கால், அரை, முக்கால், முழுசு! | 1 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு! | 1 | காலச்சக்கரம் நரசிம்மா

1. கூவத்தில் கலந்த நதிகள்

திருவரங்கம், — காவிரி கரை

டைட் ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து, ஹை ஹீல் ஷூஸ் மாட்டி, லிப்ஸ்டிக், ரூஜ், மஸ்காரா என்று நவநாகரீக அலங்காரங்களுடன், கேட் வாக் நடை போட்டுச் செல்லும் ஒரு அழகிய பெண், கூந்தலை மட்டும் ராக்கொடி, குஞ்சலம், வைத்து பின்னி, ராக்கொடியை சுற்றி கனாகம்பரம் பூவை முழம் முழமாகச் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது, காவிரி அம்மா மண்டபத்தின் அருகே இருந்த அந்த வீடு.

வாசலில் ஹ்யுண்டாய் அல்கசார் கார், நுழைவாயிலில், பளிங்குக் கற்கள், தேக்குமரக் கதவுகள், டைல்ஸ், ஏசி பெட்டிகள், டிஷ் ஆண்டனா என்று தற்கால வசதிகளை ஏற்றுக் கொண்டிருந்தாலும், கூரையில் ஹைதர் காலத்து ஓடுகள் இளித்துக் கொண்டிருந்தன. வீடும் திட்டமிட்டுக் கட்டப்படாமல், ஒரே நீளமாக மெட்ரோ ரயில் பாதையைப் போல நீண்டு செல்ல, ஆங்காங்கே ஸ்டேஷன் வருவது போன்று அங்கும் இங்கும் அறைகள் தென்பட்டன. .

இந்த வீட்டிற்கும் எனக்கும் தொடர்பில்லை என்பது போல, வீட்டின் முன்புறத்தில் மட்டும் உச்சியில் ஒரு சிறிய மொட்டை மாடி. அதில் பால்ஸ் சீலிங், ஏசி பெட்டி, இண்டீரியர் டெகரேஷனுடன் ஒரு அறை காணப்பட்டது.

அறையின் உள்புறம் தாழ் நீக்கப்படும் சத்தம் கேட்க, அறையில் இருந்து ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்த கார்த்திக் வாசுதேவன் வெளியே வந்தான். ஏசி ரூமில் இருந்து வெளிவந்த கார்த்திக், அகன்ற காவிரிக்கு இணையாக விரிந்திருந்த தனது மார்பைக் காட்டியபடி, சோம்பல் முறிக்க, அகண்ட காவிரியின் சிலுசிலு காற்று, ஏற்கெனவே ஏசிக் காற்றால், குளிர்ந்திருந்த அவனது பிடரியில் ஒருவித சிலிர்ப்பினை உண்டாக்கி, அதனால் ஏற்பட்ட நடுக்கம், முதுகெலும்பின் வழியாக இறங்கி தேகம் எங்கும் பரவியது.

வாழ்வில் ஓர் திருநாள் – என்று தியாகராஜ பாகவதர் குதிரையில் பாடியபடி செல்வது போல, அவன் மனம் ஏற்கனவே அல்கசார் காரில் சென்னையை நோக்கிச் சிறகடிக்கத் தொடங்கியிருந்தது.

அகில இந்தியா முழுவதும் கொடிகட்டிப் பறக்கும் டிரினிட்டி இந்தியா டிவியின் தமிழக ஆபரேஷன்ஸின் நிர்வாகத் தயாரிப்பாளராக இவன் நியமிக்கப்பட்டு இதோ, பதவி ஏற்றுக் கொள்ள இன்று சென்னைக்கு புறப்பட உள்ளான்.

ஒருமுறை, மொட்டை மாடியின் கைப்பிடிப் சுவரைப் பற்றியபடி கீழே பார்த்தான். அவன் அப்படி கைப்பிடிச் சுவரை இறுகப் பற்றிய போது… சட்டை அணியாத அவனது மார்பு, புஜம் மற்றும் தோள்கள் தங்களது தசை பலத்தைக் காட்டி அவனது கம்பீரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்த, பக்கத்து வீட்டு பங்கஜவல்லி அவசரமாக அவனது பார்வையில் படும்படி வந்து நின்றாள்.

‘’டோன்ட் பாதர் பங்கஜா! என் லைஃப்ல வல்லி, லோசினி எல்லாம் கிடையாது. ஐஸ்வர்யா ராய் லெவல்தான்..!’’ –தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே, மொட்டை மாடியில் இருந்து கீழே தெருவில் நின்றிருந்த, முன்தினம் தான் டெலிவரி ஆகி, பிங்க் ரிப்பன் கட்டப்பட்டிருந்த, தன்னுடைய நீலற ஹ்யுண்டாய் அல்கசார் காரை பெருமையுடன் நோக்கினான்.

அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கையிலிருந்து கோடீஸ்வரப் பட்டியலில் அவனை கொண்டு சேர்ப்பதற்காகத் தயாராக நின்று கொண்டிருந்தது, அந்தக் கார். சென்னையில் புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகும் உத்வேகத்தில், சுறுசுறுப்புடன் மொட்டை மாடியில் இருந்து இறங்கினான்.

ஹாலில் தி ஹிண்டு பேப்பர் விரிக்கப்பட்டு, கசங்கி கிடந்தது.

”அம்மா..! எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நான் பேப்பர் படிக்கிறதுக்கு முன்னாடி யாரும் தொடக் கூடாதுன்னு..!” –கார்த்திக் அலறினான்.

“எதுவும் முதலில் எனக்கு..! அதிலும் சிறந்தவை எனக்கு..!” — என்று சிறு வயதில் இருந்தே அவனுள் பிடிவாதம் வளர்ந்துவிட்டிருந்தது . அவனுக்கு மட்டும் ஸ்பெஷலாக- வீட்டு வாசலில் கறக்கப்படும் பசும்பாலில் தான் காபி..!

அம்மா விஜயா பதில் சொல்வதற்குள், பாட்டி ருக்மணி முந்திக் கொண்டாள்.

”நான் பேப்பர் படிக்க எடுக்கலேடா..! ஒரே ஒரு பக்கத்தை மட்டும் மாவு சலிக்க எடுத்துண்டேன்…!” –ருக்குப் பாட்டி சொல்ல, பற்றிக்கொண்டு வந்தது கார்த்திக்கிற்கு.

”உன்னாலதான் எல்லா பத்திரிக்கைகளும் ஆன்லைனுக்கு மாறிக்கிட்டு இருக்கான்..!” –கார்த்திக் சொல்ல, வாசலில் ஒரு அலறல்..!

எதிர்வீட்டு, ஹேமா மாமி கவலையுடன் பாட்டியை அழைத்தாள்..! கூடவே பக்கத்து வீட்டு பங்கஜத்தின் தங்கை ரஞ்சனி

”பாட்டி..! காலையில் வாக்கிங் கிங் போன என்னோட அகத்துக்காரர் இன்னும் வரல. மணி எட்டாகுது..! நீங்க பார்த்தேளா..?”

ஹேமா கவலையுடன் கூற, பாட்டி அவளை அலட்சியமாக நோக்கினாள்!

”’நானும் ரொம்ப நாளாச் சொல்லணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். உன் புருஷன் எதுக்கு அறுபது வயசுல அரை நிஜார் போட்டுக்கிட்டு வாக்கிங் போகிறார் ? யாராவது பிள்ளை பிடிக்கிறவன் சின்னப் பையன்னு நினைச்சு தூக்கிட்டுப் போயிருப்பான்.!” –என்றவுடன் மாமி, பாட்டியை முறைத்தாள்

”என் கொரோனாகூட ரொம்ப நேரமா வரல பாட்டி..! உங்க வீட்டுக்கு வந்ததா..?” –ரஞ்சனி கேட்க, பாட்டி அதிர்ந்தாள்..!

”என்னடி பாவி சொல்றே, காலங்கார்த்தாலே.? கொரோனா வரலைன்னு புலம்பறே..?”

”கொரோனா என்னோட பூனையோட .பெயர்..” –ரஞ்சனி சொல்ல, பாட்டிக்குக் கோபம் வந்தது.

”போங்கடி..! காலங்கார்த்தாலே ஆத்துகாரரை காணோம், கொரோனாவைக் காணோம்னு” –ருக்குப் பாட்டி சத்தம் போட, அவர்கள் எரிச்சலுடன் அகன்றனர்.

ஹிண்டுவை எடுத்துக்கொண்டு மாடியில் உள்ள தனது அறைக்குச் செல்லும் கார்த்திக்கை எச்சரிக்கையுடன் பார்த்தபடி உள்ளே நுழைந்த ரங்குத் தாத்தா, பாட்டியிடம் கிசுகிசுத்தார்.

”நம்ம பேரன் கார்த்திக் சென்னைக்கு புது காருல, புது வேலைக்குப் போறான். இந்த எதிர்வீட்டு ஒத்தை பிராமணன் அவன் ஊருக்குப் போகறச்சே எதிரே வந்து நிற்கும். இந்த கொரோனா பூனை வேறு இப்படியும் அப்படியும், குறுக்கே போகும். அதுதான் இரண்டையும் பிடிச்சு, நம்ம அகத்து பின்னாடி இருக்கிற மோட்டார் ரூமில் அடைச்சு தாப்பாள் போட்டு மூடிட்டேன். கார்த்திக் ஊருக்குக் கிளம்பிய அப்புறம் திறந்து விடலாம்..!” –தாத்தா சொல்ல, பாட்டிக்கு அதிர்ச்சி.

”அடப்பாவி மனுஷா..! கார்த்திக்குக்குத் தெரிஞ்சா கத்தப் போறான்..!” பாட்டி சொல்ல, தாத்தா, தலையசைத்தார்.

”அதெப்படிக் கத்துவான்..? இந்த ஐடியாவைக் கொடுத்ததே அவன்தான்..!” –என்றதும் பாட்டி பேச்சை மாற்றினாள்.

”அவனே சொன்ன ஐடியாவா..? அப்ப அப்பீலே கிடையாது..! அது கிடக்கட்டும்..! நல்ல வேலை கிடைச்சாச்சு..! என்னோட தம்பி பேத்தி சுமனா இருக்கா..! அவளை இந்த வருஷம் கார்த்திக்கிற்குக் கல்யாணம் பண்ணிடலாம்.”

”நேத்திக்கே அவன் சொல்லிட்டான். நாம அவனுக்குப் பொண்ணு பார்க்கக கூடாதாம்..! ஐஸ்வர்யா ராயைவிட அழகா ஒரு பெண்ணை அவனே பார்த்துக்கப் போறானாம். உலகத்திலேயே பேரழகியைத்தான் கல்யாணம் பண்ணிப்பானாம்..!” –தாத்தா சொல்ல ,பாட்டி தனது தோளில் முகவாயால் இடித்து கொண்டாள்.

”எல்லா பயல்களும் அப்படித்தான் தான் சொல்லிண்டு திரிவான்கள்..! அப்புறம் ராய்-க்கு பதிலாக ஏதாவது ஒரு ஆய்-யை கல்யாணம் பண்ணிப்பான்கள்..!” –பாட்டி சொல்ல, ”என்னை மாதிரியா..?” என்று கேட்க நினைத்த தாத்தா, செகண்ட் டோஸ் காபி டைம் என்பதால், சொல்ல வந்ததை நிறுத்திக்கொண்டார்.

சரியாக ஒன்பது மணிக்கு கார்த்திக் மாடி அறையில் இருந்து ஸ்டைலாக இறங்கி வந்தான். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, காரில் ஏறி அமர்ந்தான். சென்னையில் கோடி கோடியாகச் சம்பாதித்து, ஈசிஆரில் கடலை நோக்கும் ஒரு பெரிய மாளிகையைக் கட்டிக்கொண்டு, ஐஸ்வர்யா ராயைக் காட்டிலும், பேரழகியை மனைவியாக அடைந்து, பௌர்ணமி இரவில், கடலலைகள் தாலாட்ட, கடல் காற்றை உள் வாங்கியபடி, ராஜ போகத்தை அனுபவிக்க வேண்டும்..! –என்கிற திட்டத்துடன், தனது புதிய காரின் ஆக்சிலேட்டரை காலால் அழுத்த, வண்டி சென்னை நோக்கிப் பறந்தது.

• • •

ஹோட்டல் முக்கூடல், வைகை கரை, மதுரை.

தினேஷ் தில்லைநாயகம் டிரினிட்டி டிவியில் எடிட்டராகச் சேர்வதற்காக, சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். தனது விளாங்குடி மேன்ஷன் ரூமைக் காலி செய்துவிட்டு, இருக்கும் ஒன்றிரண்டு உடைமைகளையும் தனது முதுகில் ஊசலாடும் பையில் திணித்துக்கொண்டு, சென்னைக்குப் புறப்பட்டு விட்டான். பயணத்திற்கு ஸ்பான்சர்ஷிப் தேடித்தான் ஹோட்டலுக்கு வந்திருந்தான். சென்னைக்குப் போகும் இளிச்சவாயன் யாராவது கிடைத்தால், அவர்கள் காரில் தொற்றிக்கொண்டு விடலாம். விமானம், ரயில், பஸ் என்று பணம் செலவழித்துக் கொண்டு எதற்கு போக வேண்டும்..? தினேஷ் சிறு வயதில் இருந்தே ஸ்பான்சர்ஷிப்பைத்தான் நம்பி வளர்ந்தான்.

அப்போதுதான் ஹோட்டலில் உணவருந்திவிட்டு, தனது இன்னோவாவில் ஏறுவதற்குச் செல்லும் அந்த வயதான பெண்ணைப் பார்த்தான். அவள் செல்போனில் பேசிக்கொண்டு சென்றபோது, உறவினர் வீட்டு விழாவிற்காகச் சென்னைக்கு தனியாக போவது தெரிந்தது. எப்படியாவது அவளைச் சரிக்கட்டி, அவளது இன்னோவாவில் நோகாமல் சென்னைக்குப் போய்விட வேண்டும். அந்த பெண்ணைத் தொடர்ந்து சென்றான், தினேஷ்

அந்த பெண் நடுத்தர வயதை எட்டிப் பிடித்திருந்தும், காலேஜ் பெண் போல, லெக்கின்ஸ்- டாப்ஸ் போட்டு, கத்தரித்திருந்த முடியில் ஒரு கற்றையை நெற்றியின் மீது பரப்பிக் கொண்டு, மிகுதியை போனி டெயில் போட்டு, அந்த டெயில் நடக்கும் போது ஆட வேண்டும் என்பதற்காகச் செயற்கையாகத் துள்ளி குதித்தபடி சென்று கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்தும், அவள்தான் தனது இலக்கு என்று தீர்மானித்தான். பாதிக் கிழவியாக இருந்தும், குமரி போல சீன் போடும் அவளைச் சரிக்கட்டுவது சுலபம்.

”பெரியம்மா..! லிப்ட் தா..!” –என்று கேட்கத் துடித்த வாயை மிகவும் சிரமப்பட்டு அடக்கி, ”ஹாய் பேபி..! யு லுக் ஹாட்..!” –என்றான்.

‘தலையெழுத்தே’ என்று அந்தக் கிழவியை பார்த்து கூவ, தனது திருஷ்டிப் பூசணிக்காய் போன்ற தலையைத் திருப்பி, இமைகள் துடிக்க, கண்களை உருட்டி, என்னவோ செய்து, உதட்டைப் பற்களால் கடித்தாள் அந்த அம்மணி.

தினேஷின் உயரமும், கோதுமை நிறமும், சுருள் முடியும், பூனைக் கண்களும் அந்த பெண்ணைச் சற்று துன்புறுத்தி இருக்க வேண்டும்.

”யு டு லுக் டாஷிங்..!” அந்தப் பெண் நுனிநாக்கால் சொல்ல, தினேஷ் அவளை நோக்கித் தனது கட்டை விரலை உயர்த்தினான்.

”மெட்ராஸ் வரைக்கும் கம்பெனி கொடுக்கட்டா..?” –என்றதும், சற்றுத் தயங்கியவள், பிறகு ”ஷ்யூர் ” –என்று கார்க் கதவைத் திறக்க, அவள் பக்கத்தில் தொற்றிக் கொண்டான், தினேஷ்.

”ஐ ஆம் ராகவ்..!” –என்று பொய்யான ஒரு பெயரை கூறியபடி, கையை நீட்ட, ”ஐ ஆம் மினு.” என்று அவன் கையைப் பற்றினாள்.

மினுவாமே..! கிழவியின் முழு பெயர் மீன லோசினியாக இருக்க வேண்டும். பார்க்கும்போதே பொழுதுபோகாத ஒரு பணக்காரி என்பது தெரிந்தது. திருமணம் செய்து கொண்டால், ஒரு ஆணைத்தான் பழிவாங்க முடியும். திருமணம் செய்து கொள்ளாமல் சுதந்திரத்தை அனுபவித்தால் பல ஆண்களை துன்புறுத்த முடியும் என்று அவள் நினைத்திருக்கலாம். தினேஷ் மனதினுள் சிரித்துக் கொண்டான் .

அடுக்கடுக்காக ஜோக்ஸ் சொல்லி அவளைச் சிரிக்க வைத்து, சிறிது நேரத்திலேயே அவளுடன் பெரும் நெருக்கத்தை ஏற்படுத்தினான். கார் டிரைவர் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து தினேஷை அருவருப்புடன் நோக்கினார்.

‘இது ஒரு பிழைப்பா..?’ –என்கிற மாதிரி அவர் பார்க்க, அதை அலட்சியம் செய்தான், தினேஷ். இம்மாதிரி பார்வைகள் எல்லாம் தினேஷுக்கு புதிதல்ல. மற்றவர்களின் ஸ்பான்சர்ஷிப்பில் வாழ்வது ஒரு வாழ்க்கையா என்றெல்லாம் அவன் பின்னால் பலரும் பேசுவது தெரியும். காரியம் ஆகவேண்டும் என்கிற போது, சில காம்ப்ரமைஸ்களும் அடஜஸ்ட்மென்ட்களும் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்கிற எண்ணம் உடையவன். யாருமில்லாத அனாதை என்கிற போது, அனைவரையும் உறவினர்களாக நினைக்க வேண்டியதுதானே?.

உண்மையில் தினேஷுக்கு பெண்களைக் கண்டால் அறவே பிடிக்காது..! ஆனால் ஏமாற்றுவதற்கு எளிதானவர்கள் என்பதாலேயே பெண்களைக் குறி வைத்தான். தினேஷுக்கு பெரிய குறிக்கோள் ஒன்றும் இல்லை. அவனைப் பெண்கள் அதிகாரம்கூடச் செய்யலாம். ஆனால் அவர்கள் அவனை ஜாலியாக வைத்துக் கொண்டு, கேட்டபோது பாக்கெட் மணி கொடுக்க வேண்டும். இவனது சந்தோஷங்களுக்குத் தடை சொல்லக்கூடாது. இவனுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்ய ஒரு நல்ல மனைவி கிடைத்தால், இவன் கணவன் வேலையைப் பார்க்க ரெடி. அவனது வருங்கால மனைவி திருமணமாகாத முதிர்ந்த பெண்ணோ, கிழவியோ அல்லது விகாரமாகவோ இருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் அவசியம் கோடீஸ்வரியாக இருக்க வேண்டும்.

மதுரையில் புறப்பட்ட அந்த காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த தினேஷ் மற்றும் மினுவின் கைகள் சீட்டில் பதிந்திருக்க, மதுரையில் இருந்து புறப்படும் போது, அவர்களது கைகளின் நடுவே சோசியல் டிஸ்டன்சிங் இருந்தது. திருச்சி வரும்போது, அவர்களுடைய கை விரல்கள் உரசிக் கொண்டிருந்தன. உளுந்தூர்பேட்டையில் அவனது கையும், அவளது கையும் கோர்த்திருந்தன. விழுப்புரத்தில், ஒருவரது கையை மற்றொருவர் கிள்ளிக் கொண்டிருந்தனர். திண்டிவனம் வரும்போது, அவனை தலையணையாகக் கருதி , அவன் புஜத்தை பற்றி, தலையை அவன் தோளில் மினு சரிக்க, எப்படியும் கிண்டியில் கழட்டிவிடப் போகிற கைதானே, என்கிற அலட்சியத்தோடு தினேஷ் அமைதியாக இருக்க, எஜமானி மகன் வயதில் இருப்பவனுடன் சரசமாடுவதைக் கண்டு, கோபத்துடன் ஆக்சிலேட்டரை மிதித்தார், அந்த வயதான டிரைவர்.

கிண்டி வந்ததும், காரை விட்டு இறங்கிய தினேஷ், ”பை பை ஆன்ட்டி..! உடம்பைப் பார்த்துக்கங்க..!” –என்று கூறிவிட்டு அலட்சியமாக நடக்க, மினு வாயைப் பிளந்தபடி அமர்ந்திருந்தாள்..! மதுரையில் பேபியாகக் கிளம்பியவள், கிண்டியில் ஆன்ட்டியாக மாறிவிட்டிருந்தாள்..!

• • •

ஸ்ரீவைகுண்டம், தாமிரபரணிக் கரை, திருநெல்வேலி.

விடியலில் வீட்டு காலிங்பெல் ஒலி அவனது தூக்கத்தைக் குலைக்க, ரேயான் தங்கபாண்டியன் எழுந்து வந்தான். கதவைத் திறந்தவன், அதிர்ந்தான். அவனுடைய அப்பா தங்கபாண்டியன்தான் காலில் பெரிய கட்டோடு நொண்டியபடி நுழைந்தார்.

“இவ்வளவு நாள் எந்த ஊர்ல இருந்தீங்க..? ஆளு அட்ரசே காணும்..!? கால்ல என்னாச்சு..?’’ –ரேயான் திகைத்தான்.

“மிஜோரம் போயிருந்தேண்டா..! அங்கே மெடிக்கல் ரெப் கான்பரன்ஸ்.!’’

ரேயான் பல்லைக் கடித்தான்.

’’ஏன் புளுகுறீங்க..? தொழில்ரீதியாக மிசோரம் போயிருப்பீங்க. அங்கே ஒரு மிசோரம் சித்தி எனக்கு கிடைச்சிருப்பா. அவளோட மூங்கில் டான்ஸ் ஆடி காலை நசுக்கிட்டு இருப்பீங்க. போதும் டாடி..! உங்க மன்மத லீலை நாடு முழுக்க நாறிப் போயிட்டு இருக்கு..! இப்படியா மாநிலத்துக்கு ஒரு சித்தியை செட் அப் செய்வீங்க.?” –ரேயான் கோபத்துடன் கத்தினான்.

”நான் என்னடா செய்யட்டும்..? எனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்க மாட்டேங்குது..! அதுதான் யார் வீட்லயாவது போய் சாப்பிடறேன்.”

”அதெப்படி கல்யாணம் ஆகாத கன்னிப் பெண் வீடா தேடிப் போய் சாப்பிடறே..? என் ப்ரெண்ட்ஸ்லாம் கிண்டல் செய்யறாங்க. ‘ரேயான்..! கொங்கு மாநிலம்னு உருவாக்கப் போறாங்களாம்..! சீக்கிரம் உனக்கு கோவையில் ஒரு சித்தி கிடைச்சிடுவா’ன்னு சொல்றானுங்க..!இனிமேயும் இந்த அசிங்கத்தை என்னால் சகிச்சுக்க முடியாது. எனக்கு புது வேலை கிடைச்சுடுச்சு..! நான் வேற ஊருக்குப் போறேன்..! இனிமே என் வழியை நான் பார்த்துக்கறேன். உங்க தேசிய ஒருமைப்பாடு மனைவிகளோட நீங்க சந்தோஷமா இருங்க…’’ –ரேயான் கூற, தங்கபாண்டியன் திகைத்தார்.

“என்ன வேலை..? எந்த ஊருக்குடா போறே..?” –தங்கபாண்டியன் திகைக்க, ரேயான் எச்சரிக்கையுடன் அவரைப் பார்த்தான்.

“அதைச் சொல்ல நான் என்ன பைத்தியக்காரனா..? அட்ரஸ் கொடுத்தா, மாநில ரீதியாக சித்திகளை அனுப்பி என்கிட்டே பணம் பறிக்கவா.? போன தடவை, தெலுங்கானா சித்தியும், ஆந்திரா சித்தியும், ஒரே சமயத்துல இங்கே வந்து ‘டப்பு இவ்வு …டப்பு இவ்வு’ன்னு கத்தி கூப்பாடு போட்டு, கலாட்டா செஞ்சுட்டாங்க.! குஜராத், கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா, கேரளான்னு இருக்கிற சித்தி போதாதுன்னு இப்போ மிஜோரம் வேறயா..? இனிமே புதுசா மாநிலங்களை உருவாக்காதீங்கன்னு நான் பிரதமருக்கு தந்தி அடிக்கப் போறேன்..! சொல்லவே கேவலமா இருக்கு டாடி..! உங்களுக்கு வெட்கமா இல்லை..? இந்த வயசுல உங்களுக்கு ஏன் இந்த புத்தி..? பொண்ணுங்களை ஏன் ஏமாத்தறீங்க..?” –ரேயான் புலம்பினான்.

“நான் அவங்களை ஏமாத்தலடா..! எனக்கு கம்பெனி வேண்டும். அவங்களுக்கு பணம் வேணும்..! அவ்வளவுதான்..! நீ ஒரு கல்யாணம் பண்ணிக்க. அப்பதான் உனக்கு கம்பெனியோட அருமை தெரியும்.”

“வேணவே வேணாம்..! என் லைஃப்ல பெண் வாடையே வேணாம்…! குளிச்சிட்டு நான் ஊருக்குப் புறப்படறேன். நீங்க எப்படியோ போய்த் தொலைங்க ! இனிமே என்னை நீங்களோ, உங்க பெண்டாட்டிகளோ தொந்தரவு செய்யாம இருந்தா அதுவே போதும்..!’’ –என்றபடி ரேயான் பாத்ரூமை நோக்கி நடந்தான்.

சென்னைக்குச் செல்லும் ஆம்னி பஸ்ஸில் ரேயான் தங்கபாண்டியன் ஏறியபோது, அவன் நினைத்தது இதுதான். “பொண்ணுங்களே பணப்பிசாசுங்க!! எனது வாழ்க்கையில எந்த பெண்ணும் குறுக்கிடக் கூடாது.”

• • •

சிறுவாணி ஆற்றங்கரை, தொண்டாமுத்தூர், கோவை.

னது பிரம்மாண்ட வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கும், கிஷோர்லால் தாக்கரிடம் சாவியை ஒப்படைத்துவிட்டு, சென்னைக்குப் புறப்பட்டான் ஆதர்ஷ் ராமசாமி. அவனது பென்ஸ் காரை முன்பே சென்னை நண்பன் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.

செல்வந்தக் குடும்பத்தை சேர்ந்தவன். தொண்டாமுத்தூர், தென்னமநல்லூர், கோவை என்று நிலங்களும், ஆஸ்திகளும் நிறையவே உள்ளன. வேலை பார்த்து உழைத்துச் சாப்பிட வேண்டும் என்கிற தேவையே இல்லை. இருந்தாலும் அவன் மனம் முழுவதும் எதிலும் ஒரு பற்றற்ற தன்மைதான் நிலவியது. அனைவரின் மீதும்… குறிப்பாக பெண்களின் மீது கடும் வெறுப்பு.

இவனுடைய அப்பா ராமசாமிக் கவுண்டர் மற்றும் அம்மா கோகிலா காரில் ஒரு திருமணத்திற்கு சென்றபோது, கார் பிரேக் செயல்படாமல் எதிரே வந்த லாரியின் மீது மோதி அவர்கள் தலத்திலேயே இறந்தார்கள். பிறகுதான் தெரிந்தது… சொத்துச் சண்டையில், அப்பாவின் அண்ணியே, ஆளை வைத்து கார் பிரேக்கோடு விளையாடி இருந்த கதை..! அதன்பிறகு உறவினர்களை எல்லாம் கத்தரித்து விட்டு, கடல் போன்ற பங்களாவில் தனியாக வாழ்ந்து வந்தான். வீட்டு வேலைக்காரர்கள் கூட ஆண்கள்தான். தனது பெரியம்மாவின் மீது ஏற்பட்ட வெறுப்பு மெதுவாக எல்லாப் பெண்களின் மீதும் பரவியது. பொழுதுபோக வேண்டும் என்பதற்காக ஒரு வேலைக்குப் போக, நிறுவன பாஸின் மனைவி அவனை டேட்டிங் கூப்பிட, வேலையை ராஜினாமா செய்துவிட்டு, டிரினிட்டி இந்தியாவில் நிர்வாகத் தயாரிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

சென்னைக்கு செல்லும் இண்டிகோ விமானத்தின் படிகளில் ஏறி வந்த ஆதர்ஷை கண்டதும், நுழைவாயிலில் பயணிகளை வரவேற்றபடி, புன்சிரிப்புடன் கைகூப்பி நின்றிருந்த விமானப் பணிப்பெண், ஆதர்ஷினின் கம்பீரத்தை பார்த்து ஸ்தம்பித்து போய் நின்றாள். நல்ல, உயரமும், கோதுமை நிறமும், களையான முகமும், நுனியில் நத்தையின் கூடு போன்று சுருண்டிருந்த மீசையும், அவளைத் தொல்லை படுத்த, ‘இவன் என்ன சினிமா நடிகனா அலலது ராணுவ அதிகாரியா..?’ -என்பது போல பார்த்தாள்

“வெல்கம்..! நமஸ்தே..!’’ அந்தப் பெண் கூற, அவளை லட்சியம் செய்யாமல், நடந்தான் ஆதர்ஷ். வழியை மறைத்துக் கொண்டு இரு இளம் குமரிகள் செயற்கையாக’ ஹாய்’ என்று சொல்லிக்கொண்டு, கன்னங்களை உரசிக்கொண்டு, நட்பு நாடகமாடிக் கொண்டிருக்க, எரிச்சலுடன் அவர்களை நோக்கினான்.

‘’யூஸ் யுவர் காமன் சென்ஸ்..! நடக்கிற வழியில உங்க நட்புப் பரிமாற்றம் இப்ப அவசியமா..? வழி விடுங்க..!’’ –என்று கர்ஜிக்க, அந்தப் பெண்கள் பயந்து நகர்ந்தனர்.

”எதுக்கு எப்படி குரைக்கிறான், நாய் மாதிரி..?” –ஒரு பெண் கேட்க, இன்னொருத்தி பதில் கூறினாள்.

”அவன் காதலி எவன் கூடயாவது ஓடிப் போயிருப்பா! அதனால நம்ம மேல கோவப்படறான்..!”

அவர்கள் கிசுகிசுத்தது ஆதர்ஷ் காதில் விழுந்துவிட, கோபத்துடன் அவர்களைத் திரும்பி நோக்கினான்.

”ஆமா..! என் காதலி உங்க அப்பனோடதான் ஓடிப் போனாள்..!” –ஆதர்ஷ் கூற, பெண்களின் முகம் அதிர்ச்சியில் அஷ்டகோணல் ஆயின.

என்ன பெண்களோ..? எப்போது பார்த்தாலும் காதல், ஆணோடு நட்பு பற்றியே பேச்சு..! வாழ்க்கையில் காதல், திருமணம், இவற்றைக் கடந்து வேறு ஒன்றுமே இல்லையா..?

இறைவா..! நான் போகும் டிரினிட்டி டிவியில் என்னோடு எந்தப் பெண்ணும் வேலை பார்க்கக் கூடாது. –ஆதர்ஷ் மனதினுள் வேண்டிக்கொள்ள, விமானம் சென்னைக்குப் புறப்பட்டது. .

• • •

லோக பவானி ஆறு (கபினி ) கரை, மைசூரு.

மைசூர் குவேம்பு நகரின் அமைதியான பகுதியில் இருந்த அந்த பெரிய வீட்டின் அவுட்டோரஸ்-சிலிருந்து வெளியே வந்தாள் கங்கனா. தனது மகள் தன்னை விட்டுச் சென்னைக்குப் புறப்படுகிறாள் என்கிற கலக்கம், அவள் தாய் ரேணுவின் கண்களில் தென்பட்டது. அதை கங்கனாவும் கவனிக்க தவறவில்லை.

”என்னம்மா ! இதுக்கு போயி டென்ஷன்..? சென்னைக்குப் போயி ட்ரினிட்டி டிவியில ஜாயின் பண்ணிட்டு, ஒரு வீட்டையும் பார்த்துட்டு, ஒரே வாரத்துல வந்து உன்னை அழைச்சுக்கிட்டு போகப்போறேன்.!” –என்றபடி கங்கனா பெட்டியை தூக்க, ரேணு, அவசரமாக மறுத்தாள்.

”எனக்கென்ன டென்ஷன் கங்கனா..? ஊரை விட்டு ஊர் மார்றப்ப எல்லாருக்கும் வர்ற டென்ஷன்தான்.! இங்கே நீ கன்னட கஸ்தூரி சேனல்ல ராணி மாதிரி இருந்துட்டே. மைசூர் எம்பியோட சேனல் வேற! நிம்மதியா இருந்திட்டு இருக்கோம்.. இந்த அமைதியான ஊரை விட்டுட்டு சென்னைல போயி அல்லல்படணுமான்னுதான் யோசனையா இருக்கு ! ” –ரேணு சொல்ல, கங்கனா சிரித்தாள்.

”அம்மா..! அடுத்த தேர்தலுல இந்த எம்பிக்கு சீட் கொடுக்க மாட்டாங்கன்னு பேசிக்கிறாங்க. அப்படியே கொடுத்தாலும் உதைதான்..! எங்க ஆபிசுக்கு அவர் வந்தே மூன்று வருஷமாகுது. ஆபிசுக்கே வராதவர், தொகுதிக்கு எங்கே வந்திருக்கப் போறார்..? அவரு தோத்துப் போயிட்டார்னா, டிவி சேனல்-ஐ மூடிடுவாரு..! அப்புறம் என்ன செய்யறது..? டிரினிட்டி டிவி ஆல் இந்தியா டிவி..! வேலை எனக்கு சேலஞ்சிங்கா இருக்கும்..!” –கங்கனா சொல்ல, வீட்டின் தோட்டம் வழியாக வாயிலுக்கு செல்ல, மெயின் கேட் அருகே வீட்டுக்கார ராயர் தம்பதிகள் இவளை வழி அனுப்புவதற்குக் காத்திருந்தனர்

”ராவ்ஜி..! நனு சென்னை-கே ஹோகுட்டிதேனே..! தயவிட்டு ஒந்து வாரா வெயிட் மாடி..!! நானு பருத்தேனே..! நன்ன தாயினு நன்னோடிகே டேகேது கொள்ளுட்டேனே. (ராவ்ஜி..! நான் சென்னைக்குப் போய்ட்டு வரேன்..! தயவுசெய்து ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க. நான் வந்து என் அம்மாவை என்னோட அழைச்சுக்கிட்டு போறேன்.)

ராவ்ஜி கையசைத்தார்..!

”யாவுடே சமஸ்யேகளு இல்லா, கங்கனா..! (ஒரு பிரச்சனையும் இல்லை.) குட் பை” –என்று ராவ் தம்பதிகளும், அம்மா ரேணுவும் கையாட்ட, ஆட்டோவில் ஏறி அமர்ந்தவள், ”ரயில்வே ஸ்டேஷன் ஹோகப்பா..!” –என்றாள்.

ரயில் நிலையத்தில் இறங்கி, தயாராக வைத்திருந்த ஆட்டோ மீட்டர் காசைக் கொடுத்துவிட்டு, பெட்டியுடன் சென்னைக்குப் போகும் சதாப்தி எக்ஸ்பிரஸ் நின்ற பிளாட்பார்மில் நுழைய முற்பட்டவள், திகைத்தாள். கையில் பொக்கேவுடன் நின்றிருந்தான் ஹேமந்த்..! கன்னட கஸ்தூரி சேனலில் செய்திப் பிரிவு துணையாசிரியராக ஹேமந்த் பணியாற்றி வருகிறான்.

அவன் நீட்டிய பொக்கேயைத் தயக்கத்துடன் பார்த்தாள், கங்கனா..!

”இதெல்லாம் எதுக்கு ஹேமந்த்..?” –அபர்ணா கேட்க, கண்களில் நன்றி பொங்க பதில் சொன்னான், ஹேமந்த்.

”சிஸ்டர்..! உங்களுக்கே தெரியும்..! என்னை வேலையில இருந்து விரட்டுவதற்கு அந்த நீனா எவ்வளவு முயற்சி செய்தாள்..? நம்ம ஆபிஸ்ல இருக்கிற அத்தனை பெண்களும் அவள் பக்கம் பேசினாங்க. நீங்க மட்டும் தலையிட்டு எனக்கு நீதியை வழங்கலேனா,என் கதி..?” –ஹேமந்த் சொல்லிக்கொண்டே பொக்கேவை நீட்ட, கங்கனா அதை வாங்கி கொண்டாள்.

ஹேமந்த் மிகவும் பாவம். அவனுக்கு முன்பாக நான்கு அக்காக்கள். ஒருவருக்கும் இன்னும் திருமணம் செய்யவில்லை. தந்தை ஒரு பள்ளிக்கூடத்தில் கன்னடம் போதித்து ஓய்வு பெற்றுவிட்டார். அடுக்களையைத் தாண்டி வராத அவனது அம்மா, பெண்களையும் வீட்டை விட்டு வேலைக்கு போகக்கூடாது என்று கட்டுப்பாடு ஒன்றை விதித்துவிட்டு, அவர்களின் திருமணப் பொறுப்பை கடைசி மகன் ஹேமந்த்தின் தோள்களில் சுமத்தி விட்டாள். அவன் வேலைக்குப் போய்தான் அனைவரையும் கரையேற்ற வேண்டும். என்ற நிலையில், அலுவலத்தில் பணிபுரியும் நீனா என்கிற பெண் அவன் மீது கண் வைத்தாள் . அவனை விரட்டி விரட்டிக் காதலிக்க, அவன் மறுக்க, ஒரு நாள் அவன் காண்டீனில் தனியாக இருந்த போது, அவள் வேகமாக நடந்து சென்று அவன் மீது விழுந்து, அவனது கன்னத்தில் தனது முகத்தை தேய்க்க, அந்த காட்சி சிசிடிவியில் பதிவாகிவிட்டது.

எச்.ஆர். டிபார்ட்மென்ட்டிடம் இருந்து நோட்டீஸ் வர, எடிட்டோரியல் துறை தலைவர் என்று அபர்ணாவை இது குறித்து விசாரிக்கச் சொன்னார்கள். குட்டு வெளிப்பட்டதும், பிளேட்டை மாற்றினாள் நீனா. நடந்து சென்ற அவளை, ஹேமந்த்தான் தனது காலை நீட்டி அட்டாக் போட்டு, அவன் மீது விழ வைத்தான் என்று குற்றம் சாட்டினாள். ஹேமந்த்தின் போதாத வேளை சிசிடிவி காட்சியில், அவன் உட்கார்ந்திருந்தது மட்டுமே தெரிந்ததே தவிர, அவன் கால்கள் தெரியவில்லை. தன் மீது விழுந்த அவளைத் தள்ளி விடுவதற்காக அவளது இடையில் கையை வைக்க, அது அவனது கரங்களால் அவள் இடையை ஏந்திக் கொண்டிருந்தது போலக் காட்சி தந்தது. விவகாரம் வளர்ந்தது. .

துறையில் இருந்த அத்தனை பெண்களும் நீனாவை ஆதரிக்க, ஆண்களும் ஹேமந்த்துக்கு ஆதரவாக பேசவில்லை. போதாத குறைக்கு, நீனா, சேனல் சேர்மன் எம்.பி.யின் மகனிடம் சென்று கண்ணீர் விட்டு கதறி நியாயம் கேட்க, ஹேமந்த்தை வேலையை விட்டு நீக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஹேமந்த் கலங்கிப் போனான். அப்போதுதான், அவனது மூத்த அக்காவுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல இருந்தது. வேறு வழியின்றி, கங்கனாவிடம் வந்து நடந்ததை, விளக்கினான்.

”எனக்கு நாலு சிஸ்டர். அவங்க என்னை நம்பி இருக்காங்க..! வீட்டுல நாலு பெண்ணை கல்யாணத்துக்கு வச்சுக்கிட்டு, ஆபிஸ்ல எந்த ஆம்பளையும் இந்த மாதிரி நடந்துக்க மாட்டான். நீனா பொழுது போக்குக்காக வேலைக்கு வராங்க. எனக்கு இந்த வேலைதான் வாழ்வா சாவான்னு தீர்மானிக்க போற விஷயம். உங்களை என்னை ஆதரிக்க சொல்லல, கங்கனா..! . தீர விசாரிச்சு நியாயத்தைக் கண்டுபிடிங்க !” — என்று வருத்தத்துடன் சொன்னான்.

எச்ஆரிடம் இரண்டு நாள் அவகாசம் கேட்ட அபர்ணா , நீனாவின் பழைய அலுவலகங்களில் இருந்து சில தகவல்களை கேட்டு வாங்கிப் பெற்றாள்..! அவள் முன்பு பணிபுரிந்த ஆபீஸ்களிலும் , நிர்வாகத்திடம் அனுதாபத்தை பெற வேண்டி, இம்மாதிரி ஆண்களைக் குறி வைத்து, தன்னை அவர்கள் சித்ரவதை செய்வதாக புகார் கொடுத்து வந்திருப்பது தெரியவர, ஹேமந்த் நிரபராதி..! நீனா மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மாதிரி ஸ்டண்ட்களில் ஈடுபடுவது புதிதல்ல. பொய்க் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து சொன்னதால், பழைய ஆபீஸ்களில் வேலையை விட்டு நீக்கப்பட்ட விஷயம் தெரிய வர, நீனாவை வேலையை விட்டு நீக்கும்படி, பரிந்துரை செய்திருந்தாள், கங்கனா.

தனது மூத்த அக்காவின் திருமண முதல் அழைப்பிதழை கங்கனாவுக்கு கொடுத்தான், ஹேமந்த். தன்னை காப்பாற்றிய கங்கனாவுக்கு நன்றி விசுவாசத்துடன் இருந்தான்.

சதாப்தி எக்ஸ்பிரஸ், தான் கிளம்பப் போகிறேன் என்று ஒரு முறை ஹாரன் அடிக்க, அவசரமாக ஹேமந்த்திடம் விடைபெற்றுக்கொண்டு தனது கம்பார்ட்மெண்டில் ஏறினாள், கங்கனா.

அவள் கம்பார்ட்மெண்டில் ஏறியபோது, ‘ஹோ’ என்று கூச்சலும் ஆர்ப்பாட்டமுமாகக் குரல்கள் கேட்டன. இவளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் சில கல்லூரி மாணவர்கள் அமர்ந்து தமிழில் பாடுவதும், ஆடுவதுமாக இருந்தார்கள். அவர்களைத் தாண்டி இவளுக்கு ஜன்னல் அருகே சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. இவர்கள் நடுவே அமர்ந்து எப்படி பயணம் செய்வது என்று முதலில் யோசித்தவள், சட்டென்று ரயிலில் இருந்த வாஷ் பேசினை நோக்கி நடந்தாள்.

தனது கூந்தலைச் சுருட்டி கொண்டையாக போட்டுக்கொண்டு, தனது சிவப்பு பார்டருடன் கூடிய வெள்ளை சேலையை கொண்டையோடு சேர்த்து உடலை போர்த்திக்கொண்டு, ஹாண்ட பாகில் வைத்திருந்த சைஸ் வாரியாக இருந்த பொட்டு பாக்கெட்டில் இருந்து பெரிய குங்கும நிற ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டாள். பிறகு, தனது இருக்கையை நோக்கி செல்ல, அதுவரை பாட்டு பாடி கலாட்டா செய்து கொண்டிருந்த அந்தக் கல்லூரி மாணவர்கள், அபர்ணாவின் தோற்றத்தைக் கண்டதும் சட்டென்று அமைதியானார்கள். அவள் உட்காருவதற்கு இடம் ஒதுக்கித் தந்தவர்கள், ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசத் தொடங்கினர். பலர், காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு மொபைலில் பாட்டு கேட்க தொடங்கினர்.

தனியாக ஆண்களுடன் இருக்கும்போது, தன்னைத் தற்காத்துக்கொள்ள, பெண்கள் கராத்தே, குங்பூ எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். பெப்பர் ஸ்பிரே கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும், என்றெல்லாம், சக பெண்கள் கருத்தரங்கு ஒன்றில் கூறியபோது, அபர்ணா கூறியது இதுதான்.

”ஆண்கள் குரங்கு போன்றவர்கள். பெண்கள் குல்லாய் வியாபாரி போன்றவர்கள். குல்லாய் வியாபாரி குல்லாவை தூக்கி எறிந்தால், குரங்கும் குல்லாவை தூக்கி எறிந்து விடும். குல்லாய் வியாபாரி குல்லாய் அணிந்து கொண்டே இருந்தால், குரங்குகளும் குல்லாவை அணிந்துகொண்டு இருக்கும். நான் சொல்லும் குல்லாவின் பெயர் கண்ணியம்” –என்று அபர்ணா சொல்லி முடித்த்தும், ஆண்கள் பக்கத்தில் இருந்து பலத்த கரவொலி. பெண்கள் கோபத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அந்தக் கண்ணியம் என்கிற குல்லாயைத்தான் ரயிலில் அணிந்திருந்தாள், கங்கனா..! அவள் திருமணமானவள் என்கிற எண்ணத்தோடு, அந்த மாணவர்களும், அவளிடம் பிரச்சனை ஏதும் செய்யாமல் பயணித்தனர். ஒரு கட்டத்தில், அம்மா பாக் செய்து தந்திருந்த உப்புமா கொழுக்கட்டையையும், தான் வாங்கி வைத்திருந்த சிப்ஸ் பாக்கெட்டுகளையும் அவர்களிடம் புன்னகையுடன் நீட்டி, ‘சாப்பிடுங்க’ என்று கொடுக்க, மாணவர்கள் அவளிடம் சினேகத்துடன் வாங்கிக் கொண்டனர்.

பிரச்னைகளைத் தேடினால், பிரச்னைகள்தான் கிட்டும். பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு நாமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், மன அமைதி கிடைக்கும் என்று திடமாக நம்பினாள், கங்கனா.

இதே போன்ற ஒரு பயணத்தின் போது, ஜன்னல் ஓரம் சீட்டில் உட்காருவதற்கு வழிவிடாமல் இருந்த சில மாணவர்களிடம், இவளது பிரெண்ட் நித்யா, “வழிவிடு மேன்..! யு கைஸ் டோன்ட் ஹாவ் காமன்சென்ஸ்” என்று கூற, பிரச்சனை முளைத்து. ”வீ டோன்ட் ஹாவ் காமன்சென்ஸ். பட் வீ ஹாவ் காமம் சென்ஸ்” –என்று ஒருவன் கூற, மற்றவர்கள் சிரித்தார்கள். இம்மாதிரி பிரச்னைகளைத் தவிர்க்கவே, கங்கனா சில நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தாள். சிப்ஸ் சாப்பிட்ட மாணவர்கள் சற்றே இவளிடம் ரிலாக்ஸ் ஆக, அவர்களின், படிப்பு, குறிக்கோள் என்று பேசி, அவர்களை பற்றி பேச, ஒரு வழியாக பயணம் பிரச்னையின்றிக் கழிந்தது.

”சீ யு சிஸ்டர்..!” –மாணவர்கள் அனைவரும் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர்.

அவ்வளவுதான் விஷயம்.! நான் ஒரு அழகான பெண்..! தனியாகப் பயணிக்கிறேன்..! நீங்கள் எல்லோரும் மோசமான ஆண்கள்…! உங்களிடம் இருந்து என்னை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..!” –என்கிற மனப்பான்மையோடு பயணம் செய்யும்போது, பெண்கள் தங்களது பாதுகாப்புக்காகச் செய்து கொள்கிறோம் என்று மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஆண்களுக்கு அவமதிப்பது போல இருக்கலாம். அதனால் அவர்கள் பதிலுக்கு கேலி செய்யலாம். ‘எனக்கு உங்களிடத்தில் எந்த பயமுமில்லை.! உன்னைப் போல நானும் ஒரு பயணி’ என்று பிரயாணம் செய்தால், யார் யாரை என்ன செய்துவிட முடியும்?” -தனக்குள் நினைத்தபடி, ஆட்டோவை நோக்கி நடந்தாள், கங்கனா!

யிலில் உடன் பயணித்த கல்லூரி மாணவர்களைப் புத்திசாலித்தனமாகக் கையாண்டுவிட்டதாக எண்ணி திருப்தியுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாள் கங்கனா. ஆனால் தமிழ்நாட்டின் நான்கு திக்கிலிருந்து பெண்களை வெறுக்கும், நான்கு ஆணாதிக்க இளைஞர்களின் மேலதிகாரியாக தான் செயல்படப்போவதையும், அவர்களால், தனது வாழ்க்கையின் இனி வரும் நாட்கள் நிம்மதியின்றி இருக்கப் போவதையும் அவள் அறியவில்லை.

மைசூர் கபினி ஆற்றங்கரையில் இருந்து கூவம் நதி கரைக்கு டிரினிட்டி டிவி வேலைக்காக வரும் தனக்கு, காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் சிறுவாணி ஆகிய ஆறுகளின் கரையிலிருந்து வரும் அந்த நான்கு வாலிபர்கள் பெரும் பிரச்சனைகளாக இருக்கப்போவதை அறிந்திருந்தால், அப்படியே மைசூர் திரும்பிப் போயிருப்பாளோ என்னவோ..?

கார்த்திக், தினேஷ், ரேயான் மற்றும் ஆதர்ஷ், நான்கு பேருக்குமே சம அளவில்தான் பெண்களின் மீது கோபமும், வெறுப்பும் இருந்தன. பேரழகியை மட்டுமே திரும்பி பார்ப்பேன் என்ற மனப்பான்மையில் இருக்கும் கார்த்திக், என்னுடன் வாழும் பெண்தான் என்னை வசதியாகவும், ஜாலியாகவும் வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொகுசு வாழ்க்கைக்கு ஏங்கும் தினேஷ், திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் தனது தந்தையை பணத்துக்காக மயக்கும் பெண்களைக் கண்டு தனக்கு பெண்வாடையே வேண்டாம் என்று வெறுத்திருக்கும் ரேயான், பெண்ணுடன் பழகுவதையே வெறுக்கும் ஆதர்ஷ் என்கிற நான்கு ஆணாதிக்க வாலிபர்களைத் தன்னகத்தே வேலைக்கு எடுத்து கொண்டுள்ளது, டிரினிட்டி இந்தியா டிவி.

ஆனால் ஆணாதிக்க மனப்பான்மையுடன் சென்னையை நோக்கிச் செல்லும் இந்த நால்வருக்கும் தெரியாது… தங்களது மேலதிகாரி ஒரு பெண்ணாகத் திகழப்போகிறாள் என்பது.

–இன்னும் வரும்…

தொடரின் அறிமுகம்…

ganesh

14 Comments

  • ஆரம்பமே அமர்க்களம். விறு விருப்புடன் channaiai நோக்கி ரயில் கிளம்பிவிட்டது

  • முதல் அத்தியாயம் அதகளம்… யாருக்கு யார் தண்ணிகாட்ட போறது

    • Superb starting

  • சுவார்ஸ்யம் அண்ட் புன்னகை தொடர்ந்து வருகிறது. தொடருங்கள்

  • ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.

  • உங்கள் வழக்கமான நடை போல தோன்ற வில்லை. முதல் முறை ஒரு சிரிப்பு தொடருக்காக எழுதுவதால் உங்கள் நடையை மாற்றி கொண்டு உள்ளிர்களோ என்று தோன்றுகிறது. என் அபிப்ராயம் தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • Arambame amarkalam sir reyan appa mathiri, Dinesh mathiri sogusu vazhkai vazha asaipadubavan, adarsh ladies endrale veruppu, Karthik ku ishwarya Rai mathiri all different characters Chennai vanthu vittaargal ange oru kaditham executive endral epidi irukum sema viruvirupu

  • சிறப்பான, விரிவான தொடக்கம்… ஒவ்வொரு வாரமும் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது எனத் தோன்றுகிறது. 👌👌👌

  • Thuvakkame Dhool

  • அருமையான துவக்கம். தொடரட்டும் சிறப்போடு. வாழ்த்துக்கள்

  • What a catchy simile in the intro paragraph! Completely pulled the readers into the story.

  • முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன்! தங்கள் பாணியில் இருந்து வித்தியாசமான ஒரு களத்தில் நீங்களும்பயணிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது! அருமை! வாழ்த்துகள்!

  • அபர்ணாவா, கங்கனாவா? மாறி மாறி குழப்பமா இருக்கே.

  • Very good start… You have set high expectations… Looking forward to the next episodes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...