அவ(ள்)தாரம் | 9 | தேவிபாலா
பாரதி, அருளிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருக்க, வெளியே பலமாக மழை பெய்து கொண்டிருக்க, அவசரமாக உள்ளே புகுந்த நாலு ஆட்கள், படக்கென ஷட்டரை இழுத்து, கடையை மூடினார்கள்..! அருள் விசுக்கென நிமிர்ந்தான்..!
“யாருடா நீங்க..?”
“டேய்..! அவளைப் போட்டு தள்ளிட்டு, வந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்புங்கடா..!”
ஒருவன் சொன்னது தான் தாமதம், அடுத்தவன் ஒரு நீண்ட ஆயுதத்துடன் பாரதியை நோக்கிப் பாய, அடுத்த நொடியே அவன் கை ஆயுதம் தெறித்து அவனும் அலறியபடி தூரப்போய் விழுந்தான். கையில் வைத்திருந்த நீண்ட ஜாக்கியால் அவன் நடு மண்டையில் அருள் தாக்க, அடுத்த ஆள் ஓடி வர, அருள் அவன் இடுப்புக்குக் கீழே குறி வைக்க, அவன் துடித்துத் துவள, அருள் ஒரு தேர்ந்த கிரிக்கெட் வீரர், மட்டை பிடித்து லாவகமாக பந்துகளை எதிர்கொள்ளும் கவனத்துடன் ஆக்ஷன் களத்தில் இறங்க, பாரதி தகுந்த ஆயுதங்களை அவ்வப்போது எடுத்துத் தந்து உதவ, நாலு பேரும் செத்த எலி போல சரிய,
“பூதம் தர்ற சில்லறைகளை வாங்கிட்டு உயிரை பணயம் வச்சு ஆடற அடியாள் கூட்டம்..!”
“போலீஸ்ல தகவல் தந்துடலாமா அருள்..?”
“வேண்டாம் பாரதி! ஒண்ணு இவங்களை அவர் வெளில எடுப்பார்..! இல்லைனா, நிறைய வழக்குகளை போட்டு, லாக்கப்ல சாகடிப்பார்..! தெளிஞ்சதும் எழுந்து போகட்டும்..! நீங்க முதல்ல டீயை சாப்பிடுங்க..!”
“அருள்! இன்னிக்கு தற்செயலா நம்ம சந்திப்பு நிகழ்ந்திருக்கு..!”
“இருக்கலாம் பாரதி..! ஆனா பூதம் தன் ஆட்களை வச்சு ஃபாலோ பண்றது நடக்குது..! உங்களுக்கு ஆபத்து தொடருது..! எல்லா நேரமும், நான் உங்களைக் காப்பாற்ற வரமுடியுமானு தெரியலை பாரதி..! எனக்குக் கவலையா இருக்கு..!”
“கவலை ஏன் வருது..? என் மேல அக்கறை இருக்கற காரணமாத்தானே வருது..? அப்புறமா சந்திக்கவே வேண்டாம்னு எதுக்கு இந்த பாசாங்கு..?”
கேட்டுவிட்டு தன் பெரிய கண்களை விரித்து அவனை உற்றுப் பார்த்தாள்!
“என்னை முழுங்கப் போறீங்களா..? யம்மாடீ..! இத்தனை பெரிய கண்களா..?”
வாய்விட்டு அவன் சொல்ல,
“கண்கள் தான் எதுக்கோ வாசல்னு கவிஞர் ஆழ்வார் சொல்லியிருக்கார்..!”
“ஆழ்வார் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்..! அதுவும் காதல் கவிதைகள் அசத்தலா உணர்ச்சிகளை தூண்டற மாதிரி இருக்கும்..!”
“இந்த முரட்டு அருளுக்கு, கவிதைகளை, அதுவும் காதல் கவிதைகளை, ரசிக்கக்கூட வருமா..?”
அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்..!
“உங்களுக்குள்ளே இன்னொரு மென்மையான அருள் இருக்கும் போது எதுக்கு இந்த இரும்புப் போர்வை..?”
“பூதத்து கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்திக்க நான் போட்டுக்கற கவசம் தான் இந்த போர்வை.”
“பாரதி கூடத் தனியா இருக்கும் போது எதுக்கு அந்தப் போர்வை..? எத்தனை போர்வை கொண்டு மூடினாலும் எல்லாம் தாண்டி உள்ளே இருக்கற அருளோட இதயத்தைப் பார்க்க இந்த பாரதியால முடியும்..!”
அவன் கண்களில் கணப்பொழுதில் காதல் மின்னல் ஒன்று பளீரென மின்னி மறைந்ததை பாரதி தன் எக்ஸ்ரே கண்களால் படம் பிடித்து விட்டாள்..!
“பாரதி..! இப்ப நீயும் எதிரி..! நான் என்னிக்குமே அவருக்கு எதிரி..! இதுல மென்மையான சங்கதிகள் நமக்குள்ளே வேணுமா..?”
பாரதி அவனை நெருங்கினாள்..!
“அருள்..! கோயில்ல நான் உங்கப்பாவை எதிர்த்து நின்னப்ப நீங்க முதன் முதலா கை தட்டினீங்களே, அப்ப என் மனக்கதவையும் தட்டி உள்ளே நுழைஞ்சாச்சு..! அடுத்தபடியா என் தங்கைனு தெரியாம, மேகலாவை மீட்டு என் வீட்டுக்குள்ள வந்தப்ப என் இதயத்துக்குள்ளேயும் வந்தாச்சு..! இப்ப வரைக்கும் எனக்காகவே பிறந்த மாதிரி ஒரு ரட்சகனா நீங்க ஒவ்வொரு இடத்துலேயும் வந்து ஆஜர் ஆகறீங்க..! இதெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் இல்லை அருள்..! தெய்வ சங்கல்பம்தான்..! நான் கடவுளை நிறைய நம்பறவ..! உங்களைக் காட்டினது தெய்வம்தான்..! நீங்க என்னை விரும்பறது எனக்குத் தெரியும்..! நமக்குள்ளே பாசாங்கு வேண்டாம்..! எனக்கு உங்களை ரொம்பப் புடிச்சிருக்கு..! பெண்களோட உயிரும் மானமும், மரியாதையும் யாரால காப்பாற்றப்படுதோ, அந்த மனுஷனைவிட ஒரு பெண்ணுக்கு உசத்தி இந்த உலகத்துல யாருமே இல்லை அருள்..!”
நெருங்கி வந்து அவன் கைகளை இறுகப் பிடித்து கொண்டாள்..! அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்தாள்..! வெளியே மழை அடித்து வைத்துப் பெய்தது..! அப்போதுகூட அருள் அவளைத் தன்னோடு சேர்த்து அணைக்கவில்லை..! ஒரு மாதிரிக் கூச்சத்துடன் கொஞ்சம் ஒட்டாமல் நிற்க, நிமிர்ந்து பார்த்தாள் பாரதி..!
“ஸாரி பாரதி..! உன் கண்ல உள்ள கேள்விகள் எனக்குப் புரியது..! பெண்களை வியாபாரப் பொருளாக்கி, பல அபலைகளோட கற்பைச் சூறையாடற அப்பாவுக்கு, மகனாப் பிறந்த எனக்கு, ஒரு பெண்ணை தொடக்கூட கூசுது..! அது தப்போனு தோணுது..! என் மனசுலேயும் உன்மேல காதல் இருக்கு..! நீ எனக்கு மனைவியாகற யோகம் இருந்தா, அன்னிக்கு மனசைத் தாண்டி உடம்புக்கும் இந்தக் காதல் வரும்..! என்னை மன்னிச்சிடு பாரதி..!”
அவனைப் பெருமதிப்புடன் பார்த்தாள் பாரதி..!
“எனக்கு ஆண்கள்ள அப்பாவை ரொம்பப் புடிக்கும்..! அவரை ஒரு ரோல் மாடலா வச்சுத்தான் இப்ப வரைக்கும் எங்க குடும்பமே வாழுது..! ஆனா அவரையும் மிஞ்சி நீங்க நிக்கறீங்க அருள்..!”
அவள் குரல் நெகிழ்ச்சியில் உடைந்தது..! மழை மெல்ல அதன் வேகத்தை குறைத்துக் கொள்ள,
“அருள்..! அப்பாவை நான் வேலையை ராஜினமா செய்ய சொன்னேன்..! முதல்ல ஃபைனல் செட்டில்மென்ட்னு ஒரு காரணத்தை சொல்றார்..! அதை கோர்ட்ல உடைக்கலாம்னு சொன்னேன்..! ஆனா வேற ஏதோ காரணம் இருக்கு..! அப்பாவால எங்கிட்ட சொல்ல முடியலை..! அக்ரிமென்ட், பாண்ட்னு ஏதாவது இருக்குமா அருள்..? உங்ககிட்ட பேசச் சொல்றார் அப்பா..!”
அருள் மௌனமாக நின்றான்.
“அப்பா எதிலாவது உங்கப்பா கிட்டே மாட்டியிருந்தா அவரை விடுவிக்க முடியாதா அருள்..? எங்கப்பாவுக்கு உங்கப்பா, தப்பான தொழில் செய்யறதை நாசூக்கா நான் சொல்லிட்டேன்..! அப்படியும் ஏன் தயக்கம் காட்டறார்னு தெரியலை..? அவரோட ரெண்டு பெண்கள் வாழ்க்கைல விளையாடற மனுஷன்கிட்ட இனி மேலும் எதுக்கு எங்கப்பா வேலை பாக்கணும் அருள்..?”
“இல்லை பாரதி..! நம்ம வயசு வேற..! உங்கப்பா வயசு வேற..! அது என்ன மாதிரி அக்ரிமென்ட்ல அவர் மாட்டியிருக்கார்னு நமக்குத் தெரியாது..! இந்த பூதம் செல்வாக்குள்ள பெரிய மனுஷன்..! அரசியல், போலீஸ்னு எல்லாத்தையும் கைல வச்சிருக்கார்..! சட்டத்தோட சந்து பொந்துகள்ள புகுந்து வரத்தெரியும்..! நான் அவர் மகனா இருக்கறதால என்னை அழிக்க உடனடியா களத்துல இறங்க மாட்டார்..! அதுவும் இந்த வேகத்துல நான் போனா என்னை கொல்ல தயங்கவும் மாட்டார்..! உன்னைக் கொல்ல இப்பவே முயற்சிகள் தொடங்கியாச்சு..! உனக்கும் எனக்கும் துணிச்சல் அதிகம்..! ஆனா உங்கப்பா தன் குடும்பத்தை நெனச்சு கவலைப்படுவார்..! அவர் தன் குடும்பத்துக்காக வாழற மனுஷன்..! அவர் எதைச் செஞ்சாலும் அதன் உள்நோக்கம் தன் குடும்ப நலனுக்காகத்தான்.” இதை அழுத்திச் சொன்னான் அருள்..!
பாரதி ஆச்சர்யமாக அவனைப் பார்த்தாள்..!
“இது சத்தியவாக்கு அருள்..! நாங்க இத்தனை வருஷங்களா அறிஞ்ச எங்கப்பா சிதம்பரம் இது தான்..! நீ்ங்க நேத்து வந்தவர், பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்களே..!”
“இப்பப் புரியுதா..? உங்கப்பா எல்லாம் தெரிஞ்சும், ஏன் வேலையை விடாம நிக்கறார்னு..? காரணம் உங்கம்மாவும் நீங்க மூணு பேரும்தான்..! உங்க மேல ஒரு தூசு விழறதைக்கூட அவர் விரும்பலை பாரதி..!”
“எங்கப்பா தூசுக்கு பயப்படறார்..! ஆனா என் மேல தூணே விழற நிலை வருதே..!”
“நான் சொல்றதைக் கேளு..! நாம ரெண்டு பேரும் பூதத்து கிட்டே மோதறது இருக்கட்டும்..! உங்கப்பா மோத வேண்டாம்..! அவர், அவரோட சொந்த வழில போகட்டும்..! நம்ம வயசு, அவரோட அனுபவம்..! முப்பது வருஷ சிக்கல் இடியாப்பச் சிக்கலா இருக்கும்..! விடுவிக்க அவரால மட்டும் தான் முடியும்..! அதை அவரே செய்யட்டும்..!”
“சரி அருள்..! என் மேல உள்ள கோபத்துல அப்பா உயிருக்கு ஆபத்து எதுவும் வராதில்லையா..?”
“தனக்கு லாபகரமா இருக்கற ஒரு ஊழியரை எங்கப்பாவும் இழக்க மாட்டார்..!”
“என்ன லாபம்..?”
ஒரு நொடி அருள் தடுமாறி விட்டான்!
“என்ன நீ இப்படிக் கேக்கற..? முப்பது வருஷங்களுக்கு மேல ஒரு மனுஷன் கம்பெனில ராப்பகலா மாடா உழைக்கறார்னா, அவர் உழைப்பால லாபமில்லாம சம்பளத்தைத் தூக்கி எங்கப்பா தந்துடுவாரா..? பூதம் பெரிய வியாபாரி..! அது உலகத்துக்கே தெரியும்..! உங்கப்பா பாவம்..!”
“எங்கப்பாவை நீங்க உயர்வா நினைக்கறீங்க அருள்..!”
“சில பேரால தன் தியாகங்களை வெளில சொல்ல முடியாது பாரதி..! சொல்லவும் தெரியாது..! உங்கப்பா அந்த ரகம்..! சரி, மழை விட்டாச்சு..! உன் வண்டியை நான் சரி பண்ணி, உங்க வீட்ல கொண்டு வந்து விடறேன்..! இப்ப வேற வண்டி தர்றேன்..! நீ எடுத்துட்டுப் போ..!”
அடிபட்டு மயங்கிய ரௌடிகளில் ஒருவன் விழிப்பு வர, இவர்கள் பேசிய சகலமும் கேட்டான்..! கூடவே ஒன்றுவிடாமல் தன் மொபைலில் அதைப் பதிவும் செய்து கொண்டான்..! கையோடு அதை முதலாளி பூதத்துக்கு அனுப்பியும் வைத்தான்.
பூதம் தன் ஆஃபீசில் ஆட்களைக் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்..! அவருக்கு ஃபோன் வர, எடுத்தார்..!
“முதலாளி..! உங்க மகன் பட்டறைக்குத்தான் அவ போயிருக்கா.! அங்கே நீங்க ஆட்களை அனுப்பியும் லாபமில்லை..! சின்னவர் நம்ம ஆட்களைக் கிழிச்சுத் தொங்க விட்டுட்டார்..! அவனவன் ஆறு மாசங்களுக்கு தேறமாட்டான்..!”
இந்த நேரம், பதிவு செய்யப்பட்ட தகவல்கள் வர, பூதம் அதைக் கேட்க, அருள், பாரதி பேசிய காதல் கவிதைகள், பூதத்தை கிழித்துக் கட்டியது, அப்பா சிதம்பரம் பற்றிய பேச்சு என சகலமும் பதிவாகியிருந்தது..! ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கும் அதிகமான பதிவு..!
பூதம் உலைக்கள இரும்பு ஆயுதம் போல கொதித்து போனது..!
“ஓ..! சிதம்பரம் மகளை, அந்த திமிர் புடிச்சவளை இவன் காதலிக்கறானா..? மழை நாட்கள்ள காதல் பேசி, சொந்த அப்பன் தலையை உருட்டறானா..? அடுத்தடுத்து என்னை எதிர்க்கற வேலைல ரெண்டு பேரும் இறங்கியாச்சா..? பாரதி..! என் கைல சிதம்பரம்ங்கற உங்கப்பா பலமான வலுவான துருப்பு சீட்டு இருக்கு..! அதை ஆட்டத்துல எந்த இடத்துலேயும் இறக்க என்னால முடியும்..! என் பிள்ளை இருக்கற தைரியத்துல இடம் தெரியாம நீ மோதறே..!”
கதவு ஓசைப்பட,
“உள்ள வாங்க சிதம்பரம்!”
சிதம்பரம் சோர்ந்து போய் உள்ளே வந்தார்..!
“ஒக்காருங்க! டீ சொல்றேன்..! போன வேலை வெற்றிகரமா முடிஞ்சுதா..? இப்ப டீ வரும்..! அதைக் குடிச்சிட்டே உங்க மகளும், என் மகனும் மழை நாள்ள பேசின கிளுகிளுப்பான வசனங்களைக் கேளுங்க..! அதுக்குள்ள நான் வெளில போயிட்டு வந்திர்றேன்..!”
அவர், அடியாள் பதிவு செய்து அனுப்பியிருந்த பேச்சை, தன் கணிப்பொறியில் போட்டு விட்டுப்போக, சிதம்பரம் கேட்டார்..! அந்த பேச்சும் அதில் இருந்த காதலும், அருளின் கண்யமும், அப்பா மேல் பாரதி வைத்திருந்த அக்கறையும், அருள் அவரது தியாகங்களைப் பேசியதும் கேட்கக் கேட்க, அவருக்கு அடக்க முடியாமல் கண்ணீர் பீறிட்டது! முழுவதும் இவர் கேட்டு முடிக்க, பூதம் உள்ளே நுழைந்தது..!
“கேட்டாச்சா..? கேட்டு உருகியாச்சா..?”
சிதம்பரம் எதுவும் பேசவில்லை..!
“பெத்தவன் நான்..! பல கோடிகளுக்கு அதிபதியான அப்பன்..! இவன் கண்ணசைச்சா இவன் காலடில உலகத்தையே கொண்டு வந்து வைக்க முடிஞ்ச ஒரு தகப்பனை, அசிங்கப்படுத்திட்டு, உன்னை தியாகினு புகழறானா..? உன் மகளைக் காதலிக்கறான்..! உன் வீரமங்கை, என்னை எப்படி வெளில கொண்டு வரலாம்னு என் பிள்ளை கிட்டயே ஆலோசனை கேக்கறா..! நீ ரோல் மாடலா..? சொல்லு..! நீ தியாகியா..? குடும்பத்துக்கு முன்னுதாரணமா..? உத்தம தகப்பனா..? தேவ தூதனா..? சொல்லுய்யா…”
“அப்படி நான் எதுவும் சொல்லலையே..?”
“உன் மகள் சொல்றாளே..! உன்னை பற்றி எல்லாம் தெரிஞ்சும், என் மகன் உன்னைத் தியாகினு எந்த வாயால சொல்றான்..? இப்ப நான் சொல்றதைக் கேட்டுக்கோ சிதம்பரம்..! உன் மகள் இங்கே வேலைக்கு சேரக்கூடாதுனு நீ தடுத்தே..! இனிமே நீ என்ன செய்யணும்னு நான் சொல்றேன்..! அருளை, பாரதி காதலிக்கக் கூடாது..! அதை நீ அனுமதிக்கக் கூடாது..! அது மட்டுமில்லை..! உன் மகளைக் காதலிக்கற அருளை, பகிரங்கமா நான் சொல்ற இடத்துல வச்சு, நீ அவமானப்படுத்தணும்..!”
“அதை நான் செய்ய மாட்டேன்..! நான் பெத்த குழந்தைகளோட உயிர், மானம் எல்லாத்தையும் மீட்டெடுத்த, எங்க குலசாமி அருள் தம்பி..! அதை ஒரு காலத்திலும் நான் அவமானப்படுத்த மாட்டேன்..!”
“அப்படியா..? சரி, இன்னும் ஒரு மணி நேரத்துல நீ யாருன்னு உன் குடும்பத்துக்கு ஆதாரத்தோட நான் சொல்றேன்..!”
“அய்யோ! வேண்டாம்..!”
அலறினார் சிதம்பரம்…!
–தொடரும்…