ஜெயகாந்தன் எனும் படைப்பாளுமை

 ஜெயகாந்தன் எனும் படைப்பாளுமை

பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போதே மூவர்ணக் கொடி பிடித்து, பாரதி யாரின் தேசிய எழுச்சிமிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர். பதினான்காவது வயதிலேயே சொந்த ஊரை விட்டுச் சென் னைக்கு வந்தார். சிறுவனாக இருக்கும்போதே கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்ததனால் மார்க்சியச் சித்தாந்தக் கருத்தோட்டம் உடையவராக வளர்ந்தார் அவர்தான் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதை உலகில், இன்றுள்ள காலகட்டத்தை ஜெயகாந்தனின் காலம் என்று குறிப்பிடும் அளவிற்கு ஜெயகாந்தன் கதைகள் இலக்கியத் தரமும், ஜனரஞ்சகமும் உடையனவாகத் திகழ்கின்றன என்பதற்கு அவர் வாழ்க்கை முறை ஒரு காரணம்.

இளம்வயது ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் தென்னார்க்காடு மாவட்டம் கடலூரில் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் பிறந்தார். ஜெயகாந்தனின் தந்தை பெயர் தண்டபாணிப் பிள்ளை, தாயார் மகாலெட்சுமி அம்மாள். ஜெயகாந்தன் பள்ளி சென்று கல்வி பயின்றவர் அல்லர். பி.சி.லிங்கம் என்ற புலவரிடம் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டார். பின்பு, தமிழ்ப் புலவர் க.சொக்கலிங்கத்திடம் முறையாகப் பாடம் கேட்டுத் தம் மொழியறிவை வளர்த்துக் கொண்டார். கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் கதைகள் எழுதும் மன்னார்குடி நாராயணசாமி என்ற வைதீக பிராமணரிடம் பழகிப் பிராமண மொழியைக் கையாளுவதில் வல்லமை பெற்றார்.

ஜெயகாந்தன் எழுதிய முதல் சிறுகதை சௌபாக்கியம் என்ற இதழில், 1950இல் வெளிவந்தது. அது ‘மாதர் நல இலாக்கா’ நடத்திய பத்திரிகை ஆகும். பின்பு தொடர்ந்து வசந்தம் என்ற இதழிலும், விந்தன் நடத்திய மனிதன் இதழிலும், இஸ்மத் பாஷா ஆசிரியராக இருந்த சமரன் என்ற இதழிலும், மாஜினி நடத்திய தமிழன் இதழிலும், பின்னர் விஜய பாஸ்கரன் நடத்திய சரஸ்வதி இதழிலும் தொடர்ந்து எழுதினார். சரஸ்வதி இதழில் எழுதும் பொழுதுதான் இவர் எழுத்தாற்றல் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. அதன் பின்னர் வெகுஜன இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி என்பவற்றில் எழுதத் தொடங்கினார்.

ஜெயகாந்தன் தொடக்கக் காலத்தில் சிறுகதை படைப்பதிலேயே மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்திருக்கிறார். 1958ஆம் ஆண்டு, ஒருபிடி சோறு என்ற அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி வெளியானது. விந்தனின் தமிழ்ப்பண்ணை பதிப்பகம் அதை வெளியிட்டது. தி.ஜ.ரா. அத்தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியுள்ளார். அத்தொகுதிக்குக் கண்ணதாசன் கவிதையில் புகழாரம் சூட்டியுள்ளார். சிறுகதை மன்னன் என்று சுட்டும் அளவிற்கு, சிறுகதைப் படைப்புகளில் தன் திறமையை வெளிக்காட்டிக் கொண்டுள்ளார் ஜெயகாந்தன். காலம் செல்லச் செல்ல ஜெயகாந்தன் சிறுகதை எழுது வதைக் குறைத்துக் கொண்டு நாவல் மற்றும் குறுநாவல் படைப்பில் ஆர்வம் காட்டலானார்.

ஜெயகாந்தன் சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற இலக்கிய வடிவங்களைப் படைத்ததுடன் நின்றுவிடாமல், சுவை ததும்பும் கட்டுரைகளையும், ஆழ மான அறிவுபூர்வமான கட்டுரைகளையும் படைத்துள்ளார். அவற்றில் சுய தரிசன, சுயவிமரிசனக் கட்டுரைகளும் உண்டு. மேலும் அரசியல், சமூகம், கலை இலக்கியம் மற்றும் பத்திரிகை அனுபவம் என்று கட்டுரைகளின் பொருள் விரிந்து பரந்ததாக அமைந்துள்ளது. ஜெயகாந்தன் சில ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார். திரைப்படக் கதாசிரியராகவும், பாட லாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராக வும் சிறந்துள்ளார்.

ஜெயகாந்தன் சிறந்த மொழி பெயர்ப்புப் பணிகளையும் செய்துள்ளார். ராமன் ரோலண்ட் எழுதிய நூலை மகாத்மா என்ற பெயரிலும், புஷ்கின் எழுதிய நூலைக் கேப்டன் மகள் என்ற பெயரிலும் தமிழில் மொழியாக்கம் செய் துள்ளார். அவருடைய சிறுகதைகள் மற்றும் நாவல்கள் அனைத்திந்திய மொழிகளிலும், உலக மொழிகள் பலவற்றிலும் குறிப்பாக ஆங்கிலத்திலும், உக்ரைன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜெயகாந்தன் தம் சிறுகதைத் தொகுப்புகளுக்கும் நாவலுக்கும் எழுதிய முன்னுரைகள் விமர் சனப் பார்வையில் அமைந்து சிறந்தன. அவை அனைத்தும் ஜெயகாந்தன் முன்னுரைகள் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டு 1978இல் வெளி வந்தன.

ஜெயபேரிகை என்ற நாளிதழிலும், ஞானரதம், கல்பனா என்ற இலக்கிய இதழ்களிலும் இறுதியாக நவசக்தி நாளிதழிலும் ஆசிரியராகப் பணி யாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள், ஒரு பிரஜையின் குரல், யோசிக்கும் வேளையில் என்பன இவருடைய கட்டுரை நூல்களுள் சில வாகும்.

1964இல் ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் இந்திய ஜனாதிபதியின் விருதினைப் பெற்றது. 1972ஆம் ஆண்டு சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் சாகித்திய அக்காதெமி விருதினைப் பெற்றது. 1978இல் அது திரைப்படமாக வெளிவந்தபோது சிறந்த திரைக்கதைக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றது. அதே ஆண்டு அவரது இமயத்துக்கு அப்பால் என்ற நாவல் சோவியத் நாடு நேரு விருது பெற்றது.

1979ஆம் ஆண்டு கருணை உள்ளம் என்ற திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த கதைக்கான தமிழ்நாடு அரசு விருதினைப் பெற்றது. 1986இல் ஜெய ஜெய சங்கர நாவலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கான விருதும், சுந்தரகாண்டம் நாவலுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தின் ராஜராஜ சோழன் விருதும் கிடைத்தன. 2005ஆம் ஆண்டில் இந்திய இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதும் பெற் றுள்ளார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...