கால் அரை முக்கால் முழுசு | 7 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால் அரை முக்கால் முழுசு | 7 | காலச்சக்கரம் நரசிம்மா

7. நேருக்கு நேர்

வெல்கம் டு டிரினிட்டி பேமிலி, மிஸ் கங்கணா ஆனந்த்..! புதிய திறமைகள், இளமையான சூழ்நிலை இருந்தால், கற்பனைகள் கரை புரண்டு ஓடும்..! கிரியேட்டிவிட்டி என்பது முதியவர், இளையவர், ஆண் பெண், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து வருவதில்லை. அது எல்லாருடைய சிந்தையிலும் சுரக்கும். டிரினிட்டி டிவிக்கு அந்த பேதமெல்லாம் கிடையாது. எங்கெல்லாம் கிரியேட்டிவிட்டி இருக்கிறதோ, அதை ட்ரினிட்டி தட்டி எடுக்கும்.” –பிரதீப், கங்கணாவை வரவேற்று பேசிக் கொண்டிருந்தான்.

டிரினிட்டி இந்தியா டிவியின் ஆலோசனை அறையின், அந்த வட்ட மேஜையில் கங்கணா, அவளை அழைத்து வந்திருந்த எச்.ஆர். டிபார்ட்மெண்ட் சஞ்சனா மற்றும் பிரதீப் நஞ்சுண்டனைத் தவிர, ஆதர்ஷ், தினேஷ், ரேயான் மற்றும் கார்த்திக் ஆகிய நால்வரும் அமர்ந்திருந்தனர்.

”சாரி பிரதீப்..! முதியவர், இளையவர், ஆண்கள், பணக்காரன், ஏழை யார்கிட்ட வேணும்னாலும் கிரியேட்டிவிட்டியைத் தட்டி எடுக்கலாம். பெண்களிடம் மிகவும் கஷ்டம்.” –என்று தினேஷ் கூறியவுடன், பிரதீப் அவனை வியப்புடன் பார்த்தான்.

”பெண்களைத் தட்டினால், அது ஹராஸ்மென்ட் கேஸாக முடிந்துவிடும்..!” –தனது ஜோக்குகளை பிரதீப் ரசிக்கும் தைரியத்தில் தினேஷ் சொல்ல, பிரதீப்பின் முகம் கோபத்தில் சிவந்தது.

”ஸ்டாப் இட் தினேஷ்..! நோ செக்ஸிஸ்ட் ஜோக்ஸ் அலவுட்.! நான் சீரியஸாப் பேசிக்கிட்டு இருக்கேன்.” பிரதீப் உறுமினான்.

”அதோ உட்கார்ந்திருக்குங்களே…! அதுங்க நாலும் MCPs (Male Chauvinist Pigs) அதுங்களுக்கு பொண்ணுங்கன்னாலே அலட்சியம்..! வந்த உடனேயே என்கிட்டே வாலாட்டினாங்க. ஓட்ட நறுக்கிட்டேன். நீங்களும் விட்டுக் கொடுக்காதீங்க. உங்க கீழேதான் நாலும் வேலை பார்க்கப் போவுது. பெண்டை நிமித்திடுங்க.! நீங்க அடிக்கிற அடியில, அவங்களால கல்யாணம் செஞ்சுக்க முடியாதபடி ஆகிடனும். கல்யாணம் தப்பித்தவறி ஆனாலும், முதலிரவே அவங்களுக்கு நடக்கக்கூடாதுன்னு நான் சபிக்கிறேன்..” –சஞ்சனா, அபர்ணாவின் காதைக் கடித்தாள்.

”அவங்களுக்கு முதலிரவு நடக்கலைன்னா, பாதிக்கப்பட போவது நம்மள மாதிரி பொண்ணுங்க தானே..? பார்க்கலாம்..! இதுவரைக்கும் அவங்களால எனக்கு ப்ராப்ளம் ஒண்ணும் ஏற்படலை..!” –என்றவள், பிரதீப்பைப் பார்த்தாள்.

பிரதீப் தொடர்ந்து பேசினான். ”உங்க எல்லாருக்கும் என்னோட அப்பீல்..! நாம எல்லோரும் ஒரே குடும்பம்.! நமக்குள்ள ஆண், பெண் பேதங்களைப் பார்க்காம நாம தேசத்தில் டாப் டிவின்னு பெயர் வாங்கணும். குறிப்பாக, நம்ம ரைவல் யுரேனஸ் டிவியை ஃபீட் செஞ்சு காட்டணும். யுரேனஸ் டிவி சேர் பர்சன் ஷாலினி ஷர்மா பதவி விலகிட்டு, தனது மகன், பாபி ஷர்மாவை தலைவராக்கப் போறாங்களாம். அவன் லண்டன் தேம்ஸ் டிவில ட்ரைனிங் எடுத்துட்டு வந்திருக்கான். எனக்கு ஓபன் சாலஞ்ச் விட்டிருக்கான். அவனை நாம ஜெயிச்சே ஆகணும்..! நாம லஞ்ச் முடிச்சுட்டு வந்து, ஒரு முக்கியமான அசைன்மென்ட் பற்றி விவாதிக்கப் போறோம்..! எல்லோரும் லஞ்ச் முடிச்சுட்டு, மீண்டும் கான்ஃபெரன்ஸ் ஹாலுக்கு வாங்க. சரியா மூணு மணிக்கு மீட்டிங்…” –பிரதீப் நஞ்சுண்டன் கூற, அனைவரும் தலையசைத்துவிட்டு, அறையை விட்டு வெளியேறினர். ஆபீஸ் கேன்டீனை நோக்கி நடந்தனர்.

”என்னடா மச்சான்..! நேத்து வரைக்கும் நம்ம குரூப்ல ஒருத்தன் மாதிரி பேசிட்டு இருந்தான். இப்ப அந்த கங்கணாவைப் பார்த்த உடனேயே ரூட் மாறுகிறான். எனக்கென்னவோ, சீக்கிரம் கங்கணா மிஸஸ் சி.இ.ஓ. ஆகிடுவா போல இருக்கே..!” ரேயான், கார்த்திக் காதை கடித்தான்.

”இரு..! மத்தியானம் ஒரு முக்கிய அசைன்மென்ட்ன்னு சொல்லியிருக்கான் பிரதீப். அதை வச்சு, அந்தக் கங்கணாவை விரட்டறேன்..!” –ஆதர்ஷ் கூறிக் கொண்டிருந்த வேளையில், அவர்களைப் பின்தொடர்ந்து கங்கணாவுடன் வெளியே வந்த சஞ்சனா, தினேஷை வெற்றிக் களிப்புடன் நோக்கினாள்..!

”என்ன தினேசு… செம்ம மாத்து மாத்திட்டாரா, சி.இ.ஓ.! சீக்கிரம் சி.இ.ஓ. அப்பா நஞ்சுண்டன் சேர்மன் பதவியில் இருந்து விலகிய உடனே, பிரதீப் சேர்மன் ஆகிடுவார். அப்ப லேடி சி.இ.ஓ. வந்து உங்களையெல்லாம் பெண்டு எடுக்கப் போறா பாரு..!” -என்று கண்களாலேயே சொல்ல, “போடி ஜால்ரா..!” -என்று முணுமுணுத்தான் பிரதீப்.

டிரினிட்டி டிவி கேன்டீனை, டார்லிங் என்கிற ஹோட்டல் காண்ட்ராக்ட் எடுத்திருந்தது. கேன்டீனும், விஸ்தாரமான ஏசி ஹால்களாக இருந்தது. இவர்கள் நான்கு பேரும் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் சஞ்சனாவும், அபர்ணாவும் அமர்ந்தனர்.

”அந்தக் குண்டு சஞ்சனாவுக்குக் கொழுப்பைப் பாரேன்..! கேன்டீன் என்னவோ காலியா இருக்கு..! இவ்வளவு பெரிய ஹாலுல எங்கேயாவது ஓரமா உட்காரலாம் இல்லே. நம்மகிட்டே வம்பு செய்யணும்னு பக்கத்துல வந்து உட்காருது பாரு..!” –கார்த்திக் பொரிந்து கொட்டினான்.

”இரு, வரேன்..!” என்ற தினேஷ், அவர்கள் மேஜையை பார்த்து, ”டார்லிங்” என்று குரல் கொடுத்தான்.

அபர்ணாவும், சஞ்சனாவும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க, ”ஆதர்ஷ்,! தெரியுமா… இந்த கேன்டீனை டார்லிங் ஹோட்டல் லீசுக்கு எடுத்திருக்கு..!” –என்று சொல்ல, அந்த பெண்களுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.!

“இந்தாப்பா..! எனக்கு ஒரு பிளேட்டில் நாலு உப்புமா கொழுக்கட்டை கொண்டு வா. கொழுப்பு இருக்கிற நாலு உப்புமா கொழுக்கட்டையை நசுக்கி சாப்பிடணும் போல வெறியா இருக்கு..” என்று சஞ்சனா சொல்ல, கங்கணா ஓர் மசால் தோசையை ஆர்டர் செய்தாள்.

”பாரேன் அதோட திமிரை..! நாலு கொழுக்கட்டையை நசுக்கி சாப்பிடப் போறாளாம்..!” –ரேயான் கூறினான்.

சர்வர் கொண்டு வந்து வைத்த நான்கு கொழுக்கட்டைகளை, தட்டோடு எடுத்து முகர்ந்து பார்த்தாள், சஞ்சனா. உடனே கூப்பாடு போடத் தொடங்கினாள்.

”என்ன மேன்..! நாலும் நாத்தப் பிணமா நாறுது..! நாலு சேர்ந்தாலே இப்படித்தான் போல இருக்கு..! நான் யார் தெரியுமா..? எச்.ஆர். டெபார்ட்மெண்ட். அயிட்டம் தரமா இல்லைன்னா, நடவடிக்கை எடுப்பேன். ரொம்ப ஆட்டம் ஆடாதீங்க.! . அப்புறம் புவ்வாவுக்கு நடு ரோட்ல நிற்க வேண்டியிருக்கும். இந்த நாலு கொழுக்கட்டையும் குப்பைத் தொட்டில வீசிட்டு, எனக்கும் ஒரு மசாலா தோசை கொண்டு வா மேன்..!” –சஞ்சனா பொதுவாகக் கூப்பாடு போட, அவள் தங்களுக்குத் தான் மறைமுகமாக அச்சுறுத்தல் விடுவதாக டார்க் டெமன்ஸ் உணர்ந்தனர்.

”அவளை என்ன பண்றேன் பாரு..!” –எழுந்த தினேஷை கையைப் பிடித்து அழுத்தி அடக்கினான், ஆதர்ஷ்.

”இது அந்த கங்கணா கொடுத்த ஐடியாவா இருக்கும். நம்மளைத் தூண்டி விட்டு, நம்மை ரியாக்ட் செய்ய வச்சு, பொம்பளை ஹராஸ்மென்ட் கம்ப்ளைண்ட் கொடுக்கத்தான் அவங்க வழி செய்யறாங்க. முதல் நாளே நாம பிரச்சனையில் சிக்க வேண்டாம்.! விட்டுப் பிடிப்போம்..!” –ஆதர்ஷ் சொல்ல, தினேஷ் அடங்கினான்.

”பாத்தியா..! நான் போட்ட கூப்பாடுல, நாலும் கப்சிப்” –சஞ்சனா பீற்றிக் கொண்டாள்.

தியம் மீண்டும் அனைவரும் கான்பரன்ஸ் ஹாலில் கூடினார்கள்.

பிரதீப் அனைவரையும் பார்த்துவிட்டு, தனது ஃபைலைத் திறந்தான்.

”பிரெண்ட்ஸ்..! உங்களுக்கு முக்கியமான உடனடி அசைன்மென்ட்..! தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வருது. இரண்டு முறை தொடர்ந்து ஜெயிச்ச ஆளுங்கட்சி இந்த முறை ஹாட்ரிக் அடிக்கணும்ன்னு முயற்சி பண்ணுது. பத்து வருஷம் பதவியில் இல்லாத எதிர்க்கட்சி இம்முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிச்சுடலாம்ன்னு ஒத்தைக் கால்ல நிக்குது. ஒவ்வொரு டிவியும் ஒவ்வொரு கருத்துக் கணிப்பு செய்யுது. ஆனா, எனக்கு ஓர் ஆசை. ‘டிரினிட்டி டிவிதான் கரெக்ட்டா யாரு ஆட்சியைப் பிடிப்பாங்கன்னு சொல்லிச்சு. அவங்க கணித்த தொகுதிகள் எண்ணிக்கை கச்சிதமாக இருந்தது. மக்களின் நாடித்துடிப்பைச் சரியாப் பிடிச்சு பார்த்தது டிரினிட்டி டிவிதான்.’ னு மக்கள் பேசணும்.”

“மிஸ்டர் கார்த்திக் வாசுதேவன்..! அரசியல் நிகழ்ச்சிகளுக்கு நீங்க பொறுப்பு என்கிறதால, இந்த தேர்தல் கணிப்புப் பணியை உங்ககிட்டே ஒப்படைக்கிறேன். நம்ம சர்வே துல்லியமா எடுக்கப்படணும். நாம முன்வைக்கிற தேர்தல் கணிப்புக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் இம்மியும் வித்தியாசம் இருக்க கூடாது. நம்ம கணிப்பு கரெக்ட்டா இருந்தா உங்க டீமுக்கு இன்சென்டிவ் நிறையக் கொடுக்கப்படும். மிஸ் கங்கணா கிட்டே நீங்க யோசனைகளை வாங்கிக்கலாம். உங்களுக்கு சர்வே நடத்த, விஸ்காம், மாஸ் கம்யூனிகேஷன் ஸ்டுடென்ட்ஸ் வர இருக்காங்க. ஸோ, இந்த சவாலை நீங்க வெற்றியோடு செஞ்சு காட்டுவீங்கன்னு நம்பறேன்.”

கார்த்திக் தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை எண்ணி மகிழ்ந்தாலும், கூடவே, கங்கணாவிடம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதீப் கூறியதை, அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

தனக்கு அதில் விருப்பம் இல்லை என்று ஆட்சேபம் தெரிவிப்பதற்காக எழ முயன்ற கார்த்திக்கின் காலை தனது பூட்ஸ் காலால் மிதித்தான்.

”எனக்கு ஒரு யோசனை..! பெண்களுக்கு அரசியல் அறிவு கிடையாது..! அதுவும் இது மைசூர்ல இருந்து வந்திருக்கு. நிச்சயம் லோக்கல் அரசியல் தெரியாம சொதப்பிடுவா..! அதுதானே நமக்குத் தேவை..! பிரதீப் எதிரே அவ சொல்ற யோசனைகளை அப்படியே ஏத்துக்க. ஆனா மறைவுல நாம ஒரு பிளான் பி ஒன்றைத் தயார் செய்வோம். கடைசியில நம்ம பிளான்தான் வெற்றி பெற்றதுன்னு பிரதீப்புக்கு நிரூபிச்சு, அவளை டம்மியாக்கலாம்.! இப்ப பேசாம இரு..!” –என்று கார்த்திக்கின் காதில் கிசுகிசுத்தான்.

கங்கணா ஜாடையாக டார்க் டெமன்ஸ் பக்கமாகக் கவனித்தாள். நால்வரின் கண்களிலும், தென்பட்ட வன்மம் இவளைத் திடுக்கிட வைத்தது.

காலையில் இருந்தே இவளை ஏன் அவர்கள் எதிரியைப் போல் பாவிக்கிறார்கள்? ஹலோ என்று சொன்னபோதும் அலட்சியம் செய்தார்கள். இவள் அவர்களுடன் லிஃப்டில் பயணிப்பதையும் விரும்பவில்லை. இவளை இரண்டாவது மாடியில் இறங்கவும் விடவில்லை. அந்த ஆதர்ஷ் இவளது சாவியைத் தூக்கி எறிய முயன்றான். நல்லவேளையாக அவனது ஐ போனை வைத்து, சாவியைக் காப்பாற்றிக் கொண்டாள்.

”வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்..? எதற்காக என்னிடம் கடுமையைக் காட்டறீங்க..?” — பிரதீப்பின் முன்பாகவே, ஆதர்ஷின் கண்களினுள் ஆழமாகப் பார்த்தாள், கங்கணா.

”Should we explain everything to you? It’s between our male colleagues..!” — ஆதர்ஷ் காட்டமான குரலில் கூற, பிரதீப் இருவரும் நேருக்கு நேர் மோதுவதைக் கண்டு திகைத்தான்.

-மோதல் இன்னும் வளரும்…

ganesh

2 Comments

  • Where is the 6th episode?

  • சுவாரஸ்யமான போட்டி! சிறப்பாகச்செல்கிறது! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...