தலம்தோறும் தலைவன் | 9 | ஜி.ஏ.பிரபா
ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு
இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மைத்தடம்கண்
வெருள்புரிமான் அன்ன நோக்கிதன் பங்க விண்ணோர் பெருமான்
அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே
–திருவாசகம்
“அனாயாச மரணம்”- இதுவே மனிதர்களின் நோக்கம்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் அடைந்து இறுதியில் அவஸ்தை இல்லாமல், மரண பயம் இல்லாமல் இறைவன் பாதத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்கள் கூடத் தங்கள் நோய் தீர வேண்டும் என்று விரும்பி பல்வேறு வேண்டுதல்கள் வைக்கிறார்களே தவிர, அதனுடன் போராடி காலதேவன் கைகளில் விழ விரும்புவதில்லை.
ஆனால் எமதர்மனின் பாசப் பிடியிலிருந்து யாராலும் விடுபட முடியாது. அந்த நேரத்தில் நம் மனம் பயத்தில் மறுதளிக்குமே தவிர, ஈசனின் நாமத்தை மறந்து விடும்.
“மனமே கணமும் மறவாதே”- என்கிறது ஒரு பாடல்.
“நடையும் தளர, தேஹம் ஒடுங்க கண்கள் மங்க,
நாவது குழற, என்ன செய்வார்? யாரது துணை வருவார்?”
என்கிறது கேள்வி.
ஈசன் மட்டுமே நமக்குத் துணை. அவனின் நாமம் மட்டுமே துணை வரும்.
வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கும், வாழ்வின் இறுதி நிலையில் உள்ளவர்களுக்கும் துணையாக இருப்பது சிவாயநம என்ற நாமமே. நம் பயத்தைப் போக்கி, எமனின் பாசப் பிடியிலிருந்து நம்மைக் காப்பது ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதப் பெருமாள்.
ஒருமுறை எமதர்மராஜன் தன் தொழிலை நினைத்துக் கலங்கினார். தனக்கு மட்டும் ஏன் இப்படி உயிர்வதை செய்யும் தொழில் என்றும், இதனால் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துள்ளது என்று வருந்தி திருவாரூர் தியாகராஜப் பெருமானைக் கண்டு புலம்பினார். அப்போது ஈசன் ஸ்ரீவாஞ்சியம் சென்று ஈசனை வழிபட்டால் உன் தோஷம் நீங்கும் என்று வழி காட்டினார். அவ்வாறே இந்கு வந்து ஸ்ரீவாஞ்சிநாதரை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றார் எமதர்மராஜன்.
மற்றொரு சமயம் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமையாளுடன் உலகை வலம் வரும்போது, பல திருத்தலங்களைக் காட்டுகிறார். அப்போது இத்தலத்திற்கு வரும்போது, “காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணியத் தலம் இது. இங்குள்ள குப்த கங்கை மிகப் புனிதமானது. கங்கையை விட உயர்வானது. இங்கு ஒரு நாள் இரவு தங்கினாலே, கைலாயத்தில் சிவகணங்களாய் இருக்கும் பாக்கியம் கிடைக்கும்” என்கிறார்.
இதைக் கேட்டதும் அம்பிகை இங்கு தங்கி கோவில் கொள்ளத் திருவுள்ளம் கொண்டார். எனவே அம்பிகைக்கு வாழ வந்த நாயகி என்று பெயர். லட்சுமி தேவி, மகாவிஷ்ணுவுடன் சேர்ந்த தலமும் இது.
ஒருமுறை மகாலஷ்மி மகாவிஷ்ணுவுடன் கோபம் கொண்டு, பிரிந்து சென்று விட்டாள். எனவே தேவியைத் தேடி மகாவிஷ்ணு பூலோகம் வருகிறார். சந்தனமரக் காடுகள் நிறைந்த இப்பகுதியில் ஒரு சிவலிங்கம் கண்டு அதற்குப் பூஜை செய்தார். ஈசன் அவரது பூஜையில் மகிழ்ந்து, திருமகளை மகாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்தார். திருமகள் மகாவிஷ்ணுமேல் வாஞ்சையுடன் சேர்ந்த இடம் என்பதால் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றது.
எனவே, கருத்து வேறுபாடுகள், பிரிந்திருக்கும் கணவன், மனைவி இங்கு வந்து ஈசனை வழிபட்டால் அவர்கள் வாழ்வில் இணைவார்கள் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்த நேரம். சரஸ்வதி நதிக்கரையில் ஸார்வா என்ற முனிவர் தவமிருந்தார். கலியுகத்தில் தர்மம் அழிந்து விடும். அதர்மங்கள் பெருகி விடும் என்று கவலையில் துடித்தார். வேதனையில் மூழ்கி இறைவனை நோக்கி தவம் செய்கையில் “திருவாஞ்சியம்” என்ற வார்த்தை அசரீரியாக ஒலித்தது.
முனிவர் உடனே திருவாஞ்சியம் நோக்கி ஓடினார். அவரைக் கலியும் துரத்தியது. அதனால் முனிவர் சிவாயநம, அபயம் என்று உச்சரித்தபடியே ஓடினார். திருவாஞ்சியத்திற்கு சற்றுத் தொலைவிலேயே ஈசன் தோன்றி கலியைத் தடுத்து நிறுத்தினார். அந்த இடம் கலி மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
எனவே கலியுகத்தில் ஏற்படும் சகல தோஷங்களையும், பீடைகளையும் நீக்கும் இடமாக இருக்கிறது ஸ்ரீவாஞ்சியம். காசியில் வழங்கப்படுவது போல் இங்கும் காசிக்கயிறு எனப்படும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும், புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. எனவே பைரவர் அங்கு தண்டனை வழங்குகிறார்.
ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. எனவே இங்கு பைரவர் தண்டனை வழங்குவதில்லை. இத்தல பைரவர், தண்டத்தைக் கீழே வைத்து விட்டு தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்.
இத்தலத்தில் பைரவர் பொன் வண்டு ரூபத்தில் ஈசனை வழிபட்டார். இங்கு சந்தன மரம் தல மரமாக இருக்கிறது. எமன் தனிச் சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள குப்த கங்கை ஈசனால், அவருடைய சூலத்தால் உருவாக்கப்பட்டது. கங்கையின் பாவத்தைத் தீர்ப்பதற்காக உண்டாக்கப்பட்ட தீர்த்தம் குப்த கங்கை. காசியில் தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களை கங்கை நீக்குகிறாள். அங்கு தன் ஆயிரம் கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 கலைகளுடன் இங்குள்ள குப்த கங்கையில் ஐக்கியமாகி விடுகிறாள்.
தட்சனின் யாகத்திற்குச் சென்றதால் சூரியன் வீரபத்திரனாரால் தண்டிக்கப் பட்டான். அதனால் சூரியன் தன் ஒளியை இழந்தான். இங்குள்ள குப்த கங்கையில் நீராடிய பின் தன் பிரகாசத்தை அடைந்தான் என்பது ஒரு தல வரலாறு.
ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்களில் எழுபதாவது தலமாக ஸ்ரீவாஞ்சியம் அமைந்துள்ளது. இத்தலத்தின் சிறப்பம்சம் எமதர்ம ராஜனின் சன்னதி. இங்கு தர்மராஜனின் அருகில் நம் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் சித்திரகுப்தன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இங்கு நாம் அர்ச்சனை செய்யும் எந்தப் பொருளையும் திரும்ப நம்முடன் எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம். இங்கு ஈசனின் சன்னதி முன் உள்ள அதிகார நந்தியை வணங்கி பின் இறைவனைத் தரிசித்தால், நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்கு வாஞ்சிநாதரே அனைத்துமாக விளங்குவதால் நவக்கிரஹ சன்னதி இல்லை. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூன்றிலும் சிறப்பு பெற்று விளங்குவது ஸ்ரீ வாஞ்சியம். பிரளயம் உண்டான காலத்திலும் அழியாமல் இருந்த இடம் திருவாஞ்சியம். ராகுவும், கேதுவும் தனித்தனியாக இல்லாமல் ஒரே உடலுடன் இங்கு காட்சி அளிக்கிறார்கள். எனவே இது ராகு-கேது பரிகார தலமாக உள்ளது.
மருகலுறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையைக்
கருகாவூரின் கற்பகத்தைக் கண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர் எம்பிறப்பிலையைப் பேணுவார்கள் பிரிவரிய
திருவாஞ்சியத்து எம் செல்வனைச் சிந்தையுள்ளே வைத்தேனே”
என்ற பதிகம் மூலம் இத்தலத்து ஈசனின் பெருமைகளை அறிய முடியும்.
இங்கு வாழ்ந்தாலும், இத்தலத்தை நினைத்தாலும், முக்தி என்கிறார்கள். பொதுவாக கிரகண கலங்களில் கோவிலைச் சாத்தி விடுவார்கள். ஆனால் இங்கு அந்த நேரங்களிலும் அபிஷேக, பூஜைகள் நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் இங்கு விசேஷமாகக் கருதப்படுகிறது.
குப்த கங்கை கிருதயுகத்தில் புஷ்கரணி என்றும், திரேதாயுகத்தில் அத்திரி தீர்த்தம் என்றும், துவாபர யுகத்தில் பராசர தீர்த்தம் என்றும், கலியுகத்தில் முனி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
அத்திரி முனிவர் குழந்தை இல்லாமல் வேதனைப்பட்டபோது நாரதரின் அறிவுரையை ஏற்று இங்கு வந்து நீராடி தத்தாத்ரேயரை மகனாகப் பெற்றார். மூன்று யுகங்களுக்கு அரக்கனாகப் பிறப்பான் என்ற சாபம் பெற்ற விரதனு என்பவன் பராசர முனிவரைத் தரிசித்து, அவர் உபதேசத்தின்படி குப்த கங்கையில் நீராடி சாப விமோசனம் பெற்றான்.
மாசி மகத்தன்று இத்திருக்குளத்தில் நீராடினால் நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலை அடையலாம். இத்தலம் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு விதமாகக் காட்சி அளித்தது. கிருத யுகத்தில் பொன்மயம், திரேதாயுகத்தில் வெள்ளி மயமாக, துவாபர யுகத்தில் தாமிரமாகவும், மண்மயமாக கலியுகத்தில் விளங்குகிறது.
படையும் பூதமும் பாம்பும் புல்லாய் அதள் உடையும் தாங்கிய
உத்தமனார்க்கு இடம் புடை நிலாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே”
என்கிறார் திருநாவுக்கரசர்.
தேவர்களோடு எமனும் நின்று வணங்கி, சேவடி துதிக்கும் ஈசனை, எம்பிரான் ஸ்ரீவாஞ்சிநாதரை வணங்கினால் சகல வித சௌபாக்கியங்களுடன் மரணபயமும் நீங்கி ஈசனது பாதத்தை அடைய முடியும்.
1 Comment
ஸ்ரீவாஞ்சியம் குறித்த தலபுராணச் செய்திகள் மிகச்சிறப்பு! அருமையான தலத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி! வாழ்த்துகள்!