அவ(ள்)தாரம் | 15 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 15 | தேவிபாலா

பூதம், வீட்டுக்கு வந்த பிறகும் கொதி நிலையில் இருந்தார்! அஞ்சு அவரை நன்றாக ஏற்றி விட்டாள்!

“ அப்பா! அவ தொடர்ந்து, உங்களை அவமானப்படுத்தறா! ஏற்கனவே உங்களை மதிக்காத அருள், இப்ப அவ பேச்சை கேட்டு ஆடறான்! அவ எனக்கு அண்ணியா வர்றது, எனக்கு சுத்தமா புடிக்கலைப்பா!”

“எனக்கு மட்டும் புடிச்சிருக்கா அஞ்சு? நான், அவ என் மருமகளா வரணும்னு ஏங்கியா அவ வீட்டுக்கு சம்பந்தம் பேசப் போனேன்?”

“நீங்க என்னப்பா சொல்றீங்க?”

“அவ வெளில இருந்தா, நான் அவளை அடக்கறது கஷ்டம்! எனக்கு பண பலமும், செல்வாக்கும் நிறைய இருந்தாலும், அவ மீடியாவை தன் பக்கம் இழுத்துட்டா! எனக்கு வர்த்தக எதிரிகள் ஏராளம்! அவங்க கூர்ந்து கவனிக்க தொடங்கிட்டாங்க! அருள்.. என் மகனே என் பக்கம் இல்லைனு இந்த ஊருக்கே தெரியும்! இதெல்லாம் எனக்கு பெரிய பாதகம்! இந்த நிலைல அவளை நம்ம வீட்டுக்குள்ள உறவோட கொண்டு வந்தாத்தான், அவளை ஒண்ணுமில்லாம செய்ய முடியும்! வாழ வைக்க அவளை வரவழைக்கலை! வாழா வெட்டியாக்க முயற்சி தான் இது!”

“சரிப்பா! அவ இதை உடைச்சிட்டாளே!”

“இல்லைம்மா! அவளை சம்மதிக்க வைக்க என் கையில பெரிய துருப்பு சீட்டு இருக்கு! அதை ஆட்டத்துல நான் இறக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!”

“அது என்னதுப்பா?”

“அது இப்ப உனக்கு தெரிய வேண்டாம்! நேரம் வரும் போது நீயே தெரிஞ்சுபே! இப்ப உன் வேலையை பாரும்மா!”

தே நேரம் பாரதி வீட்டில், பாரதியை அம்மாவும், வாசுகியும் புரட்டி எடுக்க தொடங்கியிருந்தார்கள்!

“என்னடீ ஆச்சு ஒனக்கு? ஏன் அவரை தொடர்ந்து அவமானப்படுத்தறே? அவர் கோடீஸ்வரன்! முப்பது வருஷங்களுக்கு மேலா நம்ம குடும்பத்தை கட்டிக்காக்கற கடவுள்! அவர் தர்ற சம்பளத்தை வச்சுத்தானே அப்பா நம்மையெல்லாம் இந்த உயரத்துக்கு கொண்டு வந்திருக்கார்? மூணு பேரை படிக்க வச்சு, என் கல்யாணத்தை நடத்தி, உனக்கும் வேலை வாங்கி, சொந்தமா இந்த வீட்டை வாங்கி, இன்னிக்கு கடன் இல்லாத வசதியான வாழ்க்கையை வாழ யாருடீ காரணம்? அந்த நன்றி நமக்கு வேண்டாமா பாரதி? எல்லாம் கடந்து இன்னிக்கு உன்னை…அவரை எதிர்த்து அசிங்கப்படுத்தின உன்னை…மருமகளாக்க முடிவு செஞ்சு வீடு தேடி வந்திருக்கார்! இங்கேயும் உன் வேலையை நீ காட்டிட்டே! உனக்கு மூளை கலங்கி போச்சா பாரதி? எத்தனை நாள் முதலாளி பொறுத்துப்பார்? பொங்கிட்டா, நம்ம குடும்பம் தாங்குமா?”

வாசுகி நீளமாக பேசி கொந்தளிக்க, அம்மா உள்ளே புகுந்தாள்!

“அவளை விட்றி வாசுகி! உங்கப்பாவுக்கு மூளை கெட்டு போச்சா? இவ திமிர் புடிச்சு நடக்கறானா, அவர் எடுத்து சொல்ல வேண்டாமா? இத்தனை நாள் குடும்பத்தை கட்டி காத்த உங்கப்பா, அதை அழிக்க முடிவு செஞ்சிட்டாரானு கேளுடி வாசுகி!”

சிதம்பரம் தன் பார்வையை உயர்த்தினார்! எதுவும் பேசவில்லை! வாசுகியின் கணவன் க்ருஷ்ணா இதை பார்த்து கொண்டிருந்தான்!

“வாசுகி! நான் இதுல பேசலாமா?”

“தாராளமா பேசுங்க மாப்ளை! பாரதிக்கு நல்ல புத்தி சொல்லுங்க! உங்க மாமாவை தட்டி கேளுங்க! உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு!”

“அத்தே! மாமா மடையன் இல்லை! முப்பது வருஷம் கடந்து இந்த முதலாளி கிட்ட வேலை பாக்கறார்! அவரே வீடு தேடி சம்பந்தம் பேச வந்தும் மாமா பெரிசா உணர்ச்சி வசப்படலை! ஏன்னா, மாமா சராசரி மனுஷன் இல்லை அத்தே!”

“நீங்க யார் பக்கம் பேசறீங்க?”

“இரு வாசுகி! என்னை முழுசா பேச விடு! பாரதி, அருளை விரும்பறது எல்லாருக்கும் தெரியும்! பாரதி இப்பக்கூட அருளை கல்யாணம் செஞ்சுக மாட்டேன்னு சொல்லலியே! கோடீஸ்வர அந்தஸ்த்தை அவ விரும்பலை! ஒரு பங்களாவுக்கு பணக்கார மருமகளா போக விரும்பலை! இந்த மனசு யாருக்கு வரும்? அதுக்கும் அசாத்திய பக்குவம் வேணும் வாசுகி! அருள் ஏன் பணக்கார வாழ்க்கை வேண்டாம்னு சொல்றார்? தன் அப்பாவோட சொத்துக்களை அனுபவிக்க விரும்பாம, பட்டறை நடத்தி எளிமையா வாழறார்? அவரோட எளிமையான வாழ்க்கை தான் வாழணும்னு பாரதி நினைக்கறதுல என்ன தப்பு? இதை மாமா சரியா புரிஞ்சு கிட்ட அளவுக்கு உன்னால, அத்தையால ஏன் புரிஞ்சுக முடியலை?”

“சர்தான்! உங்க கிட்ட ஆலோசனை கேட்டதே தப்பு! முதலாளி மாதிரி ஒரு நல்லவரை ஏன் அவமானப்படுத்தணும்? அருள் அவர் மகன் இல்லைனு ஆயிடுமா? ஏன் பங்களால போய் வாழக்கூடாது?”

“அக்கா! எனக்கு அருளை மட்டும் தான் புடிச்சிருக்கு! அவரும் என் கூட எளிமையான வாழ்க்கை வாழ பங்களா, பணம் எதுவும் வேண்டாம்னு வெளில வர தயாரா இருக்கார்! இதுல யாருக்கு கஷ்டம்?”

“நீ என்னடீ பேசற? இதை முதலாளியால தாங்கிக்க முடியுமா? உங்கப்பா இன்னமும் முதலாளி கிட்டத்தான் வேலை பார்த்து சம்பளம் வாங்கறார்னு யாரும் மறக்க கூடாது! முதலாளி நினைச்சா உங்கப்பாவை என்ன வேணும்னாலும் செய்ய முடியும்! உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கின உங்கப்பாவை அந்த முதலாளி அழிக்கறதுல உனக்கு சம்மதமா பாரதி?”

இதை கேட்கும் போதே அம்மா அழுது விட்டாள்! சிதம்பரமும் படக்கென தலையை தூக்கி பார்த்தார்!

“வேண்டாம்! ஒரு பெரிய மனுஷனை அளவுக்கு மீறி சீண்டாதீங்க! அது நம்ம யாருக்கும் நல்லதில்லை! பாரதி! நீ படிச்சவ! உனக்கு புத்தியிருந்தா யோசி! அருள் அவரை ஆயிரம் தான் எதிர்த்தாலும், அவன் அவரோட மகன்! அவனை அவர் எதுவும் செய்ய மாட்டார்! ஆனா நம்மை அவர் சும்மா விட மாட்டார்! இப்பவும் கல்யாணத்துக்கு அவர் தயாரா இருக்கார்! நீ சம்மதம் சொல்லி ஒப்புக்கோ! நீ என்ன சொன்னாலும் அருள் கேப்பான்! அப்பா…பிள்ளையை உன்னால தான் சேர்த்து வைக்க முடியும்னு முதலாளி நம்பறார்! அவர் நம்பிக்கையை வீணாக்காதே! நமக்கும் ஒரு செஞ்சோற்று கடன் இருக்கு பாரதி! முதலாளி நம்ம குடும்பத்தை இத்தனை காலம் கட்டி காத்ததுக்கு நாம நன்றிக்கடனை செலுத்த வேண்டிய நேரம் வந்தாச்சு! அதுக்கு அருமையான ஒரு சந்தர்ப்பம் இது! உன் மூலமா அது நிறைவேறட்டும் பாரதி!”

சகலமும் அமைதியாக கேட்ட பாரதி எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே போக முயற்சிக்க, வாசுகி வேகமாக வந்து அவள் கைகளை பிடித்தாள்!

“நானும், அம்மாவும் இத்தனை பேசறோம்! எங்களை நீ அவமானப்படுத்தறியா? என்னடீ இதுக்கு அர்த்தம்?”

“அவ கிட்ட ஆத்திரப்படாதே வாசுகி! நானும் வர்த்தக உலகத்துலதான் இருக்கேன்! வெளில நடக்கறது உனக்கெல்லாம் தெரியாது! இந்த முதலாளி உங்க குடும்பத்துக்கு பல வருஷங்களா படியளந்திருக்கலாம்! ஆனா அவருக்கு இன்னொரு முகம் உண்டு! பாரதியை தன் கம்பெனில வேலைல சேர்க்க அவமேல பழி சுமத்தி லாக் போட்டவர் அவர்தான்!”

“அதுல தப்பென்ன? பெரிய சம்பளத்துல வேலை தரத்தானே அதை செஞ்சார்?”

“என்னடீ பெரிய சம்பளம்? பணம்னா வாயை பிளப்பியா? அவர் மகனே கோடிக்கணக்கான சொத்துக்களை உதறிட்டு ஏன் வெளில தன் கால்ல நிக்கறான்? அப்பாவோட வாழ்க்கை முறை பிடிக்காம தானே விலகி நிக்கறான்? பாரதிக்கும் இது தெரிஞ்சிருக்கு! பாரதிக்கே தெரியும் போது அவர் கிட்ட வேலை பாக்கற மாமாவுக்கு இது தெரியாதா?”

சிதம்பரம், பாரதி இருவரும் க்ருஷ்ணாவை ஆச்சர்யமாக பார்க்க,

“பிசினஸ்ல நம்பர் ஒண்ணா இருக்கணும்னா கொஞ்சம் நீக்கு போக்கு இருக்கத்தான் செய்யும்! அதுல நமக்கென்ன கஷ்டம்?”

“ உங்கப்பா உங்களை நேர்மையா ஆளாக்கியிருக்கார்! கோடு போட்டு வாழ்ந்த குடும்பம் எங்களோடதுன்னு எனக்கு பாடம் நடத்தி, ராணுவத்தனமா என்னை, என் மகளை மிரட்டி, குடும்பம் நடத்தற நீயா இப்ப இப்படி பேசற? அப்படீன்னா கோடீஸ்வர சம்பந்தம் உங்க குடும்பத்துக்கு வாய்க்குதுன்னா எதுக்கும் நீ சம்மதிப்பியா வாசுகி?”

“க்ருஷ்ணா! யாரை பார்த்து என்ன பேசறீங்க?”

வாசுகி அலறி விட்டாள்.

“பதறுதா? பெத்த பிள்ளையே ஒதுங்கியிருக்கான்! பாரதிக்கு அருள் எல்லாம் சொல்லியிருப்பான்! மாமாவுக்கும் தெரிஞ்சிருக்கும்! அவங்க, வீட்ல இதை சொன்னா உங்களால புரிஞ்சுக முடியாது! பூதத்துக்கு ஒரு மறு பக்கம் உண்டுனு எனக்கும் தெரியும்! வேண்டாம்! பாரதியை அவ போக்குல விடுங்க! நன்றினு எதையாவது சொல்லி அவளை குழில இறக்காதீங்க! நான் சொல்றதை சொல்லிட்டேன்! அப்புறம் உங்க விருப்பம்!”

பாரதி பெரும் மதிப்புடன் க்ருஷ்ணாவை பார்த்தாள்.

று நாள் காலை சிதம்பரம் ஆஃபீஸ் புறப்பட, அவருக்கு ஃபோன் வந்தது! அழைத்தது அருள்!

“நேரா என் வொர்க் ஷாப்புக்கு வாங்க! பாரதிக்கு கூட சொல்ல வேண்டாம்! கொஞ்சம் பேசணும்!”

சிதம்பரம் அடுத்த அரை மணியில் அவன் எதிரே பட்டறையில் இருந்தார்!

“ஒக்காருங்க அங்கிள்! டீ சொல்லட்டுமா?”

“வேண்டாம் தம்பி! எதுக்கு வரச்சொன்னீங்க?”

“நாம சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு அங்கிள்!”

“என்ன முடிவுகள்? நீங்களும் பாரதியும் ஒரு கோயில்ல கல்யாணம் முடிச்சு, உடனடியா அதை பதிவும் பண்ணிடலாமா? எனக்கு பூரண சம்மதம் தம்பி!”

“அங்கிள்! எங்க கல்யாணம் நடக்கத்தான் போகுது! அதுல எந்த சந்தேகமும் இல்லை! அதுக்கு முன்னால இன்னொண்ணு நடக்கணும்! அது இன்னிக்கே நடக்கணும் அங்கிள்!”

“என்னப்பா அது?”

அருள் வாயை திறக்கும் நேரம், சிதம்பரத்தின் மொபைல் அழைக்க,

“குட் மார்னிங் சார்!”

பூதம் தான் எதிர் முனையில் இருந்து ஏதோ சில உத்தரவுகளை பிறப்பிக்க, சிதம்பரம் முகம் மாறிக்கொண்டே வந்தது! இணைப்பைத் துண்டித்தார்! முகம் இறுகி கிடந்தது!

“பூதம் அழைக்கறாரா? இன்றைய உங்களோட வர்த்தக சுற்றுக்கான அழைப்பா?”

அவர் அதிர்ச்சியுடன் அருளை பார்த்தார்!

“எனக்கு எல்லாம் தெரியும் அங்கிள்! நான் சொல்ல வந்ததை சொல்லிர்றேன்! நீங்க இப்ப ஆஃபீஸ் தானே போறீங்க? இதை படிச்சிட்டு கையெழுத்து போடுங்க! உங்க முதலாளி கிட்ட கொண்டு போய் குடுங்க! நான் ரெடி பண்ணி வச்சிட்டேன்!”

அவர் வாங்கி பார்த்து, அதிர்ச்சியுடன் அருளை பார்த்தார்!

“என்ன பாக்கறீங்க? உங்க ராஜினமா லெட்டர் தான்! குடுத்துட்டு வெளில வந்துடுங்க! இனி நீங்க அங்கே இருக்கறது ஆபத்து!”

“முதல்ல நான் வெளில வர முடியுமா? வர விடுவாரா? ஏற்கனவே கார் ஏறும் முன்னால என்னை அவர் வார்ன் பண்ணியாச்சுனு உங்களுக்கு தெரியுமே தம்பி! இன்னிக்கு சாயங்காலமே எங்க வீட்டுக்கே வந்து சகலத்தையும் போட்டு உடைப்பார்! அப்புறம் என்ன நடக்கும்னு நான் சொல்லணுமா அருள்?”

“அவர் வர மாட்டார்! அவருக்கு எதிரா ஆட்டத்துல இறக்க, ஒரு துருப்பு சீட்டை நான் உங்களுக்கு தர்றேன்! இதை என்னிக்கோ நான் இறக்கியிருப்பேன்! ஆனா அதுக்கான ஆதாரங்கள் அப்ப என் கையில இல்லை! சூழ்நிலையும் சரியா இல்லை! இப்ப எனக்கது கிடைச்சிருக்கு! நான் இறக்க வேண்டிய ட்ரம்ப் கார்டை உங்களுக்கு தரக்காரணம், பாரதி எனக்கு வேணும்!”

“தம்பி, எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு! உங்கப்பா எதுக்கும் துணிஞ்சவர்! வீடு தேடி சம்பந்தம் பேச வந்ததே, பாரதியை பழி வாங்கத்தான்! லேடீஸ் சென்டிமென்டை வச்சு வீழ்த்த பாக்கறார்! நீங்க சொல்லிக்கொடுத்து பாரதி சரியான பதிலடி தந்தா! அது அவரோட ஆத்திரத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கு! இப்ப கூண்டை விட்டு, வெளில வந்த சிங்கம் மாதிரி பழி வாங்க துடிக்கறார்! இதுல நான் அவருக்கு எதிரா என்ன சொன்னாலும் எடுபடாது தம்பி!”

“நான் சொல்றதை கேளுங்க இப்ப!”

“ம்! சொல்லுங்க தம்பி!”

அருள் சொல்ல தொடங்கியதும் சிதம்பரம் குபீரென எழுந்து விட்டார்! அவர் முகம் சிவந்து, வியர்வை கொப்பளித்து, உடம்பே நடுங்க தொடங்கியது!

“இது நிஜமா?”

“சத்தியம்! அரசல் புரசலா கிடைச்ச தகவல்களை, நான் தேடி அலைஞ்சப்ப, தெளிவான பிக்சர் இப்பத்தான் எனக்கு கிடைச்சிருக்கு! இன்னும் வேணும்! அந்த தேடல்கள்ள தான் நான் இருக்கேன்! எல்லாத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வர்ற நேரம் நெருங்கியாச்சு அங்கிள்! ஆட்டத்தை நீங்க தொடங்குங்க! நான் சரியான நேரத்துல உள்ளே வர்றேன்! அவர் கிட்ட என்ன பேசணும்னு நான் சொல்றேன்! கவனமா கேட்டுக்குங்க!”

அவன் சொல்வதை கவனமாக சிதம்பரம் கேட்டுக்கொண்டார்! அதற்குள் பூதம் திரும்பவும் ஃபோன் செய்ய,

“வந்து கிட்டே இருக்கேன்!”

ரை மணி நேரத்தில் சிதம்பரம், பூதம் எதிரே நின்றார்! பூதம் பதட்டத்தில் இருந்தது முகத்தில் தெரிந்தது!

“என்ன இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க? சீக்கிரம் கிளம்புங்க! பார்ட்டி ஓட்டலுக்கு வந்தாச்சு! சரக்கும் தயார்! டீலை சீக்கிரம் போய் முடிங்க!”

சிதம்பரம் தன் ராஜினமா கடிதத்தை தர, பூதம் வாங்கி பார்க்க, முகம் இருண்டது!

“நீ யாருன்னு இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள இந்த ஊருக்கே சொல்லட்டுமா சிதம்பரம்?”

“அதுக்கு முன்னால உன்னை பற்றி நான் சொல்லப்போறேன் என் அருமை முதலாளியே!”

“என்னை பற்றி நீ என்னடா சொல்லுவே?”

சிதம்பரம் சொன்ன ஒரே ஒரு சொல், பூதத்தை தூக்கி ஆகாயத்தில் வீசியது!

–தொடரும்…

14 வது அத்தியாயம் | 16 வது அத்தியாயம் >

ganesh

1 Comment

  • அடுத்த அத்தியாயத்தை உடனே தாங்க பாலா!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...