பொற்கயல் | 13 | வில்லரசன்

 பொற்கயல் | 13 | வில்லரசன்

13. தேரும் காஞ்சியும்

தொண்டை மண்டலத்தின் காஞ்சி நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. நகரம் முழுவதும் உள்ள வீடுகள், மாளிகைகள், அரண்மனை போன்ற அனைத்து இடங்களிலும் தோரணங்கள் மாவிலைகள், நறுமணம் கமழும் மலர் மாலைகள், வாயிலில் மாட்டுச் சாணம் தெளித்து அழகிய பெரும் கோலங்கள் என காட்சியளிக்க மேலும் சில பெண்கள் ஈரத்தலையுடன் கோலம் போட்டபடி ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக காணப்பட்டார்கள்.

வீதிகள் எங்கும் இருபுறமும் பாண்டியர்களின் கயல் கொடிகளுடன் சோடர்களின் கொடிகள் பல நட்டு வைக்கப்பட்டிருந்தன.

பெரும்பாலும் உருவத்தில் பெரும் தேர்கள் பயணிக்கத் தக்க தெரு வீதிகளில் எல்லாம் இருபுறங்களிலும் கட்டுப்பாடுகளுக்கு சணல் கயிறுகள் போடப்பட்டு அதற்கு முன் வேலும் வாளும் ஏந்திய சோட நாட்டு வீரர்கள் காவல் நின்றிருந்தார்கள்.

அவர்களுக்குப் பின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வீதியின் மேல் விழி வைத்து காத்து நின்றிருந்தனர்.

“யார் வந்தது? யார் வந்தது? பெரிய தேரா சிறிய தேரா?” என்று ஆர்வத்துடன் கேட்டான் அங்கு ஓடி வந்து நின்ற சிறுவன் ஒருவன்.

எட்கி எட்கி வீதியை பார்த்துக் கொண்டிருக்கும் அவன் நண்பர்களில் ஒருவன்

“இன்னும் ஒன்று கூட வரவில்லை!” என்றான் ஏமாற்றத்துடன்.

சில நொடிகள் கழிந்ததும் அந்தத் தெருவீதியில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. சிறிது நேரத்திலேயே அங்கு குதிரைகளின் குளம்போசை சிறிது சிறிதாக ஒலிக்கத் தொடங்கியது. அதைக் கேட்ட அச்சிறார் கூட்டம்

“வந்துவிட்டது! வந்துவிட்டது!” என ஆர்வம் காட்டினார்கள். அப்போது அங்கு முன்னும் பின்னும் புரவி வீரர்கள் காவலுடன் போசள நாட்டு கொடியுடைய பெரும் தேர் தங்களை நோக்கி விரைந்து வந்து கடந்துச் சென்றதும் அத்தேரினை கண்டு சிறார்கள் குரலெழுப்பி ஆர்ப்பரித்தார்கள்.

அதைக்கண்ட முதியவர்கள் சிலரில் ஒருவர்

“போசள மன்னன் தேர் தானே அது?” என்று கேட்க மற்றொருவர்

“ஆம்! அவனே தான்!” என்றார்.

“யார்? இராமநாதரா? நரசிம்மரா?”

“இருவரில் யாரேனும் ஒருவராகத்தான் இருக்கக் கூடும். அவர்கள் இருவரையும் ஒன்றாக காண முடியாது என்பதை மறந்து விட்டாயா?”

“ஆம் ஆம்!”

என எப்பொழுதும் காஞ்சி நகரில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசும் அந்த முன்னால் போர் வீரர்களான கிழவர்கள் மிக எளிதாக அண்டை நாட்டு அரசியலைப் பற்றி பேசிக்கொண்டார்கள்.

அந்த தேரில் பயணித்தது போசள நாட்டு மன்னன் இராமநாதன் தான். அவனைத் தொடர்ந்து சில பல நாழிகைகள் கடந்த பிற்பாடு பல குறுநில மன்னர்களின் தேர்களும், வளவனும் வேளைக்கார படையினரும் புரவிகளில் சூழ சோழ மன்னன் மூன்றாம் இராசேந்திரனின் தேரும் வருகை தந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் சோழநாட்டின் ஒரு சில குறுநில மன்னர்களும், காகதிய அரசின் குறுநில மன்னர்கள் என்று ஏறத்தாழ தென்னகத்தின் பல அரசுகளிலிருந்து இளைய கண்ட கோபாலனின் இல்ல விழாவிற்கு வருகை தந்திருந்தார்கள்.

இத்தனை நேரம் தேர்கள் தங்களை கடந்துச் சென்றதைப் பார்த்து மகிழ்ந்து ஆர்ப்பரித்த அச்சிறுவர்கள் அவர்கள் நின்று கொண்டிருக்கும் வீதியின் வெகு தூரத்தில் எதையோ பார்த்து குழம்பிப் போனார்கள்.

“என்னது டா அது?” என்று வினவினான் சிறுவன் ஒருவன்.

“மேகம்! மேகம்!” என்றான் மற்றொருவன்.

அவன் வியப்புடன் சொன்னதுபோல் அந்தப் பெரு வீதியில் மேகம் ஒன்று நகர்ந்து வருவதை போன்ற தோற்றம் தான் தெரிந்தது. அருகில் நெருங்கி வந்து அவர்களை மின்னல் வேகத்தில் கடந்துச் சென்ற பிறகுதான் அவை இரண்டு தேர்கள் என உணர்ந்தார்கள் அவர்கள்.

இரண்டும் தங்கத்தேர்கள். இரண்டிலும் உயர்தர ஆறு புரவிகள் பூட்டப்பட்டிருந்தன. இருத்தேரின் உச்சியில் பாண்டியர்களின் இருகயல் கோடி சடசடவென ஒலியுடன் பறந்த வண்ணம் இருந்தது.

தேர்களின் பின் ஆபத்துதவிகளின் படை வீரர்கள் புரவிகளில் பாய்ந்தார்கள்.

அந்த இரு தேர்களின் தேரோட்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று முந்துவதற்கு புரவிகளை ஒருவழி செய்தார்கள்.

“ப்ப்பா… ஏய்… செல் செல்!” என புரவிகளை தட்டிவிட்டுவிட்டு வலதுபுறம் உள்ள தேர்ப்பாகன் இடது புறம் வரும் தேரைத் திரும்பிப் பார்த்தான்.

அந்தத் தேரோட்டியும் இவனைத் திரும்பிப் பார்த்தான். இருவரின் பார்வையிலும் போட்டிச் சாயல் தொனித்தது. முடிந்தால் முந்திச் செல் பார்ப்போம். இதோ பார் என் வேகத்தை. நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! வா வா வா இவ்வாறு தான் இரண்டு தேரோட்டிகளும் பார்வையாலும் உடல் மொழியாலும் பேசிக்கொண்டனர்.

காஞ்சி மாளிகையை நோக்கி வெவ்வேறு திசைகளிலிருந்து பயணித்து வரும் இவ்விரண்டு தேர்களும் மாளிகையை அடைய ஒரு சாலையில் சந்தித்தது முதல் தேர் சக்கரங்கள் தீப்பிடிக்கத் தொடங்கின.

நீண்ட நேரம் இரண்டு தேர்களில் ஒன்று முன்னேறுவதும் பிறகு மற்றொன்று முன்னேறுவதுமாக போட்டி போட்டுக்கொண்டு காஞ்சி மாளிகையை நெருங்கின.

சோடர்களின் காஞ்சி மாளிகையின் முன் புறத்தில் பெரிய பெண் ஒருத்தியின் சிலையை நிறுவியிருந்தான் இளைய கண்ட கோபாலன். அதைச் சுற்றிலும் சிறு குளமும் அதன் பலவகை மலர்களும் மீன்களும் மாளிகைக்கு அழகு கூட்ட அமைக்கப்பட்டிருந்தன. அதைச் சுற்றித்தான் மாளிகையை அடையவேண்டும். இரண்டு பாதைகளும் மாளிகை வாயிலை அடைய உதவும். அந்த இரண்டு பாதையிலும் பல அரசர்கள் மற்றும் அதிகாரிகளின் தேர்கள் ஓரமாக நின்றிருக்க மாளிகை வாயிலில் இளைய கண்ட கோபாலன் தன் மனைவி மக்கள் உடன்பிறந்தவர்களுடன் நின்று கொண்டு வரும் அரசர்கள் அனைவரையும் வரவேற்றபடி நின்றிருந்தான்.

அப்போது மாளிகையின் முன் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த அந்த இரண்டு தேர்களும் அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.

புலிப் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்த அவ்விரண்டும் மாளிகை முன் உள்ள இரு பாதைகளிலும் பிரிந்து சென்று வளைந்து பிறகு மாளிகை முன் ஒன்றுக்கு ஒன்று நேர் முகம் பார்த்தபடி வந்து நிற்க, அந்தந்த தேர் கேற்ப காவல் வீரர்கள் பின் வந்து நின்றார்கள். அதில் ஒரு தேரின் புரவி மாத்திரம் கனைத்து பெரும் ஒலி எழுப்பியது.

தடபுடலாக வந்து நிற்கும் அந்த இரு தேர்களும் யாருடையது என்பதை அங்கிருந்தவர்கள் கணநேரத்தில் கண்டறிந்தனர். தேரின் மேல் இருகயல் கொடி கம்பீரமாக வீற்றிருந்ததனால் இவை பாண்டிய மன்னர்களது தேர் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

தேர்களில் பின் வந்த ஆபத்துதவி வீரர்கள் விரைந்து தங்கள் புரவிகளை நீங்கி தேர்க் கதவிடம் வந்து நின்றனர்..

இரண்டு தேர்களின் கதவுகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன‌. திறக்கப்பட்ட தேர் கதவுகளின் வழியே ஒரே நேரத்தில் உதித்த இரண்டு கதிரவன் போலவும், ஒரே காட்டில் வாழும் இரு புலிகள் போலவும், ஒரே சமயத்தில் வாடிவாசலை கடந்து வெளிவந்த இருக் காளைகள் போலவும் இறங்கி கம்பீரமாக நின்றார்கள் பாண்டிய அரச சகோதரர்களான கொங்குநாட்டு பாண்டிய மன்னனான சடையவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் தொண்டை நாட்டு பாண்டியனான மாறவர்மன் விக்கிரம பாண்டியன்.

பாண்டிய மன்னர்களுக்கு ஏற்ற உடல்வாகு, அணிகலன்கள் பல, முத்துக்களை தாங்கும் மகுடங்கள் என இரு பாண்டிய மன்னர்களின் தோற்றமும் சிறப்பு. கீழே கால்பதித்த இருவரும் தங்கள் பார்வையை ஒருவரை ஒருவர் நோக்கி பாய்ச்சினார்கள். அந்தப்பார்வை சகோதரர்கள் இருவர் ஒருவருக்கொருவர் பார்ப்பது போல் இல்லை. ஏதோ பகைவர்கள் இருவர் பார்த்துக் கொள்வது போலிருந்தது.

வந்திறங்கிய இரு பாண்டியர்களையும் கண்ட இளைய கண்ட கோபாலன் தன் உற்றார் உறவினர்களுடன் சென்று அவர்களை பணிவுடன் வரவேற்றான்

“வருக! வருக! கொங்குப் பாண்டியரே வருக! இத்தனை காத தூரம் என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு நன்றிகள்!” என முதலில் கொங்குநாட்டு பாண்டியனை வணங்கி வரவேற்று விட்டு விரைந்து தொண்டைநாட்டு பாண்டியனிடம் சென்று

“அரசே! வருக வாருங்கள்! தாங்கள் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி” என கரம் கூப்பினான் இளைய கண்ட கோபாலன்.

அவனோ இளைய கண்ட கோபாலனை ஒருவித பார்வையுடன், “என்ன சோடரே? முதலில் கொங்கு பாண்டியரைச் சென்று வரவேற்றது போல் தெரிகிறது! உங்கள் அருகேயே தொண்டை நாட்டின் மன்னனாக இருப்பதால் நான் முக்கியமற்றவன் ஆகிவிட்டனோ?” என்று முறுவலுடனும் கம்பீரத் தோரணையுடனும் வினவினான் தொண்டை நாட்டுப் பாண்டியன்.

“ஐயகோ அரசே! அப்படி கருத வேண்டாம்! உங்கள் சகோதரர் கொங்கு நாட்டிலிருந்து என் அழைப்பை ஏற்று இத்தனை தூரம் பயணப்பட்டு தொண்டை நாட்டிற்கு வந்துள்ளார்! அவரை வரவேற்று சிறப்பிப்பது தொண்டைநாட்டு பாண்டியரான உங்கள் கடமையும் கூட அல்லவா? ஆதலால்தான் முதலில் அவரை அணுகி வரவேற்றேன்!”

“ம்ம்ம்… இருக்கட்டும்! ஆயிரம் இருப்பினும் சகோதரனாகி விட்டான். இருக்கட்டும்!”

“உள்ளே வாருங்கள்!! இங்கேயே நிற்கிறீர்களே! வாருங்கள்” என இருவரையும் அழைத்துச் சென்றான் சோட மன்னன்.

சோட மன்னனின் குழந்தைக்கு பெயர் சூட்டும் இத்தனை எளிய விழாவிற்கு கொங்குநாட்டு தலைநகர் கரூரில் இருந்து காஞ்சி வரை பயணப்பட்டு வந்து காஞ்சியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இன்று காலை விழாவில் பங்கு கொள்கிறான் கொங்குப் பாண்டியன்.

அவனுக்கு சோட மன்னன் மீது பாசம் ஏதும் இல்லை! தொண்டை நாட்டிற்கு வந்ததெல்லாம் தன் சகோதரன் தொண்டைநாட்டு பாண்டியனுக்கு போட்டியாகத்தான். ஆம்! கொங்கு நாட்டில் ஏதேனும் விழாவென்றால் தொண்டைநாட்டு பாண்டியன் சென்று கலந்துகொண்டு பொன்னும் பொருளும் வாரி வழங்கிவிட்டு திரும்புவான்.

அவனுக்கு விழாவை விட அவன் சகோதரனான கொங்கு பாண்டியனை சபையில் முந்த வேண்டும். தன் வருகையையும் வழங்கிய செல்வத்தையும் பற்றி கொங்குநாடு பேசவேண்டும். இந்தப் போட்டி சில காலங்களாகவே இரு பாண்டிய சகோதரர்களும் நிகழ்ந்து வருகிறது.

முதலில் இது ஆரம்பித்தது என்னவோ ஒரு எளிய விழாவில் தான். ஒற்றுமையாக இருந்த சகோதரர்களை அருகில் இருக்கும் ஒட்டுண்ணிகள் தங்கள் பிழைப்பிற்காக ஏற்றிவிட்டு மனதில் ஆணவத்தை ஊட்டி விட்டனர். ‌ அதுவும் கொங்கு நாட்டுக்கு தொண்டைநாட்டு பாண்டியன் வந்து விழாவை சிறப்பித்து சென்றால்… அவன் அப்படிச் செய்தான் இப்படிச் செய்தான் கொங்குநாடே அவனைப் பற்றி தான் பேசுகிறது! என தூபம் போட வேண்டியது.

தொண்டை நாட்டுக்கு கொங்கு பாண்டியன் வந்து விழாவில் கலந்து கொண்டால் தொண்டை நாட்டுப் பாண்டியனிடம் புரளி பேசுவதுமாக இருவரது உடனிருப்பவர்கள் கலகம் செய்து வந்தார்கள். அதனாலே இரு பாண்டிய சகோதரர்களிடையே மறைமுகமான பனிப்போர் ஒன்று நிகழ்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அன்றும் கொங்குப் பாண்டியன் தன் தமையனுக்கு போட்டியாக தான் இளைய கண்ட கோபாலனின் இல்ல விழாவிற்கு வருகை தந்திருந்தான்‌.

சகோதரன் தொண்டை நாட்டிற்கு வருகை தந்து மாளிகை ஒன்றில் தங்கியிருப்பதை அறிந்தும் அவனைச் சென்று சந்திக்கவில்லை தொண்டை நாட்டு பாண்டியன்.

இவர்கள் இடையில் இருக்கும் இந்த மனக்கசப்பை சுற்றி இருக்கும் சிலர் மட்டுமே அறிந்திருந்தார்கள்.

ஆனால் இருவரும் மூத்த அண்ணன் பேரரசனான மாறவர்மன் குலசேகர பாண்டியன் மீது வைத்திருந்த அச்சம் மற்றும் மரியாதை காரணமாக அமைதி காத்து வந்தார்கள்.

காஞ்சி மாளிகைக்குள் இரண்டு பாண்டிய அரசர்கள் நுழைவதைக் கண்டு வழியில் நின்றிருந்த அனைத்து குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் போன்றவர்கள் வழிகொடுத்து நகர்ந்தனர்.

பாண்டிய மன்னர்கள் முன் செல்லும் ஆபத்துதவிகள் வழி கேட்டு சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த போசள மன்னன் இராமநாதன், சோழ மன்னன் மூன்றாம் இராசேந்திரன் அவனது படைத்தலைவன் வளவன், விமலாதித்தன் மற்றும் சோழ சிற்றரசர்கள் இருவர் ஆகியோர் அப்படியே ஒரு மூலையில் ஒதுக்கப் பட்டார்கள்.

அங்கிருந்த பலரும் பாண்டிய மன்னர்களுக்கு வணக்கம் வைத்து மாலையிட்டு அவர்கள் கருணையை நாடு பெரும் ஆர்வம் காட்டினார்கள்.

அப்படி உதாசீனப்படுத்தப் பட்டதை விரும்பாத போசள மன்னன் இராமநாதன் வெறுப்புடன் மூன்றாம் இராசேந்திரனை பார்த்தான். அவன் அப்பாவியாக நின்றிருந்தான்‌. விமலாதித்தன் வளவனின் காதருகே நெருங்கி

“வளவரே பார்த்தீர்களா! அந்த இருவர் வந்ததும் மற்றவர்கள் நம்மை கண்டு கொள்ளவில்லை. இத்தனை நேரம் நம்மை நலம் விசாரித்து இனிக்க இனிக்க பேசிய பலரும் பாண்டியர்களுக்கு எப்படி வால் பிடித்து ஓடுகிறார்கள் பார்த்தீர்களா?” என்றான்.

வளவனோ கண்களில் தீப்பொறி தெறிக்க அந்தப் பாண்டிய மன்னர்கள் இருவரையும் பார்த்தவண்ணம் இருந்தான்.

விட்டிருந்தால் இருவரையும் அப்போதே வெட்டி வீசியிருப்பான். வளவனது வாள் பாயத் தயாராக இருந்தது. அவன் அப்படி ஒரு கோபத்தில் இருந்தான் பாண்டியர்கள் மீது.

–தங்கமீன் இன்னும் நீந்தும்...

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...