கோமேதகக் கோட்டை | 21 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

 கோமேதகக் கோட்டை | 21 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

ளவரசியுடன் வித்யாதரன் கிளி வடிவில் பேசிக்கொண்டிருந்தபோது ராட்சதன் உள்ளே நுழைவதைக் கவனித்து விட்டான். நாவாயில் இருந்து கிளம்பும்போதே சித்திரக் குள்ளனையும் அழைத்துவந்திருந்தான் வித்யாதரன். ஒருவேளை கோட்டைக்குள் தான் நுழைய முடியாவிட்டால் சித்திரக் குள்ளனை உள்ளே அனுப்பி வேவு பார்த்துவர எண்ணியிருந்தான்.

ராட்சதன் கண்ணில் இப்போது தென்பட வேண்டாம் என்று குள்ளனை மட்டும் இளவரசியிடம் விட்டு விட்டு சிட்டெனப் பறந்துவிட்டான் வித்யாதரன். அப்படிக் கிளம்பும் சமயம் குள்ளனிடம், ராட்சதனை எவ்வளவு தூரம் கோபப்பட வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் ஆத்திரப்பட வைக்குமாறு சொல்லியிருந்தான்.

எனவேதான் சித்திரக் குள்ளன் தானே முன்வந்து குரல் கொடுத்தான். தக்கனூண்டு உருவம் ஒன்று தன்னைக் கேலி செய்வதைப் பொறுக்க முடியாத ராட்சதன் சித்திரக் குள்ளனை பிடிக்க கையை நீட்டினான். ஆனால் அவன் கைக்குள் குள்ளனைப் பிடிக்க முடியாது என்று நினைத்தவன்… “ஊகும்..! உன்னைப் பிடிக்கக் கைகள் எதற்கு..? என் விரல்களே போதும்..!” என்று கட்டைவிரல், ஆட்காட்டி விரல் இரண்டினையும் உபயோகித்து சித்திரக்குள்ளனை தன் முகத்தருகே கொண்டு வந்தான்.

அப்படி அவன் கொண்டுவந்தபோது தாத்தாக்கள் மூக்குப்பொடி போடப் பொடியை எடுத்து மூக்கின் அருகே கொண்டுவருவது போல இருந்தது. “அடேய் பொடியா! பூச்சி மாதிரி இருந்து கொண்டு எனக்கே சவால் விடுகிறாயா? அப்படியே நசுக்கிவிடுவேன்! எங்கேடா வித்யாதரன்?” என்று கர்ஜித்தான் ராட்சதன்.

“யார் அந்த வித்யாதரன்! அவரைப் பார்த்து உங்களுக்கு என்ன பயம்?” என்று நக்கலாக கேட்டான் குள்ளன்.

”அடேய்! அவனைப் பார்த்து எனக்கு பயம் இல்லை! என்னைப் பார்த்துதான் அவனுக்குப் பயம்! அதான் ஒளிந்து கொண்டு இருக்கிறான்!” ராட்சதன் உறுமினான்.

“உங்களைப்பார்த்து ஓடி ஒளியும் ஒருவனைப்பற்றி உங்களுக்கு ஏன் இத்தனை படபடப்பும் பயமும்!” மீண்டும் நக்கலடித்தான் குள்ளன்.

”அடேய்! பூச்சி மனிதா! உன்னை விழுங்கிவிடுவேன்! என்னை வெறுப்பேற்றுகிறாயா? எங்கே வித்யாதரன் சொல்லிவிடு!” ராட்சதன் கர்ஜித்தான்.

“பூச்சி என்று சொல்லிவிட்டீர்கள்! இனியும் சும்மா இருக்க முடியுமா?” என்ற சித்திரக்குள்ளன், ராட்சதனின் விரல்களை பலம் கொண்டமட்டும் கடித்தான்.

“ஆ!” என்று விரல்களை உதறினான் ராட்சதன்! அந்த உதறலில் குள்ளன் அப்படியே பறந்து அங்கேயிருந்த ஓர் திரைச்சீலையைப் பற்றிக்கொண்டு நின்றான்.

”எங்கே! எங்கே அந்த பூச்சி? என் விரலைக் கடித்து விட்டதே! ஒரே எரிச்சலாக இருக்கிறது!”

”பூச்சிகள் கடிக்கத்தான் செய்யும் ராட்சதா! இன்றோடு உன் கொட்டம் அழிந்தது. நாளை விடியல் நல்ல விடியலாய் அமையப்போகிறது! போ! போய் உன் கடைசி உறக்கத்தை உறங்கு! நாளை முதல் உனக்கு மீளாத் துயில்தான்!” என்றாள் இளவரசி.

“ராஜகுமாரி! உனக்கு இன்னும் திமிர் அடங்கவில்லை! இந்தக் கோட்டைக்குள் ஒருவனும் நுழைய முடியாது! அப்படி நுழைந்தாலும் மீண்டும் தப்பிச் செல்ல முடியாது! அந்த வித்யாதரன் எங்கு ஒளிந்து கொண்டிருந்தாலும் கண்டுபிடித்துக் கொன்று விடுவேன்.” என்றான் ராட்சதன்.

“போ! முடிந்தால் அதைச்செய்!” என்று வாசலை நோக்கி கை காட்டினாள் இளவரசி.

”என்னையா போகச்சொல்கிறாய்? போகிறேன்! வித்யாதரனை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அழித்துவிட்டு உன் கொட்ட்த்தை அடக்குகிறேன்!” வேகமாக அங்கிருந்து அகன்றான் ராட்சதன்.

கோட்டைக்குள் நுழைந்த ராட்சதன் அங்கிருந்த அரக்கர்களிடம், “போங்கள் போய் தேடுங்கள்! அந்த வித்யாதரன் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அவனைக் கொல்லுங்கள்! அப்படி உங்களால் கொல்ல முடியாவிட்டால் அவனைக் கட்டி இழுத்து வாருங்கள். கடலில் சந்தேகப்படும் படி யாராவது மனிதர்களோ கப்பலோ படகோ தென்பட்டாலும் சுறா வடிவில் சென்று தாக்குங்கள்!” என்று உத்தரவிட்டான்.

கிளி வடிவில் மீண்டும் நாவாய்க்கு வந்த வித்யாதரன் சுய உருவத்திற்கு மாறினான்.

ரணதீரனிடம் கோட்டையில் இளவரசியை சந்தித்த்தை கூறினான். ரணதீரா “இந்த ராட்சதனுக்கு இரவில் தான் வலிமை அதிகமாம் பகலில் வலிமை குறைவாம். நெருப்புக்கு அவர்கள் அஞ்சுகின்றனராம். நம்மிடம் நெருப்பைப் பொழியும் பீரங்கிகளும் கொதிக்க காய்ச்சிய இரும்பு குண்டுகளும் இருக்கின்றது. நாளைக் காலையில் நாம் கோட்டையை நெருங்க வேண்டும். சில வீரர்கள் கடலில் குதித்து இளவரசியை அடைத்து வைத்திருக்கும் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கே சாளரத்தின் வழியே இளவரசி ஓர் கயிறை விடுவார். அதைப் பிடித்துக் கொண்டு ஏறி சாளரத்தின் வழியாக உள்ளே செல்ல வேண்டும். அரக்கர்களின் கண்ணில் படாதவாறு சென்று கோட்டைக் கதவுகளை திறந்துவிட வேண்டும்.” என்றவன் சூர்ப்பனகாவைப்பார்த்து, “சூர்ப்பனகா நீ சாதுர்யமாக மந்திரப் பாயின் மீதேறிச் சென்று இளவரசியை மீட்டுக்கொண்டு நாவாய்க்கு வந்துவிட வேண்டும். இளவரசி நம் இடத்திற்கு வந்ததும் கோட்டை மீது தாக்குதல் நடத்த வேண்டும். இரும்பு குண்டுகளும் நெருப்பு குண்டுகளும் கோட்டை மீதும் ராட்சதர்கள் மேலும் வீச வேண்டும்.” என்றான்.

நள்ளிரவை நெருங்கிய சமயத்தில் கோட்டையில் இருந்து கடலில் குதித்த ராட்சதர்கள் சுறாக்களாக மாறி நீந்தி வந்தனர். அவர்கள் கண்ணில் வித்யாதரன் இருந்த கப்பல் பட்டுவிட்டது. உடனே அத்தனை சுறாக்கூட்டமும் அந்தக் கப்பலை நோக்கி வேகமாக வர ஆரம்பித்தது.

ரணதீரன் தான் முதலில் இதைக் கவனித்தான். “வித்யாதரா! சுறாக் கூட்டம் ஒன்று நம் கப்பலை நோக்கி வருகின்றது. ஏதோ ஒன்றிரண்டாக இருந்தால் பரவாயில்லை! இது நூற்றுக்கணக்கில் இருக்கும் போலிருக்கிறது. அவைகளைத் தாக்க ஆரம்பித்தால் நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் தீர்ந்துவிடும். என்ன செய்யலாம்?” என்றான்.

அப்போதுதான் கடலை உற்றுக்கவனித்த வித்யாதரன், “ஆமாம்! இவர்கள் ராட்சதர்கள்தான் இரவில் சுறாவாக மாறி கடல் எல்லையை காவல் செய்கின்றவர்கள். இவர்கள் கண்ணில் நம் கப்பல் பட்டுவிட்டிருக்கிறது! நாம் இங்கிருந்து நகரந்து செல்ல வேண்டியதுதான்! அப்படியும் அவர்கள் துரத்திவருவார்கள் நாம் போக்குக் காட்டி எங்காவது மறைந்திருந்து பின்னர் அதிகாலையில் இப்பகுதிக்கு வருவோம்! தேவையில்லாமல் ஆயுதங்களை வீணாக்க வேண்டாம்” என்றான்.

அப்போது அங்கே பூதகி வந்தாள். “வித்யாதரா! இந்த சுறாக்களை நான் பார்த்துக் கொள்கிறேன்! நீ பயப்படாதே” என்றவள். கண்களை மூடி தியானித்தவள் ஏதோ மந்திரங்களை முணுமுணுக்கத் துவங்கினாள். ஒரே நிமிடம்தான் கடந்திருக்கும். அத்தனை சுறாக்களும் “டால்பின்” களாக மாறிவிட்டன.

வித்யாதரன் “அற்புதம்!” என்று வாய்விட்டுக் கூறியவன் “பூதகி! நல்ல சமயத்தில் உதவினாய்! இதை நான் என்றும் மறவேன்! நன்றி” என்று கூறினான்.

“வித்யாதரா! நான் போட்ட இந்த மந்திரம் ஆறு மணி நேரம் செயலில் இருக்கும்! அதாவது விடியும் போது அவர்கள் ராட்சதர்களாக மாறி விடுவார்கள்! அவர்கள் ராட்சதர்களாக மாறி பறக்கும் சமயத்தில் உன்னிடம் இருக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி அவர்களை அழித்துவிடு! இளவரசியை மீட்கும் உன் போராட்டம் வெற்றி பெறட்டும்!” என்றாள்.

பொழுது விடியும் சமயம்! டால்பின் ளாக இருந்த ராட்சதர்கள் பறந்து கோட்டைக்குள் நுழையும் சமயம் கப்பலில் இருந்து சரமாரியாக அவர்கள் மீது நெருப்பு குண்டுகள் பாய்ந்தன. அத்துடன் விஷம் தோய்த்த அம்புகளையும் எய்தனர் ரணதீரனும் அவனது சகாக்களும். அவை குறி தவறாமல் ராட்சதர்களை வீழ்த்தின.

தே சமயம் சிலவீரர்கள் கடலில் குதித்து நீந்தி இளவரசியிருந்த பாதாளச் சிறையின் சாளரத்தை அடைந்தார்கள் அங்கே இளவரசியார் தொங்க விட்டிருந்த கயிறு மூலம் ஏறி கோட்டைக்குள் புகுந்தார்கள். அவர்களிடமும் விஷம் தோய்த்த அம்புகளும் வில்லும் இருந்தன.

அவர்கள் பாதாளச்சிறைக்குள் நுழைந்து கோட்டை வாசலை அடையும்போது சில ராட்சதர்கள் அவர்களைப்பார்த்துவிட்டார்கள் ராட்சதர்கள் அந்த வீரர்களை பிடித்து விழுங்க முற்பட்டனர். அப்போது “பிரபோ! பிரபோ! ஆபத்து! வித்யாதரன் நம் வீர்ர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறான்!” என்று தப்பிப்பிழைத்துவந்த சில அரக்கர்கள் கதறிக்கொண்டே ஓடிவர அனைவரும் ராட்சதனிடம் ஓடினர்.

பதட்டமுடன் அரக்கர்கள் ஓடிவருவதைப்பார்த்த ராட்சதன், “ஏன் இப்படி ஓடிவருகின்றீர்கள்! என்ன ஆயிற்று?” என்று கேட்டான்.

“பிரபோ! ஆபத்து! ஆபத்து! அந்தவித்யாதரனும் அவனுடன் வந்த படையும் நம் அரக்கர்களை நெருப்பு ஆயுதத்தால் தாக்குகின்றனர். நம் வீரர்கள் நிறைய பேர் மடிந்துவிட்டனர்” என்றனர் அரக்கர்கள்.

ராட்சதன் கோபத்துடன் எழுந்தான். “அந்த வித்யாதரனை என்ன செய்கின்றேன் பார்” என்று கோமேதக கோட்டையின் உச்சிக்கு மேல் சென்றான். அங்கே சூர்ப்பனகா மந்திரப்பாயில் இளவரசியை ஏற்றிக் கொண்டு பறந்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் அவன் ஆத்திரம் அதிகமானது.

”ஏய்! சூனியக்காரி! நில்! ராஜகுமாரியை விட்டுச்செல்!” கத்தினான் ராட்சதன்.

”முட்டாள் ராட்சதா! உன்னால் முடிந்தால் பிடித்துக் கொள்! என்று பறந்தாள் சூர்ப்பனகா.”

ஆத்திரத்தில் அப்படியே கோட்டை மீதிருந்து கடலில் குதித்தான் ராட்சதன். அவன் குதித்த வேகத்தில் கடல்நீர் அப்படியே ஓர் பனைமர உயரத்திற்கு எழும்பி அடங்கியது. அப்படியே கடல் மீது நடந்து செல்ல ஆரம்பித்தான். அவன் வைக்கும் ஓர் அடிக்கும் கடல் நீர் ஓர் பனைமரம் உயரத்திற்கு உயர்ந்து எழுந்து அடங்கியது.

கப்பலில் இருந்த வித்யாதரன் இதைக் கவனித்தான். “ரணதீரா! ராட்சதன் அறிவிழந்துவிட்டான்! அவனுக்கு பறக்கும் சக்தி இருந்தும் அதை மறந்து கோபத்தில் கடலில் குதித்து நடந்து வருகின்றான்! இதுதான் சமயம்! ஆயுதங்களை வீசு!” என்றான். தானும் ஆயுதங்களை வீச ஆரம்பித்தான்.

ரணதீரனும் வித்யாதரனும் வீசிய நெருப்பு குண்டுகள் ராட்சதனின் உடலைத் துளைத்தன.

“அடேய் ராட்சதா! உனக்கு உணவாக நிறைய நெருப்புத்துண்டங்களை வைத்துள்ளேன்! வா!” என்று அறைக்கூவலிட்டான் வித்யாதரன்.

“பொடியனே! உன்னை விழுங்கிவிடுகிறேன்!” என்று வாயைப் பிளந்தபடி வந்தான் ராட்சதன்.

இதை எதிர்ப்பார்த்த வித்யாதரன் பழுக்க காய்ச்சிய இரும்புக் குண்டுகளை ராட்சதன் வாயில் புகும்படி எய்தான். அதேசமயம் நெருப்புக் குண்டுகளை ரணதீரன் ராட்சதன் மேல் எறிந்தான்.

ஒரேசமயத்தில் இரட்டைத் தாக்குதலை எதிர்ப்பார்க்காத ராட்சதன் அப்படியே சரிந்தான். மலைபோன்ற அவன் உடல் அப்படியே கடலுக்குள் அமிழ்ந்தது.

வீரர்கள் வெற்றிக் கோஷமிட்டனர். மந்திரப்பாயில் இளவரசியை அழைத்து வந்த சூர்ப்பனகா அவளை கப்பலில் இறக்கிவிட்டு, “வித்யாதரா ராட்சதன் இறந்தான். வெற்றி உனக்கே! வாழ்த்துகள்” என்றாள்.

“இந்த வெற்றி என்னுடைய வெற்றி மட்டுமல்ல! உங்கள் அனைவராலும் கிடைத்த வெற்றி! வெற்றி நமக்கே என்று சொல்லுங்கள்!” என்றான்.

அனைவரையும் நாவாயில் திரும்பி வரச்சொல்லிவிட்டு மந்திரப்பாயில் இளவரசியை ஏற்றிக் கொண்டு வில்லவபுரம் நோக்கி பறந்தான் வித்யாதரன்.

வில்லவபுர அரண்மனை மந்திரிசபை கூடியிருந்தது.

“வித்யாதரன் சென்று ஒருவாரம் ஆகிவிட்டது. இன்னமும் ஒரு தகவலும் கிடைக்கவில்லையே! அந்த ராட்சதனைக் கொன்று இளவரசியை மீட்டிருப்பானா வித்யாதரன்?” என்றார் மந்திரி.

“அதில் சந்தேகம் ஏன் மந்திரியாரே! வித்யாதரன் மீது எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது! அவன் நிச்சயமாக ராட்சதனை கொன்றிருப்பான்.” மன்னர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வித்யாதரன் மந்திரப் பாயில் இளவரசியோடு அரண்மனைக்குள் நுழைந்தான்.

“அதோ! வித்யாதரன் இளவரசியோடு வந்துவிட்டார்!”

மந்திரப்பாய் கீழிறங்கியது! இளவரசி இறங்கி, “அப்பா…!” என்று மன்னரைக் கட்டிக்கொண்டார்.

”மன்னா! ராட்சதனை ரணதீரன், சூர்ப்பனகா உதவியோடு அழித்துவிட்டேன்! இளவரசியை மீட்டு தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்!” என்று வணங்கி நின்றான் வித்யாதரன்.

”வித்யாதரா! உன் வீரமும் விவேகமும் போற்றத்தக்கது! அத்துடன் உன் சமயோசித புத்தியும் காரியத்தில் கொண்ட உறுதியும் நாட்டுப்பற்றையும் நான் போற்றுகின்றேன்! உன்னால் இந்த நாடும் மக்களும் நலம் பெற்றனர். இளவரசியை மீட்ட உனக்கு நான் ஒரு பரிசு தர விரும்புகின்றேன். இன்று முதல் இந்த நாட்டின் பிரதம தளபதியாக உன்னை நியமிக்கின்றேன்!” என்றார்.

“மன்னா! தங்கள் அன்புக்கு நன்றி! நான் பதவிக்காக இளவரசியை மீட்டுவரவில்லை! என் கடமையைச்செய்தேன். என் தந்தை தந்த வாக்குறுதியை நிறைவேற்றவே இளவரசியை மீட்டுவந்தேன். பதவி என் சுதந்திரத்தை பாதிக்கும். நான் என் தந்தைக்கு உதவியாக குருகுலத்தில் இன்னும் திறமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கவே விரும்புகின்றேன்! ஒரு படைத்தலைவனாக இருப்பதை விட பல படைத்தலைவர்களை உருவாக்கும் ஆசிரியனாக இருக்கவே விரும்புகின்றேன். எனவே என்னை மன்னித்துவிடுங்கள்! உங்களின் கோரிக்கையை ஏற்பதற்கில்லை!” என்றான் வித்யாதரன்.

“வித்யாதரா! உன் எண்ணம் புரிகின்றது! உன் விருப்பப்படியே ஆகட்டும்! குருகுலத்தை சீரிய முறையில் நடத்தத் தேவையான உதவிகளை தருகின்றேன்.” என்றார் மன்னர்.

அப்போது அங்கே சூர்ப்பனகா வந்து சேர்ந்தாள். “மன்னா! இளவரசியை மீட்டதில் சூர்ப்பனகாவின் பங்கு அளப்பரியது! அவளுக்கு நான் ஓர் பரிசு தருவதாக வாக்களித்திருக்கிறேன்! அதைத் தங்கள் கரங்களால் வழங்கும்படி கோருகின்றேன்” என்றவன் மந்திரப்பாயை மன்னரிடம் வழங்கினான்.

“என்னது..? மந்திரப்பாயையா சூர்ப்பனகாவிற்குத் தரச் சொல்கிறாய்?”

”ஆம்! மன்னா! இது என்னிடம் இருப்பதை விட சூர்ப்பனகாவிடம் இருப்பது நல்லது. நான் இதை மனமுவந்து அவளுக்குத் தருகின்றேன்!” என்றான்.

”வித்யாதரா! உன் நல்ல உள்ளம் சுயநலமில்லா குணம் யாருக்கும் வராது! இந்த சூனியக்காரியையும் நல்வழிப்படுத்திவிட்டாய்! அன்பால் வென்றுவிட்டாய்! இந்த சூர்ப்பனகா நீ எப்போது கூப்பிட்டாலும் உதவ ஓடிவருவேன்! எந்த ஒரு உதவி தேவைப்பட்டாலும் அழைக்க மறந்துவிடாதே!” என்று கண் கலங்கினாள் சூர்ப்பனகா.

ராஜகுமாரியும் வித்யாதரனிடம் வந்து, “வித்யாதரரே! உங்கள் துணிவும் சுயநலமில்லா சிந்தையும் என்னை மீட்டெடுக்க பெரிதும் உதவியது. இதை என்றும் நான் மறவேன்!” என்றாள்.

“வித்யாதரன் வாழ்க! வாழ்க!” என்று அரசன் முழங்க அனைவரும் “வாழ்க! வாழ்க!” என்று முழங்கினர். வெற்றி பேரிகை இசைக்க, அவைக்குத் தலைவணங்கி விடைபெற்றான் வித்யாதரன்.

–நிறைந்தது-

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *