அவ(ள்)தாரம் | 14 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 14 | தேவிபாலா

ரியாக ஆறு மணிக்கு, வாசலில் பெரிய வெளிநாட்டுக்கார், நீண்ட படகைப்போல தெருவை அடைத்து நின்றது! அந்த தெருவில் பலர், வேடிக்கை பார்த்தார்கள் ஆர்வமாக. ஏற்கனவே பாரதி மீடியாவில் பிரபலமான பிறகு அந்த தெருவில் ஒரு நபர் கேமராவும் கையுமாக சுற்றிக்கொண்டிருந்தான்! அவனுக்கு மூக்கு வியர்த்து வெளியே வந்து விட்டான்!

பூதம், அஞ்சு இருவரும் காரை விட்டு இறங்க, அருள் பின்னால் தன் பைக்கில் வந்து இறங்கினான்.

சிதம்பரம் வாசலுக்கே வந்து வரவேற்றார்! அம்மாவும் வந்து கை கூப்பினாள்! கூடவே வாசுகியும் இருந்தாள்! உள்ளே அவரை அழைத்து போய் உட்கார வைக்க, அம்மா படபடப்புடன், கொஞ்சம் வியர்த்து, லேசான நடுக்கத்துடன் நின்றாள்!

“அம்மா பதட்டமா இருக்கற மாதிரி தெரியுது! அது அவசியமில்லை! நான் சிதம்பரத்துக்கு முதலாளிங்கறதெல்லாம் ஆஃபீஸ்ல மட்டும் தான்! இங்கே ஒரு நண்பரா என்னை கருதினா போதும்!”

“ இல்லைனா, எங்க வீட்டுக்கு சம்பந்தம் பேச கோடீஸ்வரர் நீங்க வருவீங்களா? குடிக்க ஏதாவது?”

“என்ன இருந்தாலும் குடுங்க! பேசி முடிச்சதும், டிபனும் சாப்பிட்டுத்தான் நாங்க போவோம்!”

அம்மா, வாசுகி கிறுகறுத்து போனார்கள்! அம்மா பதட்டமாக வாசுகியை பார்க்க, “ நீ கவலைப்படாதே, நான் பாத்துக்கறேன்!” என வாசுகி கண்களால் ஜாடை செய்தாள்! அருள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்!

“ எங்கே பாரதி?”

பாரதி எந்த அலங்காரமும் இல்லாமல் அதே சுடிதார் சகிதம் வெளியே வந்தாள்! அவருக்கு மரியாதை நிமித்தம் ஒரு வணக்கம் போட்டாள்!

“ ஒக்காரு பாரதி! நீங்க எல்லாருமே ஒக்காருங்க!”

வாசலில் பைக் வந்து நிற்க, வாசுகி கணவன் க்ருஷ்ணா இறங்கினான்! அவனோடு தெரு முனையில் நடந்து வரும் போது ஏறிக்கொண்ட கடைசி பெண்ணும் இருந்தாள்! அவர்களை வாசுகி அவருக்கு அறிமுகப்படுத்தினாள்!

“இவ தான் மேகலா! சிதம்பரம் சாரோட கடைசி மகள்! ஒரு பெரிய மனுஷன் இந்த பொண்ணை பணத்துக்காக விற்க பார்த்து நான் மீட்டெடுத்தேன்!”

சிதம்பரம் முகம் இறுக, பூதம் முகம் இருண்டது! சட்டென சமாளித்து கொண்டார்! க்ருஷ்ணாவை உள்ளே அழைத்து வாசுகி கடித்தாள்!

“ஒரு பெரிய மனுஷன் சம்பந்தம் பேச வர்றார்! இப்படியா தாமதமா வருவீங்க? சரி, முகம் கழுவிட்டு வந்து ஒக்காருங்க!”

இங்கே பூதம் பேச்சை தொடங்கினார்!

“நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்! என் பிள்ளை அருளை, உங்க குடும்பத்துக்கு நல்லா தெரியும்! அவன் பல உதவிகளை பாரதிக்கு, மேகலாவுக்கு செஞ்சிருக்கான்! அதனால அருள்.. பாரதி மத்தில ஒரு நட்பு உருவாகியிருக்கு! அது காதலாக்கூட இருக்கலாம்! சரி, எது வேணும்னாலும் இருக்கட்டும்! என் மகனுக்கு பாரதியை பிடிக்கும்! பாரதியும் எப்பவும், எதுக்கும் அருள் உதவியைத்தான் நாடுவா! அதனால அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடலாம்னு நான் முடிவுக்கு வந்திருக்கேன்! இதுல சம்மதம் இல்லைனா, அருள் நான் கூப்பிட்டதும் வந்திருக்க மாட்டான்! இந்த மௌனத்தை, என் மகனோட சம்மதமா நான் எடுத்துக்கறேன்!”

அனைவரும் மௌனம் காக்க,

“ சிதம்பரம் என் வார்த்தைகளை எப்பவுமே மீற மாட்டார்! மீறவும் அவரால முடியாது!”

நிறுத்தி சிதம்பரம் முகத்தை பூதம் பார்க்க, அதை அருளும் கவனிக்க,

“ அதாவது எங்க ரெண்டு பேருக்கு மத்தில முப்பது வருஷமா விடுபட முடியாத ஒரு பாசப்பிணைப்புனு சொல்றேன்!”

சிதம்பரம் சிரிக்காமல், அதே இறுக்கமான முகத்துடன் இருக்க,

“ நீங்க என்னம்மா சொல்றீங்க? பொண்ணை பெத்த உங்க சம்மதம் ரொம்ப முக்கியம்மா!”

“நான்.. நான்.. எ.. எ..ன்..ன.. சொல்றது? நீங்க எத்தனை பெரிய மனுஷன்? எங்க முதலாளி! நீங்க வீடு தேடி வந்து, எங்களுக்கு சரி சமமா ஒக்காந்து, நாங்க பெத்த மகளை, மருமகளாக்கிக்க முடிவெடுக்கும் போது, மறுக்க முடியுமா? உங்களுக்கு சம்பந்தி ஆகற தகுதி எங்களுக்கு இருக்கானு எனக்கு தெரியலை!”

குரல் நடுங்கி, அம்மா ஏறத்தாழ அழுது விட்டாள்.

வாசுகி அருகில் வந்து, அம்மாவின் கைகளை பற்றினாள்.

“சார்! மன்னிக்கணும்! எங்கம்மா ரொம்ப பயந்த சுபாவம்! பெரியவங்க கிட்ட மரியாதை, இப்ப உணர்ச்சி வசப்பட்ட நிலைல இருக்காங்க! கூடவே நம்ப முடியாத சந்தோஷம், எல்லாம் சேர்ந்திருக்கு! அதான், இத்தனை காலம் எங்க குடும்பத்தை கட்டிக்காத்த உங்க வீட்டுக்கே, என் தங்கச்சி பாரதி மருமகளா வர்றது, பெரிய கொடுப்பினை! இது நாங்க செஞ்ச புண்ணியம்! இதுக்கு மேல என்ன சொல்ல?”

“ரொம்ப சந்தோஷம்மா! உங்க எல்லாருக்கும் இதுல சந்தோஷம்னு தெரியுது! நான் இப்பவே டிரைவரை கூப்பிடறேன்! வண்டில வரிசை தட்டுகளை வச்சிருக்கேன்! எடுத்துட்டு வரச்சொல்றேன்!”

“அதுக்கு முன்னால நான் கொஞ்சம் பேசணும்!”

பாரதி குரல் தர, குடும்பமே திரும்பியது! அம்மா, வாசுகி பதட்டமாக பார்த்தார்கள்!

“பாரதி! ஒரு நிமிஷம் உள்ளே வா!”

அம்மா அழைக்க,

“அவ என்ன சொல்ல வந்தாளோ, அதை சொல்ல விடுங்கம்மா!”

“எல்லாருக்கும்னு சம்மதம்னு நினைக்கறேன்னு சார் சொன்னார்! ஆனா என்னை மட்டும் கேக்கலை!”

“உனக்கு அருளை பிடிக்கும்னு எனக்கு தெரியும்! நீ மறுக்க மாட்டேனும் தெரியும்! அதனால உன் கிட்ட நான் சம்மதம் கேக்கலை!”

“சம்மதம் தான்! அருளை வேண்டாம்னு எந்த ஒரு நல்ல பெண்ணும், நிச்சயமா சொல்ல மாட்டா சார்! ஆனா சம்மதம் சொல்றதுக்கு முன்னால கொஞ்சம் பேசணும் நான்!”

அம்மா பதட்டமாக, வாசுகி முகம் பார்த்தாள்.

“சார்! காஃபி கொண்டு வரவா?”

வாசுகி கேட்க,

“குடேன்மா! குடிச்சிட்டே பேசலாம்!”

“பாரதி, நீயும் வா! காஃபி ரெடி பண்ணலாம்!”

பாரதி எழுந்து வந்தாள்! அம்மாவும் பதட்டமாக பின் தொடர, உள்ளே வந்த வாசுகி,

“பாரதி! எல்லாம் சரியா போயிட்டு இருக்கு! இந்த நேரத்துல குண்டக்க, மண்டக்க ஏதாவது பேசி, பெரிய மனுஷனை, வீடு தேடி வந்த முதலாளியை, அசிங்கப்படுத்திடாதே! அது நம்ம குடும்பத்துக்கே நல்லதில்லை! கொஞ்ச நாளா உன் போக்கு சரியில்லை! அதிர்ஷ்ட தேவதை படி ஏறி வந்திருக்கா! அவளை விரட்டி அடிச்சு, பொல்லாப்பை தேடிக்காதே!”

“அக்கா! உன் காஃபில முதலாளி சொக்கி போகணும்! அதை செய்! இது கல்யாணம்! என் வாழ்க்கை! நான் பணத்துக்கு விலை போக முடியாது! அதை அப்பாவே விரும்ப மாட்டார்! நான் என்ன பேசினாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்! காஃபியை கொண்டு வா!”

அவள் வெளியேற,

“வாசுகி! எனக்கு ரொம்ப பயம்மா இருக்குடி! இவ ஏதோ ஏழரையை கூட்டப்போறானு தோணுது!”

வாசுகி தந்த காஃபியை, ரசித்து குடித்து பூதம் பாராட்டியது!

“ம்! நீ சொல்லு பாரதி!”

அவள் ஏதோ ஏடா கூடமாக பேசப்போகிறாள் என அஞ்சு கடுப்புடன் அவரை பார்த்து கொண்டிருக்க,

“எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான்!”

“அதான் சொல்லிட்டியே! அப்புறமா சீர் பொருட்களை எடுத்துட்டு வந்து தந்து, மேற்கொண்டு பேச, என்ன தடை?”

“ நான் அருளுக்கு மனைவியாகலாம்! ஆனா உங்களுக்கு மருமகள் ஆக முடியாது!”

அத்தனை பேரும் தூக்கிவாரிப்போட நிமிர்ந்தார்கள்.

“என் மகனுக்கு நீ மனைவினா, எனக்கு மருமகள் தானே?”

“அவர் உங்க வீட்ல ஒரு கோடீஸ்வரன் மகனா, உங்க பிள்ளையா, வசதியா வாழலியே? தனியா சமைச்சு சாப்பிட்டு, உங்க வசதிகள் எதையும் அனுபவிக்காம, உங்க பணத்துல வாழாம, தனியா, வொர்க் ஷாப் வச்சு, அவர் உழைப்புல தானே வாழறார்? இப்பக்கூட உங்க கார்ல வராம அவர் பைக்லதானே வந்தார்? வீடு அவரோட அம்மா வீடுங்கற காரணமா அங்கே இருக்கார்! அப்படி இருக்க, அருள் உங்க மகனாகவே வாழாதப்ப, நான் எப்படி உங்க மருமகளா ஆக முடியும்?”

பூதம் இப்படி ஒரு திருப்பத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை! அவர் திட்டமே வேறு! ஆனால் இவள் அதை புரட்டி போடுகிறாளே! இதில் நிச்சயம் அருள் இருப்பான்!

“நீங்க அவரோட அப்பாங்கறதுல மாற்றுக்கருத்துக்கே இடமில்லை! மகன் விரும்பின பெண்ணை அவனுக்கு கட்டி வைக்க, உங்க அந்தஸ்த்து பாக்காம இறங்கி வந்திருக்கீங்க! அதுக்கு நன்றி! கல்யாணத்தை நடத்தப்போறது நீங்க தான்! ஆனா ஆடம்பரமா இல்லை!”

“நீ என்னம்மா சொல்ற? வசதியா வாழணும்னு சொல்றியா? வேண்டாம்னு சொல்றியா?”

“புரியலையா? பணக்கார வாழ்க்கை வேண்டாம்னு உங்க மகனே உதற தயாரா இருக்கும் போது, மிடில் க்ளாஸ்ல பிறந்த எனக்கு ஏன் பணத்தாசை? எங்கப்பா எங்களை அப்படி வளர்க்கலை! எனக்கு அந்த ஆசை என்னிக்குமே இல்லை! அருள் புருஷனா வாய்ச்சா, பல கோடிகளுக்கு சமம்!”

அவர் பேசாமல் மௌனமாக இருந்தார்!

“அது மட்டுமில்லை! நீங்க பெரிய கம்பெனி முதலாளி! உங்க வீட்ல நான் வாழ்ந்தா, என் கால்ல நான் நிற்க முடியாது! அதாவது வெளிக்கம்பெனி வேலை பார்க்க முடியாது! அதுக்காக நான் வேலைக்கு போகாம இருக்க முடியாது!”

“எங்கண்ணன் அப்பா பணத்துல வாழலைனாலும், அம்மா வீட்டை விட்டு வர மாட்டான்!”

“நிச்சயமா வருவார்! அருள் எனக்காக எங்கே வேணும்னாலும் வருவார்! சந்தேகமிருந்தா இப்பவே நீயே கேளு!”

“நான் வருவேன் பாரதி! இப்பவே குடும்பத்தை விட்டு விலகித்தானே வாழறேன்! நிச்சயமா வருவேன்! உன் நம்பிக்கையை பொய்யாக்க மாட்டேன்!”

அப்பா, மகள் முகம் இருண்டு போனது! சிதம்பரம் பளிச்சென நிமிர்ந்தார்

“என் மகனும், நீயும் பரஸ்பரம் நேசிக்கற காரணமா உங்க கல்யாணத்தை நடத்தி, என் மகனை, என் வீட்டுக்கு கொண்டு வர, நான் ஆசைப்பட்டேன்! நீ அவன் மனசை மாற்றி பங்களால நிரந்தரமா அவனை வாழ வைப்பேன்னு நம்பினேன்! எனக்கு பிறகு அவன் கம்பெனி பொறுப்புகளை ஏத்துக்கிட்டு அடுத்த வாரிசா உருவாகணும்னு விரும்பினேன்! அதை சாதிக்கற ஒரு பெண் தான் என் மருமகள் ஆக முடியும்!”

சொல்லிக்கொண்டே அவர் எழுந்து விட்டார்!

“என்ன சிதம்பரம்? நீங்க எதுவும் பேசாம இருந்தா எப்படீ?”

“சார்! நான் இதுல என்ன பேசறது? வாழப்போறது அவங்க தானே? நீங்க சொல்லி உங்க மகன் அருள் கேக்கலை! நான் சொன்னா மட்டும் பாரதி கேப்பாளா?

“நீங்க பேசுங்க! உங்க பொண்ணு கிட்ட பேசுங்க! குடும்பத்துல எல்லாரும் கலந்து பேசுங்க! வாசுகி! உன் தங்கச்சி கிட்ட நீ பேசும்மா! அவன் தேவையில்லாததை பேசி வீணாப்போறான்! பணம் தான் இந்த உலகத்துல பிரதானம்! அது இருந்தா, எதையும் சாதிக்கலாம்னு உன் தங்கச்சிக்கு புரிய வைம்மா! நான் வர்றேன்! சிதம்பரம் ஒரு நிமிஷம் என்னோட வாங்க!”

சிதம்பரம் வாசல் வரை வந்தார்! காருக்கு அருகில் வந்து விட்டார்கள்.

“நீ ஒக்காரு அஞ்சு காருக்குள்ள!”

அவள் உட்கார்ந்ததும், சிதம்பரத்தை நெருங்கினார் பூதம்!

“இனிமே நீங்க பேசித்தான் ஆகணும் சிதம்பரம்! இல்லைனா கண்டிப்பா நான் பேசுவேன்! எல்லாம் பேசுவேன்! முப்பது வருஷ கதைகளை ஆதாரத்தோட பேசுவேன்! சீக்கிரம் பேசுவேன்! வரட்டுமா?”

காரில் அவர் ஏற, கார் புறப்பட்டு போனது! சிதம்பரம் அப்படியே உறைந்து நின்றார்! அருள் வெளியே வந்தான்! கூடவே பாரதியும் வந்தாள்!

“வெரி குட்! நான் எதிர் பார்த்ததை விட நீ அழகா பேசினே! பூதம் முகம் இருண்டு போச்சு! கவனிச்சியா?”

“அங்கே பாருங்க எங்கப்பாவை! ஏதோ சொல்லி அவர் மிரட்டியிருக்கார்!”

“அதை நான் பார்த்துக்கறேன்! நீ உள்ளே போ! நீ பேசினதை உங்கம்மா, அக்கா யாரும் ரசிக்கலை! அதுக்கான புயல் ஒண்ணு உங்க வீட்ல வீசப்போகுது! தயாரா இரு பாரதி!”

பாரதி உள்ளே போக, அருள், சிதம்பரத்திடம் வந்தான்!

“என்ன சார்? முப்பது வருஷ கதைகளை மூச்சு விடாம உடனே பேச போறதா மிரட்டலா? அதான் ஆடிப்போய் நிக்கறீ்ங்களா?”

“ஆமாம் அருள்! எனக்கு ரொம்ப பயம்மா இருக்குப்பா!”

“இது வெறும் மிரட்டல் சார்! உடனே செய்ய மாட்டார்! அவர் உங்களுக்கு எதிரா ஒரு ஆயுதத்தை கையில எடுத்திருக்கார்! அவருக்கு எதிரா எடுக்க நம்ம கிட்டேயும் கூர்மையான ஆயுதம் இருக்கு! அதை நான் எடுக்கறேன்!”

“நீங்க என்ன தம்பி சொல்றீங்க?”

“அது இப்ப உங்களுக்கு புரியாது! தைரியமா இருங்க! பூதத்தை எங்கே, எப்படி மடக்கணும்னு எனக்கு தெரியும்! நீங்க உள்ள போங்க!”

அருள் பைக்கை ஸ்டார்ட் செய்தான்!

அதே நேரம் காருக்குள், அஞ்சு குமுறி கொந்தளித்து கொண்டிருந்தாள்!

“டாடி! நான் சொன்னதை நீங்க கேக்கலை! இப்ப என்ன நடந்தது பாருங்க! உன் பணமெல்லாம் எனக்கு துச்சம்! உன் பிள்ளை நான் கூப்பிட்டா உடனே ஓடி வருவான் நாய்க்குட்டி மாதிரினு கிட்டத்தட்ட சவால் விடறா! அவ வீட்ல வச்சு, நம்மை அவமானப்படுத்தறா! இது அவளால உங்களுக்கு ஏற்பட்ட நாலாவது அவமானம்! அவளுக்கு நீங்க பயப்படறீங்களா டாடீ? அவளை உங்க பணத்தால, பதவியால, செல்வாக்கால எதுவுமே செய்ய முடியலையா? நீங்க கையாலாகதவரா டாடீ?”

“அஞ்சு…!”

அவர் போட்ட கூச்சலில், டிரைவர் பயந்து, காரை படக்கென பிரேக் போட்டான்.

–தொடரும்…

13 வது அத்தியாயம் | 15 வது அத்தியாயம் >

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...