இந்தியாவின் பணக்காரப் பெண்களில் முதலிடத்தில் ஒரு தமிழச்சி
ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் சிவ் நாடாரின் ஒரே மகள். இவர் இசைக்கலைஞராகவும், யோகாவில் தேர்ச்சி பெற்றவராகவும் உள்ளார். ஹெச்.சி.எல். நிறுவனத்தில் மிகப் பெரிய உத்திகளை வகுக்கும் பொறுப்பில் உள்ளார்.
கோடாக் பிரைவேட் பேங்கிங்-ஹுருன் பட்டியலிட்ட 2021 ஆம் ஆண்டின் தரவுப் படி இவருடைய சொத்து மதிப்பு இந்திய ரூபாய் கணக்கில் 84,330 கோடி என்று கூறப்படுகிறது. ரோஷினி நாடார் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்தியாவின் பணக்காரப் பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் மிகக் குறுகிய காலத்திலேயே இவருடைய நிகர சொத்து மதிப்பு 54% அதிகரித்துள்ளது.
ரோஷினி மல்கோத்ரா புது தில்லியில் வளர்ந்தார். அமெரிக்காவில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப் படம் சம்பந்தமாக இளங்கலைப் பட்டம் பெற்றார். கெல்லாக்ஸ் வணிகவியல் கல்லூரியில் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
ஸ்கை நியூஸ் (இங்கிலாந்து), சி.என்.என். (அமெரிக்கா) போன்ற நிறுவனங்களில் சில காலம் செய்தித் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சமூக சேவகராக வும், பெண் தொழிலதிபராகவும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2014ம் ஆண்டுக் கான இளம் வள்ளல் பட்டத்தை என்.டி.டி.வி. வழங்கியுள்ளது. சிவ் நாடார் அறக்கட்டளையின் மூலம் சென்னையில் சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியை லாப நோக்கம் இல்லாமல் நடத்திவருகிறார்.
ஹெச்.சி.எல். பிராண்ட், ஷிவ் நாடார் அறக்கட்டளை, ஹெச்.சி.எல். ஹெல்த்கேர் பிரிவு போன்ற நிறுவனங்களுக்கும் இவர் தலைமையேற்றிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்காக வித்யகியான் பள்ளி திட்டத்தை நிறுவியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. சிவ் நாடார் பல்கலைக்கழகத்தையும் (Shiv Nadar University) நிர்வாகம் செய்கிறார்.
இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் பட்டியல் தயாரிப்பதற்கு பல துறைகளில் இருந்தும் பரிசீலனை செய்யப்பட்டன. அதில், டாப் 10 பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் இந்த ஆண்டு இரண்டு புதிய பெண்மணிகள் இணைந்துள்ளார் என்பது பெருமைக்குரியது. அது மட்டுமல்லாமல் இந்த இந்த பட்டியலில் பரிசீலனை செய்யப்பட்ட பெண்கள், நாட்டின் தலைநகரமான டெல்லியில் இருந்து அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து 25 பெண்கள், மும்பையில் 21 மற்றும் ஹைதராபாத்தில் 12 பெண்கள் இந்த பட்டியலில் பரிசீலனை செய்யப்பட் டனர். அதுமட்டுமல்லாமல் ஃபார்மா துறையில் இருந்து 12 பங்கேற்பாளர்களும், ஹெல்த்கேர் துறையில் இருந்து 11 பங்கேற்பாளர்களும், நுகர்வோர் பொருட் களில் இருந்து 9 பெண்களும் இந்தியாவின் முதல் 100 பணக்கார பெண்மணி களின் பட்டியலில் இணைந்துள்ளனர். இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களில் 9 பெண்கள் 40 வயதுக்கும் குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்திய முதல் பணக்காரராக ரோஷினி நாடார் மல்ஹோத்ராவும் இவருக்கு அடுத்த இடத்தில், நைகா என்ற புகழ்பெற்ற ஈ-காமர்ஸ் அழகு சாதன பொருட் களின் தளத்தின் நிறுவனரான ஃபால்குனி நாயர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நைகா என்ற பிராண்டிப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. செல்ஃப் மோடு விமன் என்று கூறும் அளவுக்கு தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு, அழகு சாதன துறையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள ஃபால்குனி நாயரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயின் படி, 57,520 கோடி ஆகும். நைகா நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்பது இதில் முக்கியமான விஷயம். சாதிப்பதற்கு வயதும் ஒரு தடையில்லை என்பதை இவரின் வெற்றி பறைசாற்றுகிறது.
பயோகான் நிறுவனரான கிரன் மசும்தார் ஷாவின் சொத்து மதிப்பு 21% சரிந்ததால் இவர் இந்தியாவின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் மூன்றாவது இடத் திற்கு தள்ளப்பட்டார். இவருடைய சொத்து மதிப்பு 29,000 கோடி ஆகும்.
அப்பல்லோ மருத்துவமனைகளின் குழுமத்திலிருந்து நான்கு பங்கேற்பாளர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே நிறுவனத்தில் இருந்து மிகப்பெரிய பங்களிப்பு அப்போலோ குழுமத்தில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. போபாலைச் சேர்ந்த ‘ஜெட் செட் கோ’ என்ற நிறுவனத்தின் தலைவரான 33 வயதான கனிகா டெக்ரீவால் பட்டியலில் இணைந்தவர்களில், மிகவும் இளையவரவார். இவரின் சொத்து மதிப்பு 420 கோடி.