சுதந்திரப்போராட்ட வீராங்கனை தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாள் நினைவுநாள்

 சுதந்திரப்போராட்ட வீராங்கனை தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாள் நினைவுநாள்

      அன்றைய தென்னாற்காடு மாவட்டம் கடலூரில் முது நகரில் சுண்ணாம்புக்கார தெருவில் 1890ம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலை. இவருடைய பெற்றோர் முத்துமணிபடையாட்சி- அம்மாக்கண்ணு. லாடம் கட்டுவது, குதிரை வண்டிகளை வாடகைக்கு விடுவது ஆகியவை முத்துமணியின் தொழில். நடுத்தரமான சொத்துக்களை கொண்டிருந்த முத்துமணி தம்மிடம் லாடம் கட்டுவது உள்ளிட்டவை மூலம் பழகிய வெள்ளைக்காரர்களிடம் இருந்து ஆங்கிலம் பேசுவதற்கு பழகி இருந்தார். இவருடைய முதல் மகன் ராஜி, இரண்டாவது மகள் அஞ்சலை, மூன்றாவது ராமசாமி, நான்காவது மகன் பெயர் தெரியவில்லை. ஐந்தாவது மகன் சிங்காரம்.

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது வரை படித்திருந்த அஞ்சலைக்கு சிறு வயது முதற்கொண்டே செய்தி ஏடுகளைப் படிப்பது, புத்தகங்களை வாசிப்பது போன்ற பழக்கங்கள் இருந்தன. தந்தையிடம் இருந்து ஆங்கிலம் நன்றாக பேச பழகியிருந்தார்.

 1908 திருமணம்

இதே மாவட்டத்தில் சேத்தியாதோப்புக்கு மேற்கே உள்ள பெரிய நற்குணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமுப்படையாட்சி மகன் முருகப்பனுக்கும் அஞ்லைக்கும் 1908ஆம் ஆண்டில் திருமணம் நடை பெற்றது. இந்தத் தம்பதிக்கு கரும்பு, சரசுவதி, அம்மாப் பொண்ணு, கல்யாணி ஆகிய நான்கு மகள்கள். காந்தி, ஜெயில் வீரன் என்று இரண்டு மகன்கள்.

பெரிய நற்குணத்தைச் சேர்ந்து முருகப்பன் திருமணத்திற்கு முன் புவனகிரியில் நெசுவு வேலை செய்துவந்தார். இதனால் திருமணத் திற்குப் பிறகு சுண்ணாம்புக்கார தெரு வீட்டில் தறி போட்டு நெசவு செய்துவந்தார்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகள் தாங்காமல் பாரதியார் பாண்டிச்சேரியில் 1908ம் ஆண்டு முதல் 1918 வரை பத்தாண்டுகள் தங்கி இருந்தார். அப்போது அவர் நடத்திய பத்திரிகைகளை அஞ்சலை அம்மாள் படிப்பது, அதற்குக் கடிதம் எழுதுவது மேலும் சில நேரங்களில் தம்மால் முடிந்த அளவு நிதி உதவி செய்வது போன்றவற்றைச் செய்து வந்துள்ளார். இதன் மூலம் பாரதி யாருடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டது.

அப்போது அஞ்சலையி்ன் தம்பி ராமசாமி வண்டி ஓட்டும் தொழிலை செய்து வந்தார். இந்த வண்டியில் பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்து கடலூரில் அஞ்சலை வீட்டுக்கு மூன்று முறை வந்து உரை யாடிவிட்டு சென்றிருக்கிறார். இதனை பின்னாளில் அஞ்சலை மூலம் அறிந்த அவருடைய உறவினர்கள் தெரிவித்து இருக் கின்றனர். இதன் பிறகு 1918ல் பாண்டிச்சேரியை விட்டு புறப்பட்ட பாரதியார் கைது செய்யப்பட்டு கடலூர் கொண்டுவந்து சிறை வைக்கப்பட்டார். அப் போதும் அஞ்சலை – முருகப்பன் தம்பதிகள் பாரதியாருக்கு சேவை செய்துள்ளனர். கடலூர் மத்திய சிறையில் பாரதி வைக்கப்பட்டிருந்த தால் சிறை வளாகத்தில் ஒரு இடத்திற்கு பாரதி பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

      1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி காந்திஜி கடலூர் வந்திருந்தார். காங்கிரஸ் கட்சியை வலுப்ப டுத்துவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்து மக்களைச் சந்தித்து வந்த காந்தியடிகள் கெடிலம் ஆற்றில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காந்தி பேசியதைக் கேட்க பல ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். அப்போது காந்தியின் பேச்சைக் கேட்ட முருகப்பன் தமது மதுப்பழக்கத்தை அறவே கைவிட்டார். இதனால் காந்தி மீது அஞ்சலை அம்மாளுக்கு மதிப்புக் கூடியது. இதன் பிறகு காங்கிரஸ் கட்சி வேலைகளில் அஞ்சலை அம்மாள் இன்னும் அதிக ஆர்வமாக ஈடுபடத் தொடங் கினார்.

1922ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி முதன் முதலில் மகாகவி பாரதியாரின் முதலாமான்டு நினைவு தினத்தை கடலூர் மத்திய சிறையில் கொண்டாடினார் அஞ்சலை அம்மாள்.

      அன்றைய சென்னை மாகாணத்தில் இந்த நாளில் பெண்கள் யாரும் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடவி்ல்லை. அஞ்சலை அம்மாளும் காங்கிரஸ் தலைவர் என். சீனுவாச அய்யங்கார் மனைவி யுந்தான் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக பங்கு பெற்ற இரு பெண்கள் ஆவார். இதனால் அஞ்சலை முதல் சுதந்திரப் போரட்ட வீராங்கனை என்று போற்றப்பட்டார்.

      வெள்ளையர்களுக்கு எதிராக கள்ளுக்கடை மறியல், அன்னியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களை கடலூரில் அஞ்சலை அம்மாள் தீவிரமாக நடத்தி வந்தார். அஞ்சலை அம்மாளையும் கணவர் முருகப்பனையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலிஸ் காரர்கள் பகல் முழுவதும் சுற்றி வருவார்கள். இருட்டிய பிறகு கடலூருக்கு மேற்கே உள்ள முந்திரிக்காடுகளில் முருகப் பனை ஒரு இடத்தில் இறக்கிவிட்டனர். அங்கிருந்து சில மைல் தள்ளி அஞ்சலை அம்மாளை இறக்கிவிட்டு போனார்கள். முந்திரிக் காட்டில் இருட்டில் மனைவியைக் கண்டுபிடிக்க முருகப்பன் “ஏய் அஞ்சலை” என்று உரக்கப் பாட்டுப் பாடிக்கொண்டே போயிருக் கிறார். காதில் விழுந்ததும் அஞ்சலை எதிர்பாட்டுப் பாடிக்கொண்டு வந்து இருக் கிறார்.

      இதன் பிறகு போராட்டக் காலங்களில் போலிசார் கைது செய்து வயல்வெளி அல்லது முந்திரிக்காடுகளில் இரவுப் பொழுதுகளில் இறக்கி விடும்போதெல்லாம் பாட்டுப் பாடி ஒருவரை ஒருவர் அடையாளங் கண்டு வீடு திரும்பினார்கள்.

பெரியார் வந்தார்

      தந்தை பெரியார் அவர்கள் 1922ம் ஆண்டில் தமி்ழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தார். அப்போது அவர் ஊர் ஊராகச் சென்று கதர் துணி அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வந்தார். இதற்காக கடலூர் வந்த பெரியார் அஞ்சலை வீட்டுக்கு வந்து அங்கு கூடியிருந்தவர்களிடம் அந்நிய துணியைப் புறக்கணிக்க வேண்டியதன் அவசியம் பற்றி விவரித்தார். இதன் பிறகு பெரியாருடன் அஞ்சலை அம்மாள் கடலூர் வீதிகளில் தலையில் துணி மூட்டையை சுமந்து சென்று கதர்த் துணிகளை வாங்குமாறு வலியுறுத்தி பரப்புரை செய்தார்.

      இது போன்ற காலங்களில் பேருந்து நிலையத்தில் கதர்த் துணி விற்க இருப்பதாக விளம்பரம் செய்தால் அங்கு போலிஸ் சூழந்து கொண்டு துணி விற்கவிடாமல் தடுத்து வந்தனர். இதற்காக அஞ்சலை அம்மாள் பேருந்து நிலையம் என்று சொல்லி போலிசாரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு ரயில் நிலையத்தில் கதர்த் துணி விற்பனை செய்துள்ளார். பின்னாளில் தடையை மீறி கூட்டம் நடத்த வேண்டியபோதொல்லாம இப்படி ஒரு இடத்தில் விளம்பரம் செய்து விட்டு இன்னொரு இடத்தில் கூட்டம் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தர்.

கைதிகளுக்கு உணவு

            1923ஆம் ஆண்டு மதுரையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப் பட்ட மதுரை சுதந்திரப் போராட்ட வீரர்கள் 100 பேருக்கு இரவு உணவு வழங்கவில்லை என்று தகவல் வரவே கடலூர் ஓல்டு டவுன் ரயில்வே ஜங்கஷனில் தியாகி சுப்பிரமணிய சிவாவின் தலைமை யில் காங்கிரஸ் தொண்டர்களுடன் மறியல் செய்தார்.

      மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய சிவா அந்தக் கால கட்டத்தில் மிகத் தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர். இவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டார். சிவாவை கடலூருக்கு வரவழைத்து அவர் தங்குவதற்கு ஆசிரமம் ஒன்றை அஞ்சலை அம்மாள் அமைத்துக்கொடுத்தார். இங்கு தங்கி சுற்று வட்டாரங்களில் சுப்பிரமணிய சிவா இளைஞர்களுக்கு சுதந்திர தாகம் ஊட்டி வந்தார்.

   1923ம் ஆண்டில் மதுரையில் கள்ளுக்கடை மறியலில்  ஈடுப்பட்ட காங்கிரஸ்காரர்கள் நூறு பேரை கைது செய்த போலிசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தண்டனை வாங்கி தந்தனர். அவர்களை ரயிலில் ஏற்றி கடலூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இடையில் சாப்பாடு எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றிய தகவல் ரயில்வே பணியாளர் ஒருவர் மூலம் அஞ்சலை அம்மாளுக்குத் தெரியவந்தது. உடனே இவர் ஆட்களைத் திரட்டி சமையல் செய்துவிட்ட சுப்பிர மணிய சிவா மற்றும் பல காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்துக்கொ ண்டு கடலூர் ரயில் நிலையத்துக்குச் சென்றார். இரவு ஒரு மணிக்கு ரயில் வந்தது. மதுரை காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் பசியோடு இருந்தனர். ஆனால் அவர் களுக்கு சாப்பாடு கொடுக்க கடலூர்காரர்களை அனுமதிக்க வில்லை. இங்குள்ளவர்கள் சொன்னதன் பேரில் நூறு பேரும் ரயில் நிலைய நடைபாதையில் படுத்துக்கொண்டு சாப்பாடு தந்தால்தான் புறப்படுவோம் என்று கூறிவிட்டனர். இதனால் எதுவும் செய்ய முடியாத போலிசார் பிறகு அவர்களுக்கச் சாப்பாடு கொடுக்க அஞ்சலை அம்மாளுக்கு அனுமதி தந்தனர்.

      இந்த நிகழ்வுக்குப் பிறகு கடலூரில் இருந்த ஆசிரமத்தை போலிசார் மூடி சீல் வைத்துவிட்டனர். சிவா அவர்கள் மற்ற ஊர் களுக்கு சென்றுவிட்டார். இதன் பின் தொழுநோயாளிகள் ரயிலில் பயணம் செய்யக் கூடாது என்ற வெள்ளக்கார அரசு உத்தரவு போட்டுவிடுகிறது. மதுரையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஏற்பாடு செய்து கொடுத்த மாட்டுவண்டியில் பயணம் செய்து சிவா ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்துவி்ட்டு 1925ம் ஆண்டில் கடலூர் வந்தார். இங்கு அவர், பிரச்சாரம் செய்வதற்கு போலிஸ் தடை விதித்து விட்டது. அஞ்சலை அம்மாள் பெருமளவு தொண்டர்களைச் சேர்த்துக் கொண்டு தடையை மீறி சுப்பிரமணிய சிவா பேசுவதற்கு ஏற்பாடு செய்து தந்தார்.

      அப்போது சிவா தொழுநோயாளி என்பதால் யாரும் தங்குவதற்கு இடம் தரவில்லை. இதனை அறிந்து வேதனையுற்ற அஞ்சலை, அவரை தமது வீட்டில் தங்க வைத்து பணிவிடை செய்தார். திடீரென சிவாவுக்கு உடல் நலன் பாதிக்கப்ட்டது. அவர் தம்மை தருமபுரி அருகே பாப்பாரபட்டியில் உள்ள பாரத மாதா ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். மாட்டு வண்டியில் செல்வதற்கு ஏற்ப உடல் நலன் இல்லாததால் அஞ்சலை அம்மாள் மற்றவர்ளுடன் சேர்ந்து மோட்டார் கார் ஒன்றை ஏற்பாடு செய்து அவரை பாப்பாரப் பட்டிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்ற சில வாரங்களில் சுப்பிர மணிய சிவா காலமாகிவிட்டார்.

1927 நீல் சிலை போராட்டம்

      இன்று உத்திரப்பிரதேசம் எனப்படும் ஐக்கியமாகாணத்தில் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ராணுவ வீரர்கள் கலகத்தை வெறித்தனமாக அடக்கிய ஜார்ஜ் ஸ்மித் நீல் என்ற வெள்ளைக்கார தளபதிக்கு சென்னையில் இன்றைய அண்ணா சாலையில் ஸ்பென்சர் கட்டடம் எதிரே 12 அடி உயர சிலையை ஆங்கிலேயே அரசு நிறுவி யிருந்தது. அவன் செய்த கொடுமைகள் பின்னர் தெரிய வந்ததால் நீல் சிலையை அகற்றக்கோரும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி 1927ல் நடத்தியது. அஞ்சலை அம்மாள் கடலூரில் இருந்து பெண்களை ரயிலில் அழைத்துவந்து போரட்டம் நடத்தி னார். இதில் அஞ்சலை அம்மாளுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு சென்னை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட பதினோரு வயது மகள் அம்மாபொண்ணுக்கு நான்கு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சைதாப்பேட்டையி்ல் இருந்த சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்ககூடத்தில் வைக்கப்பட்டார். இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மறுநாள் நீல் சிலை முன் போராட்டம் செய்த முருகப்பனுக்கு ஆறு மாத தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நீல் சிலைக்கு எதிரான போரட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சிறை சென்றது அஞ்சலை அம்மாள் குடும்பத்தில்தான்.

      அந்த 1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த காந்தியடிகள் சிறைக் குச் சென்று அஞ்சலை அம்மாளைத் துணிச்சலாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்ற காந்தியடிகள், அம்மாகண்ணைச் சந்தித்து தண்டனை காலம் முடிவடைந்த பிறகு தமது வார்தா ஆசிரமத்துக்கு வந்துவிடும்படி கேட்டு க்கொண்டார். அப்போது அவர் சிறுமி பெயரை  லீலாவதி  என்று மாற்றம் செய்தார்.

      ஓராண்டு தண்டனைக் காலம் முடிவடைந்து விடுதலையான அஞ்சலை அம்மாள் சைதாப்பேட்டையில் வீடு எடுத்து கணவருடன் தங்கிக் கொண்டனர். மகன் லீலாவதியை தினசரி சென்று பார்த்து வருவ தற்காக இந்த ஏற்பாடு. அப்போது அஞ்சலை அம்மாள் தறியில் நெய்து தரும் துணியை முருகப்பன் விற்றுவிட்டு கொண்டுவந்த பணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.

      சென்னையில் அஞ்சலை அம்மாள் வசித்து வந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் பெண்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை நடத்த போலிஸ் முதலில் அனுமதி தர வில்லை. ஆனால் அஞ்சலை அம்மாள் தடையை மீறி மாநாட்டை நடத்தி முடித்தார்.

பிரசவத்துக்காக பரோல்

      காந்தியடிகள் 1930ம் ஆண்டில் குஜராத் மாநிலம் தண்டியில் உப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்தியபோது அஞ்சலை அம்மாள் சென்னைக்கு தெற்கே உள்ள சோழிங்கநல்லூரில் தங்கி காங்கிரஸ் தொண்டர் களைத் திரட்டி பெரிய அளவில் உப்பு எடுக்கும் போராட் டத்தை நடத்தி முடித்தார். இதற்காக மூன்று மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் திருச்சி சிறையில் அடைக்கப் பட்டார். அப்போது சைதாப்பேட்டையில் தடையை மீறிய முருகப்ப னும் காவலில் வைக்கப்பட்டார்

      இதன் பிறகு 1931ம் ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி தென்னாற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடலூர் தேவனாம்பட் டினத்தில் நடைபெற்ற உப்பு எடுக்கும் போராட்டத்தில் அஞ்சலை பங்கேற்றார். இந்த கூட்டத்தில் அஞ்சலை உட்பட அனைவரும் போலிஸ் தடியடிக்கு ஆளா னார்கள். கர்ப்பமாக இருந்த அஞ்சலை அம்மாள், ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

      அந்தக் காலத்தில் சிறைக்குச் செல்கிறவர்களில் சிலர் மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்துவிட்டு விடுதலை ஆகி வந்துவிடு வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதே போன்று அஞ்சலை அம்மாளையும் கடிதம் எழுதித் தந்துவிட்டு விடுதலை ஆகிச் செல்லுமாறு அதிகாரிகள் சொன்னார்கள். இதனை ஏற்க மறுத்ததால் அஞ்சலை அம்மாளுக்குச் சிறையில் கெடுபிடிகள் அதிகரித்தன. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடுமைகளை அதிகரித்த னர். பிறகு நீதிமன்றம் மூலம் பரோல் எனப்படும் சிறை விடுப்பில் வெளியில் வந்து குழந்தை பெற்று எடுத்துக்கொண்டு சிறைக்கு திரும்பினார். அந்தக் குழந்தைக்கு ஜெயில் வீரன் என்று பெயர் சூட்டினார். சுதந்திரப் பேராரட்டத்தில் சிறைவிடுப்பில் வந்து குழந்தை பெற்ற ஒரே வீராங்கனை அஞ்சலை அம்மாள் மட்டுந் தான்.

1932 கள்ளுக்கடை மறியல் தனிமைச் சிறை

      அஞ்சலை தம் வாழ்நாள் முழுவதும் மதுஒழிப்புப் போராடத்தில் கவனம் செலுத்தினார். அவர் 1932ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி கடலூலில் கள்ளுக்கடை முன் மறியல் செய்தார். அப்போது கடை காரரன் தாக்கியதி்ல் மூச்சையாகி விழுந்துவிட்டார். இந்த போராட் டத்தில் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பெல்லாரி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். பகல் முழுவதும் கடுமையான வேலைகளைச் செய்யு மாறு கட்டாயப் படுத்தப்பட்டார். விறகு உடைப்பது, இயந்திரக் கல்லை சுற்றி மாவு அரைத்துத் தருவது போன்ற வேலைகளைச் செய்தார். உடல்நலன் பாதிக்கப்பட்டு அவுதி யுற்றார். பாழடைந்து கிடந்த வீட்டில் தயவு தாட்சண்யமின்றி தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். இருந்தாலும் மனஉறுதி காரணமாக மறியலில் ஈடுபட்ட தற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த மறுத்து மேலும் மூன்று மாதத் தண்டணையை அனுப வித்தார்.

1933 அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பு

      சென்னையில் குடேன் தெருவில் அய்யண்ணன் செட்டியார் என்பவர் கடையில் அந்நியத் துணிகள் விற்பனை தொடர்ந்து நடை பெற்று வந்தது. இதற்கு எதிராக கைக்குழந்தையாக இருந்த ஜெயில் வீரனுடன் போராடி யதால் சென்னை மத்திய சிறையில் மூன்று மாதம் கடுங்காவல் தணடனையை அனுபவித்தார்.

சிறந்த பேச்சாளர்

      போராட்டம், சிறை என்று வாழ்ந்துகொண்டிருந்த அஞ்சலை அம்மாள் மிகச் சிறந்த பேச்சாளராத் திகழ்ந்தார். இவர் எவ்வளவு நேரம் பேசினாலும் கூட்டத்தினர் கலையாமல் நின்று கேட்டுக் கொண்டே இருந்தனர். இவருடைய வீட்டு அடு்ப்பு அணையாத அடுப் பாக இருந்தது. வீட்டுக்கு வரும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர் கள் அனைவருக்கும் சாப்பாடு போட்டு உபசரிக்கும் பழக்கம் இருந்தது. அஞ்சலை வீட்டில் எப்போதும் மராட்டிய மாவீரர் சிவாஜி படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. தன் பிள்ளைகளுக்கும் மேடையிலும் சிவாஜி கதையைச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதனால் பின்னாளில் இவரின் மகன் லீலாவதி தமது மகனுக்கு சிவாஜி என்று பெயர் சூட்டினார். இவருடைய மகன் காந்தியும் தமது முதல் மகனுக்கு சிவாஜி என்று பெயர் வைத்தார்.

1934ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியைச் சந்தித்தல்.

      சென்னை மாகாணத்தில் 1934ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் பயணம் செய்தபோது 17ம் தேதி ரயிலில் கடலூருக்கு வந்தார். அப்போது காந்தியை யாரும் சந்திக்கக் கூடாது, வரவேற்கக் கூடாது என்று தென்னாற்காடு மாவட்ட போலி்ஸ் தடை விதித்து விட்டது. இதனால் அதிர்ந்துபோன அஞ்சலை அம்மாள் இ்ஸ்லாமிய பெண் போன்று புர்கா அணிந்து ரயில் நிலையத்திற்குச் சென்று காந்தியடிகளை கைவண்டியில் ஏற்றி தமது வீட்டுக்கு அழைந்து வந்துவிட்டார். இவரின் வீரத்தையும் அறிவுக்கூர்மை யைும் பார்த்து வியந்த காந்தியடிகள் தென்னாட்டு ஜான்சி ராணி என்று புகழாராம் சூட்டிப் பெருமைப்படுத்தினார்

            1936ம் ஆண்டில் தென்னாற்காடு ஜில்லாக் கவுன்சிலுக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே ஆண்டில் இவருடைய வீடு ஏலத்துக்கு வந்துவிட்டது. உடனே கடலூரைச் சேர்ந்த ராமச் சந்திர ரெட்டியார் என்ற காங்கிரஸ் பிரமுகர் மற்ற நண்பர்கள் துணையுடன் சேர்ந்து வீட்டை ஏலம் எடுத்த அஞ்சலை யின் மகன்கள் காந்தி. ஜெயில் வீரன் ஆகியோர் பேரில் எழுதி வைத்தார். இதனால் ஏலம் போன வீடு திரும்பி வந்தது.

1937 கடலூர் எம்.எல்.ஏ.

      சென்னை மாகாணத்தில் 1937ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடலூர் பெண்கள் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மொத்த வாக்குகளான 4500ல் அஞ்சலை அம்மாளுக்கு 2600 வாக்குகள் வரை கிடைத்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் ராஜாஜி தலைமை யில் ஆட்சி அமைந்தது.

      இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவத்தை பிரிட்டன் அரசு போரில் ஈடுபடுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாணங்களில் ஆட்சியி்ல் இருந்த காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியது. இதன் பிறகு தனிநபர் சத்தியாகிரகப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற் பவர்களின் பெயர்களின் தேர்வு செய்த காந்தியடிகள் முதல் பெண் சத்தியாகிரகியாக அஞ்சலை அம்மாளைத் தேர்வு செய்தார். இதனை ஏற்று 1930ம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி கடலூரில் சட்டத்தை மீறிய அஞ்சலை கைது செய்யப்பட்டு கண்ணனூர் சிறைக்குக் கொண்டுசென்று ஆறு மாதம் காவலில் வைக்கப்பட்டார்.

1941 ம் ஆண்டு ஜூன் மாதம் 7 ம் நெசவாளர் போரட்டம்

      கடலூருக்கு மேற்கே உள்ள நடுவீரப்பட்டு என்ற கிராமத்தில் தறி உரிமையாளர்கள் குறைவான கூலி கொடுத்தனர். இதனால் வறுமை யில் வாடிய நெசவாளர்கள் அஞ்சலை அம்மாள் வழிகாட்டுதல் பேரில் சங்கம் வைத்து கூலி உயர்வு கேட்டுப் போராடினார்கள். இப்பிரச்சினையில் தறி முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட போலி்ஸ் நெசாவாளர்களை ஆண், பெண் என்ற பேதமின்றி அரை நிர்வாணமாக இழுத்துச் சென்று அவமானப்படுத்தியது.. இதனை கலெக்டரின் கவனத்து க்குக் கொண்டு சென்ற அஞ்சலை, உங்கள் மனைவியை அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றால் பொறுத்துக் கொள்வீர்களா என்று கேட்டுள்ளார். உடனே கலெக்டர் நடுவீரப்பட்டு அக்கிரமங்களை நிறுத்த உத்தர விட்டதோடு சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார்.

      இதனால் ஆத்திரம் கொண்ட வெள்ளை அரசாங்கம் 1941ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் அஞ்சலை அம்மாளை கைது செய்தது. அவருக்கு 18 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் காவலில் அடைக் கப்பட்டார்.

      இவர் தமது மூத்த மகள் கரும்பம்மாளை புவனகிரி யைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தார். இரண்டாவது மகள் சரசுவதியை தமது தம்பி சிங்காரத்துக்கு மணம் முடித்தார்.

      அஞ்சலையின் மூன்றாவது மகள் லீலாவதி காந்தியின் வார்தா ஆசிரமத்தில் வளர்ந்தவர். முருகப்பனுடன் சிறையில் இருந்த சுதந்திர போராட்ட வீரர் ஜமதக்னி தினமும் லீலாவதி பற்றி அவரின் தந்தை சொன்னதை கேள்வியுற்றிருந்தார். மேலும் சைதாப்பேட்டையில் அஞ்சலை அம்மாள் தங்கியிருந்த காலகட்டத்தில் (1930) அங்கு சென்றிருந்தார். அப்போது சிறையில் இருந்தபோது பரவிய சொறி நோயால் ஜமதக்னி அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து வேதனை அடைந்த அஞ்சலை அம்மாள் ஜமதக்னியை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விட்டு அவருடைய துணிகளைத் துவைத்துக் கொடுத்துள்ளார். இதனாலும் அஞ்சலை அம்மாள் மீது பெருமதிப்புக் கொண்டிருந்த ஜமதக்னி அவரது புதல்வி லீலாவதி யைத் திருமணம் செய்துகொண்டார்.

      வேலூர் சிறையில் 18 மாதத் தண்டனையை முடித்துவிட்டு 1943 ஜனவரியில் அஞ்சலை விடுதலை யானார். இவர் வெளியில் இருந்தால் போராட்டங்களைத் தூண்டிவிடுகிறார் என்ற காரணத் தின் பேரில் 1943 டிசம்பர் மாதத்தில் மீண்டும் கைது செய்து எட்டரை மாதம் தண்டனை விதித்து வேலூர் சிறையில் வைத்தனர். இங்கு இவர் தமக்குத் தரப்பட்ட முதல் வகுப்புச் சிறை வேண்டாம் என்று சொல்லிவிட்டு மூன்றாம் வகுப்பு சிறையில் தங்கிக்கொண்டார். தினமும் கேழ்வரகு அரைத்துத் தரும் வேலையைச் செய்தார். இவ்வாறாக அஞ்சலை தமது வாழ்நாளில் எட்டு முறை அதிகபட்ச சிறை தண்டனையை அனுபவித்து உள்ளார். மொத்தத் தில் ஆறரை ஆண்டுகளை சென்னை, வேலூர், திருச்சி, பெல்லாரி. கண்ணனூர் சிறைகளில் கழித்தார்.

      பண்ருட்டிக்கு மேற்கே உள்ள ஆனத்தூரைச் சேர்ந்த அரங்க நாதன் என்ற காங்கிரஸ்கராருக்குத் தமது மகள் கல்யாணியை 1945ம் ஆண்டில் திருமணம் செய்துவைத்தார். தமிழ் அறிஞர் தொ. போ. மீனாட்சிசுந்தரனார் தலைமையில் கதர் திருமணமாக நடைபெற்றது. இதன்படி மணமக்கள் கதராடை அணிந்து திருமணம் செய்துகொ ண் டனர். இதன் மூலம் கதர் கொள்கையை வீட்டில் உள்ளவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதில் அஞ்சலை காட்டிய உறுதி வெளிப் பட்டது.

      இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு 1946ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் காமராஜர் இவரை கடலூர் பெண்கள் தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண் டார். இந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற அஞ்சலை இரண்டா வது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். சட்டமன்றத்தில் நெசவாளர் பிரச்சினை. விவசாயிகள் பிரச்சினை. போன்றவற்றுக் காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். பள்ளிச் செல்லும் பிள்ளை களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதுவே பிற்காலத்தில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கு வதற்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

      இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தேர்தல் அரசியலில் இவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. 1952 மற்றும் 1957 பொதுத் தேர்தலின்போது கடலூர் அல்லது பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடு மாறு காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். தமிழ். ஆங்கிலம் மொழிகளில் சிறு வயது முதல் நன்றாகப் பேசிவந்த அஞ்சலை சிறை வாழ்க்கையின்போது தெலுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகிய மொழிகளில் பேசப் பழகிவந்தார். இதனால் இவரைக் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுமாறு காமராஜர் கேட்டுக் கொண்டார். இதனையும் மறுத்துவிட்டார்.

      மகாத்மா காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அஞ்சலை நகர வாழ்க்கையைத் துறந்தார். கணவர் முருகப் பனுடன் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் கிராமத்தில் மகன் காந்தி வீட்டில் தங்கினார். மூத்த மகள் கரும்பம்மாளின் மகள் கிருட்டிணவேணியை மகன் காந்திக்குத் திருமணம் செய்துவைத் தார். கிராம மேம்பாட்டில் அக்கறை செலுத்தினார். வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வருவதற்கு கால்வா ய் தேவைப்பட்டது. அரசிடம் உதவிபெற்று விவசாயி களை ஒருங்கிணைத்து கால்வாய் வெட்டச் செய்தார். அந்தக் கால்வாய் இப்போதும் அஞ்சலை அம்மாள் கால்வாய் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.   

தமிழ்நாட்டின் முதல் பெண் வீராங்கணையாக இருந்து காலம் முழுவதும் தியாகியாக வாழந்த அஞ்சலை அம்மாள் சி.முட்லூர் கிராமத்தில் தமது 71ஆவது வயதில் 1961ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி திங்கள் கிழமை காலமானார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...