கணவன் – மனைவி ஒற்றுமைக்கு தத்தாத்திரேயரை வணக்கம்
மும்மூர்த்திகளின் திருவுருவின் ஒரே வடிவமான அவதாரம், தத்தாத்ரேயர். மூன்று முகம், ஆறு கரங்கள் கொண்டவர்.
பிரம்மனின் புத்திரரும், சப்தரிஷிகளில் ஒருவருமான அத்ரி மகரிஷிக்கும், அனுசூயைக்கும் மகனாகத் தோன்றியவர், தத்தாத்ரேயர்.
தத்தாத்ரேயர் குரு வடிவமானவர். இந்து மதத்தின் மூன்று பெரும் தெய்வங் களான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற படைக்கும், காக்கும், அழிக்கும் கடவுளர்களின் ஒருமித்த சக்தியைத் தன்னிடம் கொண்டவர். சர்வசக்தி வாய்ந்த குருவாகத் திகழ்பவர். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்புப் பெற்றவர்.
மகா குருவாகவும், ஞானத்தின் ஸ்வரூபமாகவும் போற்றப்படும் அவர், அன்பு, கருணை போன்றவற்றின் வடிவமாகவும் திகழ்கிறார். இவ்வுலகுக்கு அறிவையும், ஒளியையும் அளித்தவர் எனவும், புராணங்கள் அவர் புகழ் பாடுகின்றன.
உலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள். ஆனால் தத்தாத்ரேயரின் தாயான அனுசுயா தேவி மட்டும் மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றி னைப் பெற்றாள்.
அத்திரி மகரிஷியின் புதல்வரானதால் ஆத்ரேயன் என்றும், விஷ்ணுவால் தத்தம் செய்யப்பட்டதால் தத்தாத்ரேயன் என்றும் அழைக்கப்படுகிறார்.
மூன்று தலைகள், ஆறு கைகளுடனும், நான்கு நாய்கள் சூழ்ந்திருக்க, தெய்வீகப் பசு மற்றும் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக மரத்துக்கு முன் நிற்பதுபோல, தத்தாத்ரேயர் சித்திரிக்கப்படுகிறார். அகந்தையை அழிக் கும் திரிசூலம், அறியாமையில் உழல்பவர்களைத் தட்டி எழுப்பும் உடுக்கை மற்றும் ஓம் என்ற பிரணவ ஒலியை எங்கும் ஒலிக்கச் செய்யும் சங்கு போன்றவை, அவர் கைகளில் திகழ்கின்றன. அவரது கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் சக்ராயுதம், இந்தப் பிரபஞ்சத்தையும், கர்ம வினைகளை வேரருக்கும் அவரது சக்தியையும் குறிக்கிறது.
மற்றொரு கரத்தில் ஏந்தியிருக்கும் ஜபமாலை மூலம், தன் பக்தர்களை நினைவுகூரும் அவர், நினைத்த மாத்திரத்திலேயே அனைத்து பந்தங் களிலிருந்தும் அவர்களை விடுவிக்கிறார். தூய ஞானம் என்ற அமிர்தத்தால் நிரம்பிய ஒரு கலசத்தையும் வைத்துள்ள தத்தாத்ரேயர், அதனைக்கொண்டு, தெய்வீக அறிவுக்காக ஏங்கித் துடிக்கும் ஆத்மாக்களை உயிர்ப்பிக்கிறார். இதன் மூலம், ஜனனம்-மரணம் என்ற முடிவில்லாத சம்சார சுழற்சியிருந்து விடுதலை அளிக்கிறார்.
மும்மூர்த்திகளின் மனைவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோ ருக்குத் தாங்களே உலகில் சிறந்த பதிவிரதைகள் என்ற கர்வம் உண்டானது.
அந்த கர்வத்தைப் போக்க எண்ணிய இறைவன், அதற்கு கருவியாக நாரத ரைத் தேர்வு செய்தார். அத்ரி மகரிஷியின் மனைவி அனுசுயா தேவிதான் சிறந்த கற்புக்கு அரசி என்று நாராதர் சொன்னதைக் கேட்டு பொறாமை கொண்டனர் முப்பெரும் தேவியர்.
தங்கள் கணவர்களிடம் கூறி அனுசுயாவின் கற்பை சோதனை செய்யும்படி அனுப்பி வைத்தனர்.
அதன்படி சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும், முனிவர் வேடம் பூண்டு அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். முனிவர்களுக்கு உணவளிப்பதற்காக பலகாரங்களைத் தயார் செய்தார் அனுசுயா. பின்னர் உணவு பரிமாறத் தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த முப்பெரும் தேவர்களும், நாங்கள் நிர்வாண நிலையில்தான் உணவருந்துவோம் என்றனர்.
தன் பதிவிரதைத்தன்மையால் அந்த மூவரையும் குழந்தைகளாக உருமாற் றினாள் அனுசுயா. பின்னர் அவர்களுக்கு அமுது அளித்து தொட்டிலில் தூங்கச் செய்தாள்.
அனுசுயாவின் கற்பைப் பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், பலகாலம் ஆகியும் இருப்பிடம் திரும்பாததை எண்ணி மனம் கலங்கிய முப்பெரும் தேவியர்கள், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர்.
மும்மூர்த்திகளும் அங்கு குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப் பதைக் கண்டு அனுசுயாவின் கற்பை எண்ணி மலைத்தனர்.
இதையடுத்து அனுசுயாவிடம் சென்ற அவர்கள், “தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழையபடியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண் டும்” என்று கேட்டனர். இதையடுத்து அனுசுயா, மும்மூர்த்திகளையும் பழைய உருவத்திற்கு மாற்றினார்.
பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயா – அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்டனர். அதற்கு அனுசுயா, “இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்குக் குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்” என்ற வரத்தை வேண்டினர்.
இறைவனும் வரம் அளித்தார். அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடு பட்டிருந்த அத்ரி மகரிஷி- அனுசுயா தம்பதிக்கு மும்மூர்த்திகளின் அம்ச மாக, தத்தாத்ரேயர் பிறந்தார்.
தத்தாத்ரேயர் அவதரித்த ஸ்தலம் சுசீந்திரம் என்றும் தாணுமாலயனின் வடிவமே தத்தாத்ரேயர் அம்சம்தான் என்றும் சொல்லப்படுகிறது.
பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கிய தத்தாத்ரேயர் வேத உபன்யாச ஞானியர்களுக்கு சத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாக வும் இருந்து வந்தார்.
பரசுராமனால் அழிக்கப்பட்ட கார்த்தவீரியார்ஜுனன் இவரது சீடரே. காணா மல் அல்லது திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க இன்றும் கார்த்த வீரியார்ஜுன மந்திரம் ஜெபிக்கப்படு கிறது. தத்தாத்ரேயரை வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும்.
இவர் மிக இளம் வயதிலேயே பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைய பல இடங்களைச் சுற்றி கர்நாடகா மாநிலத்தில் உள்ள கங்காபுரத்தில் பிரம்ம ஞானத்தை அடைந் தார்.
இவரது பத்தினியின் பெயர் அனகா தேவி. ஆந்திராவில் அனகாதேவி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த விரதம் கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட அனுஷ்டிக்கப்படுகிறது. வட இந்தியாவில் தத்தாத்ரேயர் விரதம் பரவலாக அனுஷ்டிக்கப்படுது.
ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.
உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி, கார்த்த வீர்யார்ஜூனர் மற்றும் தத்தாத்ரேய ருக்கு விசேஷ சந்நிதிகள் அமைக்கப்பட் டுள்ளது
தத்தாத்ரேயருக்கு வடநாட்டிலும், ஆந்திராவிலும் ஏராளமான கோவில்கள் உண்டு. ஆந்திராவில் எல்லார் வீட்டிலும் தத்தாத்ரேயரின் படங்கள் வைத்து வழிப்படுவர்.
தமிழகத்தில் தத்தாத்ரேயர் பற்றி அறிந்தோர் சொற்பமே. இவருக்கு சேந்த மங்கலம், சுசீந்தரம் தானுமலையான் கோவில் மற்றும் ஆற்காடு அருகில் உள்ள வாலாஜாபாத் தன்வந்திரி பீடத்திலும் இவருக்கு தனிச்சன்னிதி உண்டு.
தத்தாத்ரேயர் அவதார தினத்தில் ஸ்ரீ தத்தாத்ரேய காயத்ரி மந்திரம் கூறி வணங்கலாம். ‘ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே திகம்பராய தீமஹி தந்நோ தத்த பிரசோதயாத்’ என்ற மந்திரத்தை தினசரி ஜெபித்து வழிபட, நம் வாழ்வு அற்புதங்களால் நிறைந்து வளமுடன் காணப்படும்
தத்தாத்ரேயரை வாங்கினால் ஞானம்,மோட்சம்,நற்குணங்களை பெறலாம். இவர் மந்திரம் ஞாபக சக்தியை தரும். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டில் இன்பம் பெருகும்.