சிவகங்கையின் வீரமங்கை | 18 | ஜெயஸ்ரீ அனந்த்

 சிவகங்கையின் வீரமங்கை | 18 | ஜெயஸ்ரீ அனந்த்

குருக்கள் தக்ஷணாமூர்த்தி மங்களநாதருக்கு அபிஷேக ஆரத்தி முடிக்கும் தருவாயில் கோவிலுக்கு இரண்டு புதியவர்களை அழைத்துக் கொண்டு இசக்கி உள்ளே நுழைந்தான். புதியவர்களைக் கண்ட தக்ஷணாமூர்த்தி… “என்ன இசக்கி, ரொம்ப நாட்களாகி விட்டது உன்னைப் பார்த்து, உன் மனைவி சிகப்பி நலம்தானே..?”

“எங்கே…. நானும் மங்களநாதரை பார்க்க வர வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் முடிவதில்லை. ஏதோ ஒரு வேலை வந்து விடுகிறது. இப்பொழுது கூட ஒரு வேலையாக தான் வந்துள்ளேன்” என்றான் இசக்கி.

“வேலையாகவா..? என்ன வேலை..? யார் இவர்கள்..? இவர்களை இதுவரையில் நான் பார்த்தது இல்லையே” என்றார்.

“இவர்கள் ஆங்கிலேயர்கள். நம் மங்களநாதரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை தரிசிக்க வந்துள்ளார்கள்” என்றான்.

தக்ஷணாமூர்த்தி கருவறையிலிருந்து வெளியே வந்து, ஆலயத்திற்கு வந்திருந்த புதியவர்களை நன்றாகக் கவனித்து பார்த்தார்.

வெள்ளையும் மஞ்சளும் கலந்த பழுப்புக் கலரில் பூனையின் கண்களை ஒத்த விழிகளும், கூர்மையான நாசிகளும், நன்கு உயர்ந்திருந்த உருவமுமாகக் காணப்பட்டார்கள்.

“என்னது..? ஆங்கிலேயர்களா..? நடப்பது என்னவென்றுதான் தெரியவில்லை. ஒரு பக்கம் இஸ்லாமியர்கள், ஒரு பக்கம் அரேபியர்கள் இப்படி பல மனிதர்கள் ஊருக்குள் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் இங்கு என்ன வேலை என்பதும் புரியவில்லை. இவர்கள் ஆங்கிலேயர்கள் என்று கூறுகிறாய். இவருக்கு நம் மங்களநாதரைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள விருப்பமாம்..?”

“இங்கே உள்ள சிற்பத்தைக் காண வேண்டுமாம்.”

“ஓ,…” என்றவர், “நீலகண்டா…” என்று குரல் தந்தார்.

கழுத்து நிறைய உத்திராட்ச மாலையுடன் நெற்றியில் திருநீறுடன் “வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்” என்று கோளறு திருப்பதிகம் பாடியபடி வந்து நின்றான் நீலகண்டன்.

“நீலகண்டா, இவர் நம் ஊருக்கு புதியவர். நம் கோவிலைச் சுற்றிப் பார்க்க வேண்டுமாம். உதவி செய்”

தலையை அசைத்தபடி அவர்களைக் கூட்டிச் சென்றான். வந்தவர்களில் ஒரு ஆங்கிலேயருக்குச் சற்று தமிழ் தெரிந்திருந்ததால் நீலகண்டனுடன் பேசியபடி வந்தார்.

கோவில் சிற்பங்களையும் அதற்கான காரணங்களையும் கேட்டபடி வந்தவர்கள் ஆலயத்திற்கு வெளியே சபா மண்டபத்திற்கு வந்தார்கள்.

“இது என்ன..? ஒரு வட்டமாக இருக்கு..?” என்று செதுக்கிய, வட்ட வடிவக் கல் ஒன்றைச் சக்கரம் போல் திருப்பியபடி கேட்டான்.

“ஐயா… அதைத் திருப்பாதீர்கள்…” என்று சொல்லி முடிக்கும் முன்னதாக அருகில் இருந்த கல்தூண் ஒன்று சற்று நகர்ந்து கொண்டது. அதனுள் படிக்கட்டுகள் இறங்கியது.

“மிஸ்டர் லார்ட்ஸ்.. நாம் தேடி வந்தது இதுதான்.” என்று பேராசையுடன் பலமாகச் சிரித்தபடி, நீலகண்டனின் அனுமதியைப் பெறக் காத்திராமல் இருவரும் அந்த படிக்கட்டு வழியாக உள்ளே இறங்கினர்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத நீலகண்டன், “உள்ளே செல்லாதீர்கள். அவை அனைத்தும் மங்களநாதருடைய சொத்துகள். அதை அபகரிக்க நினைப்பவர்கள் யாரும் உயிருடன் திரும்பி வருவதில்லை” என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, ஆங்கிலேயர்கள் நீலகண்டனின் குரலை சிறிதும் சட்டை செய்யாமல் படிக்கட்டு வழியாக உள்ளே இறங்கினார்கள். இதை எதிர்பார்க்காத நீலகண்டன் ஒரே பாய்ச்சலில் தக்ஷணாமூர்த்தியிடம் வந்தான்.

“அண்ணா… ஆபத்து..! அப்புதியவர்கள் ஆலயத்தின் பின்புறச் சுரங்கத்திற்குள் இறங்கி விட்டார்கள் இப்பொழுது என்ன செய்வது..?” என்றான் சற்றுப் படபடப்புடன்.

“சுரங்கத்தை மூடிவிடு.” என்று ரகசியக் குரலில் கூறிய தக்ஷணாமூர்த்தி சற்றும் தாமதிக்காமல் விடுவிடுவென கரப்ப;ககிரஹத்தை சாற்றினார். பின், வரிசையாக ஆலயத்தின் நடையைச் சாற்றினார்.

இசக்கி நடந்த அனைத்தையும் பார்த்த மறு வினாடி பயத்தில் மதில் சுவர் ஏறிக் குதித்துச் சென்று விட்டான்.

ஒரு முறை சுற்றும்முற்றும் பார்த்த நீலகண்டன் கல்லால் செய்யப்பட்ட, கடைந்தெடுக்கப்பட வெண்ணை போன்ற உருண்டையை அருகில் இருந்த யாழியின் வாயில் இடவும், தன்னிச்சையாக யாழியின் வாய் மூடிக் கொண்ட மறு விநாடி அங்கிருந்த சுரங்கத்தின் வாயிலும் மூடிக் கொண்டது. சற்று நேரம் அங்கு மயான அமைதி சூழ்ந்து கொண்டது.

“என்னண்ணா இது… இப்படி நடந்து விட்டதே…” என்று அமைதியைக் கிழித்த நீலகண்டனின் ஆதங்கத்திற்கு….

“ஒன்றும் பயப்படாதே…. இது போல் நடப்பது ஒன்றும் புதிதல்லவே. இதுவும் ஈசனின் செயல்தான். நடந்தது யாருக்கும் தெரிய வேண்டாம். நாளை சில சாந்திகள், ஹோமங்கள் செய்த பிறகு தான் ஈசனுக்கு அபிஷேகம் நடத்த முடியும். ஆகவே அதற்கான காரியத்தைப் பார்க்கலாம் வா…” என்றபடி நீலகண்டனுடன் ஆலயத்தை விட்டு வெளியேறினார்.

சிவகங்கை அரண்மனையின் விருந்தினர் மாளிகையில் இளவரசியின் வருகைக்காகக் காத்திருந்தனர் கெளரியும் அவளது தந்தை வைத்தியரும். அச்சமயம், இளவரசருக்கு விவாகம் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் ஊர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இருக்க, கெளரியின் மனது வெட்டப்பட்ட இளம் தளிர் போன்று வெகுவாகத் துன்பப்பட்டது. இரு தினங்களுக்கும் மேலாக சரியாக உணவருந்தாமலும். உறக்கமில்லாமலும் தவித்திருந்த கெளரியின் துன்பத்தைக் கண்ட வைத்தியர் அவளிடத்தில் வந்தார்.

“மகளே…. நீ இவ்வாறு துன்பபட்டு கொண்டிருப்பது எனக்குக் கவலை அளிக்கிறது. இளவரசருக்கும் இளவரசிக்கும் விவாகம் என்பது இன்று நேற்று எடுத்த முடிவல்ல. இளவரசி பிறந்தவுடனே அன்னை உந்திரகோசமங்கை எடுத்த முடிவு. ஆகையால் இதில் வருத்தப்படுவது நியாயமன்று. மனதை மாற்றிக் கொள் மகளே.”

“தந்தையே.. நீங்கள் கூறுவதும் நியாயம்தான் என்றாலும், என் மனது அதை ஒத்துக் கொள்ள மறுக்கிறது. ஒரே வானத்தில் தான் சூரியனும், சந்திரனும் உலவுகிறது. அதே போல் இளவரசரின் இதயத்தில் சந்திரனைப் போல் நான் அவரை அலங்கரிக்க இயலாதா..? அல்லது அலங்கரிக்க கூடாதா..?” என்றவள், தந்தையின் முகத்தை பார்த்து உரைப்பதற்கு சற்று வெட்கப்பட்டவளாய், “தயை கூர்ந்து என்னைக் கொஞ்சம் தனித்திருக்க அனுமதியளியுங்கள்.” என்றவள் அறைக்கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...