கோமேதகக் கோட்டை | 1 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
நெடுங்காலத்துக்கு முன்னாடி வில்லவபுரம் என்ற நாட்டை விஜயேந்திரன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மகன்கள் இல்லை. ஓர் அழகிய மகள் மட்டும் உண்டு. அந்த மகளை மகன்களுக்கு ஈடா வளர்க்க முடிவு செஞ்சாரு ராஜா. அதனாலே ஒரு சிறந்த ஆசிரியரை நியமிச்சு இளவரசிக்குக் கல்வியையும் போர்க்கலைகளையும் போதிக்க ஏற்பாடு செய்ய நினைச்சாரு.
அந்த நாட்டின் எல்லையோரம் இருந்த காட்டுக்குள்ளே துரோணா என்ற ஓர் ஆசிரியர் ஒரு குருகுலம் அமைச்சு பாடங்களைக் கத்து தந்துக்கிட்டு இருந்தாரு. அவரைக் கூப்பிட்டு அரண்மனைக்கு வந்து இளவரசிக்குப் பாடங்களை சொல்லித் தரும்படி ராஜா கேட்டாரு. ஆனா குரு துரோணா, அரண்மனைக்கு வந்து கத்துத்தர முடியாது. வேண்டுமானால் இளவரசி வந்து குருகுலத்தில் தங்கிப் படிக்கட்டும்னு சொல்லிட்டாரு.
ராஜாவுக்கு என்ன செய்யறதுன்னு புரியலை. அப்ப இளவரசி, தான் குருகுலத்தில் சென்று பயில்கிறேன்னு சொல்லி குருகுலத்துக்குக் கிளம்பிட்டாங்க. ஆனாலும் ராஜாவுக்கு ஒரு பயம். இளவரசி பிறந்தப்போ அவளோட ஜாதகத்தைக் கணிச்ச சோதிடர்கள் அவளோட பதினைந்தாவது வயதிலே ஒரு கண்டம் இருக்குன்னு சொல்லியிருந்தாங்க.
அதனாலே குருவோட அனுப்ப அவருக்கு விருப்பம் இல்லை. இளவரசிக்கு அங்கே ஏதாவது ஆபத்து வந்துட்டா என்ன பண்றதுன்னு அவர் கவலைப்பட்டாரு. இதை துரோணா கிட்ட சொல்லவும், அவரும் “மன்னா! கவலைப்படாதீங்க! இளவரசிக்கு ஒரு ஆபத்தும் வராமே நான் பார்த்துக்கிறேன்! கல்வி வீட்டில் இருந்து படிப்பதைவிட குருகுலத்தில் பயில்வதே சிறப்பு!” அப்படின்னு சொல்லி சமாதானம் பண்ணிட்டு இளவரசியை குருகுலத்துக்குக் கூட்டிக்கிட்டு போயிட்டாரு.
அப்போ இளவரசிக்கு பன்னிரண்டு வயசு இருக்கும்! ஐந்துவருடம் படிக்கணும். இளவரசியும் குருகுலத்தில் குருவிடம் பணிவாக நடந்துகொண்டு கல்வியும் போர்ப் பயிற்சிகளையும் கத்துக்கிட்டு வந்தாங்க. இளவரசிக்கு பதினைந்தாவது வயசு தொடங்கிடுச்சு. எல்லோரும் கவனமா இளவரசியை பார்த்துக்கிட்டாங்க.
ஒருநாள் காட்டுல மத்த மாணவர்களோட சேர்ந்து விறகு சேகரிக்கப் போனாங்க. நடுக்காட்டில் அவர்கள் விறகுகளையும் சில மூலிகைச்செடிகளையும் பறித்துக் கொண்டிருக்கும் போது அங்கே ஒரு ராட்சதன் வந்தான்.
அவனுக்கு மூன்று கண்கள். கைகள் எல்லாம் யானையோட கால்கள் போல அவ்வளோ பெரிசா இருந்துச்சு. அவன் ஒரு அடி எடுத்து வைக்கும்போது அப்படியே பூமியே அதிர்ந்துச்சு. இப்ப ஜே.சி.பி இயந்திரம் ஒண்ணு வந்து அப்படியே மரங்களைச் சாய்க்கிறா மாதிரி அவன் தன்னோட கைகளாலே இடைப்பட்ட மரங்களை எல்லாம் பிடுங்கிப் போட்டுக்கிட்டே வரான்.
ராட்சதன் தூர வரப்பவே மாணவர்கள் எல்லாம் பயந்து நடுங்கி அங்கே இருந்த ஒரு மரப்புதர் மறைவிலே ஒளிஞ்சுகிட்டாங்க. ஆனாலும் அவங்களை ராட்சசன் பார்த்துட்டான். அப்படியே ஒரே எட்டில் நெருங்கி ஒரு பையனைப் பிடிச்சு முழுங்கப் பார்த்தான்.
அப்போ ராஜகுமாரி, சற்று துணிச்சலை வரவழைத்துக் கொண்டு முன்னே வந்து, “நிறுத்து!”ன்னு குரல் கொடுத்தாள். ராட்சசன் திரும்பி பார்த்தான். ”பொடிப் பொண்ணே! எனக்குப் பசிக்கிறது! இவர்களைச் சாப்பிடப் போகிறேன்! ஏன்… உன்னையும் தான்!” என்றான்.
“நீ என்னை சாப்பிடுவதைப் பற்றிக் கவலை இல்லை! ஆனால் இவர்களை ஒன்றும் செய்து விடாதே!” என்றாள் ராஜகுமாரி.
“அவ்வளவு பரோபகாரமா? இவர்களைக் கொன்று தின்றால் உனக்கென்ன? எனக்கு பசி அதிகமாயிருக்கிறது! என் வழியில் குறுக்கிடாதே!” என்று கோபமாய்ச் சொன்னான் ராட்சதன்.
“ஏய் ராட்சதனே… நான் சொல்வதைக் கேள்! இவர்கள் எல்லாம் என் நண்பர்கள்! அவர்களைவிட்டுவிடு!”ன்னு சொன்னா ராஜகுமாரி.
”அப்படின்னா என் பசிக்கு என்ன கொடுப்பே?”
“அதற்கு நான் வழி சொல்கிறேன்!:”
”எனக்குத் தெரியாத வழியா? அப்படி என்ன வழியை நீ கற்றுக் கொடுக்கப் போகிறாய்? சின்னப் பெண் நீ! எப்படி என் பசி தீர்க்க வழி சொல்லப் போகிறாய்?”
”நீ உன்னுடைய இன்றைய பசியை மட்டும் தீர்க்க நினைக்கிறாய்? நான் உன் ஆயுள் முழுதும் பசி தீர்க்க வழி சொல்கிறேன்!”
ராட்சதனின் கண்களில் ஆச்சர்யம் மின்னலிட்டது. “அப்படியா? என்ன வழி அது?” என்று கேட்டான்.
“முதலில் என் நண்பனை கீழே இறக்கிவிடு! அப்புறம் சொல்கிறேன்.”
ராட்சதன் தான் பிடித்த சிறுவனை கீழே இறக்கிவிட்டான். இப்போது ராஜகுமாரி பேச ஆரம்பித்தாள்.
”நான் இந்த நாட்டின் ராஜகுமாரி. என்னை பிடிச்சுக்கோ! இவங்களை விட்டுவிடு! என்னை விடுவிக்க என்னோட அப்பாக்கிட்ட நீ என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக்க! உனக்கு தினமும் எவ்வளவு உணவு வேண்டுமானாலும் ராஜாவான என் அப்பா தருவார். உன் வாழ்நாள் முழுக்க எந்த சிரமும் இன்றி உன் இட்த்திற்கே உணவு தேடிவரும்! இவங்களை விட்டுவிடு! என்னைப் பிடிச்சிக்கோ!” என்று சொன்னாள் ராஜகுமாரி.
“அப்படியா? உன் அப்பாரு இந்த நாட்டு ராஜாவா? நல்லதாப் போச்சு! உன்னையே பிடிச்சுக்கிட்டு போறேன்! இவங்களை விட்டுடறேன்! டேய் பசங்களா! இவளை நான் கோமேதகக் கோட்டையிலே சிறைவைக்கப் போறேன்! இவ திரும்பவும் அரண்மணைக்கு வரணும்னா ராஜா எனக்கு தினம் தினம் வயிறாரா சாப்பாடு போடணும். என்னோட பசி அடங்கின அப்புறம்தான் இவளை விடுவேன்! போங்க! உங்க ராஜாகிட்டே சொல்லுங்க!” அப்படின்னு சொல்லிட்டு அந்த ராட்சசன் இளவரசியைத் தூக்கிக்கிட்டு பறந்துட்டான்.
“வேண்டாம்! வேண்டாம் அவங்களை விட்டுடு!” என்று அந்த மாணவர்கள் கூச்சலிட்ட குரல் இளவரசியின் காதில் மெதுவாகவே விழுந்தது. ஏனெனில் ராட்சதன் அவ்வளவு உயரத்தில் இளவரசியைத் தூக்கிக் கொண்டு வேகமாக பறந்து கொண்டிருந்தான்.
வழியில் குறுக்கிட்ட மேகக் கூட்டங்கள் ராட்சதன் இளவரசியைத் தூக்கிச்செல்வதைப் பார்த்து கண்ணீர் விட்டன. “மேகக் கூட்டங்களே! அழாதீர்கள்! நண்பர்களுக்காகவே நான் ராட்சதனுடன் செல்கிறேன்! என் தந்தையிடம் போய் சொல்லுங்கள்.” என்று இளவரசி, மேகங்களிடம் கூறினாள்.
அந்த இடத்தில் ஒரு பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. மாணவர்கள் சுயநிலைக்கு வர சற்று நேரம் ஆனது. பின்னர் சுதாரித்துக் கொண்ட மாணவர்கள் அனைவரும் பயந்து ஓடிப்போய் குரு துரோணாகிட்ட நடந்ததைச் சொன்னாங்க.
துரோணாவுக்கு ரொம்பவும் சங்கடமாப் போயிருச்சு! ராஜாவோட பொண்ணை பத்திரமா பாத்துக்கறோமுன்னு சொல்லி கூட்டியாந்தோம்! இப்ப இப்படி ஆயிருச்சே! இது ராஜாவுக்குத் தெரிஞ்சா கோபப்படுவாரேன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்புறம் அவர் மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டாரு!
“மாணவர்களே அந்த ராட்சதன் எப்படி இருந்தான்?”
“குருவே அந்த ராட்சதன் பெரிய மலை போன்ற உடலைக் கொண்டிருந்தான். அவன் தலை பெரிய ஆட்டுக்கல் போல இருந்தது. அவனுக்கு மூன்று கண்கள் இருந்தன. கால்கள் இரண்டும் பெரிய தென்னை மரங்கள் அளவுக்கு இருந்தன. கைகள் பெரிய உலக்கை போல இருந்தன. அவன் சிரிக்கும் போது இடி இடிக்கும் போது கேட்கும் ஓசைபோல மிகப் பயங்கரமாக இருந்தது.”
”அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?”
”குருவே, அவன் கிழக்குத் திசை நோக்கிப் பறந்து சென்றான்”
”அவன் இளவரசியை எங்கே கொண்டு செல்வதாகச் சொன்னான்?”
”கோமேதகக் கோட்டைக்குக் கொண்டு செல்வதாக சொன்னான் குருவே!”
”என்ன சொல்கிறீர்கள்? கோமேதகக் கோட்டையா?”
“ஆம் குருவே!”
”அப்படியானால் அவனிடமிருந்து இளவரசியை மீட்பது அவ்வளவு சுலபமில்லை!”
”ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் குருவே?”
”கோமேதக கோட்டை என்பது எங்கே இருக்கிறது தெரியுமா?”
”தெரியாது குருவே!”
”நாமிருக்கும் திசையில் முன்னூறு காத தொலைவில் கிழக்கே ஒரு சமுத்திரம் ஓடுகிறது. அந்த சமுத்திரத்தின் நடுமையத்தில் ஒரு பெரிய மலை அமைந்திருக்கிறது. அந்த மலையின் உச்சியில் கோமேதகக் கோட்டை அமைந்துள்ளது. அந்தக் கோட்டையை நெருங்குவது அத்தனை சுலபமில்லை!”
மாணவர்கள் வாயடைத்துப் போய் நின்றார்கள்.
.
எப்படி இளவரசியை மீட்பது ராஜாவுக்கு என்ன பதில் சொல்லுவது? என்று நெடு நேரம் யோசித்தும் அவருக்கு ஒன்றும் யோசனை அகப்படவில்லை..!
15 Comments
முதல் பகுதி அருமையாக வந்துள்ளது! ஓவியம் மிகச்சிறப்பு! வாழ்த்துகள்!
மிக்க நன்றி!
கோமேதகக்கோட்டையின் முதல் அத்தியாயமே விறுவிறுப்பாகவும் சஸ்பென்ஸ்ஸாகவும் அமைந்துள்ளது.
சிறுவயதில் அம்புலிமாமா படித்த ‘வேவ் லெந்த்’க்குள் வாசகர்களை அழைத்துச் சென்றுவிட்டார் ஆசிரியர்.
‘இப்ப ஜே.சி.பி இயந்திரம் ஒண்ணு வந்து அப்படியே மரங்களைச் சாய்க்கிறா மாதிரி அவன் தன்னோட கைகளாலே இடைப்பட்ட மரங்களை எல்லாம் பிடுங்கிப் போட்டுக்கிட்டே வரான்.’ என்பது மிகவும் ரசிக்கத்தக்க ஒன்றாக இருந்தது.
இப்படி புதுமையாய படிமங்களோடு பழமையை கலக்கும் உத்தி சிறப்பினும் சிறப்பு.
இந்த உத்தியை அடுத்தடுத்த அத்தியாயங்களில் நிறைய பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.
ஓவியம் கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது.
கதாசிரியர் நத்தம் சுரேஷ்பாபு அவர்களுக்கும் கதைக்குப் பொருத்தமான ஓவியம் வரைந்த ஓவியருக்கும்…
மனமார்ந்த பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
மிகவும் அருமை அடுத்த பகுதியை படிக்க. ஆவலாய் உள்ளேன் வாழ்த்துக்கள்
மிகவும் விரிவான விமர்சனம் படித்து மகிழ்ந்தேன்! அடுத்த அத்தியாயங்களை இன்னும் மெருகு படுத்தி எழுத உந்துதலாக அமைந்த விமர்சனம்! அன்பு நன்றிகள்!
மிகவும்தெளிவான விமர்சனம்!அடுத்த அத்தியாயங்களை இன்னும் மெருகு படுத்தி செம்மையாக எழுத உந்துதலாக அமைந்த விமர்சனம்! அன்பு நன்றிகள்!
ராட்சஷனிடம் இளவரசி வலிய சென்று மாட்டிக் கொண்டாள்.
அந்த இளவரசியை மீட்க எவன் வருவான்?
எப்போது வருவான்?
எப்படி மீட்பான் என்று ஆர்வமாய் படிக்கையில் ‘தொடரும்’ போட்டு ஆர்வத்தை தூண்டி விட்டார் கதாசிரியர் நத்தம் சுரேஷ்பாபு!
கதைக்குப் பொருத்தமாக படம் வரைந்த ஓவியர் மாருதி அவர்களுக்கு நன்றி!
சிறு வயதில் படித்த பவளமலை ரகசியம் நினைவில்..
மிக்க நன்றி!
நல்ல தொடக்கம் வாழ்த்துகள்
அன்பு நன்றிகள்!
சிறுவர் முதல் பெரியோர்களும் படிக்க சிறந்த தொடர்…💐💐💐
மிக்க நன்றி!
மிகவும் அருமை. என்னை இளம் பிராயத்துக்கு அழைத்துச் சென்ற கதை. அம்புலி மாமா பத்திரிகை இல்லாத குறையை ஆசிரியர் போக்கி விட்டார்.
வளர்மதி ஆசைத்தம்பி
அம்புலிமாமா, ரத்னபாலா, பூந்தளிர், கோகுலம் படித்து வளர்ந்த சிறுவன் பெரியவனாகி எழுதும் கதைதான் இது! மிக்க நன்றி!