கோமேதகக் கோட்டை | 7 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

 கோமேதகக் கோட்டை | 7 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

ன் காலடியில் விழுந்து மூர்ச்சை அடைந்து கிடந்த குள்ளனைப் பருந்து ஒன்று தூக்கிச் செல்வதைப் பார்த்து ஒரு நொடி உறைந்த வித்யாதரன் அடுத்த நொடியில் சுதாரித்து தன் வில்லை எடுத்து அம்பைப் பூட்டி குறிபார்த்து பருந்தை நோக்கி எய்தான்.

வில்லில் இருந்து புறப்பட்ட அந்த அம்பு மின்னல் வேகத்தில் சென்று அந்த பருந்தைத் தாக்கி உடலை குத்தியது. உயிரிழந்த பருந்து தன் பிடியைவிட குள்ளன் பூமியை நோக்கி வாயு வேகத்தில் வரவும் வித்யாதரன் ஓடிச் சென்று அவனை தன் கையில் தாங்கிப் பிடிக்கவும் சரியாக இருந்தது.

அவையோர் அனைவரும் இந்த நிகழ்ச்சியை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க மன்னர்தான் முதலில் சுய நினைவுக்கு வந்து, “வித்யாதரா இங்கே என்ன நடக்கிறது?” என்று வினவினார்.

“மன்னிக்க வேண்டும் மன்னா! நான் உங்களிடம் சொல்ல வருவதற்கு முன்பே சில நிகழ்வுகள் நடந்து முடிந்துவிட்டது. அதற்காக வருந்துகிறேன். இதோ இவர்தான் சித்திரக் குள்ளர். இவர் ஒரு கோரிக்கையோடு என்னை நாடி வந்தார். அவரை அழைத்துக் கொண்டு தங்களைச் சந்திக்க வருகையில்தான் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிட்டது.

அனைவரும் வித்யாதரன் கையில் மயக்கத்தோடு இருக்கும் சித்திரக்குள்ளனை அதிசயமாகப் பார்க்க, மன்னர் கண்ணசைக்க இரு பணிப் பெண்கள் கையில் குவளை நீரோடு வந்து வித்யாதரன் கையில் மயங்கியிருந்த குள்ளன் மீது தெளித்தார்கள்.

“ஐயோ! மழை பொழிகிறது! மழை பொழிகிறது!” என்றபடி கண் விழித்தான் குள்ளன்.

“குள்ளரே! மழை ஒன்றும் பொழியவில்லை! மயக்கமுற்று கிடந்த உங்களை தெளிவிக்கவே சிறிது நீர் தெளித்தோம்!” என்றான் வித்யாதரன். அப்போதுதான் குள்ளனுக்கு கொஞ்சம் நினைவு வந்தது. வித்யாதரன் கையில் இருந்தபடியே குனிந்து மன்னரை வணங்கினான்.

“நீர்தான் சித்திரக் குள்ளரோ! வித்தியாசமான உங்களை இதுவரை கதைகளில்தான் கேள்விப் பட்டிருக்கிறோம்! இப்போது நேரில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்!” என்றார் மன்னர் விஜயேந்திரன்.

”மன்னர் மன்னா! நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்! ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை!”

”ஏன்? உங்களுக்கு என்ன குறை? இந்த விஜயேந்திரன் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்வேன்! தயங்காமல் உங்களுக்கு என்ன உதவி தேவை என்று தெரிவியுங்கள்!”

”உதவி தேவை என்றுதான் வித்யாதரனை சந்தித்து எங்களுக்கு உதவும்படி அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் எங்களுக்கு உதவ மறுக்கின்றார்.”

”என்ன வித்யாதரா! குள்ளருக்கு உம் உதவி தேவைப்படுகிறது எனில் உதவலாமே! ஏன் தவிர்க்கிறீர்கள்?”

”அது தவிர்ப்பு இல்லை மன்னா! தவிப்பு!”

”புரியும் படி சொல்லுங்கள்! அப்படி என்ன தவிப்பு? ஒன்றும் விளங்கவில்லை!”

வித்யாதரன் சுருக்கமாக குள்ளனைப் பற்றியும் அவர்கள் கூட்டத்தை மலைப்பாம்பு விழுங்குவது பற்றியும் அதை கொன்று அவர்களை காப்பாற்ற ஒத்துக் கொண்டதையும் சொல்லி முடித்தான்.

”அப்புறமென்ன வித்யாதரா! போய் மலைப்பாம்பை கொன்று குள்ளர்களை காப்பாற்ற வேண்டியதுதானே!”

”அங்கேதான் ஒரு சிக்கல் இருக்கிறது மன்னா!”

”என்ன சிக்கல்?”

”குள்ளர்கள் வசிப்பது விந்திய மலைக் குகையில்! அந்த மலைக்குகை இங்கேயிருந்து 300 காத தொலைவில் இருக்கிறது. நான் இங்கேயிருந்து புறப்பட்டு குதிரையில் சென்று அந்த மலைப்பாம்பை கொன்றுவிட்டு வர ஒரு மாதமோ அதற்கு மேலும் கூட ஆகலாம்.”

”அடடா! அதற்குள் அந்த மலைப்பாம்பு இன்னும் எத்தனை இடர்ப்பாடுகளை அந்தக் குள்ளர்களுக்கு ஏற்படுத்துமோ?”

”அதிருக்கட்டும் மன்னா! அந்த ஒருமாத காலம் இளவரசியை மீட்கும் நம் பணி பாதிக்கும் அல்லவா? அந்த அரக்கன் கேட்கும் உணவெல்லாம் அத்தனை காலம் நம்மால் ஏற்பாடு செய்து தர முடியுமா? அப்படி தவறிப் போனது என்றால் அந்த அரக்கன் இளவரசியை என்ன செய்வானோ? அதை நினைத்துப் பார்த்துதான் இளவரசியை மீட்டபின் இவர்களுக்கு உதவுவதாகச் சொன்னேன்.”

”நீ யோசித்ததும் சொன்னதும் சரியே! ஆனாலும் இளவரசியை மீட்க ஆகும் காலத்தில் இந்த சித்திரக்குள்ளர்கள் இனமே அந்த மலைப்பாம்பால் அழிந்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறதே! அதை யோசித்தாயா?”

”இளவரசியா? சித்திரக் குள்ளர்களா? இருவரையும் எப்படி ஒருசேரக் காப்பாற்றுவது இதுதான் என் தவிப்பு அரசர் பெருமானே!”

”என் தந்தையின் பாதுகாப்பில் இருந்த இளவரசியை அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான் அவர்களை மீட்பது என் கடமையாகிறது. அதே சமயம் அபயம் கேட்டுவந்த குள்ளர்களையும் காக்க வேண்டும். ஆனால் நேரமோ குறைவாக இருக்கிறது என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை அரசே!”

”சமயோசித அறிவுக்கு உனக்கு ஒரு போட்டி வைப்பதாகச் சொன்னேன் அல்லவா? இதையே அந்தப் போட்டியாக எடுத்துக் கொள். இளவரசியா, சித்திரக்குள்ளர்களா? இளவரசியை மீட்கப் போனால் குள்ளர்கள் அழிந்து போவார்கள். குள்ளர்களை மீட்கப் போனால் இளவரசிக்கு ஆபத்து! இப்போது நீ என்ன முடிவெடுக்கப் போகிறாய்? எப்படி சமயோசிதமாக முடிவெடுத்து இருவரையும் காப்பாற்ற போகிறாய்? இதுதான் உன் சவால்!” என்றார் மன்னர்.

சவால் என்றதுமே வித்யாதரனின் மூளை சுறுசுறுப்பு அடைந்தது அவன் சில நிமிடங்கள் கண்ணை மூடி தியானித்தான் அடுத்த நொடியில் அவன் அப்படியே மரம் போல கீழே சாய்ந்தான்.

அடுத்த நிமிட்த்தில் அங்கே அம்பு பாய்ந்து வீழ்ந்திருந்த பருந்து உயிர் பெற்றெழுந்து பேசத் துவங்கியது.

”மன்னா! உங்கள் சவாலை ஏற்கிறேன்! நீங்கள் ஓர் உதவி மட்டும் செய்ய வேண்டும். என் உடலை கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைக்க வேண்டும். இந்த பருந்தின் உடலில் புகுந்துள்ள நான் மிக விரைவாக பறந்து விந்திய மலை சென்று மலைப்பாம்பை அழித்து சித்திரக் குள்ளர்களை அபாயத்தில் இருந்து மீட்டெடுக்கிறேன்! அப்படியே இளவரசியையும் மீட்டு வருவேன். விடை கொடுங்கள்..!” என்றான்.

”வித்யாதரா உன் சமயோசித புத்தி உன்னைக் காப்பாற்றும். உன் வில்லாற்றலை மட்டுமல்ல புத்திக் கூர்மையையும் நான் அறிவேன். விரைவாக விந்திய மலை சென்று அந்த மலைப்பாம்பை வென்று வருவாயாக! நீ வரும் வரை இந்த உடலை நான் பாதுகாக்கிறேன் சென்று வென்று வா!” என்று வழி அனுப்பினார் மன்னர் விஜயேந்திரன்.

அடுத்த நிமிடம் பருந்தாய் மாறியிருந்த வித்யாதரன் சித்திரக் குள்ளனை தன் காலில் கவ்விக் கொண்டு அங்கிருந்து பறக்க ஆரம்பித்தான்.

சித்திரக் குள்ளனுக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. நான் காண்பது எல்லாம் கனவா அல்லது நினைவா என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. “வித்யாதரரே! என்னை கீழே போட்டு விடாதீர்கள் பத்திரமாகப் பிடித்துக் கொள்ளும்! நீர் செல்லும் வேகமும் உயரமும் என்னை பயமுறுத்துகிறது!” என்று சொன்னான் குள்ளன்.

”சித்திரக்குள்ளா! பயம் வேண்டாம்! பருந்து தான் பிடித்த பிடியை எளிதில் விடாது! என் உயிர் வித்யாதரனாக இருந்தாலும் உடல் பருந்தாக இருப்பதால் என் பிடி தளராது! பயப்படாமல் வா! விரைந்து சென்று அந்த மலைப்பாம்பைக் கொல்லும் வழியைப் பார்ப்போம்!” என்றான் வித்யாதரன்.

இப்படி இரண்டு பகல் இரண்டு இரவுகளை கடந்து விந்திய மலைச்சாரலை அடைந்தனர் வித்யாதரனும் சித்திரக் குள்ளனும்.

சித்திரக் குள்ளன் தன் கூட்டத்தினர் இருக்கும் வனப் பகுதிக்குள் வித்யாதரனை அழைத்துச் சென்றான்.

பருந்து ஒன்று தங்கள் குள்ளனை பிடித்து வருவதை கண்டு சித்திரக் குள்ளர்கள் கூட்டம் பயந்து அபயக் குரல் எழுப்பி இங்கும் அங்கும் மிரண்டு ஓடினர். பருந்துவடிவில் இருந்த வித்யாதரன் மெதுவாக குள்ளனை கீழே இறக்கிவிட, அந்த கூட்டம் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தது.

கீழே இறங்கிய சித்திரக் குள்ளன் கூட்டத்திற்குள் புகுந்து தன் தலைவனை சந்தித்து அவனை வித்யாதரன் முன் அழைத்து வந்தான்.

”வித்யாதரா இவர்தான் எங்கள் தலைவர் மாயக்குள்ளர்!”.என்று அறிமுகம் செய்துவைத்தான்.

”மாயக் குள்ளரே! வணக்கம்! நான் தான் வித்யாதரன்! உங்களை அந்த பாம்பிடம் இருந்து காப்பாற்றுவதாக வாக்களித்து சித்திரக் குள்ளருடன் வந்துள்ளேன்.”

மாயக் குள்ளன் அதைக் கேட்டு நகைத்தான்.

”வித்யாதரன் மிகப் பெரிய வீரர் அறிவாளி என்று கேள்விப்பட்டுதான் உதவிக்கு அழைத்துவரச் சொன்னேன். ஆனால்..”

”என் மீது உங்களுக்கு என்ன சந்தேகம்?”

”பெரும் வீரர்களாலேயே அந்த மலைப்பாம்பைக் கொல்ல இயலாது போயிற்று! நீங்களோ ஓர் பருந்து. நீங்கள் எப்படி அந்த மலைப்பாம்பை கொன்று எங்களை காக்கப் போகிறீர்கள் நினைக்கும் போதே சிரிப்புதான் வருகிறது!” என்று “ஹாஹா” வென மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான் மாயக் குள்ளன்.

”சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது பழமொழி! பருந்துதான் பாம்புகளின் எதிரி என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்!” என்று பதில் அளித்தான் வித்யாதரன்.

”இப்படி பேசுவது எல்லாம் சரிதான்! ஆனால் சண்டை என்று வரும்போது பலம்தான் பெரிது! சக்தி உள்ளவன் ஜெயிக்கிறான். எங்களிடம் பலம் இருந்தால் உங்களை உதவிக்கு நாடியிருப்போமா? நாங்களே எப்படியாவது போராடி அந்த மலைப்பாம்பை வீழ்த்தியிருப்போம்! தாங்கள் மனித உருவில் ஓர் வீர்ராக வந்து அந்த மலைப்பாம்பை கொன்றுவிடுவீர்கள் என்று நம்பித்தான் வரவழைத்தேன். ஆனால் நீங்களோ பருந்து வடிவில் வந்திருக்கிறீர்கள்.”

”மாயக்குள்ளரே புத்திமான் பலவான்! என்பதை தாங்கள் படித்திருப்பீர்கள்! அதை அனுபவத்தில் உணர்ந்திருக்க மாட்டீர்கள் நான் அதை உணர்த்துகிறேன்.”

”சரி! உங்கள் விருப்பம்! அந்த மலைப்பாம்பை கொன்று எங்களை நீங்கள் மீட்டெடுத்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கப் போகிறது?”

”அப்படியானால் அந்த மலைப்பாம்பு இருக்கும் குகைக்கு என்னை அழைத்துச் செல்வீர்களா?”

“அழைத்து செல்லலாம்! ஆனால் அதில் ஓர் சிக்கல் இருக்கிறது?”

”என்ன…? இங்கும் ஓர் சிக்கலா? அப்படி என்ன சிக்கல் அது?”

”மலைப்பாம்பு வசிக்கும் எங்கள் குகை அருகே வளர்ந்திருக்கும் நீண்ட நெடிய மரங்களில் தற்போது கரிச்சான் பறவைகள் கூடு கட்டியுள்ளன.!” இப்படி மாயக்குள்ளன் சொன்னதும் பருந்துவடிவில் இருந்த வித்யாதரன் உடல் ஒருமுறை நடுங்கியது.

”என்ன வித்யாதரா இப்படி ஓர் நடுக்கம்? நான் சொல்வது உனக்கு புரிந்து விட்டதால்தான் இந்த நடுக்கம் என்று நினைக்கிறேன்!”என்றான் மாயக்குள்ளன்.

”உண்மைதான் மாயக்குள்ளரே! நீங்கள் சொல்வது உண்மைதான். கரிச்சான் பறவைகள் என்று நீங்கள் சொன்னவுடனே விஷயம் புரிந்து விட்டது. கரிச்சான் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக கூடு கட்டியிருக்கும் மரங்களின் அருகே மற்ற பறவையினங்கள் நெருங்கவே முடியாது. அவை உருவத்தில் சிறியவையாக இருந்தாலும் மூர்க்கமானவை! முரட்டுத்தனமாக தன் அலகால் குத்தி ரணப்படுத்தும். அவைகளை மீறி அந்த இடத்தைக் கடப்பது மிகவும் சிரமம்.!” வித்யாதரன் சொல்லி முடித்தான்.

”அப்புறம் எப்படி அந்த குகையை நெருங்குவது? எப்படி அந்த மலைப்பாம்பை விரட்டியடிப்பது? இது உங்களால் முடியாத காரியம்!” மாயக் குள்ளன் ஏளனமாகச் சொல்லவும் வித்யாதரனுக்குக் கோபம் வந்தது.

”இந்த உலகத்தில் முடியாதது என்று எதுவும் இல்லை மாயக்குள்ளரே! முடியாது என்று சொல்பவன் தன்னம்பிக்கை அற்றவன். முடியாதவிஷயத்தையும் முயற்சித்துப் பார்ப்பவனே தன்னம்பிக்கையாளன். ஊக்கம் மட்டும் இருந்தால் ஆக்கம் தானாகவே பிறக்கும். நீங்கள் எதிர்மறையாகவே சிந்திக்கின்றீர்கள்.எதிர்மறை சிந்தனைகளை கைவிடுங்கள்! நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்! அதுவே வளர்ச்சிக்கு வழிவகுக்கும். முடியாது என்று சொல்வதை கைவிடுங்கள்! முயற்சிப்போம் என்று சொல்லிப் பழகுங்கள்!” என்றான் வித்யாதரன்.

”சரி! முயற்சிப்போம்! கரிச்சான் குருவிகளை கடந்து மலைப்பாம்பு உள்ள குகையை அடைய வழி இருக்கிறதா? சொல்லுங்கள்..!” என்றான் குள்ளன்.

”ஆம் அதற்கு ஓர் வழி இருக்கிறது!” என்றான் வித்யாதரன்.

அந்தவழி என்ன?

அந்தவழியே சென்று வித்யாதரன் வெற்றி பெற்றானா?

அடுத்தவாரம் பார்ப்போம்!

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...