களை எடுக்கும் கலை – 5 | கோகுல பிரகாஷ்
அத்தியாயம் – 5
ஆட்டோவில் இருந்து இறங்கிய சதாசிவத்தின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. அவர் அருகில் வந்த ராம்குமார், “என்ன சார், எங்களை நீங்க எதிர்பார்க்கலைல…?” என்று கேட்டதும், என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றார் சதாசிவம்.
அருகில் இருந்த காத்தவராயன், “சார், நான் ஹாஸ்பிடல் போயிட்டு வரும் போது, வழியில சதாசிவம் சார், ஆட்டோல வந்துட்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் நிறுத்தி ஆட்டோல ஏத்திக்கிட்டார்…” என்றான்.
“அப்படியா…? காத்தவராயன் சொல்லுறது உண்மையா…?” என்று கேட்டார் ராம்குமார், சதாசிவத்தை நோக்கி.
“ஆமாம் சார்… ஒரு வேலையா வெளியே போயிட்டு, திரும்பி வந்துட்டு இருந்தேன். வழியில காத்தவராயன் நடந்து வர்றதைப் பார்த்துட்டு, அவனையும் வண்டியில ஏத்திக்கிட்டு வந்தேன்…” என்றார் சதாசிவம்.
“ஆச்சர்யமா இருக்கே…?”
“இதுல ஆச்சர்யப்பட என்ன சார் இருக்கு…?”
“இந்தக் கொலை வழக்குல காத்தவராயன் மேல சந்தேகம் இருக்குன்னு சொன்னவரே நீங்கதான்… இப்போ அவன் கூடவே ஒன்னா வந்துட்டு இருக்கீங்க…”
“வாஸ்தவம்தான். எங்க ஏரியாவில இருக்குற ஆளு. வழியில பார்த்தேன். நடந்து வரானேன்னு வண்டியில ஏத்திக்கிட்டேன். அதுல என்ன தப்பு…?”
“லிப்ட் கொடுக்குறது ரொம்ப நல்ல விஷயம்தான், தப்பில்லை. ஆனா, காத்தவராயனைப் பார்த்தாலே அருவெறுப்பாக நினைக்குற நீங்க, அவன் இந்தக் கொலையை பண்ணியிருப்பானோன்னு சந்தேகப்பட்டு என்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ண நீங்க, இப்போ அவனுக்கு லிப்ட் கொடுத்து கூப்பிட்டு வந்ததுதான் சந்தேகமா இருக்கு.”
“சார், நான் அவன்மேல சந்தேகப்பட்டதும் உண்மைதான்; அதை உங்ககிட்ட சொன்னதும் உண்மைதான். ஆனா இப்போ நீங்க என் மேலேயே சந்தேகப்படுறது என்ன நியாயம்…?”
“நீங்க அவனை பார்க்கும் போதெல்லாம் அருவெறுப்பா நெனைச்சது, அவன்கிட்ட எரிஞ்சு விழுந்ததெல்லாம் உண்மையா இல்லையா…?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே… உங்களுக்கு யாரு சொன்னா…?”
ராம்குமாரின் பார்வை இப்போது காத்தவராயன் பக்கம் திரும்ப, சங்கடத்துடன் “நான் தான் சார் சொன்னேன்…” என்றான் காத்தவராயன்.
“இப்போ என்ன பதில் சொல்லப் போறீங்க…?” என்ற ராம்குமாரின் கேள்விக்கு, “சார், தேவையில்லாம அடிக்கடி அப்பார்ட்மெண்ட்-க்கு உள்ளே வரானேன்னு ஏதோ கோபத்துல பேசியிருப்பேன். அதை மனசுல வச்சிட்டு சொல்லியிருக்கான்… வேற ஒன்னுமில்லை…” என்று சொல்லும்போது சதாசிவத்தின் குரலில் ‘யாரை குறை சொன்னோமோ அவன் முன்னிலையிலேயே கேட்கிறாரே’ என்கிற தர்மசங்கடம் தெரிந்தது.
“அதுக்கும் இப்போ நீங்க என்னை சந்தேகப்படுறதுக்கும் என்ன சார் சம்பந்தம் இருக்கு…” என்று கேட்டார் சதாசிவம் விடாக்கொண்டனாக.
“அட இருங்க… இருங்க… இருங்க… நான் இப்போ உங்களை சந்தேகப்படுறதாவே சொல்லலையே… இது சும்மா விசாரணைதான். சந்தேகப்பட்ட ஆள் கூடவே ஒன்னாப் போறீங்களே, என்ன விஷயம்னு கேட்டேன். அவ்வளவுதான். அமைதியா இருங்க… உணர்ச்சி வசப்பட வேண்டாம்.”
“அதுக்காக ஒரு ரிடைர்டு கவெர்மென்ட் ஆபிசர்-ன்னு கூடப் பார்க்காம இப்படி ரோட்டில் வச்சு விசாரணை பண்ணுறது நல்லாவா இருக்கு…?” சதாசிவத்தின் குரலில் உஷ்ணம் கூடியிருந்தது.
“காரணம் இருக்கு மிஸ்டர். நல்லசிவம்…”
“சாரி… என்பேரு நல்லசிவம் இல்லை. சதாசிவம்.”
“சரி ஏதோ ஒரு சிவம்.”
“காரணம் இருக்குன்னு சொன்னீங்களே, என்னக் காரணம்னு சொல்ல முடியுமா…?”
“அதை நீங்க சொல்றீங்களா, இல்லை நான் சொல்லட்டுமா கதிர்…?” என்றார் ராம்குமார் அருகில் நின்ற கதிரவனிடம்.
“வெளியில ஏதோ வேலையா வந்தேன்னு சொன்னீங்களே… என்ன வேலைன்னு தெரிஞ்சிக்கலாமா…?” என்றுக் கேட்ட கதிரவனிடம், சற்றுத் தயங்கியபடி “போஸ்ட் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்தேன்.” என்றார் சதாசிவம்.
“அப்படியா…? நீங்க வேற எங்கேயும் போகலையா…?”
“இல்லை… நான் வேற எங்கேயும் போகலை…”
“ஆனா போஸ்ட் ஆபீஸ் நம்ம போலீஸ் ஸ்டேஷன் பக்கம் இல்லையே…?”
“நீங்க என்ன சொல்லுறீங்கன்னு எனக்கு புரியல…?”
“நிச்சயம் புரிஞ்சிருக்கும்… இப்போதான் நீங்க பொய் சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க…”
“பொய்யா… நானா…? இல்லை… எதனால நான் பொய் சொல்லுறேன்னு சொல்லுறீங்க…?”
“ஏன்னா கதிரவன் உங்களை ஸ்டேஷன் பக்கத்துல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்திருக்கார்.” என்று குறுக்கிட்டார் இன்ஸ்பெக்டர் ராம்குமார்.
“அது போஸ்ட் ஆபீஸ் போகும்போது அந்தப் பக்கமா போனேன். அவ்வளவுதான்.”
“ஆனா இந்தப் பக்கமா போகணும்னு அவசியம் இல்லையே…? ஒரு பொய் சொல்ல ஆரம்பிச்சீங்க… இப்போ வரிசையா பொய் சொல்லிட்டு இருக்கீங்க…”
“அது… அது வந்து…”
“கதிர், மனுஷன் பொய் பேச ஆரம்பிச்சிட்டார். என்ன பண்ணலாம்…?”
“இங்க கேட்டா உண்மைய சொல்ல மாட்டார். ஸ்டேஷன்-க்கு கொண்டு போயிடலாம் சார்.”
“சார், ஸ்டேஷனுக்குலாம் வேண்டாம் சார். நான் உண்மைய சொல்லிடுறேன்.”
“அப்படி வாங்க வழிக்கு… சொல்லுங்க…”
“பரந்தாமன் எனக்கு நெருங்கிய நண்பர்ன்றதால கேஸ் எந்த லெவெல்ல இருக்கு… குற்றவாளியை கண்டுபுடிச்சிட்டீங்களான்னு, பார்க்கதான் வந்தேன்.”
“அடடே… அவ்ளோ பக்கத்துல வந்தவர், உள்ளே வந்துருந்தா, எங்ககிட்டயே கேட்டுத் தெரிஞ்சிருக்கலாமே…?”
“ஒரு சின்னத் தயக்கம்தான்… அதுமட்டும் இல்லை, காத்தவராயனை தேவை இல்லாமல் மாட்டி விட்டுட்டமோன்னு ஒரு சின்ன நெருடல், அதான்.”
“என்ன கதிர், நம்புற மாதிரி இருக்கா…?”
“நம்பலாம் சார்… நம்புற மாதிரிதான் சொல்லியிருக்கார்…”
“சார், நீங்க ரெண்டுபேரும் பேசுறதைப் பார்த்தா, இன்னும் என்னை சந்தேகப்படுற மாதிரிதான் தோணுது…”
“அட… நாங்க போலீஸ்காரங்க… கட்டுன பொண்டாட்டியக் கூட சந்தேகப்படுவோம். இப்போ நீங்கப் போகலாம்.” என்று ராம்குமார் சொன்னதும், விட்டால் போதும் என்று ஆட்டோவில் ஏறினார் சதாசிவம்.
ஆட்டோவில் இருந்தபடியே காத்தவராயனை நோக்கி கையசைக்க, அவன் “வேண்டாம் சார். இனிமே பக்கம்தானே… நான் நடந்தே போய்க்கிறேன்…” என்றான்.
சதாசிவம் ஏறிய ஆட்டோ வேகம் எடுக்க, இப்போது காத்தவராயன் “சார் நானும் அப்படியே கிளம்புறேன்…” என்றான் பம்மியவாறே.
“அட… ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துருக்க… உன்னை நலம் விசாரிக்காம விட்டா எப்படி…? டாக்டர் என்ன சொன்னாரு…?” இது ராம்குமார்.
“ஒன்னும் சொல்லல சார். மருந்து போட்டு அனுப்பிட்டாரு… நான் போலாமா சார்…?”
“அதுக்குள்ளே என்ன அவசரம்…? சதாசிவம் உன்கிட்ட என்னப் பேசுனாருன்னு நாங்க தெரிஞ்சிக்க வேண்டாமா…?” இது கதிரவன்.
“ரெண்டுபேரும் இப்படி மாத்தி மாத்தி கேள்வி கேட்டீங்கன்னா எனக்கு படபடன்னு வருது. மயக்கம் வர்ற மாதிரி இருக்கு…”
“அரசியல்வாதியை அரெஸ்ட் பண்ணப் போனா, நெஞ்சுவலி வர்ற மாதிரி, உனக்கு மயக்கம் வருதா…?” என்று கேட்டார் ராம்குமார்.
“சார், அரெஸ்டா வேணாம் சார்… நான் கொலைப் பண்ணல…” என்று நடுங்கியவாறே பதிலளித்தான் காத்தவராயன்.
“சும்மா ஒரு உதாரணத்துக்கு சொன்னேன். பயப்படாதே…”
இதைக்கேட்டு காத்தவராயன் ஏதோ முணுமுணுக்க, “என்ன சொன்ன…?” என்று கேட்டார் ராம்குமார்.
“ஒன்னும் இல்லை சார். பேசாம நான் சதாசிவம் கூடவே ஆட்டோவுல போயிருக்கலாம்னு சொன்னேன்…”
இதைக்கேட்டு சத்தமாக சிரித்தார் ராம்குமார்.
“சதாசிவம் உன்கிட்ட என்னப் பேசினாருன்னு சொல்லிட்டு, நீ போய்கிட்டே இருக்கலாம்…” மீண்டும் கதிரவன்.
“ஸ்டேஷன்ல என்னக் கேட்டாங்க, என்ன, ஏதுன்னு கேட்டுட்டு இருந்தார். நான் சொல்லிக்கிட்டு வரும்போதே நீங்க மடக்கிட்டீங்க…”
“அவர் உன்னை மாட்டிவிட்டாரேன்னு அவர் மேல உனக்கு கோபம் வரலையா…?”
“நான் கோபப்பட்டு என்ன ஆகப்போகுது சார்…? விதியேன்னு விட்டுட்டேன்.”
“சரி, நீ போகலாம்… கதிர் டிரைவரை வண்டியை எடுக்கச் சொல்லு…” என்றவாறே காரில் ஏறினார் ராம்குமார்.
அவர்களின் வாகனம் மறைந்ததும், வேகவேகமாக நடக்கத் தொடங்கிய காத்தவராயனை, அந்தத் தெருவின் கடைசியில் இருந்த சந்தில் இருந்து விரைந்து வந்த ஆட்டோ வழிமறித்தது.
ஆட்டோவிற்கு உள்ளே இருந்து கை அசைத்துக் கூப்பிட்டார் சதாசிவம்.
விதியே என்று மீண்டும் ஆட்டோவில் ஏறினான் காத்தவராயன்.
தனது பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வந்த கதிரவன், வந்ததும் வராததுமாய் “நேத்து என்ன சார், அப்படி ஒரு வார்த்தையை சொல்லிட்டீங்க…?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் ராம்குமாரிடம்.
“என்ன கதிர், நீங்க கேட்குறது ஒன்னும் புரியலையே… என்ன சொன்னேன்… யார்கிட்ட சொன்னேன்… நீங்க வந்ததும் வராததுமா கேட்குறத பார்த்தா… நான் ஏதோ தப்பா சொல்லிட்ட மாதிரி தெரியுதே…?”
“நீங்க சொன்னதை கேட்டதுல இருந்து எனக்கு ராத்திரியெல்லாம் தூக்கமே வரலை சார்…”
“பீடிகை எல்லாம் பயங்கரமா இருக்கே… அப்படி நான் என்ன சொல்லிட்டேன்…?”
“நேத்து சதாசிவத்தை விசாரிக்கும்போது, ‘நாங்க போலீஸ்காரங்க… கட்டுன பொண்டாட்டியக் கூட சந்தேகப்படுவோம்’னு சொன்னீங்களே…?”
“ஆமாம். அதுல என்ன இருக்கு…?”
“என்ன சார், அப்படி சொல்லிட்டீங்க… கட்டுன பொண்டாட்டிய சந்தேகப்படுறவன் எப்படி ஒரு நல்ல மனுஷனா இருக்க முடியும்…?”
“ஸ்ஸ்ஸ்… இதுதான் விஷயமா…? நீங்கத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க கதிர்…”
“என்ன சார் சொல்லுறீங்க… நீங்க சொன்னது சரின்னு சொல்ல வரீங்களா…?”
“ஆமாம். நான் சொன்னது ஒரு அர்த்தத்தில். நீங்க புரிஞ்சிகிட்டது வேற அர்த்தத்தில்…”
“புரியலையே…?”
“நான் சொல்ல வந்தது என்னன்னா, ஒரு வழக்குல மனைவி மேல சந்தேகப்படுற மாதிரி சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்தா, மனைவியையும் சந்தேகப் பட்டியல்ல கொண்டு வரத்தான் செய்வோம். மனைவின்றதால காப்பாத்த முயற்சி செய்ய மாட்டோம்னு சொல்ல வந்தேன்…”
“இப்போ புரியுது சார்… நான்தான் தப்பா புரிஞ்சிகிட்டேன்.”
“இதுக்காகவா ராத்திரியெல்லாம் தூங்காம இருந்தீங்க…?”
“என்ன இருந்தாலும், நாமளும் சாதாரண மனுஷங்கதான சார்…?”
“இப்போ புரிஞ்சிடுச்சுல…?”
“எஸ் சார்…”
“இன்னும் வேற ஏதாவது கேட்கனும்னு இருக்கா…?”
“ஹ்ம்ம்… நேத்து நாம சதாசிவத்துகிட்ட ரொம்ப கடுமையா நடந்துகிட்டோமோன்னு தோணுச்சி…”
“கதிர், நாம எப்படியாவது குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். உண்மையை வரவைக்க கொஞ்சம் கடுமையாத்தான் நடந்துக்க வேண்டியிருக்கும். ஏன்னா நாம போலீஸ்காரங்க… கட்டுன பொண்டாட்டியைக் கூட…”
“புரிஞ்சுது சார்… நோ மோர் கொஸ்டீன்ஸ்…”
“ஹாஹாஹா…” ராம்குமாரின் சிரிப்பை கேலி செய்வது போல், டெலிபோன் அலற ஆரம்பித்தது…
“என் சிரிப்பு என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கு…? போன் கூட இப்படி அலறுதே…” என்று சொல்லியவாறே போனை எடுத்து பேசத் தொடங்கினார்.
“ஹலோ… இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஸ்பீக்கிங்…”
“…….”
“ஓகே சார்… நான் உடனே புறப்பட்டு வரேன்…”
போனை வைத்தவுடன், “கதிர், எஸ்பி ஆபீஸ்ல இருந்து போன். என்னை உடனே புறப்பட்டு வரச் சொல்லுறாங்க…”
“ஓகே சார்… நான் ஸ்டேஷனை பார்த்துக்குறேன்…”
“இந்தக் கொலை சம்பந்தமா விசாரிக்கத்தான் வரச் சொல்லியிருப்பாங்கன்னு நினைக்குறேன். நீங்க இந்தக் கேஸ் சம்பந்தப்பட்ட ரிப்போர்ட்ஸ் எல்லாம் என்னோட மொபைலுக்கு அனுப்பிடுங்க…”
“ஒரிஜினல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் இங்கதான் சார் இருக்கு… நீங்க அதையே எடுத்துட்டு போலாமே…?”
“எதுக்கு வரச்சொல்லி இருக்காங்கன்னு தெரியலை… தேவையில்லாம நாமலே போய்த் தலையை கொடுத்துடக் கூடாது…”
“ஓகே சார்… நான் உங்க மொபைலுக்கே அனுப்புறேன்…”
தன் தொப்பியை எடுத்து தலைக்கு கொடுத்தவாறே “டிரைவர்…” என்று குரல் கொடுத்துக்கொண்டே வெளியே செல்ல முயன்ற ராம்குமார், தொலைபேசி தன் அமைதியை கலைத்துக் கொண்டு கனைக்க ஆரம்பித்ததும், மீண்டும் உள்ளே வந்தார்.
ராம்குமார் மீண்டும் வருவதைக் கண்ட கதிரவன், தொலைபேசி ரிசீவரை எடுத்து அவர் கையில் கொடுத்தார்…
“ஹலோ… இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஸ்பீக்கிங்…”
“…….”
“எப்போ…?”
“…….”
“சரி நாங்க உடனே வர்றோம்…”
ரிசீவரை வைத்தவர் தலையைப் பிடித்தவாறே, “கதிர், மீண்டும் ஒரு கொலை…” என்றார்.
“ஓ! எந்த ஏரியா சார்…?”
“பரந்தாமன் இருந்த அதே அப்பார்ட்மென்ட்ல தான்…”
“சார்… இப்போ எனக்கு சதாசிவம் மேலத்தான் சந்தேகம் அதிகமாகுது… அவர் இருக்குற அப்பார்ட்மென்ட். சிசிடிவி அவர் கட்டுப்பாட்டுல தான் இருக்கு. அவரே யாரையாவது செட் பண்ணி ஹேக் பண்ண வச்சிட்டு, இந்த வேலையை எல்லாம் செய்றார்ன்னு நினைக்குறேன். நான் அங்கே போய் பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிட்டு வரும்போது சதாசிவத்தை கையோட ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வந்துடறேன் சார்…”
“எனக்கு சதாசிவம் மேல சந்தேகமே இல்லை கதிர்…”
“எப்படி சார் அவ்வளவு உறுதியா சொல்லுறீங்க…?”
“கதிர், கொலை செஞ்சது சதாசிவம் இல்லை… ஏன்னா…”
“ஏன் சார்…?”
“ஏன்னா… ”
அந்த பதில் அதிர்ச்சியாக இருந்தது…
களை கலைவது தொடரும்