சிவகங்கையின் வீரமங்கை – 2 | ஜெயஸ்ரீ அனந்த்
கோட்டை வாசலை தாண்டி அரண்மனை வாசலை அடைந்த குதிரை தன் வேகத்தை நிறுத்தியது. இந்த இடத்தில் நாம் குதிரையில் வந்த வீரனை பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். இவனது பெயர் சிவக்கொழுந்து. சிவகங்கை சீமை சசிவர்ண தேவரின் பட்டோலை எழுதும் வேளாண் குடிமக்களின் தலைவன். அரசாங்க முக்கிய பொறுப்பில் இருப்பவன். குதிரையேற்றம், வாள், வில் கலைகளில் தேர்ச்சி பெற்றவன். பராக்ரமசாலி. சசிவர்ண தேவரின் அன்பிற்கு உரியவன்.
குதிரையில் வந்தவனை தடுத்து நிறுத்தி, “யாரப்பா நீ?” என்றபடி அரண்மனையிலிருந்து வெளியே வந்த படைத் தளபதி லிங்கபதி கேட்டார்.
“நான் சிவ கொழுந்து சிவகங்கையிலிருந்து முக்கிய விடயம் தரித்த ஓலையுடன் வந்துள்ளேன். அரசரை காண வேண்டும். “
“என்ன விவரம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா..”
“தங்களுக்கே தெரியும் இது அரசாங்க செய்தி. இது முறையானவரிடத்தில் மட்டுமே சொல்லக் கூடிய செய்தி”
“நானும் அரசாங்கத்தில் ஒருவரே. எந்த முக்கியமான விடயமாக இருந்தாலும் எனக்கு தெரிய வந்து விடும் என்று உனக்கே தெரியும். அதனால்… ” என்று கூறியவர் சற்றும் தாமதிக்காமல் அவன் இடுப்பில் செருகியிருந்த பட்டோலை தாங்கிய உறையினை அவன் அனுமதியின்றி உருவி அந்த செய்தியை படித்தார். திடீரென அவர் முகத்தில் பல மாறுதல்கள். அதனை என்னவென்று அறிந்து கொள்ள, அவரின் எண்ணத்தின் ஒட்டத்தை தெரிந்து கொள்ள சிவ கொழுந்தால் இயலவில்லை.
மறுபடி ஓலையை சுருட்டி அவன் இடுப்பில் செருகியவர் அவன் மீது அழுத்தமான பார்வை ஒன்றை பதித்தார். “ம்ஹூம். எல்லாம் ஈசனின் செயல். அவன் ஒன்று நினைத்தால் மாற்றுவார் எவரோ? ” என்று கூறி சற்று நிதானித்தவர்.
“சரிப்பா உன் முத்திரை மோதிரத்தை என்னிடம் தருவித்து விட்டு நீ செல்லலாம் .” என்றார்.
சிவ கொழுந்து தன்னிடமிருந்த இளஞ்சினையை லிங்கபதியிடம் கொடுத்து விட்டு அரண்மனைக்குள் பிரவேசித்தான். அவனுடன் ஆயுதம் ஏந்திய மெய்காப்பாளர் சிலர் அவனுடன் சென்றனர். அதற்குள் பணியாளன் ஒருவன் சிவ கொழுந்தின் குதிரையை கூட்டி சென்று லாடத்தில் கட்டி வைத்தான்.
அரண்மனை உள்ளே பிரவேசித்த சிவ கொழுந்துக்கு ஆச்சர்யம் தாளவில்லை. நாயகர் மஹாலை போன்று இந்தோச ரசனிக் பாணியில் வடிவமைக்கபட்டிருந்து. மேற்கூரையில் புராணங்களை கூறும் ஓவியங்கள். தனித்தனி மண்டபங்கள். பெரிய பெரிய தூண்கள் . “ஆஹா.. அற்புதம் … இதல்லவோ அரண்மனை “அவனை அறியாமலேயே சிவகொழுந்து வாயை பிளந்தபடி பார்த்து கொண்டு வந்தான். ஒவ்வொரு தூண்களை தாண்டும் பொழுதும் நடையினில் ஏற்பட்ட ஒலியின் அளவு வேறுபட்டது. அதை ஊர்ஜிதபடுத்த மெதுவாக அடிமேல் அடி வைத்து நடக்கலானான். மேல் தளத்தில் எவ்விடத்தில் நின்று பார்த்தாலும் அரண்மனையின் நுழைவாயில் நன்கு தெரியும்படி கட்டப்பட்டிருந்தது. ஆள் உயர சிற்பங்கள் ஓவியங்கள் என்று தனித்திறமை பெற்றிருந்தது.
மெய்காப்பாளர் சிவகொழுந்தை விருந்தினர் மண்டபத்தின் முன் கொண்டு சென்று நிறுத்தினார். சிவகொழுந்து தனக்கு மேலிட்ட ஆர்வ கோளாரால் சற்றே அந்த மண்டபத்தை எட்டி பார்த்த சமயம் பின்னாலிருந்து ஒரு கை அவனின் தோளின் மீது சற்று அழுத்தமாக விழுந்தது . எதிர்பாராத இத்தருணம் அவனை சற்றே திகிலடைய செய்தது. பயத்துடன் மெதுவாக திரும்பிப் பார்த்த சிவக்கொழுந்துக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. “எதிரில் நிற்பவர்… எதிரில் நிற்பவர் … ” என்றபடி வாய் முணுமுணுக்க சற்றே நினைவு தப்பி மெய்காப்பாளரின் மேல் சரிந்தான்.
இதை சற்றே ரசித்தபடி எதிரில் நின்ற மங்கை சாட்சாத் வேலுநாச்சியாரே தான். கார்மேகத்தை ஒத்த நிறத்தை கொண்டவளின் கைகள் வேல்பிடித்து உரமேறி இருந்தது. முழு தாமரை போல் மலர்ந்த முகத்தில் கரு வண்டுகள் ஒத்த கண்கள் கூர் அம்பு பார்வையை கொண்டிருந்தது. அதனால், வில்லைப் போல புருவம் வளைந்திருந்தது. பிறை நிலவாய் இருந்த நெற்றியில் நடுவில் இருந்த திலகத்தில் அவள் பெண்மை ஒளிந்திருந்தது. நடையில் அன்னத்தின் அழகையும் சிங்கத்தின் கம்பீரத்தையும் பெற்றிருந்தாள். ஆடை அணிகலன்களின் நேர்த்தியில் இளவரசியின் கம்பீரத்தை பெற்றிருந்தாள். மொத்தத்தில் மதி முகம் கொண்ட அழகி அவள்.
மூர்சையடைந்து சரிந்த அவனை கண்டு சற்றே நகைத்தவள், “யார் இவர்?” என்றாள்.
“சிவகங்கையிலிருந்து செய்தி கொண்டு வந்த வேளாண் குடிமக்களின் தலைவன் சிவ கொழுந்து .”
“ஹ ஹா ஹா .. .. சிவ கொழுந்து … நல்ல பெயர் .இவரை விருந்தினர் அரண்மனைக்கு கூட்டி செல்லுங்கள். ஓய்வெடுத்துக் கொள்ளட்டும். நான் அனுமதிக்கும் வரை இவர் திரும்பி செல்ல வேண்டாம்” என்றவள் அவனின் இடுப்பில் இருந்த பட்டோலையை உருவிக்கொண்டாள்.
மெய்காப்பாளர்கள் இளவரசியின் முன் அரை மண்டியிட்டு மரியாதை செலுத்திய பின் சிவகொழுந்தை கூட்டி சென்றனர்.
உரையினை பிரித்து படித்த நாச்சியார் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டிருந்தார்.
“தந்தையே ….” என்று அழைத்தவாறு அரண்மனையின் ஒரு புறம் அமைந்திருந்த உப்பரிக்கை நோக்கி சென்றாள். உப்பரிக்கைக்கு அருகினில் இருந்த தியான மண்டபத்தில் இரு கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார் அரசர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி. தீவீர சிவ பக்தர் வீர தீர பராக்ரமசாலி. முற்போக்கு சிந்தனை வாதி . தனக்கு ஆண் வாரிசு இல்லை என்ற குறை தெரியாமலிருக்க வேலுநாச்சியாரை ஒரு ஆண் பிள்ளை போல் வளர்த்து வந்தார். பெயருக்கு தான் அரசரே தவிற அத்தனை ராஜாங்க விடயத்தில் வேலுநாச்சியாரின் அனுமதியின்றி அவர் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.
இளவரசியின் குரல் கேட்டு தியானத்திலிருந்து கலைந்தவராய் நாச்சியாரை கண்டு புன்னுறுவல் பூத்தார்.
“தந்தையே, சசிவர்ண பெரியப்பாவிடமிருந்து தான் தகவல் வந்துள்ளது. அவர் உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளதாகவும், பவானியின் ஆட்கள் ஊருக்குள் ஊடுறுவி இருப்பதாகவும் செய்தி வந்துள்ளது” என்றார் இளவரசி.
ஒலையை வாசித்த செல்லமுத்துவிற்கு முகத்தில் சற்றே வருத்தம் தெரிந்தது. “சசிவர்ணன் உடல் நலம் குன்றியதற்கு காரணம் வெள்ளிக்குறிச்சி ஆளுநர் பதவி போனதுதான்.” என்று முணுமுணுத்து கவலையுடன் கண்களை மூடியபடி பெருமூச்சு விட்டார்.
வாசகர்களே…. இப்பொழுது நாம் கொஞ்சம் அரண்மனைக்கு வெளியில் சென்று அந்த கோடங்கியை பார்த்து விட்டு வரலாம்.
சிவ கொழுந்து அரண்மனையின் உள்ளே பிரவேசித்ததை கண்ட கோடங்கி நீண்ட நேரம் அங்கே காத்திருந்தான். ஆனால் எதிர்பார்த்தபடி அரண்மனைக்குள் சென்றவன் வெகு நேரம் ஆகியும் திரும்பி வராமல் போகவே, “இனி இங்கு இருப்பது பயனில்லை” என்ற எண்ணம் எழவே சத்தமில்லாமல் அரண்மனையின் பின் நடக்கலானான். ஒரு இடிந்த கட்டிடத்தின் உட்புறமாக வளர்ந்து விரிந்திருந்த கருவேல மரத்தின் முட்கள் அவன் உடலை சற்றே பதம் பார்த்தது. “உஷ்… ஆ… ” என்று முனங்கிய படி முல்லில் மாட்டியிருந்த மேல் துண்டை இழுத்தான் அது சற்று கிழிந்து வந்தது.
“இந்த குதிரையில் வந்தவன் யாராக இருக்கும்.” என்ற எண்ணத்திலேயே அரண்மனையை சுற்றிய கோட்டையை கவனித்துக் கொண்டே நடக்கலானான்.
“ஒரு வாய் பதநீர் குடித்துவிட்டு அப்புறமாக உங்களின் ஆராய்ச்சில் ஈடுபடலாமே?” கோடங்கியின் அருகினில் நடந்து வந்த சிகப்பி கேட்டாள்.
தூக்கி வாரி போட்டது கோடங்கிக்கு . “யார் நீ?” என்றாள்.
“என்னை தெரியவில்லையா? நான் தான் சிகப்பி” என்றவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு இடுப்பில் மறைத்து வைத்திருந்த நாகம் பொறிக்கப்பட்ட செப்பு தகடை எடுத்து காட்டினாள். அதை பார்த்த கோடாங்கியின் முகம் மலர்ந்தது .அடுத்தகணம் அவள் அவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்றான்.
“இனியும் நாம் தாமதிக்க நேரமில்லை நாளை மறுநாள் நாள் குறித்தாகி விட்டது .ஆகையால் நாம் முன்பே முன்பே கூறியிருந்தபடி நம் வேலையை தொடங்கலாம். இந்த விபரத்தை சிதறி இருக்கும் நம் கூட்டத்தினரிடம் தெரியப்படுத்த மேலிடத்திலிருந்து எனக்கு உத்தரவு வந்துள்ளது ” என்றவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் நடந்து சென்றான்.
சிகப்பியும் விவரத்தை புரிந்து கொண்டவள் போல் ஒன்றும் பேசாது கோட்டை வாயிலை நோக்கி சென்றாள். இருவரும் வெவ்வேறு திசையில் சென்றனர்.
விருந்தினர் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சிவக்கொழுந்துக்கு, இளவரசி வேலுநாச்சியாரை பார்த்ததும், தான் நிலை இழந்தவனாய் மயங்கி சரிந்ததை நினைத்து சற்று வெட்கம் கொண்டவனாய் இருந்தான்.
“ச்சே… இப்படி இளவரசியை நேருக்கு நேர் பார்த்தும் அவர்களிடத்தில் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் இப்படி நினைவிழந்து கீழே விழுந்து விட்டேனே? அவர்கள் என்னை பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? இந்தக் கோழைக்கு தலைவர் பதவி ஒரு கேடா என்று நினைத்திருப்பார்களே? அல்லது பாவம் பயணக்களைப்பில் இருந்திருப்பான் அதனால்தான் மயக்கமடைந்து இருப்பான் என்று நினைத்திருப்பார்களா? எது எப்படி இருந்தாலும் சரி மீண்டும் சந்திக்கும் பொழுது எப்படியாவது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசிவிட வேண்டும்” என்று நினைத்தபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.
ஆனாலும் அரசர் செல்லமுத்து ஆண் பிள்ளையை போல் அல்லவா இளவரசியை வளர்த்து வருகிறார். என்ன ஒரு துணிவு. என்ன ஒரு கம்பீரம்? . “அவள் குழந்தையாக இருக்கும் பொழுதே தீண்டவந்த நாகத்தை ஓடி சென்று ஒரே கையால் அதை பிடித்து கொன்றாள் ” என்பதை சசிவர்ண தேவரின் மனைவி அகிலாண்டேஸ்வரி அம்மையார் அடிக்கடி எல்லோரிடமும் சொல்லி கொண்டு இருப்பதை கேட்டு இருக்கிறேனே?… அது மட்டுமா சிலம்பம், வில், அம்பு என்று இவர்கள் நுழையாத துறைதான் எது? உண்மையில் இவர்களை மனைவியாக அடைபவன் பாக்கியம் படைத்திருக்க வேண்டும். “என்று பலவற்றை சிந்தித்தவாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். நேரம் கடந்து கடந்து கொண்டிருந்தது. கதிரவன் மெல்ல மெல்ல தன் பொன்னிறக் கதிர்களை அவன் தங்கியிருந்த மண்டபத்தின் சாரளம் வழியே உள் நுழைந்து அவ்விடத்தை பொன் மாளிகையாக்கி கொண்டிருந்தார்.
அந்த சமயம் யாரோ மண்டபத்தினுள் நுழைந்து இவனை நோக்கி நடந்து வருவது தெரிந்தது.
“யாரது?” என்ற இவனது கேள்விக்கு பதில் வரவில்லை. மாறாக கதவு திறக்கப்பட்டு ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.
“யார் நீங்கள் ?”என்றான்.
“என்னைத் தெரியவில்லையா நான் ஒரு பெண்.”
“நீங்கள் பெண் என்பது தெரிகிறது. நீங்கள் யார்? என்று கேட்டேன் “.
“அட என்ன மனிதன் ஐயா நீர்? கேட்ட கேள்வியையே மறுபடியும் மறுபடியும் கேட்கிறீர்கள்? இதுதான் சிவகங்கை மக்களின் லட்சணமா? உங்களை புத்திக் கூர்மை படைத்தவர் என்று அல்லவா எண்ணியிருந்தேன்?”
“நான் புத்தி கூர்மையாக இருப்பதை கண்டு தான் சசிவர்ணத்தேவர் இளவரசியிடம் ஓலையைக் கொண்டு வந்து கொடுக்கும் பொறுப்பை எனக்கு வழங்கினார் என்பது நினைவில் இருக்கட்டும்.”
“ஒரு ஓலை கொண்டு வந்து கொடுப்பதற்கு வீரம் இருந்தால் போதும் புத்திக்கூர்மை அவசியம் வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை” என்றாள்.
“சரி சரி விவாதம் வேண்டாம். நீங்கள் என்னைத்தேடி வந்த காரணத்தை கூறினால் நான் தெரிந்து கொள்வேன்” என்றான்.
“எங்கள் இளவரசியைக் கண்டதும் நீங்கள் மூர்ச்சை அடைந்து விட்டீர்கள் என்று கூறினார்கள். தாங்கள் தெளிந்து விட்டீர்களா என்பதை தெரிந்து கொள்ள வந்தேன்”
“தெளிந்து விட்டேன் “என்று கூறுங்கள்.
“ஆனால் உங்களை பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? என்று அவள் வேண்டுமென்றே அவன் அருகில் வந்து அவனைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள்.
“அம்மா தாயே …. நான் தெளிவாக தான் இருக்கிறேன். சந்தேகம் என்றால் என் கண்களை நன்றாகப் பாருங்கள். ” என்று கண்களை உருட்டி காட்டினான்
” இப்பொழுது எனக்கு சந்தேகமே இல்லை. ஊருக்கு வெளியில் இருக்கும் இந்த ஐயனார் சிலைக்கும் உங்களுக்கும் ஒரே கண்கள்தான். “
“வீரத்தில்மட்டுமல்ல பேச்சிலும் இந்த ஊர் பெண்கள் மிகவும் கெட்டிக்காரர்கள் .என்று கேள்விப்பட்டிருந்தேன் இன்று நேரில் பார்க்கிறேன். ” என்றவனின் முக வாட்டத்தை அறிந்துகொண்ட அவள், சற்றே அவன் மேல் பரிதாபம் கொண்டாள்.
“ஐயா வருத்தம் வேண்டாம் . உங்களை நான் வேண்டுமென்றே தான்சற்று பரிகாசம் செய்தேன் அவ்வளவுதான். எனது பெயர் குயிலி. இளவரசியின் தோழி. இளவரசி இதை அரசர் சசிவர்ணத்தேவரிடம் இதை கொண்டு சேர்க்கும்படி உங்களுக்கான உத்தரவு. இரவு உணவு உண்டபின் நீங்கள் சிவகங்கைக்கு பிரயாணப் படலாம். உங்களின் குதிரையும் தயாராக இருக்கிறது.” என்றவள் புதிய பட்டோலை ஒன்றை சிவக்கொழுந்திடம் தந்தாள்.
“மிக்க மகிழ்ச்சி நான் விடை பெறுகிறேன் என்று உங்கள் இளவரசியிடம் தெரிவியுங்கள். அவர்களை மீண்டும் சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை அது சற்று வருத்தம் அளிக்கிறது என்பதையும் கூறுங்கள். என்றவன் கிளம்புவதற்காக ஆயத்தமானான். கதிரவன் மேற்கில் தன் செங்கதிர்களை மடித்துக் கொண்டிருந்தது. இருள் மெல்ல பரவ தொடங்கிய சமயம், அரண்மனையில் வெளிச்சத்திற்காக தீ பந்தங்களும் எண்ணெய் விளக்குகளும் ஆங்காங்கே ஏற்றபட்டிருந்தது. குதிரை கோட்டையை தாண்டி போய்க் கொண்டிருந்த சமயம் சிவ கொழுந்தின் கண்கள் அவனை பார்த்த ஒரு விநாடி அதிர்ந்தன. உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. சற்றே தலை சுற்றுவது போல் இருந்தது. “அவனா இவன்?”மனதுக்குள் எழுந்த கேள்வியை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு அவன் அருகினில் சென்றான்.
(தொடரும்)
1 Comment
அருமையாகச் செல்கிறது! விறுவிறுப்புக் கூடுகிறது! வாழ்த்துகள்!