சிவகங்கையின் வீரமங்கை | 11 | ஜெயஸ்ரீ அனந்த்
தனித்தனிக் குதிரையில் சுமனும் குயிலியும் ராஜசிம்ம மங்கலத்தை நோக்கிப் பயணித்தனர். கோட்டை வாயில், கொத்தளங்களைத் தாண்டிய இருவரின் குதிரைகளும் ஒரே வேகத்தில் இணைபிரியாமல் சென்று கொண்டிருந்தன. இவர்களின் இந்த நெருக்கமான பயணமானது அவர்களின் இதயத்துள் புரியாத ஓர் மகிழ்ச்சியான அனுபவத்தால் நிரம்பியிருந்தது. அதனால், அடிக்கடி இருவரின் கண்களும் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொண்டன. அந்தச் சந்திப்பில் குயிலியின் கண்கள் வெட்கத்தால் சற்று தழையும். அப்படிக் கண்கள் தழையும் போதெல்லாம் அவள் உதட்டோரம் புன்னகை அரும்பும்.
இவர்கள் போகும் வழி நெடுங்கிலும் பூத்து குலுங்கிய வண்ண மலர்கள் சிரங்களில் வர்ஷித்து அவர்களை வரவேற்றது. சாலையின் இருபுறமும் செழித்து வளர்ந்திருந்த நெற்பயிர்களும் சோளமும் பச்சையும் பழுப்புமாக நிலத்திற்கு வர்ணம் பூசியிருந்தது. அதில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் தங்களின் களைப்பு நீங்கப் பாடிய நாட்டுப்புறப்பாடல் காற்றில் தவழ்ந்து இருவரின் செவியையும் எட்டியது.
களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோ
கிழட்டுமாடும் மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
நாட்டியக் குதிரைபோல – ஏலங்கிடி லேலோ
நாலுகாலில் மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
குள்ள மாடும் புள்ள மாடும் – ஏலங்கிடி லேலோ
குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
பால்கொடுக்கிற பசுவுங்கூட – ஏலங்கிடி லேலோ
பையப்பைய மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
பல்லுப்போடாத காளைக்கன்றும் – ஏலங்கிடி லேலோ
பால் மறந்த கிடாக்கன்றும் -ஏலங்கிடி லேலோ
பரந்துபரந்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
பரந்துபரந்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
எல்லாமாடும் சேர்ந்துதானும்- ஏலங்கிடி லேலோ
ஏகமாத்தான் மிதிக்குதையா -ஏலங்கிடி லேலோ
கால்படவும் கதிருபூரா – ஏலங்கிடி லேலோ
கழலுதையா மணிமணியா – ஏலங்கிடி லேலோ…
என்று அவர்கள் பாடிய பாடல், பெண்களாகிய நாங்கள் நாட்டுப்புறப் பாட்டினிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபணம் செய்வதாய் இருந்தது. நான்கு மைல்களுக்கு ஓர் அன்னசத்திரமும் மடங்களும் காணப்பட்டன. அதில் உள்ள தனவந்தர்கள் களைத்து வரும் பக்தர்களையும், நடைபாதையினரையும் வரவேற்று உபசாரம் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே திண்ணைப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு தேவாரம் திருவாசகமும், உபநிடங்கள் வேதங்களும் சொல்லி தரப்பட்டுக் கொண்டிருந்தன. இதையெல்லாம் வேடிக்கை பார்த்தவாறு இருவரும் குதிரையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
“இத்தனை நேரம் உன்னுடன் பிரயாணித்து வந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் பிரயாணம் எதற்கானது என்பதை நீயும் என்னிடம் சொல்லவில்லை” என்றான் சுமன்.
“காரணம் இருந்தால் மட்டுமே என்னுடன் பிரயாணிப்பீர்களா?”
“காரணம் தெரிந்தால் பிரயாணம் சுகப்படும்.”
“சொல்கிறேன் ஐயா… அதுவரை என்னை நம்பிவரலாம். நான் ஒன்றும் உங்களை சிறைப்பிடித்துச் செல்லப் போவதில்லை.”
“என் அனுமதியில்லாமல் யாரும் என்னை சிறைப்பிடிக்க முடியாது என்பதை நான் உங்களுக்கு முன்னமே சொன்னதாக நினைவு.”
“ஓ…. அத்தகைய பெரும் வீரனா நீ? உன் வீரத்தைத்தான் நான் காலையில் பார்த்தேனே ஒரு சிலம்பு பிடிக்கத் தெரியவில்லை” என்று குயிலி சொல்லி முடிப்பதற்குள் சடாரென்று கண் இமைக்கும் நேரத்தில் குதிரையிலிருந்த அவளை லாவகமாக இடையினை பற்றித் தூக்கி தன் குதிரைக்கு மாற்றினான்.
இதை சிறிதும் எதிர்பார்க்காத குயிலி அவமானத்தால் கோபக் கனல் கொப்பளிக்க அவனை ஏறிட்ட வினாடி, சுமனின் கையிலிருந்த வாள் ஒரே வீச்சாக மரத்தின் மேலிருந்து கீழே தொங்கிய ஸர்ப்பத்தை இரண்டு துண்டுகளாக்கியது.
நிலமையை உணர்ந்து கொண்ட குயிலி வெட்டப்பட்ட கொடிய ஸர்ப்பம் இரு பாதியாகத் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். அதைப் பார்த்த மாத்திரத்தில் குயிலியின் கோபமானது குறைந்து சுமனின் மேல் மரியாதை தோன்றக் காரணமாகியது. கோபமும் தாபமும் ஒரு க்ஷண நேரம் தானே மாற்றிக் கொள்ள… குயிலியும் அப்படித்தான் கோபத்தை மரியாதையாக மாற்றிக் கொண்டாள்.
அதன் பிறகு கடந்து சென்ற சில நாழிகைகள் இருவரும் அமைதியாகவே குதிரையுடன் நடக்கலாயினர். குயிலியிடம் மட்டும் சற்று பதட்டம் தெரிந்தது.
மேற்கே கதிரவன் மெல்ல மெல்ல தனது கதிர்களை மடக்கிக் கொண்டிருந்தான். இருவரும் நடந்து வந்த நீண்ட பாதையில் இருபுறமும் இப்பொழுது உப்பளங்கள் காணப்பட்டன. அதன் உப்புச் சுவையின் நறுமணம் மூக்கை வருடியது. வீசிய காற்றில் உப்பின் பிசுபிசுப்பும் கலந்து இருந்தது. தூரத்தில் கலங்கரை விளக்கத்தில் ஏற்றப்பட்ட தீபமானது லேசாக ப்ரகாசித்துக் கொண்டிருந்தது.
“நாம் தேவிபட்டினத்தை நெருங்கி விட்டோம் என்று நினைக்கிறேன்” என்றான் சுமன்.
“ஆம்” என்பது போல குயிலி தலையசைத்தாள். தற்சமயம் அவளிடம் இருந்த பதட்டம் முற்றிலும் மறைந்திருந்தது.
இருவரும் ஊருக்குள் நெருங்க நெருங்க ஜனத்திரள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே காணப்பட்டது. அதில் சில அயல் நாட்டவர்களும் காணப்பட்டனர்.
துறைமுகத்தில் வந்து இறக்கப்பட்ட பாரசீகக் குதிரைகளும் அரபு நாட்டுக் குதிரைகளும் ஆங்காங்கே வியாபாரத்திற்காக நிறுத்தப்பட்டிருந்தன..
டச்சுக்காரர்கள், பாரசீகர்கள், அரபு நாட்டவர் என்று ஆங்காங்கே கூட்டமாக நின்று பண்டமாற்று முறையாக துணிமணிகள், உணவு தானியங்கள், உப்பு, கடல் பாசிகள் போன்றவற்றைத் தங்களுக்குள்ளாகப் பேசி வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். சில கப்பல்கள் கலங்கரை விளக்கத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன. அதில் வந்த செல்வந்தர் சிலர் தங்களிடமிருந்த ரத்தினங்கள், முத்துகளை விற்று மாறாக பர்மாவிலிருந்து தேக்கு மரத்தை வாங்கி வந்தனர். இத்தனை அழகைத் தாங்கிய தேவிபட்டின கடற்கரையை ரசித்தபடி வந்த இவர்கள் முன்பாக உயர்ஜாதி குதிரையோடு ஒருவன் வந்தான்.
“இது நல்ல ஜாதிக் குதிரை .பயிற்சி பெற்றது. நல்ல ஆரோக்கியம் கொண்டது. குறைந்த விலைக்கு தருகிறேன் வாங்கிக் கொள்கிறீர்களா?” என்றான். அவன் வேறு யாரும் இல்லை. நமக்கு நன்கு பரிட்சயமான அரபு நாட்டை சேர்ந்த சலீம் மாலிக் தான்.
• • •
குவிரனை சிறை பிடித்த வேலுநாச்சியார் கெளரியை அழைக்கவும் , “சொல்லுங்கள் இளவரசியாரே….” என்று முன்னே வந்தாள்.
வேலுநாச்சியார் அவளை ஒரு முறை பாசத்துடன் உற்று நோக்கி, “நீ எனது சகோதரி போன்றவள். அக்கா என்று உரிமையுடனே அழைக்கலாம்” என்றாள்
இந்த வார்த்தை கெளரியின் புண்பட்ட மனதை மயிலிறகால் வருடுவது போல் இருந்தது. ‘சாதாரண வைத்தியரின் பெண்ணிற்கு இத்தகைய உரிமையா?’ என்று எண்ணியவளின் கண்களிலிருந்து கண்ணீர் கரை புரண்டு வந்தது. அன்பின் மிகுதியால் நாச்சியாரை கட்டிக் கொண்டாள்.
“உன்னால் எனக்கு ஒரு உதவியாக வேண்டும் செய்ய முடியுமா?” என்றாள்.
“சொல்லுங்கள் அக்கா எதுவாகினாலும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்றாள்.
“நீ செய்யப் போகும் உதவி உன் உயிரையே பணயம் வைப்பதற்கு சமம். அதே சமயம் உன் உயிரை காப்பதும் எனது தலையாய கடமை. “
“நிச்சயம் நிறைவேற்றுவேன் அக்கா உத்தரவிடுங்கள்” என்றாள்.
“அப்படியானால் நான் சொல்லும்படி செய்” என்று அவளை அருகினில் அழைத்து காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.
சற்றைக்கெல்லாம் ஒரு சிவிகை வரவழைக்கப்பட்டது. இளவரசர் தான் வந்த குதிரையில், கண்கள் கட்டிய நிலையில் முகத்தை மூடியவாறு இருந்த குவிரனையும் அதற்கு முன்னால் சென்ற சிவிகையில் கெளரியும் இவர்களுக்கு பின்னால் குதிரையில் இளவரசியும் கூடவே சில படை வீரர்களும் சிவகங்கை நோக்கி பயணித்தனர்.
இதற்குள்ளாக இவ்விவரம் ஊருக்குள் பரவியிருக்க, குவிரனைக் கத்தியால் குத்திச் சென்ற உதிரனுக்கு இச்செய்தி எட்டியிருந்தது.
பனையூரின் எல்லையில் சிதலமடைந்திருந்த புத்த விகாரத்தின் உட்புறத்தில் பதுங்கியிருந்த உதிரனும், பவானியும் சற்றே கொதிப்படைந்த நிலையில் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
“எப்படியோ தப்பிப் பிழைத்து விட்டான். எதிரியை கூட நம்பிவிடலாம். ஆனால் துரோகியை… அந்த நயவஞ்சகனை….. என் கையால் கொன்று விட்டேன் என எண்ணியிருந்தேனே… எப்படித் தப்பினான்..?” என்றான் உதிரன்.
“இன்னும் காலம் கடந்துவிடவில்லை. அவனை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லும் முன்பு தீர்த்து கட்டி விடு.” என்று சொல்லிய பவானி, அவனிடம் ஓலை ஒன்றைத் தந்தார்.
“உதிரா, நீ குவிரனின் காரியத்தை முடித்த கையோடு தஞ்சையில் உன்னைத் தேடி வரும் புத்த பிக்குவிடம் இவ்வோலையைச் சமர்பிக்க வேண்டியது உனது பொறுப்பு ” என்று ஒரு ஓலையை உதிரனிடத்தில் தந்தார் பவானித் தேவர். அதில், “இதுதான் தக்க தருணம்” என்று எழுதி இருந்தது.
• • •
சிவகங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிவிகை திடீரென்று தனது பாதையை மாற்றிக் கொண்டு வலதுபுறம் திரும்பியது. ஒரு சிலரை தவிர சிவிகையின் பாதை மாற்றத்தை வேறு யாரும் அறிந்திருக்கவில்லை.
சிவகங்கைக் கோட்டையை நோக்கிச் சென்ற இளவரசரின் குதிரையையும் அதில் சிறைபிடிக்கப்பட்ட குவிரனையும் பார்த்த மக்கள் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதைத் தெரிந்து கொண்டார்கள். குவிரன் சிறைபிடிக்கப்பட்ட செய்தி அதற்குள்ளாக ஊருக்குள் பரவியிருந்தது. கைது செய்யப்பட்ட குவிரனை அழைத்து சென்ற இளவரசர் அவனை தனது தந்தை சசிவர்ண தேவரின் முன் நிறுத்தி, அவனது முகத்தை மூடியிருந்த துணியை அகற்றினார். அப்பொழுதுதான் தெரிந்தது அது அவன் அல்ல அவள் கெளரி என்று. அருகில் தாண்டவராய பிள்ளையும் இருந்தார்.
கெளரியை பார்த்த தாண்டவராய பிள்ளை, “இளவரசரே, இப்பெண் யார்?” என்று கேட்டார்.
அச்சமயம் அங்கு வந்த வேலுநாச்சியார் “இவள் கெளரி. பனங்குடி வைத்தியரின் ஒரே மகள்.” என்றவள், குவிரனை சிறைப்பிடித்ததைப் பற்றியும், அவனை வைத்தியரின் உதவியால் மயக்கமுறச் செய்து சிவிகையில் யாரும் அறியாவண்ணம் திருமயம் கோட்டையில் உள்ள ரகசிய பாதாளச் சிறையில் அடைப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து விட்டு பகைவர்களின் பார்வையைத் திசை திருப்புவதற்காக குவிரனை போல் கெளரிக்கு மாறுவேடம் தரித்து இங்கு கூட்டி வந்ததைப் பற்றியும் விரிவாக தெரிவித்தாள்.
“ஆஹா… நல்ல காரியம்! குவிரனை காப்பாற்ற வரும் அல்லது அவனைத் தீர்த்து கட்டவரும் கயவர்களை கூண்டோடு பிடிக்கும் யுக்தி உண்மையில் பாராட்டுக்குரியது. ” என்றார் தாண்டவராயர்
” ஆனால் மாமா… வரும் வழியில் ஒரு சில சம்பவங்களை தவிர நான் எதிர்பார்த்து போல் பேராபத்து ஏதும் கெளரிக்கு ஏற்படவில்லை. அதுவரையில் அன்னை ராஜராஜேஸ்வரியின் அருள் அவளுக்கு பரிபூரணமாகக் கிட்டியுள்ளது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, புதிதாக தளர்ந்த கொடி ஒன்று நிலை தடுமாறி நழுவி கீழே விழுவதை போல நினைவிழந்து சரிந்தாள் கெளரி.
2 Comments
Good
அச்சச்சோ! என்ன இப்படி டிவிஸ்ட் மேல டிவிஸ்ட் வைச்சிக்கிட்டே போறீங்க!