வி.சி.10 – அந்த ஐந்து நொடிகள் | ஆர்னிகா நாசர்

 வி.சி.10 – அந்த ஐந்து நொடிகள் | ஆர்னிகா நாசர்

அந்த ஐம்பது மாடி கட்டடத்தின் மொட்டைமாடியில் பத்து வயது சிறுமி மீயாழ் நுவலியும் அவளது தந்தை காரிமாறனும் அமர்ந்திருந்தனர். இருவரின் கண்களும் இரவு வானத்தை மேய்ந்தன.

“அப்பா!”

“என்னம்மா?”

“இந்த நட்சத்திரங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு ஒரு வித்தியாசமான கற்பனை தோன்றுகிறது!”

“என்ன கற்பனை அம்மா?”

“வானமும் நட்சத்திரங்களும் அழகிய எம்ப்ராய்டரி பூக்கள் வரையப் பட்ட மேகமணமகள் சேலை!”

“பிரமாதமான கற்பனை!”

“அப்பா- நீ குழந்தைகள் இலக்கியம் எழுதும் எழுத்தாளர்தானே? நான் கேட்கும் கேள்விகளுக்கு எளிமையான பதிலை சொல் அப்பா!”

“கேள்!”

“புவிஈர்ப்புவிசை என்றால் என்ன?”

“எடையோ சக்தியோ கிரகங்களோ நட்சத்திரங்களோ பிரபஞ்சங்களோ ஒளியோ ஒன்றுக்கொன்று கவர்ந்து இழுக்கப்படுகிறது. பூமியின் புவிஈர்ப்பு விசை பொருள்களுக்கு எடை தருகிறது. நிலவின் ஈர்ப்புவிசை சமுத்திரங்களில் பேரலைகளை உருவாக்குகிறது. பூமியின் தரை மீது ஈர்ப்புவிசை நொடிக்கு 9.8 மீட்டர். புவிஈர்ப்புவிசை இல்லையென்றால் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சர்வநாசமாகி விடும். பூமியின் புவிஈர்ப்பு விசையும் காற்றுமண்டலமும் நெருங்கிய தொடர்பு கொண்டவை!”

நுவலி தலையாட்டினாள்.

“நம்மை சுற்றி இருக்கும் காற்றில் என்னென்ன வாயுக்கள் கலந்துள்ளன?”

“காற்றில் 78 சதவீதம் நைட்ரஜன் 21சதவீதம் ஆக்ஸிஜன் 0.93சதவீதம் ஆர்கான் 0.04சதவீதம் கார்பன்டைஆக்ஸைடு கலந்துள்ளன. தவிர சொற்ப அளவில் நியான், ஹீலியம், மீதேன், கிரிப்டான் ஓஸோன், ஹைடிரஜன் வாயுக்களும் உள்ளன!”

“சாதாரணமாய் காற்றின் வேகம் என்ன அப்பா?”

“மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகம்!”

“அப்பா! நான் ஒன்று கேட்பேன் நீ என்னை திட்டக்கூடாது!”

“சும்மா கேள்!”

“ஒரு நாள் வானம் திடீரென்று இடிந்து விழுந்துவிட்டால்?”

“வானம் ஒரு மாயதோற்றம். நமது பால்வெளி பிரபஞ்சத்தில் நாம் பயணம் செல்லசொல்ல அது விரிந்துகொண்டே போகும். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு மைக்ரோ புள்ளி… பூமியே மைக்ரோ புள்ளி என்றால் மனிதர்கள் நாமெல்லாம் நானோபுள்ளிகள்!”

“அப்பா! திடீரென்று நம் பூமியின் புவிஈர்ப்புவிசை காணாமல் போய் விட்டால்?”

“நாமெல்லாம் பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஜடப்பொருள் ஆகிவிடுவோம்!”

“நாம் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை சுவாசித்துதானே உயிர் வாழ்கிறோம்!”

“ஆமாம்!”

“எதிர்பாராத ஒரு தினத்தில் காற்றிலுள்ள ஆக்ஸிஜன் தீர்ந்து விட்டால்?”

“பெஸிமிஸ்ட்டிக்காக கேள்விகள் கேட்காதே. காற்றில் ஆக்ஸிஜன் ஒருநாளும் தீராது. இப்போது கூட நான் என்  இருகை நிறைய ஆக்ஸிஜனை அள்ளி உனக்கு தருகிறேன். நீ ஆசை தீர சுவாசி. நீ இரு கை நிறைய ஆக்ஸிஜனை எடுத்து எனக்கு கொடு. நான் ஆசை தீர சுவாசிக்கிறேன்!’‘ சிரித்தான் காரிமாறன்.

“ஆக்ஸிஜன் இல்லாம எவ்வளவுநேரம் இருக்க முடியுதுன்னு பாக்கவா? மூச்சை நிறுத்திக் கொண்டு..1…2…3…. சொல்ல ஆரம்பித்தாள் நுவலி.

இருபதுவரை எண்ணியவள் வாயைத்திறந்து பெரிதுபெரிதாய் சுவாசித்தாள்.

அபபோதுதான் அது நடந்தது!

ராட்சச ஸ்ட்ரா வைத்து எதனையோ யாரோ உறிஞ்சியது போல ‘ஸ்க்கும்!’ என்கிற சப்தம் விஸ்வரூபித்தது.

ஒரு விரல் சொடக்கல்.

கிர்ரக்!

வானத்தில் கருமையான மேகங்கள் சூழ்ந்து நட்சத்திரங்களை மறைத்தன. கருமேகங்கள் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கன்யானைகள் மந்தையாய் குழுமியது போல ஒரு மாயதோற்றத்தை உருவாக்கின.

காற்றில் ஓஸோன் மண்டலம் கரைந்து மறைந்தது சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் பேய்தனமாய் பூமியை தாக்கின.

சூரியவெப்பம் தாங்காது நுவலியின் காரிமாறனின் உள்காதுகள் வெடித்தன. மூக்குவழியாக கண்கள் வழியாக வாய் வழியாக இரத்தம் வழிந்தது.

சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாமல் தந்தையும் மகளும் தடுமாறினர். முதல்நொடி கரைவு.

பூமிக்கு அடியில் இருந்து சல்பூரிக் அமிலத்தில் உயிர்வாழும் நுண்கிருமிகள் கசிந்தன.

வாகனங்களில் எரிபொருள் ஆக்ஸிஜனுடனும் வெப்பத்துடனும் வெளிச்சத்துடனும் ரசாயனகிரியை புரியாமல் உலகெங்கும் வாகனங்கள் அப்படிக்கப்படியே நின்று ஸ்தம்பித்தன.

சகலபோக்குவரத்தும் உறைந்தன. இரண்டாம் நொடி ஆக்ஸிஜன் இல்லாத பூமி.

 உலகம் முழுவதும் இருக்கும் கான்கிரீட் கட்டடங்கள் பொடி பொடியாய் உதிர்ந்து தரைமட்டம் ஆகின.

முப்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான விமானங்கள் தரையில் வீழ்ந்து வெடித்து சிதறின.

உலகபரப்பளவில் முக்கால் பாகத்தை வியாபித்திருந்த நீரின் ஆக்ஸிஜன் மூலக்கூறு காணாமல் போய் ஹைடிரஜன் மூலக்கூறுகள் தனியே பிரிந்தன.

மூன்றாவது நொடியில் பூமியின் தண்ணீர் இல்லை.

மீயாழ் நுவலியின் காரிமாறனின் உடல் ஸெல்கள் வெடித்து சிதறின. தந்தையும் மகளும் சுடச்சுட மரணமடைந்தனர்.

பூமி எங்கும் கோடிக்கணக்கான மனிதர்களும் மிருகங்களும் பறவைகளும் நீந்துவனவும் இறந்து போயின.

நான்காவது நொடியில் சமுத்திரங்கள் காற்றில் மறைந்தன. பூமியின் மேலடுக்கு தரை நெகிழ்ந்து மெஹாபள்ளங்கள் பூத்தன.

வெல்டிங் செய்யப்பட்ட உலோகங்கள் தெறித்து விழுந்தன.

ஐந்தாவது நொடி நிறைவில் முப்பது உலகப்போர்கள் ஒரே சமயத்தில் என்ன பேரழிவை ஏற்படுத்துமோ அந்த பேரழிவுகள் பூமி முழுக்க ஊழிதாண்டவமாடின.

உறிஞ்சியதை யாரோ மீண்டும் துப்பியது போலொரு சப்தம் மிகைத்தது.

மீண்டும் பூமியின் காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் தோன்றி 21சதவீதம் நிறைந்தது. ஹைடிரஜன் மூலக்கூறுகளும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளும் இணைந்து தண்ணீர் பெருக்கெடுத்தோடியது. கிருமிகள் பூமிக்குள் புகுந்து மறைந்தன.

ஓஸோன் மண்டலம் தோன்றி சூரியவெப்பத்தை வடிகட்டியது.

ஆக்ஸிஜன் இல்லாத ஐந்தே நொடிகளில் கீழ்க்கண்ட பேரிழப்புகள் நிகழ்ந்திருந்தன.

  • 900கோடி மக்கள் மரணம்.
  • லட்சக்கணக்கான விமானங்கள் நொறுங்கியிருந்தன.
  • ஜில்லியன் ஜீவராசிகள் செத்து வீழ்ந்திருந்தன.
  • ட்ரில்லியன் கட்டடங்கள் அப்பளமாய் நொறுங்கியிருந்தன.

எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள். உயிரோடு இருக்கும் மருத்துவர்கள் உயிரோடு இருக்கும் மனிதர்களுக்கு முதலுதவி செய்தனர்.

“சபாஷ்!” எக்காளத்துடன் கூடிய கைத்தட்டல் அந்த பாதுகாக்கப்பட்ட பாசறைக்குள் எதிரொலித்தது.

உடன் இருந்தோர் கைதட்டினர்.

பூமி அதிபர் ஆரவாரமாக  பேச ஆரம்பித்தார். “பூமியின் ஜனத்தொகை ஆயிரம்கோடியை தாண்டிருச்சு. மக்கள்தொகையை கட்டுபடுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியாக பூமியில் ஐந்து நொடி ஆக்ஸிஜன் இல்லாமல் போக வைத்தேன். இந்த ஆராய்ச்சியில் முப்பது வருடமாக ஈடுபட்ட ஒரு விஞ்ஞானியின் கருவி வைத்து பூமியின் ஆக்ஸிஜனை உறிஞ்சினேன். 800லிருந்து 900கோடி மக்கள் இறந்திருப்பர். கூடவே வாகனங்களும் விமானங்களும் கட்டடங்களும் சேதாரம். பரவாயில்லை. சமாளித்துக் கொள்வேன். ஐந்துநொடி ஆக்ஸிஜன் மாயத்திலிருந்து தப்பிக்க நானும் என் குடும்பமும் ஒருசில நலவிரும்பிகளும் பாதுகாக்கப்பட்ட பாசறைக்குள் பதுங்கினோம். இப்போது ஆக்ஸிஜன் மீண்டும் திரும்பி விட்டது!”

விஞ்ஞானி தலையில் அடித்துக்கொண்டு கதறினார். “என்னுடைய ஆராய்ச்சியை வைத்து 900கோடி மக்களை கொன்று விட்டாயே… இந்த பாவத்தை எங்கே போய் கழுவுவேன்?”

“இது ஆரம்பம்தான். உலகமக்கள் ஜனத்தொகையை அம்பதுகோடி ஆக்க விரும்புகிறேன். அதனால் தேவைப்படும் போதெல்லாம் உன் கருவியை உபயோகித்து அஞ்சு நொடி ஆக்ஸிஜன் இல்லாத பூமியை உருவாக்கி மனிதர்களை கொல்லுவேன்!”

விஞ்ஞானி கையில் லேஸர்துப்பாக்கி பூத்தது.

“சண்டாளப்பாவி! இனி நீ இருந்தாதானே அஞ்சுநொடி ஆக்ஸிஜன் இல்லாத பூமியை உருவாக்குவாய்?” பூமி அதிபரை சுட்டுபொத்தல் பொத்தலாகினார் விஞ்ஞானி.

அத்துடன் நில்லாது ஆக்ஸிஜனை உறிஞ்சும் கருவியை அடித்து நொறுக்கினார்.

“ஆராய்ச்சி செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்க ஒரு அழிவுக்கு உதவும் ஆயுதத்தை கண்டு பிடித்து மனிதகுலத்தை 90சதவீதம் அழிக்க உதவி விட்டேனே… நான் ஒரு பாவி!” தன்னைத்தானே  சுட்டுக்கொண்டு தொமீரினார் விஞ்ஞானி.

-காற்றில் மிதந்தபடி மீயாழ் நுவலி தன் தந்தை காரிமாறனிடம் வினவினாள். “அப்பா! இந்த விஞ்ஞானி ஒரு ட்யூப்லைட்!”

“ஏன்ம்மா?”

“இந்த ஆக்ஸிஜன் உறிஞ்சும் கருவியை பூமிஅதிபர் பயன் படுத்துவதற்கு முன்னாடியே இந்த கருவியை அடித்து நொறுக்கி ஆராய்ச்சி குறிப்புகளை சாம்பலாக்கியிருக்கலாமே இந்த விஞ்ஞானி?”

“ஆமாம்மா. நீயும் செத்திருக்கமாட்ட நானும் செத்திருக்க மாட்டேன். நீ விஞ்ஞான கேள்விகள் கேட்க நான் விஞ்ஞான பதில்கள் கூற நம் வாழ்க்கை அர்த்தப்பூர்வமாய் தொடர்ந்திருக்கும்!” நெட்டுயிர்த்தான் காரிமாறன்.

கமலகண்ணன்

1 Comment

  • மிகவும் அருமையான கற்பனை. நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரழிவு. காட்சிகள் மிரள வைத்தது. உண்மையில் ஆக்ஸிஜனை உறிஞ்ச முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...