அவ(ள்)தாரம் | 20 | தேவிபாலா
வர்ஷா மிரண்டு போயிருந்தாள்.
“யார் நீ? என்னை எதுக்காக கடத்தி இங்கே கொண்டு வந்திருக்கே? என்னை என்ன செய்யப்போறே?”
“உன்னை நான் அனுபவிச்சிட்டு, இன்னிக்கு ராத்திரியே துபாய்க்கு விமானம் ஏறப்போறோம்! உன்னை நல்ல விலைக்கு வித்தாச்சு!”
“அடப்பாவி! நீ நல்லாருப்பியா? என்னை விட்ரு!”
அவன் காலில் விழுந்து வர்ஷா கெஞ்சத்தொடங்கினாள்!
“இன்னும் பத்தே நிமிஷத்துல, நீ எனக்கு சொந்தமாகப்போறே! எனக்கு சின்னதா ஒரு வேலை இருக்கு! அதை முடிச்சிட்டு வந்து, சந்தோஷமா உன்னை அடையறேன்!”
ஒரு முரட்டு பெண்ணை வர்ஷாவுக்கு காவல் வைத்து விட்டு அவன் நகர, ஏற்கனவே வர்ஷாவின் செல்ஃபோன் முதல் எல்லாமே பறிக்கப்பட்டிருந்தது! அந்த முரட்டுப்பெண் இவளை நகர விடாமல் காவல் காத்தாள்! அங்கே க்ருஷ்ணா புழுவாகத் துடித்துக் கொண்டிருந்தான்!
“நம்ம குழந்தையைக் காப்பாத்தினவ வர்ஷா! அவளைக் காப்பாத்தணும்! அவளை எங்கே வச்சிருப்பாங்கனு தெரியலியே!”
க்ருஷ்ணா, வாசுகி இருவரும் பரிதவிக்க, சிதம்பரம் காதில் சகலமும் விழ, அருகிலிருந்த நர்ஸிடம் ட்ரிப்ஸ், ஆக்சிஜன் வகையறாக்களைக் கழட்ட சொன்னார்!
“அய்யோ கூடாது சார்! அப்படிக் கழட்டினா, உங்க உயிருக்கே ஆபத்து!”
“நான் செத்தாலும் பரவால்லை! இப்ப நான் போனாத்தான் வர்ஷாவை மீட்க முடியும்! இத்தனை நாள் நான் செஞ்ச பாவங்களுக்கு, பரிகாரம் தேடற நாள் இது! தடுக்காதீங்க!”
அவரே இரண்டு இணைப்புகளையும் கழட்டி வீசி விட்டு, ஆவேசமாக வெளியே வர, அம்மா, வாசுகி அலற, க்ருஷ்ணா பரிதவித்து அவரை தடுக்க, ஏற்கனவே இந்த தகவல் வந்ததுமே அருள், பாரதி இருவரும் புயல் வேகத்தில் பைக்கில் புறப்பட, சிதம்பரம் வெறி கொண்ட வேங்கை போல வாசலுக்கு வந்து விட்டார்!
“மாமா! நானும் உங்க கூட வர்றேன்!”
க்ருஷ்ணாவையும் அழைத்துக்கொண்டு அவனது காரில் ஏறினார்!
“எங்கே மாமா போகணும்?”
“ஒட்டல் ராயல் மெரிடியன் போங்க! நிச்சயமா அந்த வர்ஷாவை அங்கே தான் கொண்டு போயிருப்பாங்க!”
“மாமா! இதை அருளுக்கு சொல்லி வரச்சொல்லலாம்! போலீசுக்கு தகவல் தரலாம்!”
“வேண்டாம்! நான் சொல்ற நம்பருக்கு டயல் பண்ணி எங்கிட்ட குடுங்க!”
க்ருஷ்ணா காரை ஓட்டிக்கொண்டே அவர் சொன்னதை செய்ய, அவர் யாருக்கோ பேசத்தொடங்கினார்! ஏதேதோ தகவல்களை கேட்டார்! அவர் கேட்ட தகவல்கள், பேசிய வார்த்தைகள் அனைத்தும் க்ருஷ்ணாவுக்கு அதிர்ச்சியை தந்தது! தாள முடியாமல் காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டான்!
“மாப்ளை! உங்களுக்கு நான் பேசின வார்த்தைகள் அதிர்ச்சியா இருக்கும்! ஆனா வேற வழியில்லை! எல்லா உண்மைகளும் வெளில வர வேண்டிய நேரம் வந்தாச்சு! அந்த பூதத்தோட தோலை உரிக்காம நான் விட மாட்டேன்! காரை எடுங்க! ஒரு நிமிஷம் கூட தாமதிக்காதீங்க! அந்த வர்ஷாவைக் காப்பாற்றி ஆகணும்!”
“மாமா! இதுல உங்களுக்கும் ஆபத்து இருக்கே?”
“சீக்கிரம் போங்க மாப்ளை!”
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே பயணிக்க, அந்த ஓட்டலில் சில வேலைகளை முடித்துக்கொண்டு, வர்ஷா இருக்கும் அறை நோக்கி அந்த வடக்கத்தான் நடக்க, ஏறத்தாழ அந்த அறை வாசலை அவன் நெருங்கி விட, ஒரு ஃபோன் வந்தது! எடுத்தான்!
“சீக்கிரம் இடத்தை காலி பண்ணு! அந்த பூதம், நம்மை மாட்டிவிட திட்டம் போட்டு ரெய்டுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கான்! போலீஸ் நெருங்குது! சீக்கிரம் இடத்தை காலி பண்ணு! எனக்கு இப்பத்தான் தகவல் வந்திருக்கு!”
“எப்படீடா? லட்சக்கணக்கான பணத்தைக் கொட்டியிருக்கோம்! அந்த பொண்ணு, கூட வரலைனா, நம்மை உயிரோட விட மாட்டாங்க!”
“நீ இங்கிருந்து தப்பினாத்தானே விமானம் ஏற முடியும்? ரெய்டுக்கு ஏற்பாடு செஞ்சதே பூதம் தான்! பணத்தை வாங்கி நம்மை ஏமாத்திட்டான்! நம்ம கங்கம்மாவையும் கூட்டிட்டு போயிடு!”
அவன் உள்ளே பாய்ந்தான்!
“கங்கம்மா! சீக்கிரம் வா! நமக்கு ஆபத்து! போகலாம்!”
அவளை இழுத்துக்கொண்டு அவன் காரில் ஏறும் நேரம், க்ருஷ்ணாவின் கார் ஓட்டல் வாசலில் வந்து நின்றது! அவர்கள் தப்பிச் செல்வதை சிதம்பரம் பார்த்து, உடனே யாருக்கோ தகவல் தந்து, பூதம் பேசுவதை போல பேசினார்! வேகமாக க்ருஷ்ணாவை அழைத்து கொண்டு அந்த ஓட்டலின் நாலாவது மாடிக்கு வர, வர்ஷா பதட்டமாக வெளியே வர, எதிரே க்ருஷ்ணா! அலறி அழுத படி க்ருஷ்ணா காலில் வந்து விழுந்தாள்!
“உன்னை யாரும் எதுவும் செய்யலையே வர்ஷா?”
“சரியான நேரத்துக்கு நீங்க வந்துட்டீங்களே க்ருஷ்ணா?”
“உன்னை காப்பாற்றினது நானில்லை! என் மாமனார்! அவர் சரியான நடவடிக்கை எடுக்கலைனா, உன்னை மீட்டிருக்க முடியாது! சரி வா! மாமா நிலைமை சரியில்லை! உடனே வீட்டுக்கு போயாகணும்!”
“இந்த பொண்ணை காப்பாத்தியாச்சு! அதுவே எனக்கு போதும்!”
மூவரும் காரில் ஏற, பூதம் வீட்டுக்குள் தடதடவென அடியாட்கள் புகுந்து விட்டார்கள்! எதிரே வந்த அஞ்சுவை இழுத்து தள்ளி விட்டு, உள்ளே நுழைய, பூதம் பதட்டமாக வெளியே வர,
“யாருடா நீங்க?”
“அந்த வடக்கத்தியான், கங்கம்மாவுடன் வந்தான்!
“எங்க தலைவர்கிட்ட லட்சக்கணக்கான பணத்தை வாங்கிட்டு, அந்த வர்ஷாவை என்கிட்ட ஒப்படைக்கற மாதிரி நாடகம் ஆடிட்டு, கடைசில நீயே ரெய்டுக்கு ஏற்பாடு செஞ்சு எங்களை மாட்டிவிடப் பார்த்தியா? உன் கதையை முடிக்கத்தான் வந்தோம்!”
“என்ன உளர்ற? நான் ரெய்டுக்கு சொன்னேனா? பைத்தியமா எனக்கு?”
“நீ நேரடியா சொல்லலை! உன் வலது கை, மாமா சிதம்பரம் சொன்னான்! உன் சகலமும் தெரிஞ்சவனாச்சே சிதம்பரம்? நீ ரகசியம்னு சொன்ன அந்த ஓட்டல் தகவல் அவனுக்கு தெரிஞ்சிருக்கே! பல பொண்ணுகளை இதே ஓட்டல்ல வச்சு நீ விற்க, அந்த சிதம்பரம் தானே கையாள் உனக்கு?”
பூதம் சில நொடிகள் செயலிழந்தார்!
“உன்னை நாங்க எதுவும் செய்யப்போறதில்லை! எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சவன் நீ! நாளைக்கு துபாய்ல ஒப்படைக்க எங்களுக்கு ஒரு பொண்ணு வேணும்! அது கிடைச்சாச்சு! கொண்டு வாங்கடா!”
அடுத்த நொடியே முரட்டு அடியாட்கள் அவர் மகள் அஞ்சுவை இழுத்து வந்தார்கள்!
“அந்த வர்ஷாவை விட இவ அழகா இருக்கா! இவளை வித்துடலாம்! துபாய்க்கு போக வேண்டாம்! பார்ட்டியை மும்பைக்கு வரவழைச்சிடலாம்!”
அவளை இழுத்து கொண்டு நடக்க, “விடுங்கடா என் பொண்ணை! எத்தனை கோடி வேணும்னாலும் உங்களுக்கு தர்றேன்!”
அலறியபடி பூதம், அவர்களை வழி மறிக்க, அஞ்சு கதற, “பூதம்! கத்தி எடுத்தவன் அந்த கத்தியால தான் சாகணும்! பல பொண்ணுங்க மானத்தை பணத்துக்காக சூறையாடின நீ அதுக்கு பரிகாரமா உன் மகள் கற்பை எழுதி குடுத்துடு! அவ உன் கண்ணு முன்னால கதறினாத்தான் மத்தவங்க கண்ணீர் உன்னை சுடும்! வாங்கடா!”
குறுக்கே வந்த அவரை, குப்புறத் தள்ளி விட்டு, அவளைக் காரில் ஏற்றி, “நேரா ஏர்போர்ட்டுக்கு வண்டியை விட்ரா!”
கார் சீறிக்கொண்டு புறப்பட, பூதம் நிலை குலைந்து தடுமாறி, சுதாரித்து, அவசரமாக அருளுக்கு ஃபோன் போட, அது தொடர்ந்து பிசியாக இருக்க, பூதம் பாரதியை முயல, அவள் எடுத்தாள்!
அந்த நேரம், பூதத்தின் கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் பாரதி இருந்தாள்! அவளுடன் போலீசும், கோர்ட் ஆட்களும் இருந்தார்கள்! அங்குள்ள தோட்டத்தைக் கொத்தி கிளறிக்கொண்டிருந்தார்கள்! பாரதி இருந்ததால் ஊடக ஆட்கள் சிலரும் ஒன்றும் புரியாமல், பாரதியைக் கேள்வி மேல் கேள்வி கேட்டபடி நின்றார்கள்! வர்ஷா கடத்தப்பட்டதாக க்ருஷ்ணா சொன்னதும் வேகமாக புறப்பட்ட அருள், பாரதியை பண்ணை வீட்டில் கொண்டு வந்து சேர்க்க, அங்கே போலீசும், கோர்ட் ஆட்களும் இருக்க,
“என்ன அருள்? வர்ஷா இங்கியா இருக்கா?”
“இல்லை! அவளை நான் காப்பாத்தறேன்! இங்கே நீ இருக்கணும்!” என விவரங்களை சொல்ல, பாரதி அதிர்ந்து போனான்!
“நாளைக்கு நடக்கப்போற நம்ம கல்யாணத்தை தடுத்து என்னைக் கொன்னு உன்னை வேற ஏரியால விக்க பூதம் திட்டம் போட்டாச்சு! நாளைக்கு பூதத்துக்கு மோசமா விடியும்! நீ இதைக் கவனி!”
அவன் புறப்பட்டு போக, இங்கே பாரதி பரபரப்பாக இருக்க, பூதத்தின் ஃபோன் வந்தது! ஒரு நொடி எடுக்கலாமா வேண்டாமா என யோசித்து பாரதி எடுத்தாள்!
“அருள் எங்கே பாரதி?” அவர் குரலில் பதட்டம் தடவியிருக்க,
“அவர் என் கூட இல்லை!”
“அஞ்சுவை கடத்தி, ஏர்போர்ட் கொண்டு போறாங்க! மும்பைக்கு விமானம் ஏற்றப்போறாங்க! அவ கற்புக்கே சோதனை வந்தாச்சு! அருளுக்கு இது தெரிஞ்சா தாங்க மாட்டான்!”
“நீங்க உடனே போலீசுக்கு ஃபோன் போடுங்க!”
“அருள் கிட்ட சொல்லும்மா!” அவர் கதறிக்கொண்டே பேச,
பாரதி பதட்டமாகி அருளுக்கு முயல, அருள் அதே பிசி! பாரதி போலீசிடம் சொல்லி, மீடியா நபர் ஒருவரை அழைத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டாள்!
இங்கே பூதம் போலீசில் சொன்னால் தன் பல ஆபாசங்கள் அம்பலமாகும் என்பதால் தன் கூலிப்படைக்கு தகவல் தர, யாரும் இவர் ஃபோனை எடுக்கவில்லை! ஒரே நேரத்தில் அத்தனை பேரும் எப்படி எதிரியானார்கள் என்பது பூதத்துக்கே புரியாத புதிராகி விட்டது! அருள் கடந்த முப்பது மணி நேரமாக அவர் தொடர்பான சகலத்தையும் முடக்கி வருவது அவருக்கு தெரியாது! காவல் துறையும் பூதத்துக்கு கை கொடுக்கவில்லை! காரணமே பூதத்துக்கு புரியவில்லை!
அஞ்சுவை விமான நிலைய வாசலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்! அந்த வடக்கத்தியான் அவசரமாக அஞ்சுவுக்கு டிக்கெட் எடுத்தான்! வீடு புகுந்த போதே அவளை உதைத்து அவளது ஆதார் ஆதாரங்களை வாங்கி விட்டார்கள்! டிக்கெட் எடுத்து அவளை செக்யூரிட்டி கேட்டுக்கு அழைத்துவர, பாரதி ஊடக நபருடன் வந்து ஓட்டமாக நெருங்கி தடுத்து விட்டாள்! அடுத்த நொடியே உடன் வந்த ஊடக நபர் தன் அடையாளம் காட்டி, இந்த பெண் கடத்தப்படுகிறாள் என தகவல் சொல்ல விமான நிலையம் பரபரப்பாகி விட்டது! அஞ்சுவும் பேசத்தொடங்க, அந்த ஆட்கள் நிலைமை புரிந்து தப்பி ஓட முயல, அவர்களை ஏர்போர்ட் போலீஸ் பிடித்து விட்டது! ஃபார்மாலிட்டிகளை முடித்து பாரதி, அஞ்சுவைத் தன்னோடு அழைத்து வர, அஞ்சு கதறிக்கொண்டே பாரதி மேல் சாய்ந்தாள்!
“எங்கப்பா மோசமானவரா? அதனால தான் அண்ணன் அவரை விட்டு விலகி நிக்கறானா? பல பெண்களோட கண்ணீருக்கு அப்பா காரணமா? அவங்க கற்பை வித்துக் காசு சேர்த்தவரா? என்னை தூக்கிட்டு போக வந்த ஆட்கள் சொன்னதை கேட்டு நான் ஆடிப்போனேன்! உங்களை பழி வாங்கவா அவர் துடிச்சார்? என்னை மன்னிச்சிடுங்க அண்ணி!”
அவள் தலையை தடவித்தந்த பாரதி, “மனசை திடப்படுத்திக்கோ! நாளைக்கு காலைல இதை விட பெரிய அதிர்ச்சிகள் உனக்கு வரும்! இப்ப என்னோட வா!”
பாரதி கடைசி நொடிகளில் தன் மகள் அஞ்சுவை மீட்ட செய்தி, பூதத்துக்கு வந்து விட்டது!
மறு நாள் காலை பரபரப்பாக விடிய, பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது! கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் கோர்ட் ஆர்டரின் பேரில் பூமி கிளறப்பட, எலும்பு கூடு கிடைத்தது! அது பெண்ணின் உடல் என தெரிய வந்தது! ஊடகம் பரபரப்பானது! அந்த கொலைக்கு பூதத்துக்கு உடந்தையாக இருந்து ஆந்திராவில் தலைமறைவாக இருந்த ரெட்டியை அருள் தேடி போலீசில் ஒப்படைக்க, திடுக்கிடும் வாக்கு மூலம் அவனிடமிருந்து வெளியானது!
அது பூதம் மனைவி ராஜலஷ்மியின் எலும்புக்கூடு! ஆதாரங்கள் தேதி வாரியாக சமர்ப்பிக்கப்பட, காலை எட்டு மணிக்கு பூதம் கைது செய்யப்பட்டார்! அதற்கு அரை மணி முன்பு பூதத்துக்கு விவரம் வர, அவர் சென்னையிலிருந்து தப்பியோட எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட, புறப்படும் நேரம் போலீஸ் வந்து விட்டது! அவருக்கு சாதகமாக இருந்த உயர் அதிகாரிகள், இப்போது எதிராக மாறி அவரை கைது செய்ய, அது ராஜலஷ்மியின் உடல் தான் என்பதை ஃபாரன்சிக் உறுதி செய்ய, அவரது வலது கையாக இருந்து கொலை செய்த ரெட்டி, ஏற்கனவே வாக்கு மூலம் தந்திருக்க, பூதத்துக்கு எதுவுமே சாதகமாக இல்லை!
நேற்றைய வர்ஷா கடத்தல், அதை தொடர்ந்து பகை கொண்ட ஆட்கள், அவர் மகள் அஞ்சுவை கடத்தி விற்க பார்த்தது, பாரதி கடைசி நொடிகளில் அஞ்சுவை மீட்டது! என சகலத்தையும் ஊடகம் வெளிச்சம் போட, காலை பொழுது பரபரப்பாக விடிய, நேராக அருள் காவல் நிலையத்துக்கு வந்து விட்டான்! பூதம் போலீஸ் பிடியில் இருக்க, ஊடக ஆட்கள் முண்டியடித்து நெருக்க, போலீஸ் அணை போட்டது! அருள் அனுமதி பெற்று, பூதத்தை தனியாக அழைத்து போனான்! வெறுப்புடன் பார்த்தான்!
“எங்கம்மா உன் ஈனத்தொழிலை விடச்சொல்லி கெஞ்சியிருக்காங்க, அழுதிருக்காங்க! கடைசில உன்னை காட்டி குடுப்பேன்னு சொன்னப்ப, நீ திட்டம் போட்டு, அவங்க காசிக்கு போற மாதிரி ஒண்ணை ஆதாரங்களோட உருவாக்கி, அவங்களை கொலை செஞ்சே! ரெட்டி எல்லாம் சொல்லிட்டான்! இன்னிக்கு பாரதி கழுத்துல நான் தாலி கட்டின பிறகு, என்னைக் கொன்னு, அவளை உடனே விதவையாக்கி, அப்புறம் விபசாரத்துல தள்ள நீ திட்டம் போட்டாச்சு! அந்த பாரதி தான் உன் மகளை மீட்டிருக்கா! உன் கிட்ட நான் கேக்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்! பெண்களை விக்கற உனக்கு, அதுல வலது கையா சிதம்பரம் மாமா இருந்தார்ங்கறது யாருக்கும் தெரியாது! அதை மட்டும் நீ வெளில சொல்லாதே! உன் மகளை மீட்ட பாரதிக்கு நீ செலுத்தற நன்றிக்கடன் இது தான்!”
பூதம் கை கூப்பி கதறி விட்டார்!
“நான் சத்தியமா சொல்ல மாட்டேன்! குறிச்சபடி உன் கல்யாணம் பாரதி கூட இன்னிக்கே நடக்கட்டும்!”
அருள் அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு திரும்ப, சிதம்பரம் நிலை சீரியசாக இருந்தது! குடும்பமே பதற, “என்னால கோயிலுக்கு வர முடியாது! கல்யாணம் இங்கியே நடக்கட்டும்! மாப்ளை! நீங்களும் அருள் தம்பியும் உள்ளே வாங்க!”
இருவர் மட்டும் உள்ளே வர, அருள், பூதம் பிடிபட்ட சகல விவரங்களையும் சொல்ல,
“அருள் தம்பி! க்ருஷ்ணா மாப்ளைக்கு நான் செஞ்ச தப்பான தொழில் தெரியும்! அந்த செல்வாக்கை வச்சுத்தான் வர்ஷாவை நான் மீட்டேன்! உங்களுக்கும் எல்லாம் தெரியும்!! பாரதி கழுத்துல நீங்க தாலி கட்டின பிறகு என் ஆபாசக் கதை குடும்பத்துக்கு தெரிஞ்சா போதும்!”
“இல்லை மாமா! அது இனி வெளியே வராது! பூதம் சொல்ல மாட்டார்! அவர் செஞ்ச குற்றங்களுக்கு சட்டம் அவரைத் தண்டிக்கும்! உங்களை குடும்பம் தண்டிக்க வேண்டாம்! வாங்க!”
அடுத்த சில நிமிஷங்களில் அருள், பாரதி கழுத்தில் அந்த வீட்டு பூஜை அறையில் தாலி கட்டி விட்டு அப்பா காலில் விழ, அவர்கள் உச்சந்தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கும் வரை தன் உயிரை கையில் பிடித்திருந்த சிதம்பரம், சாய்ந்தார் அப்படியே!
குடும்பம் கதறியது! சிதம்பரம் அசிங்கப்படாமல் அழகாக உயிரை விட்டார்! அவர் பாவங்களை செய்திருந்தாலும், அவரது மனைவியும் குழந்தைகளும் செய்த புண்ணியம், அவரை கௌரவமாக வழி அனுப்பப்போகிறது!