கவுன்சிலர்களுக்கு உற்சாக மது விருந்து

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் வருகிற 2ஆம் தேதி (2-2-2022) பதவியேற்கிறார்கள். அதன்பிறகு 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.இந்தப் பதவியை கைப்பற்ற பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக சில ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதனால் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர், மண்டல குழுத் தலைவர் பதவிகளை கைப்பற்றவும் அக்கட்சியில் முக்கிய பிரமுகர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கட்சித் தலைமை இந்தப் பதவிகளுக்கான வேட்பாளர்களை முன்கூட்டியே முடிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குக் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் கவுன்சிலர்கள் மற்ற கவுன்சிலர்களை உற்சாகப்படுத்த அவர்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்து விருந்து கொடுத்து வருகிறர்கள்.

சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டுகளில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நகர்ப்புற வார்டு கவுன்சிலர்கள் பலரைத் தங்கவைத்து இருப்பதாகவும் அவர்களிடம் ஆதரவு பெற கட்சிப் பிரமுகர்கள் ஆலோசனை நடத்தி பேரம்பேசி கேளிக்கை, மது விருந்து என குஷிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கட்சிக்கொடிகளுடன் பல வெளி மாவட்ட சிறப்பு பதிவு எண் கொண்ட கார்கள் பல மாமல்லபுரம் நகரப் பகுதிகளுக்குள் சுற்றியதாகக் கூறப்படுகிறது.

உளவுத்துறை போலீசார் கோவளம், மாமல்லபுரம், கூவத்தூர் மற்றும் கிழக்குக் கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய ரிசார்ட்டுகள் மற்றும் ஓட்டல்களை ரோந்து போலீசார் உதவியுடன் ரகசியமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!