பத்துமலை பந்தம் | 42 | காலச்சக்கரம் நரசிம்மா
42. கடைசி வாய்ப்பு
மூங்கில் மரத்தில் கனிஷ்கா ஊசலாடிக் கொண்டிருந்தாள்..!
“மயூரி… என்னைக் காப்பாத்து..! ஐ பீல் கிட்டி..! விழுந்துடுவேன் போல இருக்கு..!” –கதறிக்கொண்டிருந்தாள் கனிஷ்கா.
“கனிஷ்கா ஏன் மரத்து மேல ஏறினா..?” –திகைத்தாள் மயூரி.!
“அவள் ஏறலை..! அவள் செய்த பாவங்கள் அப்படியே ஓங்கி வளர்ந்து அவளை அந்த நிலைக்குக் கொண்டு போயிடுச்சு..!” –புன்னகைத்தான் குகன்மணி.
“என்ன சொல்றீங்க..? எனக்குப் புரியலை..”
“அவள் தொங்கிகிட்டு இருக்கிறது, Bambusoideae- னு மலேசியா மலைகள்ல விளையற மூங்கில் மரம். சூரியகாந்தி போல, சூரியனோட ஆகர்ஷணத்தால இயங்குற மரம். ராத்திரி வேளைகளில வளைஞ்சு தரையோடு தரையா கிடக்கும். சூரியன் உதிச்ச உடனே, அதோட கிரணங்கள் பட்டதும், ஆக்ரோஷத்தோட சிலிர்த்து எழும். முப்பது அடிகள் வரைக்கும் இந்த மரங்கள் உயரம். நேற்று ராத்திரி அந்த மூங்கில் மரத்துல மேல அவள் உட்கார்ந்திருப்பாள். அப்படியே தூங்கி இருப்பாள். காலையில சூரியன் உதிச்சதுக்கு அப்புறமா திரிசங்கு சொர்க்கத்திற்குப் போயிட்டா..!” –குகன் கூறினான்.
“அவளை எப்படிக் கீழே கொண்டு வர்றது..?” –மயூரி கேட்டாள்.
“இப்பதானே போகர் பள்ளியில அவ்வளவு வீறாப்பா சொன்னே..! உன் குடும்பத்தினராக இருந்தாலும், அவங்க தண்டனையை அனுபவிக்கணும்னு. இப்ப உன் அக்கா தண்டனையைத்தான் அனுபவிச்சுக்கிட்டு இருக்கா. அவளை எதற்குக் கீழே கொண்டு வரச் சொல்றே..?” –குகன்மணி பரிகாசத்துடன் கேட்டான்.
“குகன்..! உங்க கேலி புரியுது..! இருந்தாலும், என் கண் முன்னாடி அவள் தண்டனையை அனுபவிக்கறதை என் மனசு ஒப்புக்கொள்ள மாட்டேங்குது. அவளைத் திருத்த முடியும்னு ஒரு நம்பிக்கை உள்ளே இருக்கு. அந்த நம்பிக்கைக்கு ஒரு கடைசி வாய்ப்புக் கொடுங்க. இந்தத் தடவை அவளைக் காப்பாத்துங்க. அவள் ஒருவேளை தன்னோட தப்பையெல்லாம் உணர்ந்தா, என் குடும்பமே திருந்தறதுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அவங்க திருந்தினா, நான் கும்பிடற முருகனுக்குத்தானே பெருமை. அதனால ஒரே ஒரு வாய்ப்பைக் கொடுங்க.” –மயூரி கெஞ்சினாள்.
“ஒருத்தன் காலமெல்லாம் அமங்கல வார்த்தையே சொல்லிக்கிட்டு இருந்தானாம். அந்த மனுஷன் மரணப்படுக்கையில விழுந்தானாம். அவனால் பேசக்கூட முடியலையாம். அந்த மனுஷன் ஒரே ஒரு நல்ல வார்த்தை சொன்னால், அவனுக்கு மோட்சம் தரேன்னு இறைவன் சொல்லி, பேச முடியாத நிலையில இருக்கிற அவனுக்கு ஒரே ஒரு வார்த்தை சொல்லும் ஆற்றலை அளித்தானாம். அவன் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா..? ராமா இல்லை.! ஐயோ…! ஐயோ என்கிறது எமனோட அம்மா..! அவன் அம்மாவை கூப்பிட்டா அவன் பாசத்தோடதான் வருவான்..! உன் அக்கா அந்த மனுஷனைப் போன்றவ..! அவளுக்குக் கடைசி வாய்ப்பெல்லாம் உதவாது..!” –குகன்மணி கூறினான்.
“ப்ளீஸ் குகன்..! எனக்காக ஒரு முறை…” –மயூரி கேட்க, குகன், கனிஷ்கா ஊசலாடிக்கொண்டிருந்த மரத்தை நோக்கி நடந்தான். சற்று நேரம் சுற்றிலும் நோட்டம் விட்டவன், அங்கங்கே படர்ந்திருந்த காட்டுக் கொடிகளை பிடுங்கி பலமாக கயிற்றைப் போன்று பிணைத்துக் கட்டினான். கொடிக்கயிறு குறிப்பிட்ட நீளத்தை அடைந்ததும், அதனை கனிஷ்கா தொங்கிக்கொண்டிருந்த மரத்தில் பிணைத்து, மறுமுனையைத் தனது கரங்களால் பிடித்து இழுக்கத் தொடங்கினான்.
அவனது புஜபலமும், முறுக்கேறிய தசைகளும், அந்த கொடிக்கயிற்றை வலுவாக இழுக்க, உயர்ந்து நின்ற மரம், வளையத் தொடங்கியது. மயூரியும் அவன் பின்பாக நின்று கயிற்றை இழுக்கத் தொடங்கினாள்.
“நீ இழுக்க வேண்டாம் மயூரி..! அவளைக் காப்பாற்றிய புண்ணியமோ, பாவமோ எதுவும், உனக்கு வேண்டாம். நீ விலகி இரு..!” –சற்றே காட்டத்துடன் கூறிய, குகன்மணி, இன்னும் பின்பாகச் சென்று, சற்று வேகத்துடன் இழுக்க, அந்த மூங்கில் மரம் இன்னும் வளைந்தது.
“மூங்கில் மரம் இன்னும் வளையும்..! நிலத்தை அது நெருங்கி வர்றப்ப, உன் அக்காவைக் குதிக்கச் சொல்லு..!” –குகன்மணி கூற, மூங்கில் மரம் இன்னும் வளைந்ததும், சட்டென்று கீழே குதித்தாள் கனிஷ்கா..! செடிகளின் மீது விழுந்த கனிஷ்கா, எழுந்து நின்றாள். இன்னும் அவள் கண்களில் பயம் தெளியவில்லை.
“உங்க அக்கா பர்தா போட்டுக்கிட்டு, ட்ரெக்கர்கள் பின்னாடி போனபோதே அவளும், அவள் காதலன் மிதுன் ரெட்டியும் போறாங்கன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன். நம்மைப் பின்தொடர்ந்து வந்து, மூன்றாவது நவபாஷாணச் சிலையைக் கண்டுபிடிக்கப் பார்த்தாங்க. போகர் அவளைத் தண்டிச்சுட்டார்..!” –குகன்மணி கூறினான்.
மயூரி திகைப்புடன் கனிஷ்காவைப் பார்த்தாள்.
“உண்மையா கனிஷ்கா..? மிதுன்ரெட்டி எங்கே..?”
“அவன் பள்ளத்தாக்கில் தவறி விழுந்துட்டான்..!” –கனிஷ்கா கூறினாள்.
“தவறி விழுந்தானா.. விழ வைக்கப்பட்டானா..?” –குகன் கேட்டான்.
“எஸ் குகன்..! நான் அவனைக் கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு சொன்னேன். வேற ஒருத்தர் மேல காதல் வந்துடுச்சுனு சொன்னேன். அவன் கோபத்துல கீழே குதிச்சுட்டான்.” –கனிஷ்கா கூறினாள்.
‘இவளைப் போயா காப்பாத்தச் சொன்னே..?’ –என்பது போல் மயூரியைப் பார்த்தான் குகன்மணி.
“கடைசி வாய்ப்பு உனக்காகக் கொடுத்தேன். இனியும் அவள் முறை தவறி நடந்தால், நான் பொறுத்துக்க போவதில்லை..!” –குகன்மணி கூற, மயூரி, மௌனமாக நின்றாள்.
‘குகன்மணி..! நான் காதலிக்கிற அந்த இன்னொரு ஆளு நீதான்..! என்னை வெறுக்கும் அளவுக்கு உனக்கு மயூரியின் மீது காதலா..? பார்த்துக்கிட்டே இரு..! உன்னை என் காலடியில விழவச்சு, உன் மேல நடராஜர் டான்ஸ் ஆடறா மாதிரி ஆடறேன்…!’ –தனக்குள் சூளுரைத்தாள் கனிஷ்கா.
கனிஷ்கா உடன் வருவதாலோ என்னவோ, மயூரியும், குகன்மணியும் ஒன்றும் பேசாமல், மீண்டும் தாங்கள் வந்த வழியே நடந்தனர்.
கனிஷ்கா யோசித்தபடி வந்தாள். மயூரியை வசப்படுத்துவதற்கு ஒரே வழி, தான் திருந்திவிட்டது போல நடிக்க வேண்டும். அப்போதுதான் அவள் தங்களுக்காக இன்னமும் குகன்மணியிடம் பரிந்து பேசுவாள். அதனால், குகன்மணி இவளைப் பொறுத்துக்கொண்டு இருப்பான். அதற்குள் சென்னையில் இருந்து குடும்பத்தினர் வந்து விடுவார்கள். அலங்காரி கொடுத்து அனுப்பும் வசிய மருந்தைக் குகன்மணிக்குக் கொடுத்து அவனை வசப்படுத்திவிட்டால், நவபாஷாணச் சிலையும், குகன்மணியும் இவளுக்கே தான் சொந்தம். மிதுன் ரெட்டி என்னும் தடைக்கல் ஒழிந்தது போல, அடுத்தது மயூரி, அபி என்று எல்லோரையும் மூட்டை கட்டி அனுப்பலாம். தேஜஸைக் காப்பாற்றி அனைவரும் சுகமாக குகன்மணி எஸ்டேட்டிலேயே வசிக்கலாம்.
வருங்காலத்தைத் திட்டமிட்டபடி நடந்தவள், திடீரென்று கதறி அழத் தொடங்கினாள்.
“மயூரி..! ஐ ஆம் அஷெம்டு ஆப் மைசெல்ஃப்..! என்னை மன்னிச்சுடு..! நான் உனக்கு நிறையத் துரோகம் செஞ்சுட்டேன். நவபாஷாணச் சிலையை misuse பண்ண நினைச்சேன். அதற்கு நிறையத் தண்டனையை அனுபவிச்சுட்டேன். நீ மன்னிச்சால்தான் நான் தொடர்ந்து உன்னோட வருவேன். இல்லேன்னா, இப்படியே எங்கேயாவது குதிச்சு தற்கொலை செஞ்சுப்பேன்.” –என்று கேவினாள்.
இது போதாதா மயூரியை இளக வைக்க..! அவளருகே சென்று, அவளது தலையைப் பரிவுடன் கோதியபடி பேச ஆரம்பித்தாள்.
“எப்ப நீ தவறுன்னு உணர்ந்திட்டியோ, அப்பவே உனக்கு நல்ல காலம் ஆரம்பிச்சுடுச்சுன்னு அர்த்தம். இனிமே எல்லாம் நல்லா நடக்கும்..!” –மயூரி கூறினாள்.
‘அட பைத்தியமே..!’ –குகன்மணி தனது மனதிற்குள் நினைத்த அதே தருணத்தில், ‘அட லூசே..!’ -என்று கனிஷ்காவும் மனதினுள் சிரித்துக் கொண்டாள்.
1 Comment
Super… Eagerly waiting for the next episode