அவ(ள்)தாரம் | 16 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 16 | தேவிபாலா

“ என்னை பற்றி நீ என்னடா சொல்லுவே?”

“கொலைகாரன்”

சிதம்பரத்தின் ஒற்றை சொல், பூதத்தைத் தூக்கி ஆகாயத்தில் வீசியது! சட்டென சுதாரித்துக்கொண்ட பூதம், “ என்ன உளர்ற? நான் யாரை கொலை செஞ்சேன்? ஒரு பெரிய மனுஷனை, உனக்கு சம்பளம் தர்ற முதலாளியை, நீ டாமேஜிங்கா பேசறே! இதுக்காக உன் மேல மான நஷ்ட வழக்குத் தொடர என்னால முடியும்!”

“ செய்! உன் மனைவி ராஜலஷ்மி அம்மா, விபத்துல இறந்ததா ஊரை நீ நம்ப வச்சிருக்கே! ஆனா அது உண்மை இல்லை! அவங்களை நீ கொலை செஞ்சிருக்கே! அதான் உன்னை கொலைகாரன்னு நான் சொன்னேன்!”

பூதம் முகம் இருண்டு, நிற்கக்கூட முடியாமல் தடுமாறி, கண்களை இருட்ட, மேஜையை பிடித்து கொள்ள, சிதம்பரம் அதை கவனித்தார்! பூதம் தன் நிலைக்கு திரும்ப, மேலும் பத்து நிமிஷங்கள் பிடித்தன! வேகமாக சிதம்பரத்தை நோக்கி பூதம் வந்தது!

“ என் மேல நீ அபாண்டமா பழி சுமத்தறே! உன்னை நான் உயிரோட இங்கிருந்து நகர விடமாட்டேன்! உன் கதையை இப்பவே நான் முடிக்கறேன்!”

வேகமாக நகர்ந்து, மேஜை ட்ரா திறந்து, ரிவால்வரை கையில் எடுத்தார்! சிதம்பரம் தன் செல் ஃபோனை ஆன் செய்து பாக்கெட்டில் வைத்திருந்தார்! இது அருள் அவருக்கு சொன்ன ஆலோசனை! அதுவும் வீடியோ மோடில்! பூதம் ரிவால்வரை எடுக்கும் காட்சி உட்பட பதிவானதுடன், அதை அருள் பார்த்து கொண்டிருந்தான்! சிதம்பரம் கொஞ்சம் கூட கலங்கவில்லை!

“ தாராளமா என்னை சுடுங்க! நான் உங்க மேல அபாண்டப் பழி சுமத்தலை! உங்க மனைவியை நீங்க கொலை செஞ்சதுக்கு எங்கிட்ட ஆதாரங்கள் இருக்கு! நான் வெளில போகாம இப்ப உங்களால கொல்லப்பட்டா, அதை வெளில, என் மகள் பாரதி கொண்டு வருவா! பாரதி மேல நீங்க கையை வச்சா, அருள் உங்களுக்கு இன்னும் எதிரா மாறுவார்! பாரதி நகத்துல காயம் பட்டாக்கூட மீடியாவுக்கு போயிடும்! எப்படி வசதி?”

நிலை குலைந்தார் பூதம்!

“ நான் என் மனைவியை கொலை செய்யலை!”

“விபத்துல அவங்க இறந்ததுக்கு ஆதாரம் இருக்கா?”

“இருக்கு! எல்லா ஆதாரங்களும் இருக்கு!”

“ஆதாரங்களை உருவாக்கி, சட்டத்தை உங்க கையில வச்சிட்டுத்தானே, குற்றங்களை கூசாம செய்யறது உங்க பழக்கம்! விபத்து ஆதாரங்களை வெளில எடுத்தா, நீங்க கொலை செஞ்ச ஆதாரங்களை நான் வெளில கொண்டு வருவேன்! நீங்க என்னை சுட்டா, இன்னொரு கொலையும் வெளில வரும்! நான் உங்களோட முப்பது வருஷ ஊழியன்னு உலகத்துக்கே தெரியும்! என்னை பற்றி, உங்க கிட்ட நான் என்னவா இருந்தேன்னு நீங்க இன்னிக்கு என் குடும்பத்துக்கு சொல்லப்போற முப்பது வருஷ ரகசியம், நான் செத்த பிறகு கேவலமா வெளில வரும்! அப்ப நீங்க என்னை கொலை செஞ்சது, இதுக்காகத்தான்னு வெளில தெரிஞ்சா, உங்க முகத்தை நீங்க வெளில காட்டவே முடியாம போகும்! நீங்க என்னை சுடலாம்!”

பூதம் அப்படியே துவண்டு நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்! அவருக்கு மயக்கமே வந்து விட்டது! தன் பிடியில் சிதம்பரம் இருப்பதாக இறுமாந்திருந்த பூதத்துக்கு மரண அடி! இப்போது, தான் சிதம்பரம் கையில் வசமாக சிக்கியிருப்பது தெரிந்தது! அதனால் ஆத்திரம் அதிகமானது.

வெறியுடன் நிமிர்ந்தார்.

“என்னைக் கொல்லற வெறி உங்களுக்கு வருது! ஆனா, கொல்ல முடியலை!”

“போதும் நிறுத்து! நான் இப்ப என்ன செய்யணும்? நீ என்ன ஆதாரம் வச்சிருக்கே உங்கிட்ட?”

“அப்படீன்னா உன் மனைவியை நீ கொலை செஞ்சதை ஒப்புக்கறியா?”

“இல்லை! நான் செய்யலை! நீ வச்சிருக்கறது போலியான ஆதாரம்! சரி, உனக்கு என்ன வேணும்?”

“என் ராஜினமாவை இப்பவே நீ ஒப்புக்கிட்டு, எனக்கு இப்பவே எனது முப்பது வருஷத்துக்கான செட்டில் மென்ட் பணத்தை தரணும்!”

“அதுக்கான வாய்ப்பே இல்லை!”

“நான் இப்ப ஒரு சிக்னல் தந்தா, நீ கொலை செஞ்ச ஆதாரம் மீடியாவுக்கு போகும்! அப்புறமா உன்னை என்ன செய்யணும்னு உன் போட்டி கம்பெனிக்காரங்க பார்த்துப்பாங்க! சிக்னல் தரவா?”

பூதம் கண்களில் கலவரம் தெறித்தது!

“நான் உன் ராஜினமாவை ஒப்புக்கிட்டு, உனக்கான பணத்தை இப்பவே செட்டில் பண்ணிட்டு, உடனே உன்னை பற்றி உன் குடும்பத்துக்கு சொன்னா, என்ன செய்வே?”

“நான் விஷம் குடிச்சு சாவேன்! போறதுக்கு முன்னால உன் கொலையும், ஊழலும் மொத்தமா வெளில வரும்! உன்னை நாறடிக்காம நான் சாக மாட்டேன் பூதம்!”

பூதம் அனலில் பட்ட புழுப் போலத் துடித்தது!

“இதப்பாரு! யாருக்கும் பாதகமில்லாம தப்பிக்கணும்னா, நான் சொன்னதை செய்! என் அடுத்த நிபந்தனை, அடுத்த முகூர்த்தத்துல கோயில்ல வச்சு பாரதி, அருளுக்கு கல்யாணம் நடக்கணும்! இங்கே நான் பார்த்த கேவலமான வேலையைப் பார்க்க, நிறைய பேர் இருக்காங்க! உன் கொலை மகாத்மியமும் வெளில வராது! சீக்கிரம் பதிலைச் சொல்லு!”

சிதம்பரம் நாற்காலியை இழுத்து போட்டு கம்பீரமாக எதிரே உட்கார, பூதத்துக்கு இன்னும் பற்றி எரிந்தது! அத்தனையும் வீடியோவில் பதிவாகி, அதை அருள் சுவாரசியமாக பார்த்து கொண்டிருந்தான்!

பூதம் பத்து நிமிஷங்கள் மௌனமாக இருந்தது! நிமிர்ந்து பார்த்தது!

“சரி! உன் ராஜினமா நாளைக்கு ஏற்கப்படும்! பில் ரெடி பண்ண சொல்றேன்! உன் செட்டில்மென்ட் நாளைக்கு முழுசா கைக்கு வரும்!”

சிதம்பரம் சிரித்தார்!

“நான் மாங்கா மடையனா? ஒரு நாள் அவகாசம் எதுக்கு? ஒரு மணி நேர அவகாசம் தந்தாலே நீ ஊரையே புரட்டி போடற ஆளாச்சே? என்னையும் என் குடும்பத்தையும் நீ விட்டா வைப்பே? எல்லாமே இப்ப நடக்கணும்! இல்லைனா போக வேண்டிய இடத்துக்கு விவரங்கள் போகும்!”

“என்னடா ஆதாரம்?”

“உன் வீட்டு தோட்டத்துல ஈசான மூலைல உன் மனைவியை புதைச்சு, அதுக்கு மேல மணி மண்டபம் கட்டியிருக்கியே! அதை இடிக்க சொல்லி கேப்பான் உன் மகன் அருள்!”

பூதம் அலறி விட்டார்!

“உன் மேல உயிரையே வச்சு, அப்பாவை ரோல் மாடலா கருதற உன் மகள் அஞ்சுவுக்கு, அம்மாவோட முடிவு தெரியணுமா? இன்னும் ஆதாரங்களை நான் சொல்லட்டா?”

“நிறுத்து! இதுக்கு மேல நீ பேசாதே! நீ சொன்னதை நான் கேக்கறேன்!”

உடனே இன்டர்காம் ஒலிக்க, அவரது செயலாளர் வந்து நிற்க,

“சிதம்பரம் இன்னிக்கு வாலன்டரி ரிடையர்மென்ட் வாங்கறார்! அதனால அவரோட ஃபைனல் செட்டில்மென்ட் எல்லாம் இன்னும் அரை மணி நேரத்துல தயாராகி அவரோட செட்டில்மென்ட் செக் என் கைக்கு வரணும்! ஹரி அப்!”

உடனே உத்தரவுகள் பறக்க, அவர்கள் பரபரப்பாக செயல் பட,

“மிஸ்டர் பூதம்! நீ என் குடும்பத்துல என்னை பற்றி எதையும் பேச மாட்டேன்னு எனக்கு லெட்டர் தரணும்! அதை மீறினா, விளைவுகள் படு மோசமா இருக்கும்!”

அதற்கும் பூதம் கட்டுப்பட்டது!

அரை மணியில் அந்த அலுவலகம் அவரது செட்டில்மென்ட் தொடர்பான ஃபைலை கொண்டு வர,

“அதை நான் பாக்கணும் சார்!”

சிதம்பரம் கைக்கு ஃபைல் மாறியது!

சிதம்பரம் அதை பார்த்தார்! எல்லாம் சரியாக இருந்தது! கம்பெனியில் அவரது சேமிப்பு, பதவிக்கான நியாயமான ப்ராவிடண்ட் ஃபண்ட், போன்ற சங்கதிகள் கணக்கிடப்பட்டு, செட்டில்மென்ட் தொகையாக சுமார் ஒண்ணரை கோடி ரூபாய்க்கான காசோலை எழுதப்பட்டிருந்தது!

அவரது வாலன்டியர் ரிடையர்மென்ட் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடிதம், அதற்கான சர்வீஸ் சான்றிதழ் என முறையாக சகலமும் ஏற்கப்பட்டது! சகலத்திலும் பூதம் கையெழுத்திட்டார்! அதிகாரிகளை உள்ளே அழைத்தார்! சிதம்பரம் சகல பேருக்கும் சீனியர் அங்கே!

“ஏன் சார் இந்த திடீர் முடிவு?”

பூதம் பதறி, “அவர் நிறைய நம்ம கம்பெனிக்காக உழைச்சிட்டார்! எனக்கும் அவரை விட விருப்பமில்லை தான்! ஆனா அவருக்கு உடம்புல தெம்பில்லை! அதனால நான் கட்டாயப்படுத்தலை! அவர் போகட்டும்!”

“சாருக்கு ஃபேர்வெல் பார்ட்டி எதுவும் தர வேண்டாமா?”

“நான் சொன்னேன்! அவர் அதை விரும்பலை! அவரை சந்தோஷமா நம்ம கம்பெனிக் கார்ல அவர் வீட்ல கொண்டு போய் விடுங்க!”

“வேண்டாம் சார்! நான் என் பைக்ல போயிர்றேன்!”

பூதமும், அதிகாரிகளும் அவரை வாசல் வரை கொண்டு வந்து விட்டார்கள்! பூதத்தின் கண்களில் கொலை வெறி கூத்தாடியது! சிதம்பரம் பைக்கை இயக்கி, சாலை திரும்பியதும், அதன் முனையில் அருள் நின்றான்!

“தம்பி! நீங்க இங்கியா இருக்கீங்க?”

“உங்களை வெளில விட்டுட்டு அப்பா கொலை வெறில இருக்காரு! உங்க கிட்ட ஆதாரம் இருக்குனு சொன்னதால அவசரப்பட்டு எதையும் செய்ய மாட்டார்! ஆனாலும் க்ரிமினல் புத்தி குறுக்கே பாயும்! உங்களை வீடு போய் சேர்றதுக்கு முன்னால கொலை பண்ற வேகம் கிளம்பும்! நீங்க என் பைக்ல ஏறுங்க! உங்க வண்டியை, இந்த கடை வாசல்ல விடுங்க! கடைப்பையன் அதை வீட்டுக்கு கொண்டு வருவான்!”

நேராக அவரை தன் பட்டறைக்கு அழைத்து சென்றான்! சிதம்பரம் அவனிடம் சகலத்தையும் தந்தார்! அருள் வாங்கி பார்த்தான்!

“குட்! ஒண்ணரை கோடி ரூபாய் நல்ல தொகை தான்! உங்க உழைப்புக்கு கிடைச்ச ஊதியம்!”

“மனசு ரணமா இருக்கு தம்பி! இது நியாயமான வழில வந்த பணம் இல்லை! பல பேரோட கண்ணீர்ல நனைஞ்ச கரன்சிகள்! அவமானமா இருக்கு!”

“விடுங்க! அது முடிஞ்ச கதை! பேசி லாபமில்லை!”

“ஆயிரம் விளக்கங்கள் சொன்னாலும் பாவங்களை நியாயப்படுத்த முடியாதில்லையா? ஒரு இக்கட்டான சூழ்நிலைல உங்கப்பா கிட்ட நான் மாட்டி, விடுபட முடியாம இப்ப வரைக்கும் இருக்கேன்! அவர் செஞ்ச பெரிய பாவத்தை சொல்லி என்னை நீங்க விடுவிச்சீங்க! ஆனா மனசாட்சி கிட்டேயிருந்து என்னால தப்பிக்க முடியலை தம்பி! அது என்னை அணு அணுவா கொல்லுது! தினசரி நான் சாகறேன் அருள்!”

“சரி, இனி பழசை பேச வேண்டாம்! நடக்க வேண்டியதை பார்க்கலாம்! தோல்வியை அறியாதவர் பூதம்! தான் ஜெயிக்க, எந்த எல்லைக்கும் அவர் போவார்னு என்னை விட உங்களுக்கு தெரியும்! அவருக்கு எதிரா முதல்ல கொடி பிடிச்சது எங்கம்மா ராஜலஷ்மி!”

“தம்பி! என்ன சொல்றீங்க?”

“அதனால தானே அம்மாவை கொலை செஞ்சார்?”

“உங்கம்மாவை நான் பல முறை பார்த்திருக்கேன்! மகாலஷ்மி அவங்க! எத்தனை கருணையான மனுஷி தெரியுமா?”

“தப்புக்களை மன்னிக்க மாட்டாங்க! அதை தட்டிக் கேட்ட காரணமாத்தான் அவங்க உயிரை எடுத்து, விபத்துனு ஊரை நம்ப வச்சார்! அதுக்கான ஆதாரங்களையும் உருவாக்கினார்! இப்பத்தான் இந்த உண்மைகள் எனக்கே தெரிய வந்திருக்கு! அதை விடுங்க! அவருக்கு நான் தீர்க்க வேண்டிய கணக்குகள் நிறைய பாக்கி இருக்கு! அம்மாவுக்கு அடுத்தபடியா போர்க்கொடி தூக்கினவன் நான்! என்னையும் கொல்ல பல முறை முயற்சி செஞ்சிருக்கார்! முடியலை! ஆனா பாரதி அவரை எதிர்த்தப்பத்தான் ஆட்டம் சூடு புடிச்சது! நான் கூட எதிர்ப்பை நாலு சுவருக்குள்ள தான் வச்சேன்! பாரதி அதை வெளில கொண்டு வந்துட்டா! அப்புறமாத்தான் எனக்கு இந்த ஆட்டம் சூடு புடிச்சது! பாரதியை எதிர்த்து, அவளுக்கு எல்லாக் கெடுதல்களையும் செஞ்சு, அவளை இல்லாம செய்ய எல்லா முயற்சிகளையும் எடுக்கறார்! இப்ப உங்க கிட்ட மாட்டிக்கிட்டார்!”

“ இல்லை அருள்! எனக்கு ஓய்வு தந்து ஒண்ணரை கோடி பணமும் தந்த காரணமா அவர் மௌனமாயிட்டார்னு நான் நம்பத் தயாரா இல்லை! அவரோட கண்கள்ள கூடுதல் கொலை வெறி வந்திருக்கு! எனக்கும், என் குடும்பத்துக்கும் இனி ஒவ்வொரு நொடியும் ஆபத்து தான்! அவரை இந்த அளவுக்கு எதிர்த்தது தப்போனு எனக்கே ரொம்ப பயம்மா இருக்கு அருள்!”

“நான் இல்லையா உங்களுக்கு? ஒரு அக்ரமக்காரனை, அராஜகத்தோட உச்சில நிக்கறவனை சும்மா விடலாமா? கூடாது அங்கிள்! இதை நான் பாத்துக்கறேன்! இனி அவருக்கும் எனக்கும் நேரடி யுத்தம் ஆரம்பமாகற சமயம் வந்தாச்சு! உங்களை நான் வீட்ல கொண்டு வந்து விடறேன்! புறப்படுங்க!”

அருளின் பைக்கில் ஏறினார் சிதம்பரம்!

“நான் வீட்ல என்ன சொல்லணும் அருள்?”

“கட்டாய ஓய்வு வாங்கின விவரம் சொல்லி, இந்த செக்கையும் பாரதி அம்மா கிட்ட சந்தோஷமா குடுங்க! இப்ப எல்லாம் நேராத்தானே நடந்திருக்கு? கவலைப்படாதீங்க!”

ருவரும் புறப்பட்ட அந்த நேரத்தில், பள்ளிக்கூடத்துக்கு தன் ஆறு வயது மகள் நிஷாவை, அழைக்க வந்தாள் வாசுகி.

“அவங்கம்மா வாசுகி நீங்களா? உங்களுக்கு ஒடம்பு சரியில்லாம உங்களை ஆஸ்பத்திரில சேர்த்திருக்கறதா சொல்லி, நிஷாவோட சித்தப்பா வந்து குழந்தையை அழைச்சிட்டு போனாரே!”

“என்னது சித்தப்பாவா? நிஷாவுக்கு சித்தப்பாவே இல்லையே? நான் நல்லாத்தானே இருக்கேன்? ஏன் புள்ளையை அனுப்பினீங்க? யார் கூட அனுப்பினீங்க?”

அதிர்ச்சியில் அலறத் தொடங்கினாள் வாசுகி.

–தொடரும்…

15 வது அத்தியாயம் | 17 வது அத்தியாயம் >

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...