பேய் ரெஸ்டாரெண்ட் – 27 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 27 | முகில் தினகரன்

கு

குணா கடிதம் எழுதிய விஷயமும், அதில் உள்ள தகவல்களும் ஏற்கனவே சுமதி அறிந்திருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “அப்பா…உண்மையைச் சொல்லணும்ன்னா…இந்த முறை நான் எந்த வித மறுப்பும் சொல்லாமல்…எப்படிப்பட்ட மாப்பிள்ளையாய் இருந்தாலும் ஒத்துக்கறது!ன்னு முடிவு பண்ணிட்டேன்…இதற்கு மேலும் உங்களையும் அம்மாவையும் நொந்து போக விட மாட்டேன்!…அதனால தைரியமா வரச் சொல்லுங்க…முடிவே பண்ணிடலாம்” என்றாள்.

மகளிடமிருந்து வந்த உறுதியான சம்மதம், வேணுகோபாலுக்கு ஊக்க டானிக் பருகியதைப் போலிருக்க, அன்றே பதில் எழுதி அடுத்த தெருவிலிருந்த கூரியர் அலுவலகத்திற்குச் சென்று கொடுத்து விட்டு வந்தார்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்.

சுமதியின் வீடு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் களை கட்டியது.

வழக்கமாய், “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க” என்று சொன்னாலே முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் சுமதி,. இந்த முறை அவ்வாறு செய்யாமல், தானே முழு ஈடுபாட்டுடன் எல்லாக் காரியங்களிலும் தலையிடுவது கண்டு பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினர் அவளைப் பெற்றோர்.

யாரும் சொல்லாமலே ஆபீஸுக்கு லீவு போட்டாள், சமையலறையி பஜ்ஜி…சொஜ்ஜி தயாரிப்பதில் தாய்க்கு உதவி செய்தாள். ஹாலில் சீலிங் ஃபேன் துடைப்பது…ஒட்டடை அடிப்பது…சோபாக்களை அரேஞ்ச் செய்வது…போன்ற வேலைகளில் தந்தைக்கு உதவினாள்.

“கடவுளே!…எப்போதுமே ஆர்வம் காட்டாத இந்தப் பொண்ணு இன்னிக்கு இவ்வளவு உற்சாகமா இருக்கா…இவளை ஏமாத்திடாதே கடவுளே” ராஜேஸ்வரி கடவுளிடம் கோரிக்கை வைத்தாள்.

மாலை மூணு மணி வாக்கில் வந்து நின்ற டாக்ஸியிலிருந்து அவர்கள் இறங்கினர்.

முதலாவதாய் ஆனந்தராஜ் இறங்கினான். தொடர்ந்து விஜயசந்தரும், திருமுருகனும் இறங்கினர்.
காரின் முன் கதவு வழியாக குணா இறங்கினான்.

“வாங்க!…வாங்க!”

வாசலுக்கே வந்து வாயெல்லாம் பல்லாக வரவேற்ற வேணுகோபால் குள்ளமாயிருக்கும் குணாவை வித்தியாசமாய்ப் பார்த்தார். சமையலறையிலிருந்து கையைத் துடைத்தபடி ஓடி வந்தாள் ராஜேஸ்வரி.

உள் அறையிலிருந்து கதவு இடுக்கு வழியே பார்த்துக் கொண்டிருந்தாள் சுமதி.

ஹால் சோபாவில் எல்லோரையும் அமர வைத்த வேணுகோபால் மூளைக்குள் சிந்தனை வண்டுகள் தாறுமாறாய் ஓடின. “இதுல யார் மாப்பிள்ளை?…இந்தக் குள்ளன் யாரு?”.

பரஸ்பர அறிமுகங்களைத் தொடர்ந்து, வழக்கமான சம்பிரதாயப் பேச்சுக்கள்.

“அது செரி…நாம பேசிக்கிட்டே இருந்தா எப்படி?…பொண்ணை வரச் சொல்லுங்க”

“நீங்க எப்பக் கேட்பீங்க?ன்னு நாங்க காத்திட்டிருக்கோம்” என்ற வேணுகோபால் மனைவி பக்கம் திரும்பி, “ராஜேஸ்வரி…சுமதி கைல காஃபி குடுத்தனுப்பு” என்றார்.

இதற்கு முன் எத்தனையோ தடவை அதே ஹாலுக்கு, அதே டிடேயில் காஃபி கொண்டு வந்து வினியோகித்திருக்கிறாள் சுமதி. ஆனால், அப்போதெல்லாம் உணராத ஒருவித குறுகுறுப்பும் உற்சாகத் துள்ளலும் இன்று அவளிடம் ஏற்பட்டிருந்தது.

குணாவிடம் காஃபியை நீட்டும் போது மெதுவாய்த் தலையைத் தூக்கிப் பார்த்துப் புன்னகைத்தாள். அவனும் மெலிதாய்ப் புன்னகைத்து விட்டு மற்றவர்கள் அறியாத வண்ணம் “படக்”கென கண்ணடித்தான்.

சிலிர்த்துப் போனாள் சுமதி.

“என்ன ஒரு தைரியம்?..நாலு பேருக்கு நடுவுல உட்கார்ந்திட்டு கண்ணடிக்கறதைப் பாரு”

வெட்கத்துடன் திரும்பி நடந்தாள் சுமதி.

“என்னப்பா மாப்பிள்ளைப் பையா… பொண்ணை நல்லாப் பார்த்திட்டியா?… பிடிச்சிருக்கா?” ஆனந்தராஜ் குணாவைப் பார்த்துக் கேட்க,

“ம்ம்…பார்த்தாச்சு… பிடிச்சாச்சு.” என்று குணா சொல்ல,

அதிர்ந்து போனார் வேணுகோபால்.

“என்னங்க?…என்ன நடக்குது இங்கே?…இந்தக் குள்ளனா என் பொண்ணுக்கு மாப்பிள்ளை?” கத்தலாய்க் கேட்டபடியே எழுந்தார் வேணுகோபால்.

“ஆமாம்…அதிலென்ன சந்தேகம்?” விஜயசந்தர் சொன்னான்.

“ஏம்பா…உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா இல்லையா?…என் பொண்ணோட உயரத்தைப் பார்த்தீங்கல்ல?…அது கூட இவனை ஜோடி சேர்க்க உங்களுக்கெல்லாம் எப்படி மனசு வந்திச்சு?” ஆற்ற மாட்டாமல் கொதித்தார் வேணுகோபால்.

“சார்….இந்த இடத்துல உங்க மனசோ…எங்க மனசோ முக்கியமில்லை!…கட்டிக்கப் போற ரெண்டு பேரோட மனசுதான் முக்கியம்!…அவங்க ரெண்டு பேரையும் கேட்போம்!…அவங்களுக்கு சம்மதம்ன்னா சந்தோஷமா கல்யாணம் செய்து வைப்போம்” ஆனந்தராஜ் தெளிவாய்ப் பேசினான்.

அடுத்த நிமிடமே தன் மனைவியைப் பார்த்து, “ராஜேஸ்வரி…சுமதியை வரச் சொல்லு” ஆணையிட்டார் வேணுகோபால்.

நிதானமாய் நடந்து வந்த மகளிடம் குள்ள குணாவைக் காட்டி, “சுமதி…இவர்தான் லெட்டர் போட்டவர்…இவருக்குத்தான் உன்னைப் பிடிச்சிருக்காம்!…உன்னைப் பெண் கேட்டு வந்திருக்கார்…என்னவொரு நெஞ்சழுத்தம் பார்த்தியா?” என்றார்.

திரும்பி குணாவைப் பார்க்காமலே, “அப்பா…எனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு…அவரைக் கட்டிக்க முழு சம்மதம்!…” என்றாள்.

அதிர்ந்து போன வேணுகோபால், “அம்மா…திரும்பி அந்த மாப்பிள்ளைப் பையனைஒரு பார்வை பார்த்திட்டுச் சொல்லும்மா” வேணுகோபால் மறுபடியும் சொல்ல,

“அப்பா…நான் அவரை ஏற்கனவே பார்த்திட்டேன்…பேசிட்டேன்…எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு…அதனால…நீங்க உடனே முகூர்த்த தேதி குறிங்க” சொல்லி விட்டு, வேக வேகமாய் உள் அறையை நோக்கிச் சென்றவளின் பின்னாலேயே ஓடினாள் ராஜேஸ்வரி.

“அம்மா…சுமதி!….நீ வெறுப்பிலோ…அல்லது…மன விரக்தியிலோ பேசாதே!….உன்னை விட சுத்தமா ரெண்டு…ரெண்டரை அடி உயரம் கம்மி அந்த ஆள்!…அந்த ஆளைப் போய் கட்டிக்கறேன்!னு சொல்றியே…பின்னாடி வருத்தப்படுவே!…அந்தக் குள்ளன் கூட நீ தெருவுல நடந்து போனா…பார்க்கறவங்க நேருக்கு நேராவே சிரிப்பாங்கம்மா!” ஒரு தாயாக தன் கருத்தைக் கூறினாள் ராஜேஸ்வரி.

“இல்லைம்மா…எனக்கு விரக்தியோ…வெறுப்போ எதுவும் கிடையாது!…சுய நினைவோட….முழு மனசோடதான் என் சம்மதத்தை சொல்றேன்!…நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாம…உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” உறுதியாய்ச் சொன்னாள் சுமதி.

ராஜேஸ்வரி ஹாலுக்கு வந்து அதையே சொல்ல, வேணுகோபால் யோசித்தார்.

“சார்…இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு?…பையனுக்கும் பொண்ணைப் பிடிச்சிருக்கு…பொண்ணுக்கும் பையனைப் பிடிச்சிருக்கு…அப்புறமென்ன…கல்யாணத்தைப் பண்ணி வெச்சிட வேண்டியதுதானே?” ஆனந்தராஜ் சொல்ல,

ஒரு நெடிய யோசனைக்குப் பின், “என் பொண்ணோட எந்த விருப்பத்தையும் இதுவரைக்கும் நான் மறுத்ததில்லை!…அது என் வழக்கம்!…ஏனோ என்னால் இந்த விஷயத்துல உடனே சம்மதம் சொல்ல முடியலை!…நல்லா யோசனை பண்ணிப் பார்த்தேன்!…வாழ்க்கையை வாழப் போறது அவங்க ரெண்டு பேர்தான்…அவங்க இஷ்டப்படும் போது நான் ஏன் மறுக்கணும்?…நானும் என் சம்மதத்தை தெரிவிக்கிறேன்!…” வேணுகோபால் சொல்லி முடிக்க,

அந்த இடத்தில் திடீரென்று கலகலப்பு கூடியது.

*****
சாதாரண நாட்களில் நொண்டி நொண்டி நடக்கும் காலம் திருமண வேலைகளில் ஈடுபடத் துவங்கியதுமே எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடுவதாய்த் தோன்றியது வேணுகோபாலுக்கு.

ஆனால்,

சாதாரண நாட்களில் மின்னலாய்ப் பறக்கும் காலம், திருமண நாள் குறிக்கப்பட்டதிலிருந்து படு ஸ்லோவாக நகர்வதாகத் தோன்றியது சுமதிக்கு.
ஆவித் தரகனின் அதீத முயற்சியால் அந்த சுபயோக சுப தினத்தில் சுமதியின் கழுத்தில் மங்கல நாண் ஏறியது.

மணவறையில் இருக்கும் போதே, மானசீகமாக அந்த லட்சுமி நரசிம்மன் ஆவிக்கு நன்றி சொன்னாள் சுமதி.

முதலிரவு அறை,

முப்பது வருடங்களுக்கு மேலாய் காத்திருந்த குணா அந்தப் பத்து நிமிடங்கள் காத்திருக்க மாட்டாமல் தவித்தான்.

“ச்சை!…ஏன்தான் இத்தனை லேட் பண்றாங்களோ?” தனக்குத்தானே புலம்பினான்.

கட்டிலின் மேல் தூவப்பட்டிருந்த மலர்கள் கூட முள்ளாய்த் தைத்தன. தட்டில் வைக்கப்பட்டிருந்த பழங்களைப் பார்க்கக் கூட வெறுப்பாயிருந்தது.

அறையின் கதவு சன்னமாய்த் தட்டப்பட, ஆவலாய்த் தலையைத் தூக்கிப் பார்த்தான்.

பட்டுப்புடவை கட்டிக் கொண்டு, மணப் பெண் அலங்காரத்துடன் ஒரு கிழவி உள்ளே நுழைந்தாள்.

முகத்தை அருவருப்பாய் வைத்துக் கொண்டு, “நீ…நீங்க…யாரு?” கேட்டான்.

“என்னங்க…என்னைத் தெரியலையா?…நான்தாங்க உங்க சுமதி” என்றாள் கிழவி.

“என்னது…சுமதியா?…என்ன கெழவி உளர்றே?” கோபமானான் குணா.

“அய்யோ…நான் உளறலைங்க….காலைல கழுத்துல தாலி ஏறினதிலிருந்தே உடம்பு என்னமோ மாதிரி இருந்திச்சு…நேரம் ஆக…ஆக…கொஞ்சம் கொஞ்சமாய் உடம்புல மாற்றங்கள் ஏற்பட்டுக்கிட்டே இருந்திச்சு…கடைசில இந்த மாதிரி ஆயிட்டேனுங்க” சொல்லி விட்டு அந்தக் கிழவி அழத் துவங்க,

பேந்த பேந்த விழித்தான் குணா. “ஒருவேளை…ஏதாவது துஷ்ட ஆவி உள்ளார புகுந்து விளையாடிடுச்சோ?”

குழம்பினான்.

அப்போது அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு வேக வேகமாய் வந்தாள் சுமதி. வந்தவள் அந்தக் கிழவியின் தலைமுடியைப் பற்றி இழுக்க வெண்ணிற விக் தனியே கழன்று விட, அதை மாட்டிருந்த இளம்பெண் சிரியோ சிரியென்று சிரித்தாள்.

“ஏய்…சுமதி…கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் ஆசைக் கணவன் முகம் போன போக்கைப் பார்க்கணுமே?”

“ராதா…ராட்சஸி…உன்னோட விளையாட்டுத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா?…இப்படியா ஃபர்ஸ்ட் நைட் ரூம் வரை வந்து கலாட்டா பண்ணுவாங்க?” கோபத்தில் கத்தினாள் சுமதி.

“எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்” என்ற அந்த ராதா குணாவைப் பார்த்து, “ஸாரி மாப்பிள்ளை..சும்மா தமாஷ் பண்ணினேன்” என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேற,

ஓடிப் போய்க் கதவைத் தாழிட்டாள் சுமதி.

“அப்பப்பா…இந்த ராதாவோட அழிச்சாட்டியத்துக்கு ஒரு எல்லையே இல்லாமப் போச்சு…” என்ற சுமதியிடம்,

“யார் சுமதி அந்தப் பெண்?”

“எனக்கு தங்கச்சி முறையாகுது…ரொம்ப சுட்டித்தனம் பண்ணுவா…ஆனா ரொம்ப நல்லவ…” என்றாள் சுமதி.

“நம்ம கல்யாணமே ஆவி மூலம் நடந்த கல்யாணமானதால் நான் உண்மையிலேயே கொஞ்சம் கலங்கித்தான் போனேன்”

குணா அப்படி சொல்ல, “ஒருவேளை உண்மையிலேயே நான் கிழவி ஆயிருந்தா என்ன பண்ணுவீங்க?” கேட்டாள்.

“ம்ம்…அந்த துஷ்ட ஆவியுடன் தொடர்பு கொண்டு…என்னையும் கிழவனாக்கி விடச் சொல்லிடுவேன்”

அவன் அப்படிச் சொன்னதில் அகமகிழ்ந்து போன சுமதி அவனையே கிறக்கமாய் நோக்க,

அதை ரசித்தவன், தகுந்த சந்தர்ப்பத்தில் அவள் இதழ்களைக் கவ்வ முயன்றான்.

“ம்ஹும்…மாட்டேன்…மாட்டேன்” என்று சொல்லியபடி அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள் அவள்.

அதிர்ந்து போனவன், “ஏன் சுமதி…ஏன் மறுக்கறே?…நான் குள்ளனாய் இருப்பதால் உனக்கு என்னைப் பிடிக்கலையா?…இல்லை என் மேல் ஏதாவது கோபமா?” கரகரத்த குரலில் கேட்டான்.

“கோபமும் இல்லை…கொத்தவரங்காயும் இல்லை…நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சது யாரு?” விரல்களால் அவன் தோள் பட்டையில் ஒட்டியிருந்த மல்லிகைப் பூவை சுண்டி விட்டபடியே கேட்டாள்.

“ம்ம்ம்…யாரு?” என்று ஒரு வினாடி யோசித்தவன், “நம்ம ஆவி நண்பன்” என்றான் வேகமாய்.

“தெரியுதல்ல?…நாம இல்லறத்தைத் துவங்கும் முன்னாடி அந்த ஆவி நண்பரைக் கூப்பிட்டு…ஒரு நன்றி சொல்லிட்டுத் துவங்கலாம்!ன்னு உங்களுக்குத் தோணலையா?”

“ஆஹா…நான் ஒரு மடையன்…என் மூளைக்கு இது எட்டலை பாரு?” என்றபடி தன் பின் மண்டையைத் தட்டிக் கொண்டான்.

“சரி…சரி…சீக்கிரம் வாங்க…ஆவி நண்பரை இப்பவே கூப்பிட்டுப் பேசிடலாம்” என்றபடி பீரோவின் மீதிருந்த ஒய்ஜா போர்டையும், மற்ற சமாச்சாரங்களையும் எடுத்து தரையில் பரப்பினாள் சுமதி.

பின்னர், இருவரும் சேர்ந்தாற்போல் அமர்ந்து, கண்களை மூடி ஆவி நண்பருக்காக காத்திருந்தனர்.

கால் மணி நேரம்….அரை மணி நேரம்….முக்கால் மணி நேரம் ஆகியும் ஊடக சலன சாதனத்தில் சிறு சலனம் கூடத் தோன்றவில்லை.

வெற்றுக் காகிதம் ஆவியின் வரவிற்காகத் தவமிருந்தது.

இரண்டு மணி நேரம் கடந்து லட்சுமி நரசிம்மன் ஆவி எட்டிப் பார்க்கவில்லை.

இருவருமே களைத்துப் போயினர்.

“என்னங்க?…என்னாச்சு நம்ப நண்பருக்கு…வரவே மாட்டேங்கறார்?”

“அதுதான் எனக்கும் புரிய மாட்டேங்குது!….”விரலால் புருவத்தை சுரண்டியபடி யோசித்த குணா, “சரி…இதுவரை உன்னோட மெத்தேடுல டிரை பண்ணினோம்…இனி என்னோட மெத்தேடுல டிரை பண்ணிப் பார்க்கறேன்” என்றபடி கண்களை மூடி அமர்ந்தான்.

அந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

“ஆவி நண்பா…என்ன கோபம் எங்கள் மேல்?…என் வரமாட்டேன் என்கிறாய்?” வெற்றிடத்தைப் பார்த்துப் பேசினாள் சுமதி.

தலையைத் திருப்பி சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான் குணா.

நேரம் நள்ளிரவு 1.30.

“ஹும்…நம்ம ஃபர்ஸ்ட் நைட் இப்படியே முடிஞ்சிடும் போலிருக்கே?” என்றான் எரிச்சலுடன்.

“போங்க நீங்க!…இந்தக் கல்யாணம் நடக்க உதவிய அந்த ஆவி தெய்வத்திற்கு நன்றி சொல்லாம நான் இல்லற வாழ்க்கையைத் துவங்கவே மாட்டேன்” அடம் பிடித்தாள்.

குணாவுக்கு அவளது பிடிவாதம் ஒரு புறம் கோபத்தை உண்டாக்கினாலும், அவளுடைய நன்றியுணர்வு அந்தக் கோபத்தைக் கூட குளிர்ச்சியாக்கியது. “சரி…சுமதி!…நீ சொல்றபடியே ஆகட்டும்…வா…மறுபடியும் முயற்சி பண்ணுவோம்”

அவர்கள் மீண்டும் நிஷ்டையில் அமரும் போது மணி 2.30.

*****
முதலிரவு அறைக்கு வெளியே ஹாலில் படுத்திருந்த வேணுகோபாலும், ராஜேஸ்வரியும் கிசுகிசுப்பாய்ப் பேசிக் கொண்டனர், “என்னங்க…சாந்தி முகூர்த்த அறைக்குள்ளார இன்னும் லைட் எரியுது?…பேசு சத்தம் வேற கேட்குது?…” ராஜேஸ்வரி கேட்க,

“ஏண்டி…புது மணத் தம்பதிகளை முதலிரவு அறைக்குள்ளார வெச்சுப் பூட்டறது… “அந்த” ஒரு விஷயத்துக்காக மட்டும்!ன்னு நெனச்சியா?…மனம் விட்டுப் பேசி…ஒருத்தரையொருத்தர் புரிஞ்சு கொள்ளவும்தாண்டி!…அம்பளைக்கு என்ன பிடிக்கும்?…என்ன பிடிக்காது?ன்னு பொம்பளை தெரிஞ்சுக்கணும்!…அதே மாதிரி பொம்பளைக்கு என்னென்ன பிடிக்கும்!ன்னு ஆம்பளை புரிஞ்சுக்கணும்….” தத்துவமாய்ப் பேசினார் வேணுகோபால்.

“அது செரி…ரெண்டு பேரும் புரிஞ்சுக்கறதுக்குள்ளார விடிஞ்சிடும்”

“விடிஞ்சா விடியட்டும்…இந்த ஒரு ராத்திரிதானா?…இன்னும் எத்தனையோ ராத்திரிகள் வரப் போகுதே?”

வெளியே அவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் உள்ளே சுமதியின் கை ஆவியின் செய்தியை உணரத் துவங்கியது. அவள் கரம் வெள்ளைத் தாளில் செய்திகளைக் கொட்டியது.

கைகள் ஓய்ந்ததும், கண்களைத் திறந்தாள்.

“என்னங்க இது?..நாம அவருக்கு நன்றி சொல்லணும்னு காத்திட்டிருக்கோம்..ஆவி நண்பர் என்னடான்னா…திடீர்னு வந்தார்…என் கை வழியா ஏதோ தகவலை எழுதினார்…வந்த வேகத்தில் போயே போயிட்டார்” என்றாள்.

நிஷ்டை கலைந்த குணா, “அப்படியா?…எங்கே படி…என்னதான் சொல்லியிருக்கார் பார்ப்போம்?” என்றான்.

“இனிய தம்பதிகளே!…நான் உங்கள் ஆவி நண்பர் லட்சுமி நரசிம்மனின் ஆவி இல்லை!…அவருடைய ஆவித் தோழன்!…உங்கள் நண்பரான லட்சுமி நரசிம்மன் ஆவி.. “ஆவியுலக முக்தி” அடைந்து விட்டது!…இனி அது உங்களுக்கு இறங்காது!…தன்னுடைய முக்தி நாடும் திறன் வளர்ச்சிக்குத் தேவையான நல்ல செயல்களியும், நல்லியல்புகளையும், இறையுணர்வையும் அது போதுமான அளவுக்கு வளர்த்துக் கொண்டு விட்டதால்…விரைவிலேயே முக்தியடைந்து விட்டது!…இனி அது மறு பிறவி எடுத்து மண்ணுலகில் பிறக்கும்!…நான் உங்கள் ஆவி நண்பனின் நண்பன் ஆனதால் உங்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்து விட்டுப் போக வந்தேன்!…வருகிறேன்…இனி அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்காதீர்கள்”

படித்து முடிக்கையில் இருவர் கண்களில் கண்ணீர் அருவி போல் கொட்டியது.

பாறாங்கல்லை நெஞ்சின் மீது வைத்தது போல் நெஞ்சு கனத்தது.

“ஏங்க…அப்படின்னா…இனிமேல் நாம அந்த ஆவி கூடப் பேசவே முடியாதா?” அழுகையை விழுங்கியபடி கேட்டாள் சுமதி.

குணாவால் வாய் திறந்து பதில் சொல்ல முடியவில்லை. தொண்டைக் குழியில் ஒரு துக்கப் பந்து வந்து அடைத்துக் கொண்டது.

சில நிமிடங்கள் அந்த அறைக்குள் கடும் சோகம் பூசிய அமைதியே நிலவியது.
“லட்சுமி நரசிம்மன் ஆவி மறுபடியும் மண்ணுலகில் பிறக்குமாம்!…அது நிஜமாங்க?…சொல்லுங்க!…உங்களுக்குத்தான் இந்த ஆவி சமாச்சாரத்துல என்னை விட அனுபவம் ஜாஸ்தியாச்சே?” கண்களில் ஆர்வம் கொப்பளிக்கக் கேட்டாள்.

அவளை நெருங்கியமர்ந்த குணா, “உண்மைதான் சுமதி…மனிதன் இறந்த பின்னால் அவனுக்குள்ளிருந்து அவனை இயக்கிய “ஆன்மா” என்கிற உள்ளுயிர் வாழ்கிறது!…மறுபிறவியும் எடுக்கிறது!…அந்த மரணத்திற்கும்…மறுபிறவிக்கும் இடையில் ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கேற்ப குறிப்பிட்ட கால வரை பொறிகளும்…புலன்களும் அற்ற ஆவியாக சூக்குமத்துடன் ஆவியுலகில் வாழ்கின்றது!…அதன் பிறகு ஆவியுலகில் முக்தியடைந்து மறு பிறவி எடுக்கின்றது” என்றான்.

“அப்படின்னா….அந்த லட்சுமி நரசிம்மன் ஆவி மறுபிறவியில் எங்கே?…என்னவா? பிறக்கும்” அப்பாவி போல் கேட்டாள் சுமதி.

“யாருக்குத் தெரியும்?…ஒரு வேளை நமக்கே கூட மகனாய்ப் பிறக்கலாம்” என்றான் சிரிப்போடு.

“உண்மையாகவா?” கண்களை அகல விரித்துக் கொண்டு, இரு உள்ளங்கைகளையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு கேட்டாள் சுமதி.

“ம்…அப்படியே நம்புவோம்…நிச்சயம் நம் நம்பிக்கை வீண் போகாது!” என்றபடி அவளை இழுத்தணைத்து நெஞ்செலும்புகளை நொறுக்கி விடும் அளவிற்கு இறுக்கினான்.

இன்பமாய் மூச்சுத் திணறினாள்.

அமானுடத்தால் இணைந்த அந்த இதயங்கள் அதே அமானுடத்தை மானுடமாக்கும் ஆர்வத்தில் இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தன.

– தொடரும்…

< இருபத்தி ஆறாம் பாகம் | இருபத்தி எட்டாம் பாகம் >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...