சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய படை வீராங்கனை அஞ்சலை மரணம்

 சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய படை வீராங்கனை அஞ்சலை மரணம்

தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி. இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில், ஜான்சி ராணி படைப்பிரிவில் பணியாற்றியவர். இவர் மலேசியாவில் வசித்த வந்தார்.  தமது 102வது வயதில் முதுமை காரணமாக உயிரிழந்தார். மலேசியாவில் உள்ள செந்நூல் நகரில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றிருந்தவர் அஞ்சலை பொன்னுசாமி. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வாழும் சாட்சியாக இருந்த அவரது மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பு.

1920-ல் கோலாலம்பூரில் உள்ள செந்தூல் நகரில் பிறந்தவர் அஞ்சலை. அவரது தந்தை சுகாதாரத் துறையில் மலேரியா தடுப்பு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தவர். எனினும், கல்வியைத் தொடரும் வாய்ப்பு அஞ்சலைக்குக் கிடைக்கவில்லை. அவருக்கு மட்டுமல்ல, இந்திய வம்சாவளிக் குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு அதே நிலைதான்.

இவருக்கு 21 வயது இருக்கும்போது, மலேசியாவில் ஜப்பானியப் படைகள் ஊடுருவியது. அப்போது நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது, இந்தியப் பெண்கள் ராணுவ உடையில் கம்பீரமாக இருப்பதைப் பார்த்த வியந்துபோன அஞ்சலைக்கும் ராணுவத்தில் சேர ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து, 1943-ம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்ஸி ராணி பிரிவில் அஞ்சலை சேர்ந்தார். அப்பெண்களைப் பார்த்து, உத்வேகமடைந்த அஞ்சலை, நாட்டின் சுதந்திரத்துக்காகத் தன்னையும் அப்படையில் அர்ப்பணித்தார்.

முதலில் சிங்கப்பூருக்கு அடிப்படை ராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட அஞ்சலை, அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். ரைஃபிள்கள் தொடங்கி ஸ்டென் கன் வரை பல்வேறு வகையான துப்பாக்கிகளையும் கையாள்வதில் தேர்ச்சியடைந்த அவர், பின்னர் பர்மாவுக்கு (இன்றைய மியான்மர்) அனுப்பப்பட்டார்.

நாட்டுப்பற்றும் மன உறுதியும் கொண்டிருந்த அஞ்சலை, பர்மாவில் பல சவால்களுக்கு இடையில் பணியாற்றினார். நேதாஜியின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றிருந்த அஞ்சலை, அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் பின்னாட்களில் பதிவுசெய்திருக்கிறார். 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டது. இதன்பின், அஞ்சலை மலேசியாவிற்குத் திரும்பிச் சென்றார். அங்கு வாழ்ந்துவந்தார்.  பிறகு 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அறிந்து பெரிதும் மகிழ்ந்தார். 1957-ல் மலேசியாவும் சுதந்திரம் அடைந்ததைக் கொண்டாடினார்.

பிறருக்கு உதவும் குணம் கொண்டவராகவே இறுதிவரை இருந்தார் அஞ்சலை. அத்துடன் தனது உடல் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனம் செலுத்தினார். சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்த அவர், தினமும் பால் அருந்துவதை விடாமல் கடைப்பிடித்துவந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அஞ்சலை பொன்னுசாமி மறைவால் மிகவும் வேதனையடைந்தேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது தைரியம் மற்றும் ஊக்கமளிக்கும் பங்கு எப்போதும் மக்கள் நினைவில் இருக்கும். 102 வயதான ஐ.என்.ஏ. வீரரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பதிவில், ராணி ஜான்சி படைப்பிரிவின் இந்திய தேசிய ராணுவ வீரர் அஞ்சலை பொன்னுசாமியின் மறைவுக்கு ஆளுநர் ரவி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் செய்த தியாகங்களுக்குத் தேசம் எப்போதும் நன்றியுடன் இருக்கும்  என கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வீரம், மன உறுதி, துணிச்சல் என பெண்குலத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் அஞ்சலையம்மாள்; அவரது தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும்” என தெரிவித்துள்ளார்.

அஞ்சலை பொன்னுசாமி  தனது 102 வது வயதில் மே 31  காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் இறுதி சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...