பொற்கயல் | 3 | வில்லரசன்
3. கயல் சகோதரிகள்
பெரும் மீசையும், அடர்ந்த பிடரி முடிகளும், பலத்த மேனியையும் கொண்ட வாணாதரையார் காலிங்கராயர் பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆட்சி செய்யும் பலரில் குலசேகர பாண்டியனுக்கும் பாண்டிய அரசுக்கும் மிக நெருங்கியவர். எந்தளவு நெருங்கியவர் என்றால் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நன்மைக்காகப் பல ஆலயங்களை எழுப்பி மன்னனது மனதில் சிறப்பிடத்தைப் பிடித்து வைத்திருப்பவர்.
அப்படிப் பாண்டிய நாட்டில் பெரும் செல்வாக்கினைக் கொண்ட காலிங்கராயர் அந்த இரவுப் பொழுதில் களங்கனது ஒளியின் உதவியோடு அரண்மனை நந்தவனத்தில் தனது இளைய மகளான பொற்கயலைக் குரல் கொடுத்துத் தேடிக்கொண்டிருந்தார்.
“பொற்கயல்! மகளே! எங்கு இருக்கிறாய்?” எனத் தன் கரகரத்த குரலில் சத்தமிட்டு அழைத்தவர், தனது திடமான மேனியில் அணிந்திருந்த ஆபரணங்கள் எல்லாம் அசைந்து சத்தம் எழுப்பும் அளவு சுற்றும்முற்றும் திரும்பி பொற்கயலைத் தேடினார்.
அப்போது சற்றுத் தொலைவில் கல் தூண் ஒன்றில் தீப்பந்தம் ஒன்று எரிந்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அங்கு சென்று தீப்பந்தத்தை ஏந்தி அதன் உதவியோடு நந்தவனக் குளத்தை நோக்கி நடந்தார் காலிங்கராயர்.
குளக்கரையை வந்தடைந்தவர் எதிரே சூழ்ந்திருக்கும் புதர்களையும் கொடிகளையும் விலக்கினார். விலக்கிய கொடிகளுக்கு பின் நிகழும் அக்காட்சியைக் கண்டவர், “மகளே!” என்றார்.
“அட, ஏனப்பா சத்தமிடுகிறீர்கள்?” என்ற பொற்கயல் கீழே புல் தரையில் சிதறிக் கிடந்த தனது முத்துக்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து முந்தானையில் சேகரித்து விட்டு எழுந்தாள்.
“பொற்கயல் இந்நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய்? எதையோ தேடுவது போல் தெரிகிறது என்ன அது?” கேட்டார் பொற்கயலின் தந்தை காலிங்கராயர்.
முத்துக்களை எல்லாம் எண்ணியவண்ணமே அவர் அருகே வந்து நின்றவள், “ம்ம்ம் பாருங்கள்” எனக் காட்டினாள். முத்துக்களைக் கண்டு விட்டு “இது உன் முத்துமாலை அல்லவா? எப்படி அறுந்தது?” என வினவினார்.
“சற்று அமைதி கிடைக்கும் என இங்கு வந்து அமர்ந்திருந்தேன்! உங்கள் கரகரத்த அழைப்புக் குரல் கேட்டதும் எழுந்திருக்க முற்பட்டேன்! கை வளவியில் சிக்கிக்கொண்டு முத்துமாலை அறுந்து விட்டது! இவை அனைத்தையும் தேடி எடுப்பதற்குள்… அப்பப்பா! தலை சுற்றிவிட்டது! இதில் நீங்கள் வேறு இடைவிடாமல் அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்! ஏனப்பா இப்படி நம் பாண்டிய நாட்டிற்கே கேட்குமளவு என் பெயரை முரசு கொட்டுகிறீர்கள்?”
“அவ்வாறா அழைத்தேன்? சரிசரி! அதுபோகட்டும் நான் எதற்கு இங்கு உன்னைத் தேடி வந்தேன் தெரியுமா?”
“கூறுங்கள்!”
“நம் அரசர், அரசியார் இருவரும் பெரியபாட்டியுடன் நெல்லையப்பரை வழிபடச் சென்றுள்ளார்கள் அல்லவா? இப்போது அவர்கள் எனக்கும் அழைப்பு விடுத்துள்ளார்கள். உடனே வரும்படி கட்டளை மன்னரது வாய்மொழி ஓலையில் வந்துள்ளது”
“தங்களுக்கா?”
“ஆம்! நான் உடனே நெல்லைக்கு புறப்படுகிறேன்! உன் வேலை என்ன தெரியுமா? அங்கு உன் அக்காவுக்கு உடல்நலம் சரியில்லையாம் பணிப்பெண்கள் யாரும் வேண்டாம் என்கிறாள்! நீ சென்று அவளைக் கவனித்துக் கொள்” என்றார்.
அப்போது அங்கு புரவி ஒன்றில் விரைந்துவந்த ஒரு மெய்க்காவல் வீரன் கீழே குதித்து அருகில் வந்து காலிங்கராயரை வணங்கினான்.
“என்ன செய்தி?” கேட்டார் அவர்
அவன் அவரது காதருகே வந்து ஏதோ ரகசியமாக தெரிவித்தான். அதற்கு சில நொடிகள் யோசித்துவிட்டு “சரி செல்” என்று அவனை அனுப்பி விட்டார்.
அந்த மெய்க்காவல் வீரன் புரவியில் ஏறி அங்கிருந்து மறையும்வரை காலிங்கராயரின் முகத்தில் யோசனையும் தயக்கமும் நன்கு வெளிப்பட்டன. அதை கவனித்த பொற்கயல், “என்னாயிற்று தந்தையே? அந்த வீரர் என்ன தெரிவித்தார்?” என்று கேட்க அதற்கு யோசனையில் இருந்து வெளிவந்தவராக…
“நம் கோட்டையின் அங்காடித் தெருவில் ஏதோ பிரச்சினையாம் சமர்க் களம் நிகழ்கிறதாம்!” என்றார்
“சமர்க் களமா? யார் செய்வது?”
“நம் பேரரசரின் தம்பி இளைய பாண்டியர்”
பொற்கயலின் முகம் இளையப் பாண்டியன் என்கிற பெயரைக் கேட்டதுமே மாறியது. பிறகு அவள் “தந்தையே, மன்னர் கட்டளைக்கு மட்டும்தான் நாம் பணியவேண்டும். வேண்டாதவர்களது பிரச்சினையில் நாம் மூக்கை நுழைத்து மரியாதையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்! இப்போதெல்லாம் இளைய பாண்டியர் யாரையும் மதிப்பதில்லை! நம் பெரிய பாட்டி மட்டுமே அவருக்கு சரி. நீங்கள் தயவுகூர்ந்து அங்கு செல்ல வேண்டாம் மாமன்னரது கட்டளைப்படி நெல்லைக்கு புறப்படுங்கள்” என்றாள்
“நீ கூறுவதுதான் சரி மகளே! நான் இதைப்பற்றி மன்னருக்குத் தெரிவித்து விடுகிறேன். நான் நெல்லை சென்று அரச குடும்பத்தினருடன் திரும்பும் வரை அக்காவைப் பார்த்துக் கொள்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார் காலிங்கராயர்.
அவர் சென்ற பிறகு பொற்கயல் குளக்கரையிடம் சென்று மின்னவனை தேடினாள். அங்கு அவன் இல்லை. முன்னமே கிளம்பி விட்டான் என்பதை அறிந்தவளுக்கு வருத்தமாக இருந்தாலும், தந்தையின் கண்களில் அகப்படாமல் தப்பித்ததே அவளுக்குப் பெரிதாகத் தெரிந்ததால் மகிழ்ச்சியுடன் நந்தவனத்திலிருந்து எதிரே உள்ள தன் மாளிகையை நோக்கி நடந்தாள்.
காதல் பாட்டொன்றை முணுமுணுத்தபடியே தனது அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவள், முந்தானையில் சேகரித்து வைத்திருக்கும் முத்துக்களை எல்லாம் ஒப்பனை செய்து கொள்ளும் மேஜை மேல் உள்ள தங்கக் கிண்ணத்தில் கொட்டிவிட்டு எதிரே உள்ள பெரும் கண்ணாடியில் தன் முக அழகைக் கண்டு ரசித்தாள். அந்நொடி அவளுக்கு மின்னவன் தன் இதழில் பதித்த முத்தம் நினைவுக் கூட்டில் தேனீயைப் போல் கொட்ட, சுருக்கென்றது அவளது பட்டு போன்ற செவ்விதழ்.
அதை விரலால் தடவிப் பார்த்துவிட்டு புன்னகைத்துவிட்டு பிறகு அறையைச் சுற்றும்முற்றும் ஏறிட்டாள். அப்படி அவள் அறையின் உப்பரிகையைக் காணும்போது அவளைப் போன்ற அழகை ஒத்த அவளது அக்கை கயல்விழி உப்பரிகையில் முதுகை காட்டியவாறு நின்றிருந்தாள்.
“அடியேய் கயல்விழி… அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் தந்தை உனக்கு உடம்பு முடியவில்லை என்றாரே? நீ என்னவென்றால் கல் போன்று திடமாக நின்று கொண்டிருக்கிறாய்?” என வினவியபடியே அவள் அருகே சென்று உப்பரிகையில் நின்ற பொற்கயல் அக்கையை நோக்கி, “ஏனடி! வினவிக் கொண்டே இருக்கிறேன் நீ என்ன…?” என அவளது முகத்தை தன் பக்கம் திருப்பிய போது திடுக்கிட்டு போனாள். ஏனென்றால் கயல்விழியின் கண்கள் கோவைப் பழங்களைப் போல் சிவந்து கண்ணீரைச் சுரந்து கொண்டிருந்தன.
கயல்விழி அழுது கொண்டிருப்பதைக் கண்டதும் பொற்கயல் பதைபதைத்துப் போய், “அக்கா, ஏன் அழுகிறாய்?” என வினவினாள்.
“நீ மிகவும் நல்வினை செய்தவள் பொற்கயல்” கூறிவிட்டு விம்மினாள் கயல்விழி.
“என்னடி சொல்கிறாய்..? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!”
முகத்தை திருப்பிக் கொண்ட கயல்விழி எதிரே காணப்படும் நந்தவனத்தைக் கண்டவண்ணம் பேசத் தொடங்கினாள்
“படைத்தலைவர் மின்னவர் மதில் ஏறி வந்து வளரிகளால் உனக்கு மலர்களைப் பரிசளித்ததை தற்செயலாகக் கண்டேன். அதைத்தான் சொன்னேன்… படைத்தலைவர் மின்னவர் உனக்கு காதலனாக கிடைத்தது நீ செய்த நல்வினை. அதேசமயம் நம் அரசரின் தம்பி இளையப் பாண்டியர் எனக்கு காதலனாகக் கிடைத்தது கிடைத்தது….” என மேலும் அழத் தொடங்கினாள் கயல்விழி
“அக்கா! அக்கா! அழாதே” எனக் கண்கலங்கிய பொற்கயலும் கயல்விழியைக் கட்டி அணைத்து “என்ன நேர்ந்தது அக்கா? என்னிடம் சொல்!” என வினவினாள்
“இளையபாண்டியர் முன்புபோல் இல்லை பொற்கயல் மிகவும் மாறிவிட்டார்”
“ஏனடி, நான் முன்னமே சொன்னேனே… அவர் பழக்கவழக்கங்களும் கூட்டும் சரி இல்லை என்றேனே… கேட்டாயா நீ!”
“கேட்கவில்லை. மன்னித்துவிடு பொற்கயல்! நீ படைத்தலைவர் மின்னவரைக் காதலிப்பதை அறிந்து வீம்புக்காக நான் அரசரின் தம்பியான இளையபாண்டியரைக் காதலித்தேன் அவரும் என்னைக் காதலிப்பதாகக் கூறிக் கரம் பிடித்தார் ஆனால் இப்போதெல்லாம் என்னைக் கண்டுகொள்வதே இல்லை! எப்பொழுதும் மது, மாது என அந்தப்புரத்திலே கிடக்கிறார்! வாளெடுத்து வேல் வீசி சரம்புச் சாலையில் வீரனாக வளர்ந்து வந்தவர் சில காலங்களாக முற்றிலும் மாறி விட்டார்! அதைப் பற்றி உரிமையோடு என்னவென்று கேட்க இன்று நான் அவரை அந்தப்புரத்தில் சந்தித்தேன். அங்கு அவர் என்னை அவமானப்படுத்தி, கரத்தைப் பிடித்து இழுத்து அனைவரது முன்னும்… கன்னத்தில் அறைந்து… இதோ பார்!” எனக் கையையும் கன்னத்தையும் காட்டினாள். அவள் கைகள் எல்லாம் நகம் பட்டு உண்டான கீறல்கள் எங்கும் நிறைந்திருந்தன. கன்னம் சற்று சிவந்திருந்தது. அதைக் கண்ட மாத்திரத்திலேயே பொற்கயலுக்குச் சினம் பீறிட்டு எழுந்தது
“அக்கா, ஏன் நீ தந்தையிடம் கூறவில்லை?”
“வேண்டாமடி! அவர் மிகவும் கோபக்காரர். அதுமட்டுமல்லாமல் நாம் பாண்டிய அரசுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறோம்”
“அட பைத்தியக்காரி! இது மாமன்னருக்கு தெரிந்தால் அவரே அவரது தம்பியைத் தண்டித்து விடுவார். மாமன்னரோ நெல்லையில் நெல்லையப்பரை தரிசித்து கொண்டிருக்கிறார். தந்தையும் மன்னர் அழைப்பிற்கிணங்க நெல்லை நோக்கிப் புறப்பட்டு விட்டார்! இப்போது என்ன செய்வது? என்னால் பொறுமை காக்க முடியாது” என்றவள் முந்தானையை தூக்கி இடுப்பில் சொருகி விட்டு…
“நீ என்னுடன் வா. நான் என்னவென்று கேட்கிறேன்! கேட்க எவரும் இல்லை என நினைத்து விட்டாரா இளைய பாண்டியர்? நம் உடம்பிலும் மறக் குருதி தான் ஓடுகிறது!” என்றவள், கயல்விழியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.
“வேண்டாம் பொற்கயல்! வேண்டாம்!” என அக்கை கயல்விழி எவ்வளவோ எடுத்துரைத்தும் அவள் பேச்சைக் கேட்காமல் அறையில் இருந்து ஒரு குறுவாளை எடுத்து மடிப்பில் சொருகிக் கொண்டு கயல்விழியை மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தம்பிகளில் ஒருவனான இளைய பாண்டியன் இருக்கும் அங்காடித் தெருவிற்கு கயல்விழியை இழுத்துச் சென்றாள் பொற்கயல்.
1 Comment
மிக நன்று. காளிங்க ராயன் என்பது சரியாக இருக்கும்