கால், அரை, முக்கால், முழுசு | 15 | காலச்சக்கரம் நரசிம்மா
15. முதல் விக்கெட் காலி
”என்னடா ரேயான்…. கை வாஷ் பண்ண போன கார்த்திகை இன்னும் காணும்..?” –ஆதர்ஷ் தனக்கு முன்னால் அந்த மெஸ் மாமி விரித்த இலையை, தண்ணீரால் துடைத்தபடி கேட்க, ரேயான், மீண்டும் பின்புறம் சென்றான்.
”ஏய் கார்த்திக்..! சாப்பிட வராம, அந்த ரூமில அப்படி என்னத்தை பாத்திகிட்டு இருக்கே..?” –கேட்டுக்கொண்டே வந்த ரேயானை பிடித்து அவன் வாயைப் பொத்தினான், கார்த்திக்.
”கத்தாதே ! என்னோடு ஹார்ட் த்ராப் கண்டுபிடிச்சுட்டேன். உலகத்திலேயே ஐஸ்வர்யா ராயை விடப் பேரழகியத்தான் நான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னேன் இல்லே..? இதோ… அவ இந்த ரூம்லதான் இருக்கா.” –கார்த்திக் சொல்ல, திகைத்தான் ரேயான்.
”இந்த ஓட்டு வீட்டு மெஸ்லயா இருக்கா, உன்னோட ஹார்ட் த்ராப்..? பேசாம வா..! ஆதர்ஷுக்குத் தெரிஞ்சா கத்தப் போறான்..!” –ரேயான் சொல்ல, அவனை முன்னால் இழுத்து, திறந்திருந்த அறையின் முன்பாக நிறுத்தினான்.
அந்த பெண் அவர்களைக் கவனிக்காமல், தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
”பாருடா..! profile-லயே இவ்வளவு அழகா இருக்கா..! நேரா பார்த்தா எப்படி இருப்பா..?” –கார்த்திக் ஆர்வத்துடன் கேட்டான்.
ரேயான் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு பிரமித்துப் போனான்.
”உண்மையிலேயே சூப்பர் அழகிதான்டா..! சினிமாக்காரங்க கண்ணுல சிக்காமல் எப்படித் தப்பினா..? நீ பாட்டுக்கு அவள் மேல காதல் வயப்பட்டுடாதே. இவ்வளவு பேரழகி இத்தனை நேரம் யார் கண்ணுலேயும் படாமலா இருந்திருப்பாள்..? அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும். இல்லேன்னா முறைப்பையன் ஃபாரின்ல இருப்பான் !” — ரேயான் கூற, சரியாக இட்லி குண்டானைக் கழுவுவதற்காகச் சுமந்து கொண்டு வந்தான், மாமியின் உதவியாளன் அல்லுடு.
”என்ன இங்கே நிற்கறேள்..? அங்கே இலை போட்டாச்சு..! போய்ச் சாப்பிடுங்கோ..!” –அல்லுடு கூற, கார்த்திக் தயங்கினான். சட்டென்று கை கொடுத்தான் ரேயான்.
”அவன் எம்ஜிஆர் ரசிகன். ஆயிரத்தில் ஒருவன் படம் ரொம்பப் பிடிக்கும். அதான் படம் பார்த்துகிட்டு இருந்தான். உள்ளே இருக்கிற லேடி கோபிச்சுக்கப் போறாங்க! வாடா போலாம்ன்னு நான் அவனைக் கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன்..!” –என்றான் ரேயான்.
”சேச்சே..! இந்துவுக்குக் கோபம்லாம் படத்தெரியாது..!” –அல்லுடு கூறினார்.
”இந்துவா அவ பெயர்..? முழுப்பெயர் என்ன இந்துமதியா..?” –கார்த்திக் ஆவலுடன் கேட்டான்.
”இல்லே, இந்துஜா..! மாமியோட வளர்ப்புப் பொண்ணு. செல்லமா இந்துன்னு கூப்பிடுவா..” -அல்லுடு இட்லி குண்டானைக் கழுவியபடி பதில் கொடுத்தார்.
”மாமியோட மாப்பிள்ளையா நீங்க..?” –ரேயான் வேண்டுமென்றேதான் கேட்டான்.
”வாயை அலம்புங்கோ..! எனக்கு இந்து தங்கை மாதிரி..! அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை..!” –அல்லுடு கூற, கார்த்திக் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
”இதை… இதை.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இனிமே இட்லி தடையில்லாம வயத்துல இறங்கும்..!” –என்றபடி ரேயானை அழைத்துக்கொண்டு உணவறைக்கு சென்றான்.
”ஆதர்ஷை எப்படிச் சமாளிக்கப் போறே..?” –ரேயான் கிசுகிசுத்தான்.
”கங்கணா நாலு பேர்ல ஒருத்தனை காதலிக்கிறானு சொல்லியிருக்கா இல்லே. அந்த நாலு பேருல ஒருத்தனா நான் இருக்க விரும்பலை. அவகிட்டே இருந்து தப்பிக்கணும்னா, நான் இந்த இந்துஜாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னா, அவன் மறுப்பு சொல்ல மாட்டான்..!” –கார்த்திக் சொன்னான்.
ரேயானுக்குப் பொறுமை இல்லை. பாதி டிபன் சாப்பிடும்போதே, விஷயத்தை, ஆதர்ஷிடமும், தினேஷிடமும் போட்டு உடைத்துவிட்டான்.
”ஆதர்ஷ்..! டார்க் டெமான்ஸ்ல ஒரு விக்கெட் அவுட்..! நம்ம கார்த்திக் காதலுல சிக்கிக்கிட்டான். கல்யாணம் வரைக்கும் போயிட்டான்.” –என்றதும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான், ஆதர்ஷ்.
”வாட் நான்சென்ஸ்… இப்பத்தான் நாம முதல் தடவையா டிபன் சாப்பிட இங்கே வந்திருக்கோம். அதுக்குள்ளே கைகழுவப் போன இடத்திலயே காதல் வசப்பட்டுட்டியா..? யாருடா அந்தப் பொண்ணு..?” –ஆதர்ஷ் அதட்டினான்.
”ஷ்… கத்தாதே..! மாமி காதுல விழப்போகுது. மாமியோட வளர்ப்புப் பெண்ணாம்..! பேரழகி..! அவ தலையெழுத்து இந்த மெஸ் மாமி கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கா…! ஈசிஆர்ல ஒரு பங்களா வாங்கி, அவளை நான் மகாராணியாக் குடியமர்த்தப் போறேன்..!” –கனவுடன் கூறினான் கார்த்திக்.
”அவசரப்படாதேடா..! என்ன எதுன்னு விசாரிக்காம, பிரச்சனையில் சிக்கிக்க போறே..!” –தினேஷ் சொன்னான்.
”ரெண்டு பேரும் சீக்கிரம் டிபன் சாப்பிட்டுட்டு என் பின்னால வாங்க. நான் அவளைக் காட்டறேன்..! அப்புறம் என்னோட முடிவை நீங்களே பாராட்டுவீங்க..!” –கார்த்திக் சொன்னான்.
டிபன் சாப்பிட்டுவிட்டு, கை கழுவும் சாக்கில் அந்த அறையில் எட்டிப் பார்த்தனர். இன்னும் அந்தப்பெண் கண்கொட்டாமல் ஆயிரத்தில் ஒருவன் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இந்துஜாவின் பேரழகை கண்டதும் ஆதர்ஷே மலைத்துப் போனான். வெறும் ரோஸ் நிற காட்டன் சூரிதாரை மட்டுமே அணிந்திருந்தாள். ஆனால் அந்த கசங்கிய சூரிதாரிலேயே தேவதையாக ஜொலித்தாள், அந்த பெண்.
”நீ சொன்னது சரிதான்..! ரொம்ப அழகா இருக்கா..! ஆனால் அழகு இருக்கிற இடத்துலதான் ஆபத்து இருக்கும். கொஞ்சம் இரு..! நான் அவளை அப்சர்வ் பண்ணிட்டு சொல்றேன்..!” –ஆதர்ஷ், இந்துஜாவையே வெறித்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் முகம் சுருங்கியது.
“நிச்சயமா… இந்த பொண்ணுகிட்ட ஏதோ பிரச்சனை இருக்கு கார்த்திக். எதுக்கும் கொஞ்சம் டைம் எடுத்துக்கோ. அவசரப்படாதே..! இந்தப் பெண் சரிவரமாட்டாள்..!” –ஆதர்ஷ் சொன்னான்.
கார்த்திக்கின் முகம் சுருங்கியது.
”எனக்கு அழகான மனைவி கிடைக்கப் போறாளேன்னு ஆதர்ஷுக்கு பொறாமைன்னு நினைக்கிறேன்..! அதான் இப்படிச் சொல்றான்..!” –கார்த்திக் ரேயான் காதில் கிசுகிசுத்தான்.
”ஆதர்ஷுக்குப் பொறாமையா..? நோ சான்ஸ்..! இவளைவிட அழகிய அவன் முன்னாடி நிறுத்தினாக்கூட அவன் மனசு அலைபாயாது..! ஆனால் அவனோட judgment எப்பவுமே சரியா இருக்கும். பார்க்கலாம்..!”
ரேயான் சொல்லிக்கொண்டிருந்த போதே, திடீரென்று, இந்துஜா திரும்பி அறை வாசலில் இருந்த நால்வரையும் பார்த்தாள். அவள் முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. ஆனால் நிதானமாக எழுந்து வந்து, தனது கதவை ஓங்கிச் சாத்தினாள்.
”நிச்சயம் அவகிட்டே ஏதோ பிரச்சனை இருக்கு..! அதனால்தான் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம கதவை இப்படி டமால்னு சாத்தறா..!” –ஆதர்ஷ் சொன்னான்.
”அவள் பண்புள்ள பெண். நாலு வாலிபப் பசங்க தன்னோட ரூம் வாசல்ல வந்து நின்னு மொறைச்சுப் பார்த்தா, கதவை மூடாம என்ன செய்வாளாம்..? எல்லோரும் உள்ளே வந்து உட்காருங்கன்னா சொல்லுவா..? மாமியோட கண்டிப்பான வளர்ப்பு அப்படி..!” –கார்த்திக், இந்துஜாவுக்குப் பரிந்துகொண்டு பேசினான்.
ஆதர்ஷ் அவனை எரிச்சலுடன் முறைத்தான்.
”பையன், மடிஞ்சுட்டான்..! அவன் தலையெழுத்தை யார் மாத்த முடியும்..?” –கோபத்துடன் தினேஷிடம் கூறியபடி, அங்கிருந்து அகன்றான்.
”அவன் கிடக்கிறான். ரேயான்… நீ எனக்கு சப்போர்ட்டா இருந்தால் போதும்..!” –கார்த்திக் சொன்னான்.
மெஸ் மாமி அவர்களிடம் பில்லை நீட்டினாள்.
”என் பெயர் கங்கா மாமி..! நீங்க எப்ப வேணும்ன்னாலும் வந்து சாப்பிடலாம்..! நான் கடிகாரத்தை பார்த்து சாப்பாடு போடற வழக்கம் இல்லே. பசிக்கிற வயத்தைப் பார்த்துதான் சாப்பாடு போடறேன்..!” –மாமி சொன்னாள்.
”வயதைப் பார்த்து சாப்பாடு போடுங்க, என் இதயத்தைப் பார்த்து உங்க பொண்ணைக் கொடுங்க..!” –சொல்லத் துடித்த நாக்கை அடக்கிக்கொண்டு, ஆர்வத்துடன் பின்புறம் நோக்கினான் கார்த்திக்.
”மீட்டிங் டைம் ஆகுது. கிளம்புங்க..!” –ஆதர்ஷ் அதட்டியபடி வெளியே நழுவ, நண்பர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர்.
தோட்டத்தில் மாத்ருபூதம், செடிகளுக்குத் தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்தார்.
”ஆதர்ஷ்..! நேத்து நடுராத்திரி ஒரு பெண் குரல் கேட்டது. கங்கணா பிளாட்ல புதுசா யாரோ பொண்ணு வந்திருக்காப்ல இருக்கே..!” –மாத்ருபூதத்தின் கண்கள் ஆர்வத்துடன் மின்னின.
”எங்களுக்குத் தெரியாது. நீங்க அவளையே கேட்டுக்கங்க..!” –என்றபடி, நண்பர்கள் தங்கள் பிளாட்டை நோக்கி நடந்தார்கள்.
பிளாட் கதவில் ஒரு காகிதம் சொருகி வைக்கப்பட்டிருந்தது. வியப்புடன் ஆதர்ஷ் அதை எடுத்து உரக்க படித்தான் :
”என்ன DARK DEMONS…! ஒரு விக்கெட் அவுட்டா..? வாழ்த்துகள்..! இப்படிக்கு FAIR ANGELS” –என்று அந்த காகிகத்தில் எழுதப்பட்டிருந்தது.
DARK DEMONS. அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
1 Comment
Very interesting
Waiting for next wicket to fall sir