பொற்கயல் | 7 | வில்லரசன்

 பொற்கயல் | 7 | வில்லரசன்

7. பெருவுடையாரே!

ஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை நகரமானது இரவு ஏறிவிட்ட காரணத்தால் தன் குடிகளுக்குத் தாலாட்டு பாடி உறங்க வைத்துக்கொண்டிருந்தது.

பகல் பொழுதெல்லாம் பலதரப்பட்ட தொழில்களில்…. பெரும்பாலும் விவசாய நிலங்களில் கடினமான உழைப்பைச் சிந்தும் அந்த தஞ்சை வாழ் மக்கள் வெய்யோன் விழுந்ததுமே வயிற்றுக்குச் சிறிது கருணை காட்டி விட்டு நித்திரையை நாடத் தொடங்கினார்கள்.

இயற்கைத் தாயின்‌ மடியில் தவழ்ந்து விளையாடும் குழந்தைகள் அல்லவா நம் விவசாயக் குடிமக்கள்..? தாயான நிலத்துடன் விளையாடி முடித்த களைப்பினால் குழந்தையைப் போலேவே அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

தஞ்சையில் பெரிதாக பொலிவைக் காண முடியவில்லை. ஒரு காலத்தில் தஞ்சை தேன்கூடு. சோழர்கள் தேனீக்கள். அப்படித்தான் சொல்ல வேண்டும். அப்பொதெல்லாம் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தஞ்சை முழுக்க காணப்படும். ஆனால் எப்போது அருண்மொழிச் சோழன் எனும் பேரரசர் இராஜராஜ சோழரின் வீரமகன் மதுராந்தகன் எனும் முதலாம் இராஜேந்திரனால் சோழர்களின் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டதோ அன்றே தஞ்சை எனும் கண்கவர் விளக்கு சிறிதுசிறிதாக அணையத் தொடங்கிற்று.

எது, தஞ்சை தன் பொலிவை இழந்து வருகிறதா? இல்லை! ஒரு போதும் இல்லை! நான் இருக்கும் வரை… ஏன் இவ்வுலகம் இருக்கும் வரை தஞ்சையின் புகழ் வான் முட்டும். ஆம்! ஆம்!!! என்று ஆதங்கத்துடன் தெரிவிப்பதை போல் விளக்குகளால் சூழப்பட்ட புவியின் கலைக்களஞ்சியமான தஞ்சை இராஜராஜேச்சரம் கற்றளி கண்கொள்ளா அழகுடன் எட்டுத்திக்கும் பறைசாற்றும் வண்ணம் நெஞ்சை நிமிர்த்தி திடமான காட்சியளித்தது.

தஞ்சை எனும் பெயரை யார் உச்சரித்தாலும் இவன் தான் அதற்கு நாயகன் என நினைவில் முரசு கொட்டும் அளவு சிவபாதசேகரனாக வாழ்ந்து மறைந்த இராஜராஜ சோழரின் கனவும், ஈசனின் பால் அவர் வைத்திருந்த பணிவும் பிரம்மாண்டக் கற்றளியாக அமைந்து பலர் உறக்கத்தைக் கெடுத்து வருகிறது. கனவிலும் அந்த சிற்பக் களஞ்சியம் குறுக்கிட்டு உறக்கத்தை கெடுக்கும்.

இப்பெருவுடையார் ஆலயத்தின் இறுதி பூசையான அர்த்தசாம பூசை நிகழும் நேரம் அது. ஆலயத்தினுள் “டங் டங் டங்” என மணியோசை எழுந்துகொண்டிருந்தது.

“அரசே! இறுதி பூசை நிகழ்கிறது..! வாருங்கள் பெருவுடையாரை தரிசித்து விட்டு வருவோம்..! என்றான் சோழ நாட்டின் படைத் தலைவன் வளவன். யாரிடம் அவன் தெரிவித்தானோ… அவனுக்கு வளவனின் குரல் கேட்கவில்லை. அதற்கு மேல் பேசாமல் நின்றிருந்தான் வளவன்.

வளவனுக்குப் பின் சோழ மன்னனை பாதுகாக்கும் வேளைக்கார படையினர்* [இவர்கள் சோழ‌ மன்னர்களை உயிர் கொடுத்து காக்கும் காவலர்கள். தங்களை மீறி சோழ வேந்தனுக்கு ஆபத்து நேர்ந்தால் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வார்கள். பாண்டியர்களுக்கு ஆபத்துதவிகள் போல் சோழர்களுக்கு வேளைக்கார படையினர்] நான்கு பேர் நின்றிருந்தனர். அவர்களுக்கு பின் இவர்கள் பயணித்து வந்த புரவித்தேர்கள் நின்றிருந்தன.

வளவனுக்குச் சற்று முன் சிறுவன் ஒருவனின் கரத்தை பிடித்தபடி இராஜராஜேச்சர கற்றளியையே கண் இமைக்காமல் சிலையென கவனித்த வண்ணம் நின்றிருந்தான் தற்போதைய சோழ நாட்டின் மன்னான மூன்றாம் இராசேந்திர சோழன்.

அவனிடத்தில் மன்னனுக்கான அலங்காரங்களும் ஆடைகளும் இருந்ததே தவிர முகப்பொலிவும் இல்லை அகப்பொலிவும் இல்லை.

கண்களுக்கு கீழ் படிந்திருக்கும் கருவளையங்களே சோழ மன்னன் நிம்மதியாக உறங்கிப் பல காலங்கள் ஆகிறது என்பதை வெளிக்காட்டின. மேலும் சோழ மன்னன் ஒருவனின் உடலமைப்பு இத்தனை குன்றி வலுவிழந்து போயிருப்பதை கண்டால் யாராலும் ஜீரணிக்கவே இயலாது.

மூன்றாம் இராஜேந்திரனின் அருகில் அவன் கைப்பற்றி நின்றிருந்த சோழ இளவரசனோ* [மூன்றாம் இராசேந்திரனுக்கு மகன் ஒருவன் இருந்துள்ளான். அவன் பெயர் சோமப் பிள்ளை என்று திருக்கண்ணப்புரத்து கல்வெட்டு தெரிவிக்கிறது. நூல் – சோழர் வரலாறு – டாக்டர். இராசமாணிக்கனார்] சிறு பாலகன். தந்தை தன்னை தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து தஞ்சைக்கு அழைத்து வந்ததில் அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி.

நெடுந்தூரம் தேரில் பயணித்து, வழியெங்கும் தெரியும் இயற்கைக் காட்சிகளை கண்டு களிப்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் இந்தப் பயணம் அவனுக்கு பெரும் குதூகலத்தைத் தந்திருந்தது.

தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து புறப்பட்டு இன்று

வெய்யோன் சாய்ந்த பிறகு தஞ்சை இராஜராஜேச்சரத்தை வந்தடைந்ததும் சோழ இளவரசன் பெரும் வியப்பிற்குள்ளானான்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்ட கங்கைகொண்ட சோழபுரம் கற்றளி போல் இங்கு தஞ்சையிலும் ஒரு வான்புகழ் கற்றளி அமைந்திருப்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஒருமுறை அவன் தாயும் சோழநாட்டின் பட்டத்தரசியமான சோழகுல மாதேவியார் “தஞ்சையில் இது போன்று நம் முன்னோர் எழுப்பித்த வேறு ஒரு கற்றளி இருக்கிறது மகனே” எனச் சொல்லி கேட்டிருக்கிறான். ஆனால் உணவு ஒருவாய் வாங்கிக்கொண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓடி ஆடி விளையாடியதால் அன்று அவன் அதை மறந்து விட்டான்.

இன்று இராஜராஜேச்சரத்தை நேரில் கண்ட பிறகுதான் அன்று தாய் சோழகுல மாதேவியார் சொன்னதும், தாய் ஊட்டிய நெய் சோறும் நினைவுக்கு வர, கைப்பற்றி நிற்கும் தந்தை மூன்றாம் இராசேந்திரனைப் பார்த்து, “தந்தையே! தாய் எங்கே?” என்று வினவினான்.

இராஜராஜேச்சர விமானத்தின் மீது நிலைத்திருந்த விழிகளை மகன் மீது திருப்பினான் மூன்றாம் இராசேந்திர சோழன். இத்தனை நேரம் வாடிக் கிடந்த அவனது முகம் மகனைக் கண்டதும் மலர்ந்து விட்டது.

“வருவார்கள் மகனே!” என்றவன் அவனை தூக்கி முத்தமிட்டுவிட்டுத் தனது தோள் மீது அமர்த்திக் கொண்டான்.

இருவரும் சில நொடிகள் எதிரேயுள்ள பிரம்மாண்டத்தை பார்த்தபடி அமைதி காத்தார்கள். அப்போது, “நாம் உள்ளே செல்லவில்லையே?” என்று வினவினான் சோழ இளவல்.

“அதற்கான தகுதி நமக்கில்லையடா மகனே”

“ஏன்?”

“வாழ்க்கையில் தோல்வியையே கண்டிடாத நாம் பாட்டனார் இராஜராஜ சோழர் எழுப்பித்த கற்றளி இது. இதனுள் வாழ்க்கையில் தோல்வி அடைந்த நாம் இல்லை… நான்… நுழைவதற்கு தகுதியற்றவன் மகனே!”

“ஆமாம்! அதற்காகத்தான் ஆறு போடச் சொன்னேன்! நீங்கள் மூன்று போட்டு பெரும் பாம்பின் வாயில் இறங்கிவிட்டீர்கள்!” முன்பு விளையாடிய பரமபதத்தை பற்றி சோழ இளவரசன் சொல்ல… சோழ மன்னன் மூன்றாம் இராசேந்திரன் வறண்ட சிரிப்புடன் அதற்கு பதில் கொடுத்தான்

“ஆம் மகனே! பாம்பு வாயில் தான் விழுந்து விட்டோம்! அதுவும் சகோதரப் பாம்புகள்! மீன் தலை கொண்ட பாம்புகள்!”

“மீன் தலையா?” இளவரசன் வியப்புடன் கேட்டான்.

“ம்ம்ம்”.

“அதைப்பற்றிச் சொல்லுங்கள்! அந்தக் கதை சொல்லுங்கள்! மீன் தலைப் பாம்புக் கதை சொல்லுங்கள்!” என்று மகன் கதை கேட்டு அடம்பிடித்து காலால் மார்பில் உதைக்கும் சுகத்தை அனுபவிக்கும் சோழமன்னன் “சரி சரி… சொல்கிறேன்!” எனத் தோள் மீது இருந்து மகனை இறக்கி இடுப்பில் அமர வைத்து மீண்டும் அவனுக்கு முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு “தந்தை கதை சொல்கிறேன். உறங்குகிறாயா?” என்று கேட்டான்.

“ம்ம்ம்” இமைகளை கைகளால் கசக்கிவிட்டு தலையாட்டினான் சோழ இளவரசன். இன்னும் பயணக்களைப்பு அவனிடத்தில் நீங்கவில்லை.

அவன் தலையைத் தோள் மீது சாய்த்து, நிற்கும் இடத்திலேயே சற்று உலாவத் தொடங்கினான் சோழ மன்னன்.

அவர்கள் இருவரையும் கவனித்தபடியே படைத்தலைவன் வளவனும் வேளைக்காரப் படையினரும் நின்று இருந்தார்கள்.

“முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் வேடனும், புலியும் நடக்கும் மீனும் வாழ்ந்து வந்தார்களாம்!”

தலைநிமிர்ந்த இளவரசன், “நடக்கும் மீனா?” என்றான் வியப்புடன்.

“ஆம்! நடக்கும் மீன்”.

மீண்டும் தந்தை தோளில் தலைசாய்ந்துக் கொண்டு கதை கேட்கத் தொடங்கினான் அவன்.

“பல காலங்களாக அவர்களுக்குள் பகை இருந்துவந்ததாம். வேடனின் வில் புலியை தாக்கிக் கொல்லுவது, புலி வேடனைத் தாக்கிக் கொல்லுவது, மீன் புலியை தாக்குவது, அதேபோல் புலி மீனை தாக்குவது வேடன் மீனை தாக்குவது என அந்த காட்டிற்குள் எந்நேரமும் ஒருவரையொருவர் சமரிட்டு அழித்துக் கொல்வதால் காடெங்கும் குருதி வாடையும் கறையும் நிரம்பியிருக்குமாம்.

அதில் பெரும்பாலும் மீனும் வேடனும் புலிக்கு அடங்கியிருந்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல வேடனின் வில் உடைந்து போயிற்று. மீனின் கால் முறிந்து போயிற்று. புலி காட்டின் அரசனாக நீண்டகாலம் உலா வந்தது. காலங்கள் சற்று கழிந்ததும் அடங்கியிருந்த நடக்கும் மீனுக்கு புதிய கால்களுடன் கைகளும் முலைத்திட வேலும் வாளும் ஏந்தி புலியைத் தாக்கியதாம்.”

“புலி திரும்பித் தாக்கவில்லையா தந்தையே?” தூக்கம் சொக்க அரை இமையுடன் கேட்டான் இளவல்.

“ம்ம்ம் தாக்கியது‌. புலிக்கு உதவியாக பக்கத்து காட்டில் வாழும் பன்றிகளும் கூரான கொம்புகளுடன் மீனை எதிர்த்தன. துணைக்கு புலியை வேட்டையாடும் வேடர்களும் புலிக்கு ஆதரவாக வந்தார்கள். ஆனால் மீன் அவர்களையும் அழித்தொழித்து போட்டது. அதிலிருந்து அவர்களால் அந்தக் காட்டுக்குள் நுழையவே முடியவில்லை. மீனின் உடன் பிறந்த சகோதரர்கள், உறவினர்கள் எல்லாம் வென்ற காட்டின் பல பகுதிகளை அரசபிரதிநிதிகளாக ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். புலியின் நிலமும் மீன்களிடம் சென்றது. புலி பாய முடியாமல் வலுவிழந்து போனது”.

சற்று அமைதியாக இருந்த சோழ மன்னன், “இனி புலி எழுவது…” என சொல்லும்போது மூன்றாம் இராசேந்திரனின் குரல் தழுதழுத்தது. அதை கவனியாமல் கதை கேட்டுக் கொண்டிருந்த சோழ இளவரசன் தந்தை தோள்மீதே உறங்கிவிட்டான்.

வீழ்ந்த புலி மீண்டும் எழும் என உறங்கி விட்டான். கதையில் புலிதான் வெற்றி பெற்றது என அனுமானித்து உறங்கிவிட்டான். கதை கேட்பவன் உறங்கினாலும், கதைப்பவன் உறங்கவில்லை. கதையும் உறங்கவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புலி மீண்டும் எழும்! பாயும்! புலி தரணி ஆளும்! தன் புகழை நிலைநாட்டும். தமிழ்நாடு எங்கும் புலிக்கொடி பறக்கும்’ என மூன்றாம் இராசேந்திரன் மனதிலும் ஓர் ஓரத்தில் அவா இருக்கவே செய்தது. அப்படியே அவன் கதையை முடிக்கவும் நினைத்தான். ஆனால் மகன் உறங்கி விட்டதால் நிறுத்திவிட்டான்.

இளவரசனின் தலையை வருடிக் கொடுத்தவன் இராஜராஜேச்சரத்தின் விமானத்தை மீண்டும் சற்று நேரம் நோக்கினான். மனதில் எதையோ வேண்டிக்கொண்டு கரம் கூப்பி வணங்கிவிட்டு சற்று தொலைவில் உள்ள மரம் ஒன்றைப் பார்த்து கைகாட்டி யாரையோ அழைத்தான்.

அந்தச் செயல் சோழ நாட்டுப் படைத்தலைவன் வளவனுக்கும் அவன் பின் நிற்கும் வேளைக்கார படையினருக்கும் குழப்பமாக இருந்தது.

‘தன்னையும் வேளைக்காரப் படையினரையும் தவிர்த்து வேறு யாரையும் மன்னர் அழைத்து வரவில்லையே? நாங்கள் இங்கு வருகை தந்ததும் யாருக்கும் தெரியாது! இப்போது மன்னர் யாரை அழைக்கிறார்?’ என்று வளவன் எண்ணும் போதே அவன் கண் முன் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி தென்பட்டார்.

இத்தனை நேரம் அவர் அங்குதான் மரத்திடம் இருந்திருக்கக் கூடும். இல்லையென்றால் சோழ மன்னன் கையசைத்து அழைத்ததும் மரத்தின் பின் இருந்து குடுகுடுவென விரைந்து ஓடி வருவாரா?

சோழ மன்னன் முன் வந்து நின்ற அந்த வயது முதிர்ந்த மூதாட்டி மன்னன் பாதத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு பிறகு எழுந்து கரம் கூப்பி “சோழ ராசா வருக, வணக்கம்..!” என்றார்.

“யாரம்மா ராசா..? நானா..?” என வறண்ட சிரிப்பு உதித்தது அவனிடம்.

“ராசா..! இந்த சோழ நாட்டுக்கே ராசாவாயிற்றே தாங்கள்..! நீங்கள் இல்லையென்றால் நாங்கள் எங்கே போவது..? கவலை வேண்டாம் ராசா காலம் பிறக்கும், காத்திருங்கள்..!”

“காலம் கருவிலேயே அழிந்துவிட்டது அம்மா..! இனி பிறக்க வாய்ப்பில்லை!”

“இல்லை ராசா இல்லை..! இந்தத் தமிழ்நிலம் தாயாக இருந்து நம்மைக் காப்பாள்..!”

“ஒரு சமயம் நான் தூய தமிழன் இல்லை என்பதால் காக்க மறுக்கிறாளோ?”* [பிற்காலச் சோழர்களில் அனைவரும் கீழை சாளுக்கிய மரபு கலந்த தெலுங்குச் சோழர்கள்]

“இல்லை ராசா! இல்லை..! நம்பிக்கையை இழக்க வேண்டாம். புண்பட்ட புலி உறங்குகிறது. விரைவில் அது எழும். அப்படி புலி எழுந்துவிட்டால் இந்த தமிழகமே நடுங்கும். பாண்டியர்களும், சேரர்களும் புலிக்கு அஞ்சி பணிவார்கள்”.

“ம்ம்ம்..! அரச குடும்பத்திற்கு மருத்துவராக பணி செய்து வந்த வம்சம் என்பதால் சோழர் குடி‌ மீது பாசம் மிகுதி போல தாயே. இதே பாசமும் பற்றும் என் மகன் இடத்திலும் காட்டுங்கள்” என தன் தோள் மீது உறங்கும் மகனை பார்த்து சொன்ன போது அவன் குரல் சற்று சோகம் கக்கியது.

“மகன் கதை கேட்காமல் உறங்க மாட்டான். நெய்ச்சோறு என்றால் விரும்பி உண்பான். எங்களைப் பற்றி ஏதேனும் கேட்டால் மரக்கலத்தில் சென்றிருப்பதாகச் சொல்லுங்கள்! நிலவைப் பிடித்துவரச் சென்றிருப்பதாகச் சொல்லுங்கள்!” என்றவன் இளவலுக்கு முத்தமிட்டுவிட்டு அந்த மூதாட்டியிடம் கொடுத்தான்.

அந்த மூதாட்டி சோழ இளவரசனை மிகக்கவனமாக பெற்று அவரது தோளில் கிடத்திக் கொண்டு முந்தானையால் இளவரசனை மூடினார். அதைக்கண்ட வளவன் மற்றும் வேளைக்காரப் படையினர் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

சோழ மன்னர் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து தஞ்சைக்கு இளவலைத் தாரை வார்ப்பதற்காகவே அழைத்து வந்துள்ளார் என நினைத்த வளவனுக்கு உள்ளம் திகைத்தது.

அதே திகைப்புடனே சில அடிகள் எடுத்து வைத்து முன் நிற்கும் அவர்களிடம் சென்று நின்றான் படைத் தலைவன் வளவன்.

வளவனைக் கண்ட மூதாட்டி, இளவலை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு அவனை முறைக்க… “நம் படைத்தலைவன் தான்!” என்றான் சோழ மன்னன்.

வளவன் அருகில் வந்து நின்றானே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

தன் கட்டளை இன்றி அவன் வாய்திறக்க விரும்ப மாட்டான் என்பதை அறிந்த சோழ மன்னனே பேசத் தொடங்கினான்.

“வளவா! என்ன பார்க்கிறாய்..? என்ன தெரிய வேண்டும்? ஆம்..! இனி இளவல் இந்த வீரம் விளைந்த தஞ்சையில் தான் வளரப் போகிறான்”.

“அரசே..! எதற்காக இந்த முடிவு..? நம்மைக் காட்டிலும் பத்திரமாக இளவலைப் பாதுகாக்க இந்த வயது முதிர்ந்த மூதாட்டியால் முடியுமா..?”

“பாதுகாத்து என்ன செய்வது வளவா?..”

வளவன் ஏதும் பேசவில்லை. மன்னர் கேட்ட வினாவிற்கு அவரிடமே விடை எதிர்பார்த்தான்.

“நம்மோடு வளர்ந்தால் இவனது தந்தையான என்னைப் பார்த்து வளர்வான். போருக்குச் செல்லாமல் அரண்மனையில் அமர்ந்திருக்கும் தந்தையைப் பார்த்து வளர்வான். பாண்டியப் பேரரசுக்கு அடங்கி ஆண்டு தோறும் கப்பம் கட்டிக் கொண்டிருக்கும் தந்தையை பார்த்து வளர்வான். என் மகன் கோழை ஆகிவிடக்கூடாது..! வீரம் அறியாதவன் ஆகிவிடக்கூடாது. இளவரசனுக்கு உரிய சுகபோகங்களில் திளைத்து விழுந்துவிடக் கூடாது.”

“அரசே, நம் அரசியாருக்கு இது தெரிந்தால் மிகவும் வருந்துவார்! வேண்டாம் அரசே சற்று மறுபரிசீலனை செய்து பாருங்கள்!”

“அனுமதி பெற்றாகிவிட்டது வளவா! இவன் தாயாரின் அனுமதியுடன் தான் இந்த முடிவுக்கு வந்தேன்” என்ற சோழ மன்னன் மூன்றாம் இராசேந்திரன் அந்த மூதாட்டியை பார்த்து, “இளவல் பத்திரம்” என்றான். அதன் பிறகு எதையோ நினைவுகூர்ந்தவனாக சோழ மன்னன் கையசைத்ததும் வேளைக்கார படையின் தலைவன் அரசனை வந்து வணங்க அவனிடம் “எடுத்து வா!” என்றான் சோழ மன்னன்.

வேளைக்கார படையின் தலைவன் தேரை அடைந்து பிற வேளைக்காரப் படை வீரர்களுடன் சேர்ந்து தேரினுளிருந்து ஆளுக்கு ஒரு மூட்டையை தூக்கி வந்து அரசன் முன் வைத்துவிட்டு பணிந்து நிற்க, அவர்களுக்கு ஆசி கொடுத்து அனுப்பினான் சோழ மன்னன். அவர்கள் வளவன் பின் சென்று நின்றுகொண்டனர்.

சோழ மன்னன் தன் உடைவாளை உருவி ஒரு மூட்டையை சிறிதாக கிழித்து காட்டினான். அதில் பொற்காசுகள் மினுமினுத்தன.

“இவை போதுமா தாயே?” மூதாட்டியை பார்த்து கேட்டான் அவன்.

அவன் செயலை புரிந்துக் கொண்டவராக, “ராசா இளவலை வளர்ப்பதே எனக்கு கிடைத்த பெரும் நல்வினை. எத்தனை பிறப்பில் செய்த புண்ணியமோ இது எனக்கு கிட்டியது. சோழ வம்சம் விருத்தியடையும். என்னை நம்புங்கள். இவை வேண்டாம் ராசா! இவற்றைப் பார்த்தாலே அச்சம் வருகிறது” என்று மூட்டையை பார்த்தார் அந்த மூதாட்டி.

சோக முறுவலுடன் “நினைத்தேன் தாயே! தாங்கள் இதைத் தான் மொழிவீர்கள் என நினைத்தேன்!” என்றவன்

“மகன் குடிகளோடு குடிகளாக வளரட்டும். அவனுக்கு சுகபோக போதையை காட்டிவிட வேண்டாம். சிவ பக்தனாக வளருங்கள். அப்போதுதான் ஒழுக்கமாக இருப்பான்”. எனப் பெருமூச்சு விட்டுவிட்டு கையில் அணிந்திருந்த அனைத்து மோதிரங்களையும் கழட்டி அவரிடம் நீட்டினான்.

“இதையாவது பெற்றுக்கொள்ளுங்கள் என் ஞாபகமாக மகனிடம் இருக்கட்டும்”.

மூதாட்டி அவற்றை தன் முந்தானையை விரித்து பெற்றுக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு “நீங்கள் செல்லலாம்” என விடை கொடுத்தான் சோழ மன்னன்.

“சரி ராசா வருகிறேன்!” என வணங்கிவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் சோழ இளவலின் தலையை பிடித்து அணைத்தபடியே அந்த மூதாட்டி கிளம்பினார்.

பல வருடங்களாகத் தவமிருந்து பெற்ற பிள்ளை. சோழ அரியணையை அலங்கரிக்க வேண்டிய பிள்ளை. இனி யாரோ ஒருவனாக வளரப் போகிறான் என்பதை எண்ணி மூன்றாம் இராசேந்திரனின் கண்கள் கலங்கின.

அவன் உள்ளம் கவ்வியது. துக்கம் மூச்சை அடைத்தது. மகன் இருளில் மறைந்து விட்டான். கண்களில் இருந்து அகன்று விட்டான். இனி அவனைப் பார்ப்பதாக இல்லை என எடுத்திருந்த உறுதி கோடாரியாக சோழ மன்னனின் நெஞ்சைத் தாக்கியது. அதற்கு மேல் அடக்க முடியவில்லை அவனால். கோபம் ஏறியது. துக்கம் ஏறியது. சோகம் ஏறியது. தன் மொத்த உணர்ச்சிகளையும் எதிரே வீற்றிருக்கும் பெருவுடையாரின் மீது திருப்பியவனின் துடிக்கும் உதடுகளில் இருந்து நெருப்பென வார்த்தைகள் வெளிவந்தன

“பெருவுடையாரே!!!! என் நிலையை பாருமையா! சோழ மன்னனின் நிலையை பாருமையா! உன்னை காலம் காலமாக வணங்கி உனக்கென்று பல ஆலயங்களை எழுப்பி சிவப்பணி செய்த வம்சத்தின் வழித்தோன்றலின் இழிநிலையை பாருமையா! சிறிதேனும் நன்றி உணர்வு இருந்திருந்தால் சோழர் குடியின் இந்நிலையை பார்த்து வருந்துமையா!” என்று சற்று சத்தமாக கத்தினான் கண்ணீருடன்.

அதைக் கண்ட பிறகு அவன்பின் நின்றிருக்கும் படைத்தலைவன் வளவன் மற்றும் வேளைக்கார படையினரின் கண்களும் கலங்காமல் இல்லை.

தன் மன்னனுக்கு ஏற்பட்ட நிலையையும் அதற்காக அவன் இப்போது புலம்புவதையும் பார்த்தவர்களுக்கு அடி மனதை கிழித்துக் கொண்டு துக்கம் எழவே செய்தது.

“சிவபாதசேகரன்! என் முப்பாட்டன் இராஜராஜ சோழன் எடுப்பித்த இக் கற்றளியில் சுகமாக வீற்றிருக்கும் நீ! பிள்ளை வாடுவதைக் கண்டு மனம் இரங்க மாட்டாயா? என் சோழர் குடியைக் காக்க மாட்டாயா? உன் கருணைக் காற்றை சோழ நாட்டிற்குள் வீச மாட்டாயா?” என இருகரம் கூப்பி தன் முகத்தில் புதைத்து அழும் முக பாவனையுடன் பெருமூச்சு விட்டான் அவன்.

பிறகு கையை எடுத்து கற்றளியை பார்த்து மீண்டும் பேசத் தொடர்ந்தான்

“இதோ திறையாண்டு நெருங்கிவிட்டது! பாண்டிய மன்னன் குலசேகரனுக்கு சோழநாடு கப்பம் செலுத்த வேண்டும்! அதனுடன் சேர்த்து என் மானத்தையும் நான் கொடுத்து அனுப்ப வேண்டும். இந்த இழிநிலையை போக்க படையும் இல்லை, வீர உடையும் இல்லை! இதோ என் மகன்! வருங்காலச் சோழ அரசன்! எப்படிச் செல்கிறான் பார்த்தாயா? சீராட்டி பாலூட்டி வளர்த்த பிள்ளையுடன் வாழக்கூட கொடுத்து வைத்திருக்கவில்லையே! அப்படி நான் என்ன பாவம் செய்தேன்? நான் என்ன பாவம் செய்தேன்? நீ கடவுளா! இல்லை கல்லா!? நான் என்ன பாவம் செய்தேன்?” எனக் கத்தியவன் அதற்கு மேல் பேச சக்தி அற்றவனாய் நிலத்தில் மண்டியிட்டு தலை குனிந்து கதறி அழுதான்.

அவன் அவ்வாறு அழுவதைக்கண்ட வேளைக்கார படையினரும் விரைந்தோடி வந்து அவனை சூழ்ந்து மண்டியிட்டு தலையிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு கதறினார்கள்.

சோழ நாட்டின் படைத் தலைவனான வளவனுக்கு அதைக் கண்டு கண்ணீர் காவிரி போல் கரைபுரண்டது.

அழுதுகொண்டிருந்த சோழ மன்னன் மூன்றாம் இராசேந்திரன் திடீரென பொத்தென்று மூச்சயர்ந்து மயங்கிவிட, பதறிப்போன வேளைக்காரப் படையினர் அவனைத் தாங்க விரைந்தார்கள்.

வளவனும் சோழ மன்னனை நோக்கி ஓடினான்.

–தங்கமீன் இன்னும் நீந்தும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...