தலம்தோறும் தலைவன் | 2 | ஜி.ஏ.பிரபா
2. திரு உத்தரகோச மங்கை ஸ்ரீ மங்களேஸ்வரர்
வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோச மங்கைக்கு அரசே
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றம் செழும் சுடரே
திருவாசகம்
இறைவனுக்கு என்று சொந்த ஊர் இருக்கிறதா?
உலகமே அவன் வீடு எனும்போது அவனுக்கு என்று ஊர் உள்ளதா?
சிவம் என்பது என்ன? அது ஒரு பொதுவான சொல். சிவம் என்றால் எல்லா உயிர்களுக்கும், நன்மை அளிக்கின்ற பிரகாசமான ஒளி என்பதே பொருள். நன்மை என்று மற்றொரு பொருளும் உண்டு. ஈசனை நம்பினால் எங்கும் நன்மை, எதிலும் நன்மை என்றுதான் சிவ, சிவ என்று சொல்கிறோம்.
எங்கும் நிறை பரம்பொருள்தான் சிவம். முத்தொழிலையும் நடத்தும் மும்மூர்த்தியாய் அவரே விளங்குகிறார்.
“ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை” என்கிறார் சம்பந்தர்.
“ஆதியாய் நடுவும் ஆகி, அளவிலா அளவும் ஆகிச்
சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி, போற்றி”
-என்கிறது பெரிய புராணம். சொல்லுவதற்கு அறியலன். சொற்களைத் தாண்டி விண்ணுலகும் மேவி நிற்பவனுக்கு சொந்த ஊர் என்று திரு உத்தரகோச மங்கையைக் குறிக்கிறார்கள்.
இறைவனின் சொந்த ஊர். உலகிலேயே முதலில் தோன்றிய கோவில், நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் அறியப்பட்ட சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே உள்ள கோவில், இராமாயண காலத்திற்கு முன்பிருந்தே சிறப்பு பெற்ற கோயில் என்று பல பெருமைகள் பெற்ற தலம் உத்தரகோச மங்கை.
இராவணனின் திருமணம் தாமதமாகிக் கொண்டே இருந்தது. அவன் இத்தலத்திற்கு வந்து ஈசனை வேண்டி திருமணம் நடந்ததாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. எனவே இறைவன் மங்கள நாதர் என்று அழைக்கப்படுகிறார். மண்டோதரி வணங்கிய கோயில். இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தோன்றுவதற்கும் முன்பே தோன்றியது இக்கோயில்.
“மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது” என்று இதனைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். திரு உத்திரகோச மங்கையின் பொருள் அம்பாளுக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை விளக்கிய இடம் என்பதே. மாணிக்க வாசகருக்கும் பிரணவப் பொருள் உரைத்த தலம் இது.
மண்டோதரி புத்திரப்பேறு இல்லாமல் மனம் கலங்கிய போது, இராவணன் இத்தலத்து இறைவனை வணங்கினால் புத்திரன் பிறப்பான் என்று வழி காட்டுகிறான். அதன்படி மிகுந்த பக்திச் சிரத்தையுடன் இறைவனை நோக்கித் தவம் இருக்கிறாள் மண்டோதரி. அதில் மகிழ்ந்த ஈசன், அவளுக்கு அருள் வழங்க விரும்புகிறார்.
அப்போது அங்கிருந்து தவம் செய்த ஆயிரம் முனிவர்களிடம் “மண்டோதரிக்கு அருள் செய்ய யாம் இலங்கை செல்கிறோம். நீங்கள் இந்த இடத்தை விட்டு அகலாது இருப்பீர்களாக” என்று பணிக்கிறார். இராவணனால் எப்போது என் மேனி தீண்டப் படுகிறதோ அப்போது இங்குள்ள குளத்தில் நடுவில் அக்கினிக் குழம்பு தோன்றும்”என்று அசரீரியாக உரைக்கிறார்.
கற்பின் அரசியாய் விளங்கிய மண்டோதரி தன் மனதில் ஈசனை ஒரு குழந்தையாகப் பாவித்து பூஜித்து வந்தாள். அதனால் அவளுக்கு ஈசன் குழந்தையாக காட்சி தருகிறார். அதன் அழகில், தேஜோமயமான பிரகாசத்தில் மயங்கிய மண்டோதரி சிலிர்த்து, பரவசமுடன், கண்ணீர் மல்க மெய் மறந்து நிற்கிறாள்.
அப்போது அங்கு வந்த இராவணன் குழந்தையின் பேரழகில் மயங்கி அதைக் கையிலெடுத்துக் கொஞ்சுகிறான். அவன் கை தீண்டிய உடனே உத்தரகோச மங்கை ஆலயத்தில் உள்ள குளத்தில் அக்கினி எழுந்தது. அதைக் கண்ட ஆயிரம் முனிவர்களும் அந்த அக்கினியில் வீழ்ந்து மறைந்தனர்.
ஆலயத்திற்குத் திரும்பிய அய்யன் அந்த முனிவர்கள் ஆயிரம் போரையும் தம்முள் ஐக்கியமுறச் செய்து சஹஸ்ரலிங்கமாக தரிசனம் தருகிறார். ஆயிரம் முனிவர்களுக்கும் ஈசன் உமாதேவியோடு விடைமீதமர்ந்து காட்சி தந்தருளியதால் அய்யன் காட்சி கொடுத்த நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
அக்கினி தீர்த்தம் கோயில் உள்ளேயும், வெளியில் பிரம்மா தீர்த்தம், மொய்யார் தடம் பொய்கைத் தீர்த்தம்,வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம், உள்ளது. அக்கினி தீர்த்தத்துடன் மங்கள தீர்த்தமும் உள்ளே உள்ளது.
திருவாசகத்தில் முப்பத்தி எட்டு இடங்களில் இத்தலம் புகழ்ந்து போற்றப்படுகிறது. இது தேவார வைப்புத் தலம். அதாவது நேரடியாக இங்கு தேவாரம் பாடப்படாமல், தேவார பதிகத்தின் நடுவில் இத்தலத்தில் உறையும் இறைவனைப் புகழ்ந்து பாடுவது.
கீர்த்தித் திருவகலில் “உத்தரகோச மங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும்” என்றும் ஆயிரம் முனிவர்களுக்குத் தன் தோற்றத்தைக் காட்டிய வரலாறு குறிப்பிடப்படுகிறது.
மேலும் “மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளையும்” என்ற தொடர் ஈசன் அம்பிகைக்கு பிரணவ மந்திரப் பொருள் கூறியதைக் குறிக்கிறது. இங்குள்ள நடராஜர் ஆதி சிதம்பரேசர் என்று அழைக்கப் படுகிறார். இது இரத்தின சபை என்று அழைக்கப் படுகிறது.
முன்பு இந்த இடம் இலந்தை மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் இலந்தைவனம் என்றும், தட்சிணகயிலாயம், பத்ரிகாரண்யம், வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், சதுர்வேதிபுரி என்றும் அழைக்கப் படுகிறது. இங்குள்ள பிரகாரச் சுவரில் திருவாசகப் பதிகங்கள் கல்லில் பொறிக்கப் பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஈசனின் அடிமுடி காண பிரும்மாவும், விஷ்ணும் முயற்சிக்க, பிரும்மாவுக்குச் சாதகமாக தாழம்பூ பொய் சாட்சி கூறியது. அதனால் கோபமடைந்த ஈசன் இனி தாழம்பூவைத் தன் பூஜையில் சேர்க்கக் கூடாது என்று சாபம் அளித்து விட்டார். எனவே எந்தச் சிவன் கோவில்களிலும் தாழம்பூவை பூஜையில் சேர்ப்பதில்லை.
மாறாக அதற்குச் சாப நிவர்த்தி ஏற்பட்ட தலம் உத்தர கோச மங்கை என்பதால் இங்கு பூஜையின் போது ஈசனுக்கு தாழம்பூ சேர்க்கப்படுகிறது. நடராஜருக்குரிய ஆறுகால அபிஷேக சமயங்களில் இறைவான் தாண்டவமாடிக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது. இராமேஸ்வரம் கோயில் பிரகாரம் போலவே அழகான, மிக நீண்ட பெரியதான கலை அழகு மிகுந்த பிரகாரம்.
இக்கோயில் அகழி அமைப்பில் உள்ளத்தால உள்ளே செல்ல, மரப்படிகள் உள்ளது. இங்கு அறையில் அம்பிகைக்காக இறைவன் ஆடிய நடனத்தைதான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார் என்கிறார்கள். இங்குள்ள நடராஜர் அதி அற்புதமான ஐந்தரை அடி உயரமுடைய முழுவதும் மரகதக் கல்லால் ஆன திருமேனி. விலை மதிப்பிட முடியாதது.
ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தரும் இறைவனின் திருமேனியை உள் வைத்தே சன்னதி கட்டப் பட்டுள்ளதால், இறைவன் உலா வருவதில்லை. அதற்கென தனி மூர்த்தம் உள்ளது. மார்கழித் திருவாதிரையின் போது மட்டுமே இச் சந்தனக்காப்பு முழுவதுமாக களையப் பட்டு அபிஷேகங்கள் அற்புதமாக நடை பெறுகின்றன.
நாள்தோறும் உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கம், மரகத லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறும். காணக் கண்கோடி வேண்டும். உமாமகேஸ்வரரை தரிசித்து விட்டு பிரகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப் பட்டிருப்பதைக் காணலாம். அருகில் குரூந்த மர உபதேச அன்னதியும் காணலாம்.
கல்லில் குருந்த மரம் செதுக்கப் பட்டு, அதன் கீழ் அமர்ந்து இறைவன் குருவாக இருந்து மாணிக்க வாசகருக்கு உபதேசம் செய்யும் அற்புதக் காட்சி உள்ளது. நம்மைச் சிலிர்க்க வைக்கும் சிற்பக் கலை இது. நடராஜர் கோவிலுக்கு அருகிலேயே சஹாஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக் கோயில் உள்ளது. மூலத் திருமேனியில் நெடுக்குக் கீற்றுகளும், ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உட்புறத்தில் தல மரத்தின் வேரும் உள்ளது. இங்கு வியாசரும், காக புஜண்டரும் தவம் செய்வதாக ஐதீகம்.
அருகிலேயே தல மரமான இலந்தை மரம் உள்ளது. இந்த ஆலயம் முற்பிறவி பாபங்கள், சாப விமோசனங்கள், தோஷங்கள் போக்கும் தலமாக விளங்குகிறது. திருமணத் தடை, குழந்தையின்மை, கல்வி, வேலை என்று பல குறைகளையும் நீக்கும் அற்புதத் தலமாக விளங்குகிறது.
நம் பாரத பூமி புண்ணிய பூமி. பல மகான்களும், ரிஷிகளும் தோன்றி மனித உயிர்கள், தங்கள் குற்றம் குறைகள் நீங்கி முழு அமைதி, நிம்மதியுடன் வாழ ஏராளமான வழி முறைகளைக் காட்டியுள்ளார்கள். அவர்கள் வேத வழிபாடு செய்த எண்ணற்ற தலங்கள் இன்றும் ஏராளமான ஆன்மீக அதிர்வுகளுடன் விளங்குகிறது. புராதானமும், புராணம், வரலாறும் இணைந்த அரிய பல திருக்கோயில்களில் உத்திரகோச மங்கையும் ஒன்று.
சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்தையது. இதுவே ஈசனின் சொந்த ஊர் என்கிறது.திருவிளையாடல் புராணத்தில் வரும் வலை வீசி மீன் பிடித்த படலம் இத்தலத்தில்தான் நிகழ்ந்தது பாண்டிய மன்னர்களே இதன் திருப்பணிகளைச் செய்தனர். இத்தலத்தில்தான் இந்திரன் தனது ஐராவதத்தை முருகனுக்கு அளித்தான் என்று ஆதி சிதம்பர மகாத்மியம் என்ற புராண நூல் விளக்குகிறது.
இன்றுவரை இராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டது இக்கோயில். அழகான சிற்பங்கள் கோயில் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது. இங்குள்ள கோயில் குளத்தில் வாழும் மீன்கள் கடல் நீரில் வாழும் மீன்கள் என்பது இத்தலத்தின் சிறப்பு. இங்கு மரகத லிங்கம் இருப்பதை அறிந்து இதைக் கொள்ளையடிக்க அலாவுதீன் கில்ஜி முயன்றபோது அவன் கண்களுக்கு லிங்கம் தெரியவில்லை.
காக புஜண்டருக்கு கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இங்குதான் நீங்கியது. அறுபது ஆயிரம் சிவனடியார்கள் இங்கு ஞான உபதேசம் பெற்றார்கள். பல அற்புதங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்த உத்திரகோச மங்கை ஈசனை மனதார நினைத்தாலே சகல விதமான துன்பங்களும் நீங்கும் என்பது சத்தியமான உண்மை.
“ஓம் சிவ சிவ சிவ ஓம்”
1 Comment
உத்திரகோச மங்கை திருத்தலத்தின் பெருமைகளை அழகாக எடுத்துரைத்த மிக அருமையான கட்டுரை! வாழ்த்துகள்