கோமேதகக் கோட்டை | 11 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

 கோமேதகக் கோட்டை | 11 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

வித்யாதரன் விடைபெற்றுச் சென்ற சில நாழிகைகளில் வில்லவபுரம் மலைக் குன்றின் மீது ராட்சதன் தோன்றினான். அவன் கண்கள் கோபத்தால் சிவந்து இருந்தன. அவன் அங்கிருந்த சில மரங்களை பிடுங்கி அங்கே குழுமியிருந்த வீரர்கள் மீது எறிந்தான்.

”அடேய்! முட்டாள் வீரர்களே! உணவில் எதைக் கலந்து கொடுத்தீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள்! ஒரு முழுநாள் நானும் என் கூட்ட்த்தினரும் உறங்கி இருக்கிறோம்! இது சாதாரணமாக நடக்காது! இப்போது அப்படி நடந்திருக்கிறது என்றால் ஏதோ காரணம் இருக்கிறது உண்மையைச் சொல்லுங்கள்!” என்று கர்ஜித்தான்.

அப்போது அங்கே கூடியிருந்த வீரர்கள்ஒன்றாக ஒருமித்த குரலில், “பிரபோ! தாங்களுக்கு அளிக்கும் உணவில் நாங்கள் எதையாவது கலந்து உங்களுக்கு துரோகம் இழைப்போமா? எங்கள் இளவரசியார் உங்களிடம் பிணையக் கைதியாக இருக்கையில் நாங்கள் அப்படி ஒரு தவறு இழைக்க முடியுமா? அப்படி தவறு இழைக்க எங்கள் மன்னர்தான் விடுவாரா? நாங்கள் உங்கள் உணவில் எதையும் கலக்கவில்லை! உண்ட களைப்பில் நீங்கள் உறங்கியிருக்க வேண்டும்! நேற்றுக் காலை முதல் உங்களுக்கான உணவுகளை சேகரித்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்! நீங்கள் எங்களைத் தவறாக நினைக்க வேண்டாம்!” என்று பணிவோடு கூறினார்கள்

வீரர்கள் கூறுவதில் உண்மை இருக்கும்! நாம் தான் தவறாக நினைத்துவிட்டோம்! அவர்கள் சொல்லுவது போல அபரிமிதமான உணவு கூட உறக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று ராட்சதனுக்குத் தோன்றியது. இளவரசி நம் கையில் இருக்கும் வரை இவர்கள் தவறு இழைக்க மாட்டார்கள் என்று அவன் உறுதியாக நம்பினான். எனவே அவன் கொஞ்சம் கோபத்தை தணித்துக் கொண்டு, ”அடேய்! நீங்கள் சொல்வதை நம்புகிறேன்! நீங்கள் எனக்குத் துரோகம் நினைத்தால் உங்கள் இளவரசி தொலைந்தாள். நினைவில் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஓர் சலுகையும் இப்போது கொடுக்கிறேன் ஒருநாள் விட்டு ஒருநாள் நீங்கள் எனக்கு உணவு கொண்டுவந்தால் போதுமானது. நாளை நான் வரமாட்டேன்! நாளை மறுநாள் இதே நேரம் வரும் போது உணவு இருந்தால் போதுமானது. போய் உங்கள் அரசனிடம் சொல்லுங்கள்!” என்று சொல்லிவிட்டுத் தன் கூட்டத்தினரை அழைத்தான்.

அந்த இராப்பொழுதில் ஒளிரும் நிலவை மறைக்கும் மேகக்கூட்டங்கள் மாதிரி ராட்சத கூட்டங்கள் அங்கே வானத்தில் பறந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த உணவுப் பண்டங்களைத் தூக்கிக் கொண்டு மாயமாக மறைந்தனர்.

வீரர்கள் நிம்மதிப் பெருமூச்சோடு அங்கிருந்து அகன்றனர்.

வானில் சந்திரன் உதித்து இரண்டு நாழிகை கடந்து போயிருந்தது. கானகத்தில் இருந்த குடிலினுள் கட்டில் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் வித்யாதரன்.

குரு துரோணாவும் அவன் அருகில் மற்றொரு கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

அந்த சமயம் பூதகனும் அவனது கூட்டாளிகள் மூவரும் அந்த குடிலின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்தனர். பூதகன், கூட்டாளிகளிடம் வித்யாதரனைக் காட்டி, ”அதோ நம் மாதாவின் எதிரி கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறான். இவனை இன்றைய இராப்பொழுதில் கட்டிலோடு கடத்திச்சென்று மாதாவிடம் சமர்ப்பிப்போம். வாருங்கள் நால்வரும் நான்கு கால்கள் பக்கம் சென்று அப்படியே தூக்கிச்செல்வோம்”. என்றான்

நான்கு பேரும் நான்கு மூலையில் கட்டிலைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். அப்படியே வானில் பறக்க ஆரம்பித்தனர். நல்ல உறக்கத்தில் இருந்த வித்யாதரன் அப்படியே புரண்டு படுத்தான். அவனுக்கு உள்ளுணர்வு ஏதோ சொன்னது. கண்களை மெல்லத் திறந்து பார்த்தான்.

வெளியே வானவீதியில் தன்னைக் கட்டிலோடு யாரோ தூக்கிக் கொண்டு பறக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்து போனது. அடுத்த நொடியில் அவன் வாய், “மந்திரப் பாயே! மாயப் பாயே! விரைந்து வருவாயே” என்று முணுமுணுத்தது.

அடுத்த நொடி அவன் முன்னே மந்திரப்பாய் பறந்து வந்தது. கட்டிலில் இருந்து அப்படியே மந்திரப் பாய்க்கு தாவி ஏறிய வித்யாதரன் கட்டிலுக்கு கீழே நான்கு பூதங்கள் கட்டில் கால்களை பிடித்துக்கொண்டு பறப்பதை பார்த்தான்.

இவை எதற்காகத் தன்னைக் கடத்திச் செல்ல வந்தன? அவன் சிந்திக்க ஆரம்பித்தான்.

அதே சமயம் பூதகன், மற்ற பூதங்களிடம் குரல் கொடுத்தான். ”ஏதோ நடக்கிறது. கட்டிலின் எடை குறைகிறது. மேலே இருந்த வித்யாதரன் என்ன ஆனான்? ஒருவேளை தப்பித்துவிட்டிருப்பானோ?” என்று கேட்டான்.

”தலைவரே..! அவன் எப்படி தப்பிக்க முடியும்? அவனுக்கு என்ன பறக்கும் ஆற்றலா இருக்கிறது பறந்து போய்விட..? அவன் கட்டிலில்தான் இருப்பான்..!” என்றது ஒரு பூதம்.

”ஆனால் கட்டிலில் எடை இப்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது. கட்டிலை கீழே இறக்கி எதற்கும் சோதித்து விடுவோம்..!” என்றான் பூதகன்.

“அடேய்! பூதமே! கட்டிலை இறக்க வேண்டியது அவசியம்தான்..!” என்று மந்திரப்பாயில் பறந்தவாறே பூதகனின் முன் வந்து குரல் கொடுத்தான் வித்யாதரன்.

மந்திரப்பாயில் அமர்ந்து வரும் வித்யாதரனை பார்த்து ஒரு நிமிடம் வெலவெலத்துப் போனான் பூதகன். அடுத்த நொடி அவன் சுதாரித்து கையை மேலே உயர்த்தி ஏதோ முணுமுணுக்க அவன் கையில் ஓர் கதாயுதம் வந்து சேர்ந்தது. அதை வித்யாதரன் மீது எறிந்தான் பூதகன்.

வேகமாக தன்னை நோக்கி வந்த கதாயுதத்தை சற்று ஒதுங்கி வலக்கையால் பிடித்து அதை திருப்பி பூதகன் மீதே எறிந்தான் வித்யாதரன். அதை பூதகன் சற்றும் எதிர்பார்க்கவில்லை..! அது வேகமாகச் சென்று அவன் மண்டையை தாக்கியது.

“ஹோ..” என்று அலறியபடியே அப்படியே பூமியில் போய் விழுந்து மூர்ச்சை அடைந்தான் பூதகன்.

“தலைவரே..! தலைவரே..! உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்றவாறு மற்ற மூன்று பூதங்களும் கட்டிலை விட்டுவிட்டு பூதகன் விழுந்த இட்த்திற்குச் சென்றன. வித்யாதரனும் மந்திரப்பாயை தரை இறக்கி சுருட்டி இடுப்பில் செருகிக் கொண்டு பூதகன் விழுந்த இடம் நோக்கி நகர்ந்தான்.

வித்யாதரன் கீழே இறங்கி தங்களை நோக்கி வரவும், அந்த பூதங்கள் மிகவும் கோபத்தோடு அவன் மீது பாய்ந்து துவந்த யுத்தம் செய்யத் துவங்கின. அந்த மூன்று பூதங்களோடும் மிகவும் சாதுர்யமாக யுத்தம் செய்த வித்யாதரன் மூவரையும் அடித்து மூர்ச்சை அடையச் செய்துவிட்டு பூதகன் முன் சென்று பார்த்தான். கீழே விழுந்ததில் அவன் மண்டையில் காயம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்தான்.

மந்திரப்பாயை விரித்து அதில் அவனையும் கிடத்தி தன் குடிலுக்குப் பறக்க ஆரம்பித்தான் வித்யாதரன்.

அப்போது பொழுது விடியத் துவங்கி விட்டது. குரு துரோணா எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு காலை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். மந்திரப் பாயில் பூதகனோடு வரும் வித்யாதரனைப் பார்த்து, “வித்யாதரா! நீ இரவு எங்கே சென்றாய்? இவன் யார்? எங்கிருந்து அழைத்து வருகிறாய்? இவனுக்கு என்ன ஆயிற்று?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டார்.

”தந்தையே! நான் இரவு உறங்கிக் கொண்டிருக்கையில் நடு ஜாமத்தில் இவனும் இவனுடைய சகாக்கள் மூவரும் என்னை கட்டிலோடு தூக்கிச் சென்றனர். பாதி தூரத்தில் விழித்த நான் இவனைத் தாக்கி மூர்ச்சையுறச் செய்த போது ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு நினைவிழந்து கிடக்கிறான். மற்ற மூன்று பூதங்களும் காட்டில் மூர்ச்சையாகி கிடக்கின்றனர். இவன் மண்டையில் காயம் பட்டு இருந்தமையால் சிகிச்சை செய்ய இங்கே அழைத்து வந்தேன்”. என்றான் வித்யாதரன்.

”வித்யாதரா! உன்னை ஏன் இவனும் இவன் கூட்டாளிகளும் தூக்கிச்செல்ல வேண்டும்? “

அதுதான் தெரியவில்லை! இவன் விழித்து சுய நினைவுக்கு வந்தால் மட்டுமே காரணம் தெரிய வரும். நீங்கள் இவனுக்கு சிகிச்சை அளித்தால் விரைவில் விழித்து விடுவான். அவனிடம் விசாரித்து உண்மை அறியலாம்.”

“நான் இவனுக்கு சிகிச்சை அளிக்கிறேன்! நீ விரைந்து காலைக் கடன்களை முடித்துவா! அப்புறம் விசாரிக்கலாம்” என்றார் துரோணா.

வித்யாதரன் சென்றதும் சில பச்சிலைகளை வைத்து பூதகன் தலையில் கட்டிய துரோணா சில பச்சிலைகளை அரைத்து சாறு எடுத்து அதை பூதகன் கண்களைத் திறந்து சில் சொட்டுக்கள் விட்டார். அப்புறம் அவனுடைய நாடியை பிடித்துப் பார்த்தார்.

இதற்குள் வித்யாதரன் காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு அங்கே வந்து சேர்ந்தான்.

“அப்பா! அந்த பூதம் விழித்துவிட்டதா?” என்று கேட்கவும் செய்தான்.

“உடனே எப்படி விழிப்பான்? அவன் மிகுந்த உயரத்தில் இருந்து கீழே விழுந்திருக்க வேண்டும் விழுந்த வேகத்தில் நடு மண்டையில் கல் குத்தி காயம் ஏற்பட்டு இருக்கிறது. நல்ல வேளை அந்தக் கல் பின் மண்டையில் படவில்லை! பட்டிருந்தால் இவன் உயிரோடு இருக்க முடியாது. பச்சிலை வைத்தியம் செய்து இருக்கிறேன். இன்னும் இரண்டு நாழிகை கடந்தால்தான் விழிப்பான்.” என்றார் துரோணா.

“நல்லது அவனை இங்கே அறையிலேயே பூட்டி வையுங்கள்! பாதுகாவலுக்கு சிலரையும் நிறுத்துங்கள்! நான் அரசவைக்குச் சென்று கோமேதகக் கோட்டை பயண ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கிறது என்று பார்த்து வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு அரசவைக்குக் கிளம்பி விட்டான் வித்யாதரன்.

சாத்பூரா மலைகளில் உள்ள குகையில் பூதகனின் வரவுக்காகக் காத்திருந்தாள் சூர்ப்பனகா! அப்போது, “மாதா! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்றவாறே மூன்று பூதங்களும் வந்து அவள் காலில் விழுந்தன.

“பூதங்களே! என்ன நடந்தது? பூதகன் எங்கே? வித்யாதரனை பிடித்து வரவில்லையா?” என்று கேட்டாள் சூர்ப்பனகா.

“மாதா! நாங்கள் அந்த வித்யாதரன் குடிலுக்குச் சென்று கட்டிலோடு வித்யாதரனை தூக்கிக் கொண்டு பறந்தோம். திடீரென்று வித்யாதரன் விழித்துக் கொண்டு கட்டிலிலிருந்து ஒரு மந்திரப் பாய்க்கு தாவி ஏறி எங்களோடு சண்டைக்கு வந்தான். பூதகன் அவன் மீது ஒரு கதாயுதத்தை எறிந்தார். அதை லாவகமாக பிடித்து அவர் மீதே திருப்பி எறிந்து அவரை மூர்ச்சை அடையச் செய்து விட்டான். நாங்கள் மூவரும் அவனோடு தரையில் துவந்த யுத்தம் செய்தோம். ஆனால் அவன் எங்கள் மூவரையும் தாக்கி மூர்ச்சையாக்கிவிட்டு பூதகனோடு மந்திரப் பாயில் பறந்து சென்றுவிட்டான்.” என்றன பூதங்கள்.

”முட்டாள் பூதங்களே! உங்களை அனுப்பினேன் பாருங்கள்! அது என் குற்றம். அவன் எவ்வளவு திறமையானவனாக இருந்தால் என்னை ஏமாற்றி விட்டு மந்திரப்பாயோடு தப்பித்திருப்பான்? அப்பேர்ப்பட்டவனைப் பிடிக்க வெறும் பலம் போதாது. புத்தி சாதுர்யம் வேண்டும். முட்டாள்களான உங்களை அனுப்பியது என் குற்றம். போகட்டும்! என் கண் முன்னே நிற்காதீர்கள்! எங்காவது சென்றொழியுங்கள்!” என்று கத்தினாள் சூர்ப்பனகா.

“மாதா எங்களை மன்னிக்க வேண்டும்! இன்னும் ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! நாங்கள் பூதகரை மீட்டு வருவதோடு வித்யாதரனையும் பிடித்து வருகிறோம்.”

”அடேய்! பூதங்களே! ஒரு முறை சூடு பட்டும் நீங்கள் திருந்தவில்லை! நீங்கள் எவ்வ்ளவு முயன்றாலும் வித்யாதரனைப் பிடிக்க முடியாது. அந்த வித்யாதரனை சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்டும். அதற்கு உங்களை அனுப்பி பிரயோசனம் இல்லை! நானே வில்லவபுரம் செல்கிறேன். வித்யாதரனை ஏமாற்றி அந்த மந்திரப் பாயை கைப்பற்றி வருகிறேன்!” என்று சூளுரைத்தாள் சூர்ப்பனகா.

ரசவைக்கு கிளம்பி வந்து கொண்டிருந்த வித்யாதரன் முன் ஓர் ஏழைச் சிறுவன் வந்து காலில் விழுந்தான்.

”யாரப்பா தம்பி! என்ன வேண்டும் உனக்கு? ஏன் என் காலில் வந்து விழுகின்றாய்?”

”வித்யாதரரே! தாங்கள் தான் எனக்கு உதவ வேண்டும். என் வயதான பெற்றோர் காசி ஷேத்திரம் சென்று பிதுர்க்கடன் செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களின் ஒரே ஆசை அது. வயதான அவர்களால் அவ்வளவு தூரம் நடந்து செல்வதோ குதிரைகளில் பயணிப்பதோ இயலாது. அப்படி செல்லவும் எங்களிடம் போதுமான பணம் இல்லை! உங்களிடம் மந்திர பறக்கும் கம்பளம் இருப்பதாக அறிந்தேன். தாங்கள் மனது வைத்தால் என் பெற்றோரின் ஆசையை பூர்த்தி செய்துவிடலாம். தயை செய்து உதவுங்கள்!” என்றான் அந்த சிறுவன்.
”நான் என்ன செய்ய வேண்டும்? விவரமாக்க் கூறு!” என்றான் வித்யாதரன்.

”தாங்கள் வைத்திருக்கும் பறக்கும் கம்பளத்தில் எங்கள் பெற்றோரைக் காசிக்கு அழைத்துச் சென்று பிதுர்க்கடன் கழிக்க உதவ வேண்டும். இந்த உதவியை நீங்கள் செய்தால் என் ஜென்ம்ம் உள்ளவரை நன்றி மறக்க மாட்டேன். இந்த ஒரு உதவியை மட்டும் செய்தால் போதும்!” என்றான் சிறுவன்.

”சிறுவனே! உன் பெற்றோருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்! ஆனால் இப்போது ஓர் முக்கிய அலுவலாக அரசவைக்குச் செல்கிறேன்! இளவரசியை ராட்சதனிடமிருந்து மீட்கும் பணியில் இருக்கிறேன். அந்தப் பணி முடிந்ததும் உங்கள் பெற்றோரை காசிக்கு அழைத்துச்செல்கிறேன்” என்றான் வித்யாதரன்.

”வித்யாதரரே! இன்று தசமி நாளாகும்! வரும் அமாவாசையன்று என் பெற்றோர் காசியில் திதி கொடுத்தால் அவர்களை பிடித்துள்ள பிதுர்கடன் நீங்கும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளார்கள். நீங்கள் இளவரசியை மீட்டு வந்து அதற்குப்பிறகு என் தந்தையை காசிக்கு அழைத்துச் செல்ல தாமதம் ஆகும். நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? ”என்றான் சிறுவன்.

”என்ன சொல்லு?”

”உங்களிடம் இருக்கும் மந்திரப்பாயை என்னிடம் கொடுங்கள்! மந்திரப்பாயில் என் பெற்றோரை ஏற்றிச்சென்று காசிக்கு சென்று பிதுர்கடன் செலுத்திவிட்டு திரும்ப வந்து மந்திரப்பாயை தங்களிடம் தந்துவிடுகின்றேன். உங்களுக்கும் பணியில் தடை வராது எனக்கும் காசிக்கு போவதில் தாமதம் நேராது என்ன சொல்கிறீர்கள்?” என்று நமட்டுசிரிப்புடன் கேட்டாள் சிறுவன் உருவில் இருந்த சூனியக்காரி.

வித்யாதரன் என்ன சொன்னான்?

மந்திரப்பாய் சூன்யகாரிக்கு கிடைத்ததா?

–அடுத்த வாரம் பார்ப்போம்..!

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *