அஷ்ட நாகன் – 22| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 22| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

நாகங்களை ஈசன் தன் அணிகலன்களாக அணிந்துக் கொள்வதால் சிவபெருமானை “நாகாபரணன்” என்ற சிறப்பு பெயர்க் கொண்டு இறை அன்பர்கள் அன்போடு அழைப்பார்கள்‌.தில்லை நடராஜ மூர்த்தியின் திருமேனி முழுவதும் பாம்பணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நாகாபரணம் அணிந்த தில்லை நடராஜரின் அழகில் மயங்கிய குமரகுருபரர் ஈசனைப் பற்றி அழகான பாடல் ஒன்று இயற்றியுள்ளார். அது…

“திருமுடியில் கண்ணியும் மலையும்,
திருமார்பில் ஆரமும் பாம்பு பெருமான்,
திருவரையில் கட்டிய சக்கையும் பாம்பு,
பெரும்புயத்தில் கங்கணமும் பாம்பு…”

நீல நாகம் என்ற ஒரு வகை அபூர்வமான நாகம் இருந்ததாக சிறுபாணாற்றுப் படையில் ஒரு பாடல் குறிப்பு உள்ளது.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான “ஆய்” என்ற மன்னன் “நீல நாகம்” உரித்த தோலாகிய ஆடையைத் தான் அணிந்துக் கொண்டு நீண்ட நாள் வாழ வேண்டும் என்று எண்ணாமல் அதனை ஒரு ஆலமரத்தின் கீழ் ஆகாச லிங்க ரூபத்தில் இருந்த சிவபெருமானுக்குத் தந்து மகிழ்ந்தார் என்று சிறுபாணாற்றுப்படை பாடல் கூறுகிறது.அப்பாடலானது,

“கழறொடித் தடக்கை காரியு நிழற்கழ்
நீல நாக நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன்
கொடுத்த…”

நாகங்கள் தோல் உரிப்பதால் அவை சாகாவரம் பெறும் தன்மை பெற்றது என்று காலங்காலமாக ஒரு நம்பிக்கை உண்டு.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு போகும் வழியில் ஒரு ஒத்தையடி பாதை ஒன்று பிரிகிறது.கரடுமுரடான கல்லும் முள்ளும் நிறைந்த அந்த பாதையில் சுமார் நான்கு மணி நேரம் பயணம் செய்தால் வழியில் ஒரு ஆறு தென்படும்.அந்த ஆற்றின் ஆழம் ஒரு சராசரி மனிதனின் இடுப்பளவு இருக்கும்.அந்த ஆற்றில் இறங்கி மெல்ல நடந்து ஆற்றைக் கடந்து மீண்டும் காட்டிற்குள் நடக்க வேண்டும்.ஓங்கி உயர்ந்த மரங்கள் நிறைந்த அந்த அடர் வனத்திற்கு மத்தியில் தான் “கைக்கட்டி சித்தர்” என்னும் கோரக்கர் சித்தரின் குகை உள்ளது.

ஆம்.கோரக்கர் சித்தரை கொல்லி மலைவாசிகள் “கைக்கட்டி சித்தர்” என்று தான் அன்போடு அழைப்பார்.கோரக்கர் சித்தர் தூய உள்ளத்தோடும் பக்தியோடும் தன்னை நாடி இந்த குகைக்கு வருகை புரியும் ஞானிகளுக்கு காட்சி தராமல் இருந்ததில்லை.(சமீபத்தில் கோரக்கர் சித்தரை “யோகி கைலாஷ் நாத்” என்ற சித்தர் நேரில் தரிசனம் செய்துள்ளார்)

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோரக்கர் குகையில் தான் நந்தனும்,ஏலக்காய் சித்தரின் குடிசையில் நாக சாஸ்திர ஏடுகளை காவல் காத்துக் கொண்டிருந்த ராஜ நாகமும் காணப்பட்டனர்.

கோரக்கர் சித்தர் குகையில் ஒரு வினாயகர் சிலையும்,ஒரு சிவலிங்கமும் காணப்பட்டது.

ராஜ நாகத்தின் வாயில் நாக சாஸ்திர ஏடுகள் இருந்தது.நந்தன் ‘மகுடிக்கு மயங்கிய நாகம் போல’ அந்த ராஜ நாகத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த ராஜ நாகம் ஒரு பெண் இச்சாதாரி நாகமாக உருமாறி நந்தன் முன் தோன்றினாள்.அந்த காட்சியைக் கண்டதும்,நடப்பது கனவா?நனவா?என்ற சந்தேகத்துடன் நந்தன் தன் கண்களை கசக்கிக் கொண்டான்.சில நொடிகளில் இது கனவல்ல நிஜம் என்பதை உணர்ந்துக் கொண்டான்.அந்த இச்சாதாரி நாகினியிடம் பேச முற்பட்டான்‌.

“நீ…நீ…” என்று நந்தன் அந்த இச்சாதாரி நாகினியிடம் பேச ஆரம்பித்தான்.

“நந்தா ! என் பெயர் ராகினி.நான் ஒரு பெண் இச்சாதாரி நாகினி.இவ்வளவு காலம் இந்த நாக சாஸ்திர ஏடுகளை பாதுகாத்து வந்தேன்.நீ நந்தன் அல்ல ! நீ ஒரு இச்சாதாரி நாகம்.உன் முற்பிறவியின் பெயர் “நாக நந்தன்” என்று கூறினாள்.

ராகினி என்ற அந்த பெண் இச்சாதாரி நாகினி கூறியதை கேட்டதும்,நந்தன் பேரதிர்ச்சி அடைந்தான்.அவனால் அந்த பெண் இச்சாதாரி நாகினி சொன்னதை நம்பவும் முடியவில்லை.நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

“நீ சொல்றது உண்மையா?” என்று நந்தன் மீண்டும் ராகினியிடம் கேள்வி எழுப்பினான்.

“நந்தன் ! நீ நாக நந்தன் அப்டிங்குறதை நீ நம்பித்தான் ஆகணும்.இதோ இந்த நாக சாஸ்திர ஏடுகளை “அஷ்டநாக லிங்கேஸ்வரர்” கோயில்ல இருக்குற “அஷ்டநாக லிங்கேஸ்வரர்” கருவறையில் பத்திரமாக சேர்த்திடு.அந்த கோயில் சன்னதியை அடைஞ்சதும் உனக்கே எல்லாம் புரியும்” என்று கூறிவிட்டு,நாக சாஸ்திர ஏடுகளை நந்தனின் கையில் ஒப்படைத்து விட்டு,நாக வடிவிற்கு மீண்டும் உருமாறிய ராகினி தன் வழியில் பயணமானாள்‌.

நாக சாஸ்திர ஏடுகளை தன் கைகளில் பெற்றதும் அதிலிருந்து வெளிப்பட ஒரு தெய்வீக ஒளி நந்தனுக்கு அஷ்டநாக லிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு செல்லும் வழியை காண்பித்தது‌.

நந்தனும் அந்த தெய்வீக ஒளியை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

– தொடரும்…

< இருபத்தி ஒன்றாம் பாகம்

கமலகண்ணன்

2 Comments

  • அருமையான தொடர்ச்சி

    • மிக்க நன்றி நண்பரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...