வாகினி – 36| மோ. ரவிந்தர்

 வாகினி – 36| மோ. ரவிந்தர்

சூரியன் அஸ்தமித்து வெகுநேரம் இருக்கும். அந்த ஆகாயத்தில் தங்கியிருந்த வெள்ளி நிலவின் வெளிச்சத்தைத் தவிர இப்போது பெரிதாக வெளிச்சம் எதுவும் இல்லை. அந்தப் பாதையில் இருந்த சில மின் விளக்குகள் ஏதோ ஒரு மூலையில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. அந்த நிலவு காட்டிய பாதையில் சின்னப் பொண்ணு வீட்டிற்குச் சென்றுவிட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள், வனிதா.

‘நேரம் கடந்துவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் இன்னும் நான் வரவில்லை என்று பதறிக் கொண்டு இருப்பார்கள்’ என்ற எண்ணத்தில் இந்தப் பாதையைத் தேர்ந்து எடுத்து வேகமாக வந்து கொண்டிருந்தாள், வனிதா.

குடிகார வர்க்கம் இந்தப் பாதையில் ஆதிக்கம் செய்து கொண்டிருப்பதால் வெகுஜன மக்கள் இந்தப் பாதையை இருட்டு வேளைகளில் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.

‘எப்படியோ ஒருவழியாகக் கஷ்டத்தை எல்லாம் தாண்டி அக்கா நம்மோடு வந்து சேர்ந்து விட்டாள். இனி அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.’

‘என்னதான், பாபு சின்னப் பையனாக இருந்தாலும் அவன் சொல்வதும் சரிதான். இந்த ஊரிலேயே நாம் இருந்துட்டு இருந்தா எல்லாரும் பழைய கதையைப் பேசிட்டு, பரிதாப பார்வையோடு நம்மைப் பார்த்துட்டு இருப்பாங்க. அந்தப் பார்வையில் இருந்து விலக வேண்டும் என்றால் இங்கிருந்து சென்றால் தான் அது நடக்கும். அடுத்ததாக, அக்காவிற்கு ஒரு வரனை பார்த்துத் திருமணம் முடித்துவிட்டால், அவளுக்கும் ஒரு நல்லவழி பிறக்கும். இதற்கு ஒரு வழி கிடைத்தால் போதும் கடவுளே!’ என்று நினைத்துக் கொண்டு தன் பாதையில் வந்து கொண்டிருந்தாள், வனிதா.

வெகுநேரம் தாண்டி விட்டதால் மரகதமும், திலகவதியும் வீட்டுக்குள் புலம்பிக் கொண்டிருந்தனர்.

“அப்பவே சொன்னேன். நேரங்கெட்ட நேரத்துல வெளியே போகாதடின்னு. கேட்டாளா அவ? பார் எவ்வளவு நேரம் ஆகுது, இன்னும் வீடு வந்து சேரல” என்று திலகத்திடம் புலம்பிக் கொண்டிருந்தாள், மரகதம்.

“என்னத்த சொல்ல சித்தி, அவ எங்க, நம்பப் பேச்சைக் கேட்குறா. டேய் பாபு எங்கடா இருக்க? அக்கா எங்க இருக்கானு போய்ப் பாருடா” என்று பெரும் குரல் எழுப்பினாள், திலகம்.

“அம்மா, பாபு எங்கேயோ போய் இருக்கான். நீங்க ரெண்டு பேரும் இப்படியே புலம்பிட்டு இருக்காதீங்க. நான் போய்ப் பார்த்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு எழுந்தாள், வாகினி.

“அம்மா, இந்த ஊரு உனக்குப் புதுசு‌. நீ எங்கம்மா போய்த் தேடுவ? நான் போய்ப் பார்க்கறேன், இரு.” என்றாள், மரகதம்.

“கல்லு முள்ளு கிடந்த பாதையைக் கண்டவளுக்கு, எல்லாப் பாதையும் ஒண்ணுதானே அத்தை” என்று கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியில் வந்தாள் வாகினி.

வனிதா வந்துகொண்டிருந்த பாதையில் வெகுதூரத்தில் தென்னம் ஓலையால் அமைந்த ஒயின்ஷாப் வாசலில், வைரக்கற்கள் மின்னுவதைப் போல் மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்தக் கடையில் சில குடிமகன்கள் மூக்கு முட்ட குடித்துக் கொண்டிருந்தனர்.

அதை எல்லாம் வனிதா கவனிக்காமல் ஏதோ சிந்தனையுடன் வந்து கொண்டிருந்தாள்.

மேல் வானம் கருநீல வண்ணமாய் மேகமூட்டம் பின்னோக்கி பூத்துக் குலுங்கிச் சென்று கொண்டிருந்தது.

அதே பாதையில் வெகுதொலைவில் இடதுபுறம் சற்றுத் தொலைவில் மாட்டு வண்டியின் நுகத்தடியில் இரண்டு காளை மாடுகள் பூட்டப்பட்டு, அவை இரண்டும் பக்கத்தில் இருந்த வைக்கோல் போர்வையை மேய்ந்து கொண்டிருந்தது. வண்டியின் மையப்பகுதியில் வெளிச்சத்திற்காக லாந்தர் விளக்கு அங்கிருந்த மாடுகளுக்கு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருந்தது. அந்த மாட்டு வண்டியில் பல வண்ண பூந்தொட்டிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

அதன் உரிமையாளர் அந்த ஒயின்ஷாப்பில் காலை முதல் உழைத்த உழைப்பிற்குத் தனது அலுப்புகளைத் தீர்த்துக்கொள்ளக் மதுவைக் குடித்துக் கொண்டிருத்தான்.

வனிதா மேலே சென்று கொண்டிருந்த கருநிற மேகத்தை எல்லாம் ரசித்துக் கொண்டு, மெல்ல அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்தாள்.

அவள் வந்துகொண்டிருந்த அதே பாதையில், நெட்டையன் ஏற்கெனவே குடித்த குடி போதாதென்று இரண்டாவது முறை குடிப்பதற்காகக் குடிபோதையுடன் ஒயின்ஷாப்பை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அதே வரிசையில் வனிதா வந்து கொண்டிருப்பது நெட்டையன் பார்வையில் விழுந்தது. அவளைக் கண்டதும் வம்பு செய்ய ஆரம்பித்தான்.

“என்ன வனிதா, எப்படி இருக்க? உங்களுக்கா ஜெயிலில்ல இருந்து திரும்பி வந்துடுச்சுன்னு கேள்விப்பட்டேன். அவ எப்படி இருக்கா? எப்படியோ வளர்ந்து பெரிய மனுஷியாகி உங்க அம்மா மாதிரி சும்மா ஜம்முனு தான் இருப்பா?” என்று போதையுடன் உளறினான், நெட்டையன்.

வனிதாவிற்குக் கோபம் பொங்கி வந்தது. ஆனால், போதையில் இருக்கும் இந்த மிருகத்திடம் என்ன பேசுவது என்று அவனை நெருப்புப் பார்வையில் சுட்டெரித்துக் கொண்டே, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

“என்ன வனிதா நான் பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன். நீ போயிட்டே இருக்க, இப்படி வா…?” என்று அவளுடைய இடதுகையைப் பிடித்து இழுத்தான்.

வனிதாவிற்குக் கோபம், பயம் இரண்டும் பார்வையில் மாறி மாறி தாளம் போட ஆரம்பித்தது. எதைப் பற்றியும் அதிகம் யோசிக்காமல், நெட்டையன் கன்னத்தில் ஓங்கிப் பளீரென ஒன்று வைத்தாள்.

அவ்வளவுதான் நெட்டையன் கன்னம் ஒரே அடியில் பழுத்தது. அதைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல் பிடித்த கையை விடாமல் தனது இடதுகையால் வனிதாவின் தாவணியைப் பிடித்து இழுத்தான்.

அவனுடைய செயல் வனிதாவிற்கு மேலும் பயத்தைத் தந்தது. அவனைத் தன் இடது காலால் எட்டி உதைத்து விட்டு, கையையும், தாவாணியையும் வேகமாக இழுத்துக் கொண்டு, அந்த இடத்தை விட்டு வேகமாக ஓட்டம் பிடித்தாள்.

கீழே விழுந்தவன் எழுந்து மீண்டும் வனிதாவைத் துரத்த ஆரம்பித்தான்.

அதே நேரம், வனிதாவைத் தேடிக் கொண்டு அந்தப் பாதை வழியாக வந்து கொண்டிருந்தாள், வாகினி.

வேகமாக ஓடிவந்து வாகினியின் மீது மோதிவிட்டு, நிலைகுலைந்த நிலையில் மூச்சிரைக்க நின்றாள், வனிதா.

வனிதா, பயத்தால் மூச்சிரைப்பதும், அதே பாதையில் நெட்டையன் போதையில் தள்ளாடிக் கொண்டு வனிதாவைத் துரத்திக் கொண்டு வருவதும் வாகினி பார்வையில் விழுந்தது. வனிதாவை இந்தக் கோலத்தில் கண்டதும் வாகினி உள்ளம் கோபத்தால் வெடித்தது.

‘இந்தத் தண்டனையால் தான் என்னுடைய குடும்பம் சீரழிந்தது. மீண்டும் அதே நிலையில் எங்களைத் தள்ளப் பார்க்கிறாய்’ என்று கோபத்தால் கன்னம் சிவந்தது. பத்ரகாளியாக மாறினாள். அந்தப் பாதையில் இருந்த மரத்திலிருந்து கீழே விழுந்த தென்னை மட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு,

“டேய், நாங்க எல்லாம் பட்டதெல்லாம் போதாதா? இன்னும் ஏன்டா எங்கள இப்படித் துரத்தி அடிக்கிறீங்க…” என்று கத்திக்கொண்டே ஓடிப்போய் நெட்டையனை சரமாரியாகத் தாக்கினாள், வாகினி.

அவன் உடம்பில் தென்னை மட்டை படாத இடமே இல்லை எனலாம். அவ்வளவு அடி உதை , உடம்பு முழுவதும் நொடியில் பட்டை தீட்டப்பட்ட காயமாக மாறியது.

நெட்டையன், அவள் கையில் வைத்திருந்த மட்டையைப் பிடுங்க எவ்வளவோ முயற்சி செய்தான். ஆனால், முடியவில்லை. அதற்குள், வாகினி விஸ்வரூபம் கொண்டு அடிக்கத் தொடங்கினாள். அவனோ, வலியால் துடிதுடித்துப் போனான். வெடித்துச் சிதறும் எரிமலை போல் இத்தனை காலம் தனது உள்ளத்தில் வைத்திருந்த கோபத்தை எல்லாம் அவன் மீது கொட்டினாள், வாகினி.

இதற்குமேல் அவனால் வலி தாங்க முடியவில்லை. உயிர் பிழைத்தால் போதும் என்றானது. வாகினியிடம் இருந்து தப்பிக்க இரண்டு மாடுகள் கட்டப்பட்டிருந்த திசை பக்கம் தெறித்து ஓடினான், நெட்டையன்.

இங்கு நடந்து கொண்டிருந்த காட்சி எல்லாம் பார்க்கும் பொழுது, வனிதா உள்ளம், பயத்தால் குலை நடுங்கியது. எங்கே? ‘நெட்டையன், அக்கா அடிக்கும் அடியில் இறந்த விடப் போகிறான்’ என்று.

வாகினியும் அவனைச் சும்மா விடுவதாகத் தெரியவில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப்போல, உச்சக்கட்ட கோபம் அவளுக்குத் தலைக்கு ஏறியது. கையில் வைத்திருந்த தென்னம் மட்டையை அவன் மீது வீசிக்கொண்டே அவன் பின்னாலேயே ஓடினாள்.

அதற்குள், நெட்டையன் தூரத்தில் கட்டியிருந்த காளை மாடுகளின் நுகத்தடியைத் தாண்டிக்கொண்டு வைக்கோலை மேலே நிலைகுலைந்து தொப்பென்று விழுந்தான். நுகத்தடி மீது நெட்டையன் இடது கால் வேகமாகப் பட்டதால் வண்டி பெருசாக ஆட்டம் கண்டது. நொடிப்பொழுதில் வண்டி மீது இருந்த லாந்தர் விளக்கு வைக்கோல் மேல் வேகமாக விழுந்து உடைந்து, பெரிதாகத் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன.

கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பைக் கண்டதும் காளை மாடுகள் இரண்டும் மிரண்டு கத்திக்கொண்டு அங்குமிங்குமாக அலைமோத ஆரம்பித்தன.

பத்ரகாளியாக மாறிய வாகினி, நெட்டையனுக்குக் கடவுள் கொடுத்த தீர்ப்பை கண்டு மெதுவாகச் சாந்தம் கொண்டாள்.

எரிந்துகொண்டிருந்த வைக்கோலில் இருந்த தனது பார்வையை மறைத்து வனிதாவைத் திரும்பிப் பார்த்தாள், வாகினி. பயத்தால் வனிதா நடு நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

வனிதாவை நோக்கி மெல்ல நடந்து வந்தாள், வாகினி.

இந்த உலகத்தில் நான்கு திசைகளிலும் இருந்து ஒரு கத்தி நம்முடைய கழுத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பயத்தால் அதை என்றுமே வெல்ல முடியாது. துணிந்து நின்றால் மட்டுமே அதிலிருந்து நாம் தப்பிக்க முடியும் என்று வாகினியின் புத்தி அசை போட்டது.’

வனிதாவின் கையைத் தன்னுடைய கையுடன் இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்தாள், வாகினி.

இவர்கள் இரண்டு பேரும் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்ற பெரும் கலக்கத்துடன் இவர்களின் சொந்தக்காரர்களான பெரியப்பா இளங்கோவன், அவருடைய மனைவி திலகமும், அத்தை மரகதமும், தம்பி பாபு மற்றும் ஊர் மக்கள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

வாகினி மற்றும் வனிதா இருவரும் பெரும் கலவரத்தில் இருப்பதைக் கண்டதும், இவர்களுக்குள் மேலும் பயம் அதிகரித்தது.

“ஏம்மா லேட், நீங்க இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று பெரும் கலவரத்துடன் கேள்வி எழுப்பினள், மரகதம்.

“ஒன்னும் இல்லைங்க அத்தை, சின்னப் பொண்ணு அக்கா வீட்டுக்கு போய்ட்டு வர கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு. அவ்வளவுதான்” என்று சமாளித்தாள், வனிதா.

வாகினி, வனிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு எதுவும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தாள்.

பெரும் மக்கள் கூட்டத்திற்கு இடையில் நரை முடி விழுந்த முகத் தோற்றத்துடன் அக்கா மகாலட்சுமியும், அவளுடைய கணவன் கபிலன் வயதான தோற்றத்தில் முகத்தில் முகக் கண்ணாடி அணிந்த உருவமாகவும். இருவரின் இடையில் மகன் ஸ்ரீகாந்தும் வாகினியைக் கண்ட மகிழ்ச்சியில் புன்னகையுடன் காட்சியளித்தனர்.

இதைக் கண்டவுடன் வாகினி நெஞ்சம் ஏதோ ஒரு துயரத்தில் தள்ளி விட்டதைப் போல் இருந்தது.

தன்னையறியாமல் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் கசிந்தது. களமும் காட்சியும் இவ்வளவு மாறி இருக்கிறதே என்று அழுதாள்.

இத்தனை வருஷத்தில் பட்ட கஷ்டத்தை எல்லாம் மறந்து, தூரத்தில் தெரிந்த தன் உயிர்களை அன்பு கலந்த ஆனந்தத்தோடு ஓடி வந்து கண்ணீருடன் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள், வாகினி.

அவர்களும், வாகினிக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாத வண்ணம் வாகினியைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தனர்.

சிலர், வைக்கோல் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு, அதை அணைப்பதற்கு ஓடிக் கொண்டிருந்தனர்.

நுகத்தடியில் கட்டப்பட்ட இரண்டு மாடுகளும், தனது மூக்கணாங்கயிறை அறுத்துக்கொண்டு வேறொரு திசையில் வேகமாக ஓடத்தொடங்கியது.

கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த வைக்கோல் அணைக்க முடியாத பெரும் நெருப்பு ஜ்வாலைகளைக் கக்கிக்கொண்டு பெருமளவில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பு ஜ்வாலையில் நெட்டையன் கருகிக் கொண்டிருந்தான்.

எத்தனை முண்டாசுக் கவிஞன் பெண்களின் பெண்மையையும், துயரங்களையும் போற்றிப் புகழ்ந்தாலும். தினம் ஏதோ ஒரு மூலையில் பெண்களின் கண்ணீர்த் துளிகள் ‘கண்ணீரில் வரைந்த ஓவியமாக’ இன்றளவும் இருட்டுக்குள் மறைக்கப்பட்டுதான் இருக்கிறது.

‘வாகினி’ இனி தனது புதிய பாதையில் பயணிப்பாள்…

< முப்பத்தி ஐந்தாம் பாகம்

-சுபம்-

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...