறாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அருள் புரியும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்தில் காட்சி தருகிறார்கள். இதனைப் பேதம் என்பார்கள்.

ஒருமுறை அகத்திய முனிவர் இறைவனைத் தரிசிக்க வந்தார். அவருக்கு மறுபிறவி உண்டு என்பதால் ஈசன் அவரைத் தடுக்க எண்ணி, மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்கச் சொல்கிறார். அந்தக் கட்டளையை ஏற்று மகரிஷி, அகத்தியரின் வழி நெடுக, மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார்.

இதை ஞான திருஷ்டி மூலம் அறிந்த அகத்தியர் மகரிஷியைச் சபித்து விட்டார். மகரந்தப் பூ போன்ற உன் முகம் யாழி முகமாக மாறட்டும் என்று சாபம் அளிக்கிறார். மகரிஷி, இறைவன் கட்டளையைக் கூற, அகத்தியர் உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால் உன் யாழி முகம் மாறும் என்கிறார்.

அதன்படி தேப்பெருமாநல்லூர் வந்த மகரிஷி யாழி முகத்துடன் ஒருமுகம் முதல் பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்பித்து ஈசனைப் பூஜை செய்தார். அவருக்குக் காட்சி தந்து ஈசன் அவரின் சாபத்தை நீக்குகிறார். எனவேதான் இங்கு ஈசனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப் பட்டிருக்கிறது. இருபத்தி இரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு, ஆவுடை பாணம், நாக படம் அமைத்து கவசம் இடுகிறார்கள். ஒவ்வொரு பிரதோஷம், சிவராத்திரி, மற்றும் ஈசனுக்கு உரிய சிறப்பு தினங்களில் இக்கவசம் இடப் படுகிறது.

தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, சுற்றி சீடர்கள் இன்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசை நோக்கிக் காட்சி அளிக்கிறார். இவருக்கு தினமும் பழைய சோறு படைக்கப்படுகிறது. இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்கிறார்கள். இவரைத் தரிசித்தால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார்கள். இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர். இவர் சன்னதிக்கு அருகில் நான்கு கரங்கள் கொண்ட துர்க்கையும், அம்பாள் சன்னதியின் பின்புறம் எட்டுக் கரங்கள் கொண்ட துர்க்கையும் காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பாகும்.

அனைவரையும் கண்காணிக்கும் இறைவனே அனைத்தையும் அருள்கிறார். “எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசன்” என்கிறார் அப்பர் பெருமான். இந்த உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கவனித்து அதற்குரிய பலன்களை, மறுபிறவியை அளிக்கிறார் ஈசன். எனவே மேலிருந்து ஒருவன் அனைத்தையும் கவனிக்கிறான் என்ற உணர்வுடன் நம் செயல்கள் அமைய வேண்டும் என்கிறார் திருமூலர்.

கண்காணி இல்லையென்று கள்ளம் பல செய்வார்

கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்

என்கிறது தமிழ் வேதம். இறைவன் இல்லாத இடம்தான் எது? நமது கணக்கை மிகச் சரியாக எழுதுபவர் ஈசன். நன்மை செய்தவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும். தீமை செய்தவர்களுக்கு இன்னும் அதிக நன்மை செய்ய வேண்டும். மண்ணில் பிறந்து விட்டோம். இதில் மறுபிறவி இல்லாத நிலையை அடைய முயல வேண்டும்.

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் பெறுவது பெரும் பேரின்பம்”

என்கிறது நம் வேதங்கள். பிறருக்குத் துன்பங்கள் தராமல் வாழும் மனிதர்களின் இதயமே இறை குடியிருக்கும் கோயிலாகும். இதையே திருஞானசம்பந்தர்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

என்னில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”

என்கிறார். நம்மை ஆட்கொள்ளவே இறைவன் தலங்கள் தோறும் காட்சி அருள்கிறார். “பந்தமறுத்து ஆளாக்கிப் பணி கொண்டு ஆங்கே பண்ணிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் சிந்தை மயக்கமறுத்த திருவருளினானை” என்கிறார் அப்பர்.

அந்த அருளினானை ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமியை வணங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடைவோம்.

–தலைவன் தரிசனம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *