எந்தெந்தக் கீரையை எப்போதெப்போது உட்கொள்ளலாம்?

 எந்தெந்தக் கீரையை எப்போதெப்போது உட்கொள்ளலாம்?

ரத்தத்தில் இரும்புச்சத்து போதுமான அளவு இருந்தால் மட்டுமே உடலின் பிற தாதுக்களும் உறுப்புகளும் நன்கு இயங்கி உடல்நலன் பலப்படும். ரத்தத்தில் இரும்புச்சத்தைக் கூட்டுவதற்கு கீரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப் பாக, முருங்கைக்கீரை, கரிசாலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறு கீரை, மணத்தக்காளிக்கீரை, கறிவேப்பிலை (துவையலாக), புதினா (சட்னியாக) போன்ற கீரைகளைப் பாரம்பரிய முறைப்படி சமையல் செய்து உண்டு வந்தால் ரத்தத்தில் இரும்புச்சத்து கூடி உடலில் எதிர்ப்பாற்றல் மிகுந்து நலம் கிடைக்கும்.
எல்லாக் கீரைகளும் உடலுக்கு, கண்ணுக்கு, தோலுக்கு, வயிற்றுக்கு, இரத்தத் திற்கு எல்லாவற்றிற்குமே நல்லதுதான். இருந்தாலும், சிறப்பாக பொன்னாங் கண்ணி கண்ணுக்கும், முடக்கத்தான் மூட்டுகளுக்கும், முருங்கைக்கீரை தசை வளர்ச்சி, எதிர்ப்புச்சக்தி கூடுதல், மலச்சிக்கல் நீங்குதல், வயிற்று வலி நீக்கம் ஆகியவற்றிற்கும், வல்லாரை நினைவாற்றல் வளரவும், முளைக்கீரை கண்கள், இதயம், தலைமுடி இவைகள் நலம் பெற உதவும்.

அரைக்கீரை கர்ப்பிணிப் பெண்களின் இரத்தச் சிவப்பணுக்களைப் பெருக்கி அனீமியா வராது தடுக்கும். சிறு கீரை தோல் வியாதிகள் குணமாகவும், வாய் / வயிற்றுப் புண் போகவும் உதவும். பாடகர்கள் குரல் வளம் பெருகவும் புளித்த (கோங்குரா) கீரை, வயிற்று நலத்திற்குப் பசலைக்கீரை, இரத்த சுத்திக்கும் மணத்தக்காளிக்கீரை, வயிற்றுப் புண் (ulcer) சரியாகவும் பாலக், இரத்த விருத்திக்காகவும் புதினா, குமட்டல் (nausea), ஒற்றைத் தலைவலி, வாய் துர்நாற்றம் ஆகியவற்றில் இருந்து மீளவும் மிகவும் நல்லவை.


கறிவேப்பிலையும் கொத்துமல்லியும் கீரை போல்தான். அவற்றின் நன்மைகள் அளவிட முடியாது. தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நமது நல்ல காலம், கறிவேப்பிலையை நிறையவே இலவசமாக வைத்து அள்ளிக் கொடுக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இந்தியன் ஸ்டோரில் ஒரு சின்ன பாக்கெட் $1.00/£0.50 என்று விற்கிறார்கள். அதன் மதிப்பை அறிந்தவர்கள். நான் சாம்பார், கூட்டு, மோர்க்குழம்பு இவைகளில் கறிவேப்பிலையை சேர்த்து அரைத்துவிடுவேன், சத்து வீணாகாது. இலையைத் தூக்கி எறிவது பிடிப்பதில்லை.

கூடாதவைகள்
புதினாவைப் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தினால் பால் வரும் அளவு குறையலாம். அதனால் தவிர்க்கவும். சிலருக்குக் கீரை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உண்டாகும். அவர்கள் கவனமாகச் சாப்பிடலாம். பழகினால் சரியாகலாம்.
ஒரு வாரத்தில் தினமும் ஏதோ ஒரு கீரை அளவாகச் சாப்பிடலாம். ஒருநாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டாலே போதும். பருப்புடன் சேர்த்து சமைக்கலாம். சூப் வைக்கலாம். தக்காளி சேர்த்து மசிக்கலாம். பச்சைப் பெருங்காயம் முளைக் கீரையுடன் சேரும்போது அவ்வளவு மணம்! ஒரு போதும் இரவு நேரத்தில் கீரை சாப்பிட வேண்டாம், இரும்புச் சத்து செரிக்க நேரமெடுக்கும். வாயுத் தொல்லை உண்டாகலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...