ஆந்திர மாநில அமைச்சரானார் நடிகை ரோஜா
நடிகை ரோஜா திரையுலகிலிருந்து விலகி அரசியலில் நுழைந்த பிறகு தனது அடுத்தக்கட்டத்திற்குப் பயணம் செய்திருக்கிறார். ஆந்திரா அமைச்சராகியிருக்கிறார். இது தமிழ் திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திராவில் ஜெகன் கோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து மக்களைச் சந்திக்கும் நடை பயணத்தை முடித்த நேரத்தில் அவருக்கு ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார் ரோஜா. இந்த நேரத்தில் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்படியொரு முக்கியத்துவம் அவருக்கு இருப்பதை உணர்ந்திருந்தார் ஜெகன் மோகன். அதன் பிறகு தான் வசிக்கும் நகரி தொகுதியில் தீவிரமாகப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். ஜெகன் மோகன் கட்சியில் ரோஜாவுக்கென்று லாபி செய்ய ஒரு கூட்டம் உருவானது. இந்த ஆதரவுக்கூட்டம் நகரி தொகுதியில் இவருக்காக உழைத்தது. ஆனால் வெற்றி அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேச வேட்பாளர் முத்து கிருஷ்ணம்ம நாயுடுவைவிட 858 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அந்த நேரத்தில் மீடியாக்கள் முன்பு உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டுக் கதறினார். அப்போது அவர் கூறியதாவது,
“30 ஆண்டு கால அரசியல் சாணக்கியர்களாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் இந்திரா பிரியதர்சினியின் தந்தை சென்னா ரெட்டி, தெலுங்கு தேச வேட்பாளர் முத்து கிருஷ்ணம்ம நாயுடு ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டேன் என்பதைவிட யுத்தம் செய்தேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த யுத்தத்தில் நான் ஜெயித்து விட்டேன். இரண்டு முறை நான் தெலுங்கு தேசம் சார்பில் தேர்தலில் போட்டியிட்டபோது சொந்த கட்சிக்காரர்களால் நான் தோற்கடிக்கப்பட்டேன். இன்று அதே தெலுங்கு தேசத்துடன் காங்கிரஸ் கட்சியினரும் சேர்த்து என்னைத் தோற்கடிக்க சதி செய்தார்கள். அதையும் மீறி நான் வெற்றி பெற்றது சாதனையாகக் கருதுகிறேன்.
நான் நல்ல நடிகையாக இருந்துள்ளேன். சிறந்த குடும்பத் தலைவியாக, கணவருக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்து உள்ளேன். ஆனால் அரசியலில் மட்டும் எனக்குத் தோல்வியே கிடைத்து வந்தது. இன்று அதிலும் சாதனை படைத்து விட்டேன்.
நகரி மக்களுக்காக என் வாழ்நாளை அர்ப்பணிக்க உள்ளேன். அவர்களின் கோரிக்கை நிறைவேற போராடுவேன்” என்று கூறினார். அதேபோல நகரி தொகுதியில் இன்றுவரைக்கும் தனக்கென்று ஒரு செல்வாக்கை வளர்த்து வந்திருக்கிறார்.
அவரது ஆதரவாளர்கள் கூட்டம் பெருமளவு வளர்ந்திருந்தது. ஜெகன் மோகன் அரசு அமைந்த நாள் முதல் ரோஜா அமைச்சராகி விடுவார் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்து வந்தது. ஆனால் இந்த விஷயத்தில் முதலமைச்சர் ஜெகன் கறாராக இருந்து வந்தார். அமைச்சர் பொறுப்பு கொடுத்தாலும் அரசு விழாக்கள் முதல்வர் ஜெகனை மையமாக வைத்தே நடந்து வந்தது. எந்த அமைச்சரையும் முன்னிலைப்படுத்தக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவை அழைத்து அடுத்த இரண்டரை ஆண்டுகள் வரை அமைதிகாக்கவும். அமைச்சரவை மாற்றியமைக்கும்போது உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்படும் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தார்.
அதன்படி இன்று ரோஜாவை அமைச்சராக்கியிருக்கிறார்.
அரசில் சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ரோஜா அனே நேனூ என்று தெலுங்கில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது என் மீது நம்பிக்கை வைத்து முதல்வர் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார். இந்த வாய்ப்பை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அமைச்சரானதால் இனி சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.
இப்போது முழு நேர அரசியல்வாதியாகிவிட்டார் ரோஜா.