அவ(ள்)தாரம் | 11 | தேவிபாலா
“தம்பி! என்ன இது..? நீங்க முதலாளி மகன்! நான் உங்கப்பாகிட்ட சம்பளம் வாங்கறவன்..! உங்களை நான் எதிர்க்க முடியாது..! நீங்க என் மகள் பாரதியை, சந்திக்கறது இது கடைசியா இருக்கட்டும்..! பாரதி..! உங்கிட்ட, வீட்ல, நான் என்ன சொன்னேன் தெரியுமில்லை..? அதையும் மீறி, நீ அருள் தம்பியை சந்திக்க இங்கே வந்திருக்கே..! வேண்டாம்..! இது நீங்க சந்திக்கற கடைசி சந்திப்பா இருக்கணும்..!”
“இல்லைனா, நீங்க என்ன செய்யப்போறீங்க சார்?”
இந்தக் கேள்வியை அருளிடமிருந்து சிதம்பரம் எதிர்பார்க்கவில்லை..! அவர் முகம் சிவந்தது..! கோபத்தில் நரம்புகள் இடம் மாறின..!
“தம்பி, வேண்டாம்..! முதலாளி மகன்னு பாக்கறேன்..! கூட்டம் சேருது..! பாரதி என் மகள்..! உங்களைவிட எனக்கு அவகிட்ட உரிமை அதிகம்..! அதனால என் மகளை நான் கூட்டிட்டு போறேன்..! வா, பாரதி..! போகலாம்..!”
சரக்கென ஒரு கார் வந்து நின்றது..! அதிலிருந்து பூதத்தின் மகள் அஞ்சு இறங்கினாள்..! நேராக அண்ணனிடம் வந்தாள்..!
“வா அஞ்சு..! இந்தக் கோயில்ல வச்சு அப்பாவை, இந்த பாரதி அவமானப்படுத்தினா..! இப்ப என்னை சிதம்பரம் சார் அவமானப்படுத்தப் போறார்..!”
“நீ அதை பொறுத்துக்க வேண்டிய அவசியம் என்ன..? உன்னால இவரை அசிங்கப்படுத்த முடியாதா..?”
“முடியாதே..! அப்பாகூட இவருக்குள்ள ரகசிய ஒப்பந்தம் பற்றிச் சொல்லி என்னை மிரட்டறார்..! அதை பகிரங்கப்படுத்துவேன்னு சொல்றாரே..!”
சிதம்பரமே ஒரு நொடி அதிர்ந்து திரும்ப,
“வேற வழியில்லை சார்..! உங்க மேகலாவை யார் கடத்தினது..? பாரதி மேல திருட்டுப்பழி வச்சது யாருன்னு ஆதாரம் எங்கிட்ட இருக்கு..! அதையெல்லாம் நான் என் தங்கச்சி கிட்ட சொல்ல வேண்டியது தான்..!”
“சொல்லுடா..!”
அடுத்த நொடியே சிதம்பரத்துக்கு ஃபோன் வந்தது..! பூதம் தான்..!
“நான் சொன்னபடி, என் மகனை நீ அவமானப்படுத்த வேண்டாம்..! எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்..! உடனே ஆஃபீசுக்குப் புறப்பட்டு வா..!”
“சரி சார், வர்றேன்..! முதலாளி வரச்சொல்றார்..! அவசர வேலை இருக்காம்..!”
அவர் புறப்பட,
“நீ சொல்லண்ணே..!”
அஞ்சு தூண்ட, அவளுக்கு ஃபோன் வந்தது!
“அஞ்சு..! உனக்கென்ன கோயில்ல வேலை..? உடனே புறப்பட்டு வா..! உன் சந்தேகங்களை நான் தீர்த்து வைக்கறேன்..! யாரையும் எதுவும் கேக்காம வந்து சேரு..! சீக்கிரம் வா..!”
அவள் புறப்பட்டுப் போக, சிதம்பரம் அருளிடம் வந்தார்..!
“தம்பி..! என் குடும்ப மானத்தைக் காத்தவர் நீங்க..! உங்களை நான் அவமானப்படுத்துவேனா..?”
“சார்! அப்பாவோட நிழலான சங்கதிகள் எதுவும் அஞ்சுவுக்கு தெரியாது..! அவரை ஒரு ரோல் மாடலா அவ கருதறா..! அதான் அவளை வச்சு இந்த ஆட்டத்தை ஆரம்பிச்சேன்..! அப்பா சரண்டர் ஆயிட்டார்..!”
“அஞ்சுவை சொல்லி தப்பில்லை/.! ஒவ்வொரு பொண்ணுக்கும் தன் முதல் கதாநாயகன் அப்பா தான்/.! எனக்கும், எங்க மூணு பேருக்குமே ரோல் மாடல் எங்கப்பா தான் அருள்/.!”
சிதம்பரம் தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டார்..! அதில் ஒரு வலி தெரிந்தது! பாரதி அதை பார்த்து விடக்கூடாதெனக் கலங்கினார்..! ஆனால் அருள் பார்த்து விட்டான்..!
“சார்..! பாரதி எனக்கு நல்ல ஒரு தோழினு மட்டும் தான் நான் நினைக்கறேன்..!”
“தம்பி..! நீங்க காதலிச்சாக்கூட எனக்குத் தடையில்லை..! ஆனா பாரதியை எதிரியா நினைக்கற உங்கப்பா, என் குடும்பத்தை வாழவிடுவாரா..?”
“அருள்! எங்கப்பா, உங்க கம்பெனிலேருந்து விடுபடணும்..! அதுக்கு நீங்கதான் வழி சொல்லணும்..! எனக்கு பயம்மா இருக்கு அருள்..!”
“அது உடனடியா கஷ்டம் பாரதி..! செய்யலாம்..! அவசரப்படாதே..! சாமியைக் கும்பிட்டுட்டு புறப்படலாம்..!”
இவர்கள் பேசும் ஒலி காதில் விழாவிட்டாலும், அங்கு நிற்பதைக் காட்சிப்படுத்தி அவரது ஆள், பூதத்துக்கு வீடியோ அனுப்பினான் உடனடியாக.! அதை பார்த்து பூதம் இன்னும் எரிச்சலானது..!
சிதம்பரம் நேராக அலுவலகம் வர, காத்திருந்தார் பூதம்..!
“என்ன..? தப்பிச்சிட்டதா இறுமாப்பா..?”
“சார்..! நாங்க யாரும் உங்களுக்கு எதிரா எதுவும் செய்யறதில்லை..! ஒவ்வொரு முறையும் நீங்க வீசற ஆயுதங்களைச் செயலிழக்க செய்யறது உங்க மகன் அருள்தான்..! உங்க மகளைக் கொண்டு வந்து உங்க விரலால உங்க கண்களை அவர் குத்துவார்னு யாருக்குத் தெரியும்..?”
“நீ எங்கிட்ட மாட்டியிருக்கே சிதம்பரம்..! அது உன் குடும்பத்துக்குத் தெரியணுமா..?”
“சார்! உங்களைப் பற்றி உங்க மகனே உங்க மகள் கிட்ட சொன்னா, உங்க மரியாதை என்னாகும்..?”
“என்னையே ப்ளாக்மெயில் பண்றியா..?”
“நான் செய்யலை சார்..! உங்க மகன் செய்யறார்..!”
–சொல்லி விட்டு சிதம்பரம் வெளியேற, பூதம் முகத்தில் படர்ந்தது என்ன ரகமான வெறி என்பதை யாரும் கணிக்க முடியாது..!
இனி மூத்தவள் வாசுகியின் கதைக்கு வரலாம்..! பாரதியின் அக்கா வாசுகி.! பட்டதாரி தான்..! கொஞ்ச நாள் அவளும் உத்யோகம் பார்த்தாள்..! அவள் கணவன் க்ருஷ்ணா, எம்.பி.ஏ. படித்து விட்டு ஒரு கம்பெனியில் உயர் பதவியில் இருப்பவன்..! கம்பெனியே வீடு, கார் எல்லாம் வழங்கியிருக்கிறது..! அவன் பெற்றோர் மும்பையில்..! கல்யாணம் ஆன முதல் நாளே, வாசுகிக்கு தனிக்குடித்தனம் அமைந்து விட்டது..! அடுத்த மாதமே உண்டாக, அவளால் மசக்கை உபத்ரவத்தில் வேலைக்குப் போக முடியவில்லை..! க்ருஷ்ணாவும் கட்டாயப்படுத்தவில்லை..! அதன் பிறகு பிரசவம், குழந்தை வளர்ப்பு என நீடித்ததால், வேலையை ராஜினமா செய்து விட்டாள்..!
வாசுகிக்கு எல்லாம் தெரியும்..! ஆனால் கண்டிப்பும் கறாரும் மிக அதிகம்..! காலை படுக்கையை விட்டு எழுவதிலிருந்து, இரவு வரை எல்லாமே நூல் பிடித்தாற் போல நடக்க வேண்டும்..! நேரத்துக்கு உணவு, அதிலும் ஆயிரம் கட்டுப்பாடு, குடும்ப நிர்வாகமும் அவள் கைக்கு வந்து விட்டதால், ஒவ்வொரு ரூபாய்க்கும் க்ருஷ்ணாவிடம், வாசுகி கணக்குக் கேட்பாள்..! ஆரம்ப நாட்களில் இதை ரசித்தான் அவன்..! ஆனால் போகப்போக சலிப்புத் தட்டத் தொடங்கி விட்டது..!
க்ருஷ்ணா, ஜாலியான பேர்வழி..! கோடு போட்டு வாழப் பிடிக்காது..! எல்லாரிடமும் ஆண், பெண் வேறுபாடு பார்க்காமல் குழந்தை போல பழகுவான்..! இது தான் வாசுகிக்கும் அவனுக்கும் மோதலுக்கு பெரிய காரணமாகி விட்டது..! வாசுகிக்கு இன்னொரு கெட்ட குணம், ஓவர் பொசசிவ் குணம்..! தன் கணவன் தன்னை தவிர வேறு பெண்களிடம், கூடுதலாக இரண்டு வார்த்தைகள் பேசி விட்டால், அன்றைக்கு கும்மி அடித்து விடுவாள்..! அவ்வளவு ஏன்..? தன் தங்கைகள் பாரதி, மேகலாவிடம் நெருக்கமாக நின்று க்ருஷ்ணா பேசினால், அன்றைக்கு பஞ்சாயத்து வைத்து விடுவாள்..! இதை பாரதி தட்டிக்கேட்டதால் பல முறை மோதல் வந்திருக்கிறது..!
நாலு வயது மகள் நிஷா அப்பாவிடம் காலையில் படுக்கையில் புரண்டு கொஞ்சிக் கொண்டிருக்க, அவளை வெடுக்கெனப் பற்றி இழுத்தாள் வாசுகி..!
“ஏன் அவளை இழுக்கற..? இன்னிக்கு லீவு தானே..?”
“அதனால..? நிறைய ஹோம்வொர்க் பாக்கி இருக்கு..! அதை முடிக்கணும்..!”
குழந்தை அவன் மேல் விழுந்து புரள, அதன் உடை கலைய, அவனது உடையும் கலைந்து, அது சிரித்து,
“அப்பா..! ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்..!”
எனச் சிரிக்க, வேகமாக அதை இழுத்து ஓங்கி அறைந்தாள் வாசுகி..! அது அலறி அழ,
“எதுக்கு குழந்தையை இப்ப அடிச்சே..?”
“அவளை மேல இழுத்து போட்டு கொஞ்சாதீங்கனு நான் பல முறை சொல்லியாச்சு..! அது பெண் குழந்தை..!”
“நீ என்னடீ பேசற..? அது பச்சக்குழந்தை..! நான் அதுக்கு அப்பா..!”
“ஆனாலும் நீங்க ஆம்பள..! அதை மறக்கக்கூடாது..!”
“ஏண்டீ உன் மனசுல இத்தனை விகாரம்..?”
“இது விகாரம் இல்லை..! அத்தனை பண்போட வளர்ந்தவங்க நாங்க மூணு பேரும்..! பெண் குழந்தைகளை எப்படி வளர்க்கணும்னு எங்க வீட்ல வந்து கத்துக்கணும்..! எங்கப்பா எங்களை தொட்டுப் பேசமாட்டார்..! ஆபாசமா ட்ரஸ் பண்ண விட மாட்டாங்க..! மேகலாவும் பிறந்த பிறகு எங்கப்பா அம்மாவுக்கு தனி பெட்ரூம் கிடையாது..! இன்னும் சொல்லப்போனா, அவங்க எல்லாத்தையும் நிறுத்தியாச்சு..! பிள்ளைங்க மனசுல விகாரம் வராம பாத்துக்கறது பெத்தவங்க கடமை..!”
“போதும் தாயே..! இப்ப நான் எதுவும் பேசலைடி..! ஆனா ஒரு நாளைக்கு நீ எங்கிட்ட சக்கையா மாட்டுவே..! அன்னிக்கு நிக்க வச்சு உன்னை உரிக்கறேண்டி..!”
கோபமாக எழுந்து போனான்.
“ஒழுக்கத்தைப் பற்றிப் பேசினா பிடிக்கலையா..? அப்ப உங்க கிட்ட ஏதோ கோளாறு இருக்கு..! என்னன்னு கண்டு பிடிக்கறேன்..!”
குழந்தை எதுவும் புரியாமல் மிரட்சியுடன் நின்றது..!
கோயிலிலிருந்து வீடு திரும்பிய முதல் அஞ்சு நிலைகொள்ளாமல் தவித்தாள்..! அருள் சொன்ன வார்த்தைகள், குடைந்தது..! அவன் அவளைக் கோயிலுக்கு வரச்சொன்னதே அந்த மாதிரி பேசித்தான்..!
“அப்பாவுக்கும் சிதம்பரம் சாருக்கும் ஏதோ ரகசிய ஒப்பந்தம் இருக்கு..! அதை சொல்லி சிதம்பரம் அப்பாவை மிரட்டறார்..!”
அதற்கு ஏற்ற மாதிரி அப்பாவும் என்னை வரச்சொல்லி விட்டார்..!
அப்பாவிடம் கேட்க, நிறையக் கேள்விகள் அஞ்சுவுக்கு இருந்தது..! நடுவில் மதிய உணவுக்காக அப்பா வர, அஞ்சு அவரைப் பிடித்து கொண்டாள்..!
“டாடி..! உங்களுக்கும், சிதம்பரத்துக்கும் என்ன ரகசிய ஒப்பந்தம்..?”
“அந்த மாதிரி எதுவும் இல்லைம்மா..! அவர் எங்கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கறவர்..!”
“மேகலாவை யார் கடத்தினாங்க..? பாரதி மேல யார் திருட்டுப் பழி வச்சாங்க..?”
“எனக்கென்னம்மா தெரியும்..?”
“பின்ன நீங்க வேலை தந்தும், பாரதி அதை ஒப்புக்கலைனு மீடியால செய்தி வந்ததே..! பாரதியை பார்த்து நீங்க பயப்படறதாத் தகவல் வருது..! உங்க கிட்ட உள்ள ரகசியம் பாரதிக்குத் தெரிஞ்சு, அவ உங்களை மிரட்டறானு பகிரங்கமா எழுதறாங்க டாடி..! உங்க எதிரிகள் ஆயிரம் எழுதட்டும்..! இப்ப அண்ணனே அதை சொல்லும் போது, மத்தவங்க சும்மா இருப்பாங்களா டாடி..?”
பூதம் பதில் சொல்ல முடியாமல் திணறினார்..! அது கோபமாக வெடித்தது..!
“எனக்கு எதிரி வெளில இல்லை அஞ்சு..! அது அருள்தான்..! என் மானத்தை எப்ப, எப்படி வாங்கலாம்னு நிக்கறான்..! நீயும் அவன் பேச்சைக் கேட்டு என்னைக் கேள்வி கேக்கறியாம்மா..?”
“இல்லைப்பா..! உங்களைப் பற்றி யாராவது தப்பாப் பேசினா, மனசு தாங்கலைப்பா..!”
“இன்னிக்கு வர்த்தக உலகத்துல உசத்தியான இடத்துல நான் நிக்கறேன்..! போட்டியாளர்களுக்கு பிடிக்கலைம்மா..! நீ எதையும் காதுல போட்டுக்காதே..! விடும்மா..! நான் வாழறதே உனக்காகத்தான்..!”
கை கழுவி விட்டு உள்ளே வந்தார்..! மண்டை குடைந்தது..! ஏற்கனவே அருள் எதிர்ப்பக்கம்..! இப்போது பாரதியின் வரவுக்கு பிறகு, எல்லாமே தடம் புரள்கிறது..! பாரதியை ஒழிப்பது எப்படி..?
“அவளுக்கு என்ன குடைச்சலை நான் தர நினைத்தாலும், அருள் எப்படியோ அங்கே ஆஜராகி விடுகிறான்..! அது தான் தலைவலி..! சிதம்பரம் குடும்பத்துக்கு சரியான ஒரு அடி தரவேண்டும்..! அதில் அருளும் சேர்ந்து அடிபட வேண்டும்..! முடியுமா..? ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்தவன் நான்..! வேகமாக யோசிக்க தொடங்கினார்..!
இரவு, அருள் பத்து மணிக்கு வந்தான்..! தன் அறைக்கு வந்து உடைகளை மாற்றி கொண்டு, லேப்டாப் முன்னால் உட்கார்ந்தான்..!
கதவை தட்டி உள்ளே நுழைந்தார் பூதம்..! சாதாரணமாக அவர் அருள் அறைக்கு வர மாட்டார்..! அவனைத்தான் வரச்சொல்லுவார்..!
“உள்ள வாங்க சார்..!”
“நான் உனக்கு அப்பா..! சமீப காலமா நீ என்னை சார்னு கூப்பிட்டு அவமானப்படுத்தறே..!”
“அப்பானு கூப்பிடற தகுதி உங்களுக்கு இருக்கறதா நான் நினைக்கலை..!”
“ஊரே என்னை கொண்டாடும் போது, உனக்கு மட்டும் ஏண்டா இத்தனை ஆத்திரம்..? நீ ஒப்புக்கலைனாலும், நான்தானே உன் அப்பா..?”
“உங்க ஒரு துளி விந்துல நான் உருவான காரணமா, உங்களை நீங்க என் அப்பானு சொல்லிக்கிட்டா, அதுல எனக்கு தடையில்லை..! ஆனா அப்பாங்கற சொல், அந்த உறவு, மகனுக்கு ஆதர்ச புருஷனா இருக்கணும்..! அப்பா ஹீரோவா இருக்கணும்..! இங்கே நீங்க வில்லனா இருக்கீங்க..! அதனால நான் விலகி நிக்கறேன்..! உங்களோட நிஜமான முகம் தெரிஞ்ச காரணமா, உங்க மகனா வாழ நான் வெக்கப்படறேன்..! அப்பாங்கறது மனசு..! வெறும் உடம்பு மட்டும் அப்பானா, அந்த அப்பா எனக்கு வேண்டாம்..! நீங்க போகலாம்..!”
“சரி, நமக்குள்ளே சண்டை அப்புறமா..! உனக்குப் புடிச்ச ஒரு விஷயத்தை நான் பேசத்தான் இங்கே வந்திருக்கேன்..!”
“அது உங்களால முடியாது..! எனக்கு பிடிச்சதைச் செய்ய உங்களால நிச்சயமா முடியாது..!”
“உனக்கு ரொம்ப பிடிச்ச பாரதியை, உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கறேண்டா..!”
அருள் படக்கென நிமிர்ந்தான்..!